ஒரு காதல் கதை - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6370
வெள்ளைக்காரர்களுடனான பகையை மனதில் வைத்துக் கொண்டு இருநூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்பே அரேபியர்கள் மொம்பாஸாவில் செய்த வரலாற்றுச் சிறப்பு கொண்ட அந்தப் போரைப் பற்றி பல வகைகளிலும் சிந்தித்தவாறு நான் அந்தக் கல்லாலான திண்ணையில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தேன். நிலவு வெளிச்சத்தில் ஜீசஸ் கோட்டை மேலும் தெளிவாகத் தெரிந்தது. அந்தப் பகுதியில் நிழல்களின் பலம் அதிகரித்தது. கடலில் இருந்து ஏறி வந்த இளம் வெப்பத்தைக் கொண்ட காற்று என்னை மெதுவாக வருடிவிட்டுக் கடந்து சென்றது. நான் அப்போதும் ஜீசஸ் கோட்டையையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டே முக்கால் வருடங்களுக்கு இடையில் இரண்டாயிரம் மனிதப் பிறவிகள் அங்குலம் அங்குலமாக இறந்து விழுந்த மண். வெள்ளைக்காரர்கள், கறுப்பின மக்கள், சுத்த கிறிஸ்தவர்கள், புதிய கிறிஸ்துவர்கள், வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோரின் ஆவிகள் அங்கு கூட்டம் கூட்டமாக நடந்து கொண்டிருக்கும். பட்டினியால் மெலிந்து, நோயால் பாதிக்கப்பட்டு, காயங்களைக் கட்ட மருந்து இல்லாமல், பருக நீர் இல்லாமல், அந்தப் போர் சூழ்நிலையில் சிக்கி வெள்ளைக்காரர்கள் இறுதி மூச்சுவிடும் காட்சியை எனக்கு முன்னால் பார்ப்பதைப்போல இருந்தது.
திடீரென்று எனக்கு அருகில் ஒரு நிழல் நகர்ந்து வந்தது. ஒரு மனித வடிவம்தான். நான் சற்று பதைபதைப்பு அடையாமல் இல்லை. காரணம் - ஒரு ஆவியைப்போல அந்த உருவம் காற்றிலிருந்து தோன்றுவதைப்போல எனக்கு இருந்ததுதான். நான் கூர்ந்து பார்த்தேன். நிழலில் நின்றுகொண்டு அந்த உருவமும் என்னைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. என்னுடைய முகத்தில நிலவு வெளிச்சம் விழுந்து கொண்டிருந்ததால், என் முகத்தை அந்த மனிதனால் தெளிவாகப் பார்க்க முடிந்திருக்கும்.
சிறிது நேரம் அப்படியே கழிந்தது. பிறகு அந்த உருவம் நிழலில் இருந்து எனக்கு முன்னால் - நிலவு வெளிச்சத்திற்கு நகர்ந்து வந்தது.
நாகரிக கோலத்தில் பேன்ட்டும் கோட்டும் அணிந்த அரேபியன். அவனுடைய தலையில் ஒரு சிவப்பு நிற துர்க்கி தொப்பி இருந்தது.
நான் சினேகத்துடன் ஒரு புன்சிரிப்பை வெளியிட்டேன். அவனுடைய முகத்தில் எந்த ஒரு உணர்ச்சி வேறுபாடும் தெரியவில்லை. அவன் என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டே அங்கேயே ஒரே இடத்தில் நின்றிருந்தான்.
நான் மீண்டும் ஒருமுறை புன்னகைத்தேன்.
அவன் ஸ்வஹிலி மொழியில் என்னவோ கேட்டான். அப்போது எனக்கு ஸ்வஹிலி மொழி தெரியாது. புரியவில்லை என்று நான் சைகை மூலம் காட்டினேன். ‘ஐ டோன்ட் நோ ஸ்வஹிலி’ என்று ஆங்கிலத்தில் கூறவும் செய்தேன்.
பிறகு அவனுடைய கேள்வி ஆங்கிலத்தில் வந்தது. வெள்ளைக்காரர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்ட அரைகுறை ஆங்கிலம் என்பதை அவனுடைய உச்சரிப்பில் இருந்தே என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
“நீங்க எவ்வளவு நேரமாக இங்கே உட்கார்ந்திருக்கீங்க?” அவனுடைய அடுத்த கேள்வி அதுதான்.
“அரை மணி நேரம் இருக்கும்”- நான் அமைதியான குரலில் பதில் சொன்னேன்.
‘’இங்கே யாராவது வந்தார்களா? ஒரு ... ஒரு... பர்தா அணிந்த ஒரு பெண்?...”
