ஒரு காதல் கதை - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6370
ஒருபழையகோட்டையும்அதன்நிழலும்
கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்த ஒரு பழைய துறைமுக நகரமான மொம்பாஸாவில் நான் கழித்த அந்த இரவுப் பொழுதை எந்தச் சமயத்திலும் மறக்க மாட்டேன்.
கருப்பு இன மக்கள் வாழும் அந்த ஊரில் மூன்று மணி நேரங்கள் என்னை ஒரு பேயாக மாற்றிய அந்த சம்பவத்தை நினைக்கும்போது, ஒரு பேயாக மீண்டும் நான் மாறுவதைப்போல உணர்கிறேன். உங்களுக்கு சிறிதுகூட அறிமுகமே இல்லாத அந்தப் பகுதியில், இருட்டு வேளையில், எங்கோ ஒரு மூலையில் படுத்துத் தூங்கியிருக்கிறீர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு இனிமையான கனவு கண்டு அதிகாலையில் கண் விழிக்கும்போது, உங்களுக்கு முன்னால் பார்ப்பது பழமையான ஒரு சுடுகாடு என்பதை நீங்கள் அறிய வரும்போது, உங்களுடைய உணர்ச்சிகள் எப்படி இருக்கும்? கிட்டத்தட்ட அப்படிப்பட்ட ஒரு அனுபவம்தான் எனக்கு உண்டானது. ஆபத்தின் அணைப்பில் சிறிது நேரம் தன்னை மறந்து உறங்கிக் கிடப்பது, பிறகு கண் விழித்து அதைப்பற்றி நினைத்துப் பார்ப்பது - மிகுந்த ஆபத்தில் சிக்கியிருக்கும் போது இருக்கக்கூடிய பயத்தைவிட இதயத்தை நடுங்கச் செய்யும் ஒரு விஷயம் அது!
அந்தக் கதையை ஆரம்பிப்பதற்கு முன்னால், கதை நடைபெற்ற இடமான மொம்பாஸாவைப் பற்றி...
கருப்பின மக்களும் கருப்பு நிறத்தில் இருக்கும் அரேபியர்களும் சற்று வெள்ளை நிறத்தில் இருக்கும் அரேபியர்களும் இந்தியர்களும் கொஞ்சம் வெள்ளைக்காரர்களும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பழமையான துறைமுக நகரம். இரவு நேரத்தில் அரேபியக் கதையில் இருந்து உயிர்பெற்று எழுந்து வந்த ஒரு காட்சி என்றே தோன்றும். கறுத்த முகமூடி அணிந்த உருவங்கள் எங்கிருந்தோ வெளியே வந்து பேய்களைப்போல் தெருக்களின் மூலைகளில் நடந்து கொண்டிருக்கின்றன. அகலம் குறைவான, பழமையான தெருக்கள் எங்கேயோ மறைகின்றன. சத்தமோ கூக்குரலோ இல்லை. இருட்டிற்கு நிலவின் நரைத்த உலகத்தில் உண்டான நரைத்த நிழல் கூட்டங்கள் மட்டும்... அங்கிருக்கும் சோலை மரங்கள் கூட முகமூடி அணிந்து நின்று கொண்டிருக்கின்றனவோ என்று தோன்றும்.
மனிதர்களும் முகமூடிகள் அணிந்துதான் நடக்கிறார்கள். அந்த முகமூடிகளை உங்களால் பார்க்க முடியவில்லை என்பதுதான் விஷயம். வெள்ளைத் தலைப்பாகை அணிந்த அந்த அரேபியன், கடல் கொள்ளைக்காரர்களுடைய ஒரு ஒற்றனாக இருக்கலாம். கறுப்பு நிறத்தில் நீளமான சட்டையை அணிந்து நடந்து கொண்டிருக்கும் மெலிந்து, உயரமாக இருக்கும் அந்த அபீஸியன் கறுப்பின மனிதன் ஒரு மந்திரவாதியாக இருக்கலாம். (அவனுடைய பையில் காளையின் பிறப்புறுப்பைப் பிடித்து இழுத்துக் காய வைத்து உண்டாக்கிய ஒரு மந்திர தாயத்து இருக்கிறது). துறைமுகத் தொழிலாளியின் வேடத்தில் வந்து கொண்டிருக்கும் அந்த கூன் விழுந்த கறுப்பின மனிதனும் ஏதோ மந்திரச் செயலைச் செய்வதற்காகச் செல்லும் ஒரு கெட்ட மந்திரவாதியாக இருக்கக்கூடாது என்றில்லை. (அவனுடைய சுண்டு விரலின் நகத்திற்குள் கடுமையான விஷ மாத்திரை மறைத்து வைத்திருக்கலாம்). ஐந்து ஷில்லிங் விலையாகக் கொடுத்தால் அவன் யாரை வேண்டுமானாலும் விஷம் கொடுத்து மரணமடையச் செய்வான்.
தூரத்தில் உள்ள ஏதோ கிராமத்தின் மூலையில் இருந்து பறை அடிக்கும் சத்தம், ஓர் அரக்கனின் குரலைப்போலக் கேட்கிறது. அது ஒரு கூட்டு இசை. கறுப்பின மக்கள் பக்தி வயப்பட்டு நடனம் ஆடுவதன் சத்தமும் கூக்குரலும் அந்தப் பறை சத்தத்துடன் சேர்ந்து கேட்கிறது. இருண்ட ஆப்பிரிக்காவின் இதயத் துடிப்புகள்தான் அங்கு கேட்டுக் கொண்டிருக்கிறது. அது நம்மை ஒரே நேரத்தில் பயமுறுத்தவும் ஈர்க்கவும் செய்கிறது.
மொம்பாஸாவின் கடலுக்குள் பாய்மரக் கப்பல்கள் சிறகை விரித்துக் கொண்டு நிற்கின்றன. மூவாயிரம் வருடங்களாக வர்த்தகம் தொடர்ந்து நடந்து வருவதை அந்த அரேபியப் பாய்மரக் கப்பல்கள் வெளிப்படுத்தி வருகின்றன. பாரசீகக் கடலுக்கு அருகில் இருக்கும் ஓமான் அரேபியர்கள் எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் கைப்பற்றி ஆட்சி செய்தவைதான் தென் ஆப்பிரிக்காவின் கடற்கரையில் இருக்கும் இந்தத் தீவுகள். இடைக்காலத்தில் போர்த்துக்கீசியர்கள் இங்கு ஆக்கிரமித்துக் கைப்பற்றப் பார்த்தார்கள் என்றாலும், அரேபியர்கள் அவர்களை விரட்டியடித்து, தங்களின் ஆட்சியை மீண்டும் நிறுவிக் கொண்டார்கள். மொம்பாஸாவில் ஆட்சி செய்பவர்கள் பிரிட்ஷ்காரர்களாக இருந்தாலும், சட்டப்படி மொம்பாஸா இப்போதும் ஸாஞ்சிபார் சுல்தானின் பூமிதான். பிரிட்டிஷ்காரர்கள் இப்போதும் மொம்பாஸாவின் பெயரில் ஸாஞ்சிபார் சுல்தானுக்கு வருடத்திற்கு பதினாறாயிரம் பவுன் கப்பமாகக் கொடுத்து வருகிறார்கள்.
ஆப்பிரிக்கக் கரையில் இருந்து எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் கறுப்பின அடிமைகளையும் யானைத் தந்தங்களையும் காண்டாமிருகங்களின் கொம்புகளையும் ஏற்றிக்கொண்டு சென்ற அந்தப் பாய்மரக் கப்பல்களில் இப்போது ஐரோப்பிய பொருட்கள் போய்க் கொண்டிருக்கின்றன. அந்தப் பாய்மரக் கப்பல்கள் அரேபியாவிற்குத் திரும்பிச் செல்லும் வழியில், சூடானின் கிழக்குக் கரையிலிருந்து தானாகவே அடிமைகளைப் பிடித்து ஓமான் நாட்டிற்குக் கடத்திச் செல்லும் வழக்கம் இப்போதும் தொடர்ந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
நல்ல நிலவு வெளிச்சம் உள்ள இரவு நேரமாக இருந்தது. நான் மொம்பாஸாவில் உள்ள பழைய போர்த்துக்கீசியர்களின் கோட்டையான ஃபோர்ட் ஜீசஸுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தேன். நான் அந்த மூலையில் போய் எப்படி சிக்கிக் கொண்டேன் என்பது பற்றி என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை. அங்கு என்னை யாரும் வழியை மாற்றி அழைத்துச் செல்லவில்லை. மாலை நேரத்தில் சற்று நடந்துவிட்டு வரலாம் என்று வந்தேன். மொம்பாஸாவில் ‘கிராமப் பகுதியினரின் மூலை’யில் பல பழமையான தெருக்களையும் தாண்டிக் கடந்து, ஒரு குறிக்கோளும் இல்லாமல் இடத்தைப் பற்றியும் நேரத்தைப் பற்றியும் எதுவும் நினைக்காமல் இறுதியாக அந்த சிதிலமடைந்த கோட்டைக்கு முன்னால் வந்து நின்றேன். மொம்பாஸாவில் எனக்கு இரண்டு நாட்களே அறிமுகம் இருந்தது. கறுப்பின மனிதர்களின் வாழ்க்கைப் பகுதியின் அழகும் சுறுசுறுப்பும் எனக்குள் ஏதோ பேய் பிடித்ததைப்போல ஒரு மாற்றத்தை வரவழைத்து விட்டதோ என்று நான் அவ்வப்போது சந்தேகப்பட்டேன். ஆனால், எனக்கு சிறிதுகூட பயம் தோன்றவில்லை. ஆப்பிரிக்கா என்ற அருங்காட்சியகத்திற்கு முன்னால் போய் நின்றிருக்கும் ஒரு சிறிய குழந்தையின் ஆர்வம் கலந்த உற்சாகம்தான் எனக்குள் தலையை நீட்டிக்கொண்டு நின்றிருந்தது.
ஜீசஸ் கோட்டைக்கு முன்னால் ஒரு புல்வெளியும், புல்வெளியின் மூலையில் அலரி மரங்களும், சில பூஞ்செடிகளும் வளர்ந்து நின்றிருக்க, அவற்றுக்கு அருகிலேயே ஒரு பழைய கல்லாலான திண்ணையும் இருந்தது. நான் அந்தக் கற்திண்ணையில் அமர்ந்து கோட்டையையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தேன். நிலவு வெளிச்சத்தில் அந்தக் கறுப்பு நிறக் கோட்டை ஒரு பிரம்மாண்டமான கல்லறையைப்போலத் தோன்றியது.