
என்றாவதொரு நாள் திரும்பிவர இயலும் என்றும்; தன் அன்னையையும் வாழ்க்கையின் உயர்ந்த படிகளில் ஏற்றி அழைத்துக்கொண்டு செல்ல முடியும் என்றும் ஒரு மெல்லிய எண்ணம் மனதில் இருந்தது.
திரும்பி வரும் பயணத்திற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. பயணத்தைத் தொடர மட்டுமே முடிந்தது... எல்லையே இல்லாமல்.
ஒரு முறையாவது தன் தாயை நினைத்துப் பார்த்திருக்கிறோமா?
இல்லை... ஒருமுறைகூட அது நடக்கவில்லை என்பதே உண்மை.
அன்னை ஒரு கவலையை அளிக்கும் சிந்தனையாக மனதில் இருந்து கொண்டு நெருப்பென கனன்று கொண்டிருந்தாள்.
தன் தாய்மீது அன்பு செலுத்த ஆனந்தனால் முடிந்ததா?
இல்லை... அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. தாயைப் பற்றி புரிந்துகொள்வதற்கும்...
ஒருவேளை தன்னுடைய ஒரே மகனின் அன்பு கலந்த செயல்களுக்காக அந்தத் தாய் ஆசைப்பட்டிருப்பாள். தன் மகன் திரும்பி வருவதை எதிர்பார்த்து அவள் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்திருப்பாள்.
ஆனந்தனின் இழப்பு தீர்த்து வைக்க முடியாத ஒன்று.
அவனுடைய அன்னை எத்தனையெத்தனை பகல்களிலும் இரவுகளிலும் காத்துக்கொண்டிருப்பாள்.
அவனுடைய அன்னை எவ்வளவோ கவலைப்பட்டிருப்பாள்! எவ்வளவோ நாட்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்திருப்பாள்?
மரணப் படுக்கையில் படுத்திருந்தபோது யாரையோ தேடினாள் என்று மற்றவர்கள் கூறி அவன் தெரிந்துகொண்டான். சுயஉணர்வை இழந்து பைத்தியம் பிடித்த நிலையை அவனுடைய தாய் அடைந்து விட்டிருக்கிறாள். ஒருவேளை, தன் மகன் பிரிந்து சென்ற விஷயம் தான், அவனுடைய அன்னையை அப்படிப்பட்ட ஒரு நிலையில் கொண்டு போய்விட்டிருக்க வேண்டும். ஆனந்தன் எவ்வளவோ கண்ணீரை விட்டான். அமைதியானவனாக ஆனான். கையற்ற நிலை அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் கொண்டுபோய் விடும் அல்லவா?
"அதை ஒரு தவிர்க்க முடியாத காரியம் என்பதாக மட்டும் நினைத்துக் கொள். அப்படி நினைக்காமல் வேறு வழி இல்லையே!' ஃபெலிக்ஸ் ஒரு நாள் சொன்னான்.
வாழ்க்கையில் அப்படிப்பட்ட ஒரு நிலையை நோக்கி வீசி எறியப்பட்டது தவிர்க்க முடியாத ஒரு காரியமாக இருக்கலாம். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், இப்போது இருக்கக் கூடிய இந்த வாழ்க்கையும் அப்படித்தானே?
இந்தப் பிறவி முழுவதும் தன் அன்னையிடம் பட்ட அந்த கடனை மீட்க தன்னால் இயலவே இயலாது என்ற உண்மை ஆனந்தனைப் பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தது.
இந்தப் பயணத்திற்கு மத்தியில் எத்தனையெத்தனை அன்னைகளின் முகங்கள்- கனிவு நிறைந்த அமைதியான உருவங்கள் அவனுடைய கண்களுக்கு முன்னால் கடந்து சென்றிருக்கின்றன.
அவனும் ஒருநாள் இதே நிலையை அடைவான். அவன் மட்டுமல்ல- எல்லாருமே ஒருநாள் இந்த நிலைக்கு வந்து சேர்வார்கள்...
உடல ஆரோக்கியம் கெட்டு, வயது அதிகமானதன் காரணமாக உண்டான சிரமங்களால் கண் பார்வையை இழந்து, எழுந்து நடக்க இயலாத ஒரு நிலை...
உறவினரும் உடையவர்களும் இல்லாமல் போகும் ஒரு நிலை...
பைத்தியக்காரத்தனமான- பைத்தியத்தின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் ஒரு நிலை.
அந்தச் சமயத்தில் யாரை நினைத்துப் பார்ப்பது? நினைத்துப் பார்ப்பதற்கு யாராவது இருப்பார்களா?
நினைத்துப் பார்க்கக் கூடிய சக்தியே இல்லாமல் போகும் ஒரு நிலை...
“ஆனந்தன், அப்படியென்றால் நீ மீண்டும் புறப்பட்டு விட்டாய்!'' ஃபெலிக்ஸின் கேள்விக்கு முன்னால் ஆனந்தன் ஒரு நிமிடம் நின்றான். பிறகு சொன்னான்:
“ஆமாம் ஃபெலிக்ஸ். ஆனால், இந்தப் பயணத்திற்கு இன்னொரு பக்கம் இருக்கிறது என்ற நிலை இருக்கும். ஒரு திரும்பி வரும் பயணம்... அது இல்லாமல் இருக்க முடியாது...''