“அப்படி யாரும் இங்கே வந்ததை நான் பார்க்கவில்லை”
அவன் என்னவோ சிந்தித்துக்கொண்டு சிறிது நேரம் அதே இடத்தில் நின்றிருந்தான். பிறகு அவன் நான்கு பக்கங்களிலும் பார்த்துவிட்டு, மெதுவாக எனக்கு அருகில் அந்தக் கல் திண்ணையில் வந்து உட்கார்ந்தான்.
நான் அவனுடைய முகத்தைக் கூர்ந்து பார்த்தேன். நீண்டு வளைந்த மூக்கையும், நீண்டு கூர்மையாக இருந்த தாடை எலும்பையும் கொண்ட ஒரு நடுத்தர வயது மனிதன். ஒரே கண்தான் இருந்தது. அந்தக் கறுப்பு நிற முகத்தில் அந்த ஒற்றைக்கண், நிலவு வெளிச்சத்தில் ஒரு கண்ணாடித் துண்டைப்போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.
“உங்களுடைய டுக்கா எங்கே?”
நான் இந்தியாவைச் சேர்ந்தவன் என்றும்; அதனால் ஒரு வியாபாரி என்றும் நினைத்துக்கொண்டுதான் அவன் அந்தக் கேள்வியைக் கேட்டான். என் கடை எங்கே இருக்கிறது என்று அவன் கேட்டான்.
அவனுடைய தவறை நான் திருத்தினேன்.
“ஓ... நீங்கள் மொம்பாஸாவைப் பார்ப்பதற்காக வந்திருக்கும் ஒரு புதிய ஆள். இல்லையா? மொம்பாஸா முழுவதையும் பார்த்தீங்களா?”
“முழுவதையும் பார்க்கவில்லை. நான் இங்கே வந்தே இரண்டு நாட்கள்தான் ஆகின்றன.”
“எங்கே தங்கியிருக்கீங்க?”
நான் இடத்தைச் சொன்னேன். சிறிது நேரத்திற்கு அமைதி நிலவியது.
“நீங்கள் இந்தக் கோட்டை மூலையில் வந்து உட்கார்ந்து கொண்டிருப்பதற்கு காரணம்?”
சிறிது குரல் மாற்றத்துடன் திடீரென்று அந்தக் கேள்வி புறப்பட்டு வந்தது. நான் ஏதோ குற்றம் செய்துவிட்டதற்காகக் கேள்வி கேட்பதைப்போல அந்தக் குரல் இருப்பதாக எனக்கு தோன்றியது. அவனுடைய ஒற்றைக் கண் கத்தி முனையைப்போல மின்னிக் கொண்டிருந்தது.
“நான் வெறுமனே நடப்பதற்காக வெளியே வந்தேன். அப்படியே இங்கே வந்து சேர்ந்துட்டேன். அவ்வளவுதான்.” நான் சிரித்துக் கொண்டே சொன்னேன்.
“இந்த மூலையில் உங்களை ஈர்க்கக்கூடிய அளவிற்கு என்ன இருக்கிறது? தெரிஞ்சுக்கிறேன்.”
என்னவோ சந்தேகத்தை உள்ளே வைத்துக்கொண்டு அவன் கேள்வி கேட்பதைப்போல எனக்குத் தோன்றியது.
நான் சொன்னேன்: “நான்... அதோ.... அந்தக் கோட்டையைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். அதன் வரலாறு... இரண்டரை நூற்றாண்டுகளுக்கு முன்னால் அங்கு அரேபியர்கள் செய்த அந்த நீண்ட போரின் கதை...”
அதைக் கேட்டதும் அந்த மனிதனுடைய முகம் சற்று மலர்ந்தது. அவன் மெல்ல சிரித்தான்.
“ம்... அந்தக் கதைகள் எல்லாவற்றையும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அப்படித்தானே?”
“வரலாற்றுப் புத்தகத்தில் கொஞ்சம் படித்திருக்கிறேன்.”
“அதைப் பற்றி அப்படி கொஞ்சம் தெரிந்து கொண்டால் போதாது. விரிவாகக் கேட்க வேண்டிய ஒரு கதை அது.”
யாராவது விளக்கிக் கூறுவதாக இருந்தால், நான் ஆர்வத்துடன் கேட்பதற்குத் தயாராக இருப்பதாகச் சொன்னேன்.
“மணி என்னாச்சு?” - திடீரென்று எதையோ நினைத்ததைப்போல அவன் கேட்டான்.
“என் கையில் கடிகாரம் இல்லை”.
நான் அதைச் சொன்னதும், ஜீசஸ் கோட்டையின் கோபுர மணி அடித்ததும் ஒரே நேரத்தில் நடந்தது.
ஒன்று... இரண்டு... முன்று... நான்கு... ஐந்து... ஆறு... ஏழு... எட்டு... ஒன்பது.