“அப்படியென்றால் நீ வேறு மாதிரியான ஒரு பயணத்தின் பாதையில் செல்கிறாய். அப்படித்தானே?''
“ஆமாம்... எனக்கு ஒரு திரும்பி வரும் பயணம் இருக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாத விஷயம் என்று இருக்கக் கூடாதா என்ன? நான் சொல்வது சரிதானா?''
“குட்... அனைத்து சாத்தியங்களும் உனக்கு இருக்கிறது, போய் வா...''
ஆனந்தன் பயணம் புறப்பட்டான்.
அந்தப் பயணம் ஒரு புதிய உலகத்தில் போய் நின்றது. மனதில் ஒரே ஒரு உருவம்தான் இருந்தது. நிர்மலா.... நிர்மலாவை சற்று பார்க்க வேண்டும். நிர்மலா- டாக்டர் மாலதியைப்போல, ஸுஹரா என்ற முஸ்லிம் பெண்ணைப்போல உடலையும் மனதையும் அவனுக்காக சமர்ப்பணம் செய்யக் கூடியவள்தான்.
நிர்மலாவைப் பார்த்து நீண்ட காலமாகிவிட்டது!
அழகான தோற்றத்தையும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் கொண்டிருக்கும் நிர்மலா! வாழ்க்கைக்குள் எவ்வளவோ முறை அவள் அழைத்துவிட்டாள்... அந்த நேரங்களில் சிறிதுகூட அவன் பிடிகொடுக்கவில்லை. ஒரு தற்காலிகமான உறவு! அவன் எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததே அதை மட்டும்தானே?
இந்த முறை நிர்மலாவை சில எண்ணங்களுடன் பார்க்க வேண்டும்.
ஒருநாள் பயணத்தின் இறுதியில் நிர்மலா என்ற சதைப் பிடிப்பான அழகி இருக்கும் நகரத்தை ஆனந்தன் அடைந்தான்.
முன்கூட்டியே தெரிவிக்காமல் போய் நிற்பதுதானே அவன் எப்போதும் செய்யக்கூடிய விஷயம்!
முற்றிலும் வேறுபட்ட, ஆச்சரியத்தைத் தரக்கூடிய ஒரு நிலையில் போய் ஆனந்தன் நின்றான்.
நிர்மலாவிற்கு என்ன நடந்திருக்கும்?
வீட்டைச் சுற்றி ஏராளமான பெண்களும் ஆண்களும் நின்றிருந் தார்கள். வரிசை வரிசையாக வாகனங்கள் வெளியே நின்றிருந்தன. சிறிது சந்தேகத்துடன் அவன் நடந்து சென்றான்.
ஒரு ஆசிரமத்திற்கான அறிகுறி... அவர்களில் பெரும்பாலானவர்கள் மஞ்சள் நிற ஆடைகள் அணிந்திருந்தார்கள்.
மேலே இருந்த பெயர்ப் பலகையில் கண்களைப் பதித்தான்.
நிர்மலாபுரி ஆசிரமம்...
ஆனந்தன் அதிர்ச்சியடைந்து விட்டான்.
தன் பாதங்களைப் பின்னோக்கி இழுத்துக் கொண்டானோ? நிர்மலாபுரி ஆசிரமம் எப்படி வந்தது? இப்படியொரு மாற்றம் எப்போது உண்டானது?
முன்வாசலில் ஒரு ரிஸப்ஷனுக்கான அமைப்பு. எவ்வளவோ பேர் காத்திருந்தார்கள். அங்கிருந்தவர்களிடம் என்னவோ கூறிக் கொண்டிருந்த மஞ்சள் நிற ஆடை அணிந்த மனிதரின் அருகில் சென்று நின்றான்.
“என்ன? அம்மாவைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறீர்களா?''
கேள்வியைக் கேட்டு அதிர்ந்து போய்விட்டான். அம்மாவா? எந்த அம்மா? மனதில் இருந்த சந்தேகம் இரண்டு மடங்கானது.
“நான்... ஆனந்தன். நான் பார்க்க வேண்டியது நிர்மலாவை.''
ஆனந்தனின் குரலைக் கேட்டு அந்த சீடர் சற்று அதிர்ச்சியடைந்த தைப் போல தோன்றியது.
அவர் தலையிலிருந்து கால் வரை பார்த்தார். பிறகு கேட்டார்:
“பூர்வாசிரமத்தில் ஏதாவது...''
ஆனந்தன் மனதிற்குள் சிரித்தான். பூர்வாசிரமம் என்றால் துறவிகளின் கடந்த கால வாழ்க்கை என்று அர்த்தம்.
திடீரென்று சொன்னான்:
“ஆமாம். மிகவும் வேண்டிய ஆள்... உள்ளே போய் இந்தப் பெயரைச் சொன்னால் போதும்- ஆனந்தன்... என்னை உள்ளே அழைப்பார்கள்...''
உள்ளே ஒரு பணியாளை அவர் அனுப்பி வைத்தார்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook