வேதகிரி - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6362
இன்னும் ஒரு மாற்றம்... அதாவது- புதிய ஒரு வழி- தனக்கு முன்னாலும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதைப்போல...
ஆனந்தனின் மனம் துடித்தது.
மிகவும் மெதுவாக ஒரு மாற்றம்...
யாருக்கும் தெரிவிக்காமல்... தெரிந்தால் அதிர்ச்சியடையும்
அளவிற்கு உள்ள ஒரு மாற்றம்... அதைத்தான்தான் செய்ய வேண்டும்.
மனதில் அது ஒரு தீவிரமான விஷயமாக வடிவமெடுத்துக் கொண்டிருந்தது. இந்த மாற்றம் வாழ்க்கைக்கே ஒரு அர்த்தத்தை உண்டாக்கக் கூடிய அம்சமாக இருக்கட்டும்.
ஆனந்தனின் மனம் கொதித்துக் கொண்டிருந்தது.
எங்கேயோ போய் அடைய வேண்டும் என்ற உத்வேகத்தில் உண்டான ஒரு மனநிலை...
எல்லா மனிதர்களுக்கும் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை வந்து சேருமோ? தெரியவில்லை...
வந்து சேரலாம். அமைதியான சூழ்நிலைக்காக வந்துசேரும் ஒரு வடிவம்... தான் இவ்வளவு காலமும் ஏவிவிடப்பட்ட ஒரு யாக குதிரையாகத்தானே இருந்தோம்? உடலுறவு இன்பமும், மதுவும் இரண்டறக் கலந்து உண்டாக்கிய வண்ணமயமான பயணம்.
ஃபெலிக்ஸ் என்ற அன்பு நண்பன்- பிறகு எவ்வளவோ பேர்! இந்த பயணம் எங்கு நோக்கிச் சென்றது என்று சரியாகவே தெரியவில் லையே! இலக்குகளுக்கு முக்கியத்துவம் உள்ளதாக அது இல்லை. கொண்டாடுவது என்பது மட்டுமே அங்கு இருந்தது. இதற்கிடையில் நேரெதிர் திசையில் ஒரு சிந்தனை- அதுதான் வேதகிரியின் அடிவாரத்தில் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டதும்...
இப்போது அங்கிருந்தும் ஒரு திரும்பிவரும் பயணம்-
இன்னொரு திசையை நோக்கி- வாழ்வின் பசுமையை நோக்கி ஒரு பயணம்... இந்தப் பயணத்தை பொறுத்தவரையில் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது.
திரும்பி வரும் பயணம் என்று வேண்டுமானால் கூறலாம்...
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒரு திரும்பி வரும் பயணம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது என்ற உண்மையின் முகம், கண்களுக்கு முன்னால் தெளிவாகத் தெரிவதைப்போல இருந்தது.
பல நேரங்களிலும் பலரும் அப்படிப்பட்ட ஒரு திரும்பி வரும் பயணத்திற்கு மனதாலும் உடலாலும் தயாராகவே இருப்பதில்லையே...!
ஒரு அர்த்தத்தில் பார்க்கப் போனால் ஃபெலிக்ஸ் செய்த காரியம்தான் தன்னை இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் கொண்டு வந்து விட்டிருப்பதற்கு மூலகாரணமாக அமைந்திருக்கிறது.
வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை...
அது ஒரு வெறியாகவே ஆகிவிட்டதைப்போல...
இவ்வளவு நாட்களாக வாழ்க்கையைச் சுவைக்கவில்லையா?
சுவைக்கவில்லை...
பெண்ணும் போதையும்... பிறகு... கொஞ்சம் வினோதமான சிந்தனைகளும் மட்டும்தானே இதுவரை இருந்து வந்த விஷயங்கள்!
அவை இல்லாத ஒரு வாழ்க்கையா?
ஆச்சரியம் உண்டாகக்கூடிய ஒரு நிலை...
"ஆனந்தன், நீ சரியான பாதையின் வழியாகத்தான் பயணம் செய்து கொண்டிருக்கிறாயா?' கேள்வியைக் கேட்டு அதிர்ச்சியடைந்து விட்டான்.
இந்தக் கேள்வி எங்கிருந்து வருகிறது?
மனசாட்சிக்குள்ளிருந்து வரும் கேள்வியே அது.
பல நேரங்களிலும் இந்தக் கேள்விக்கு பதில் கூறியிருக்கிறானே!
“ஆமாம்... எனக்கு சரி என்று படக்கூடிய பாதையில்தான் நான் இருக்கிறேன் என்பதைப் பற்றி எனக்கு சந்தேகமே இல்லை!''
இந்த பதிலைத் தவிர வேறு என்ன பதிலை மனசாட்சியிடம் கூறுவது?
ஒரு சிறிய சிரிப்புச் சத்தம் கேட்பதைப்போல இருந்தது.
சிரித்தது யார்?
மனசாட்சியா? வேறு யார் சிரிப்பார்கள்? இந்த மனசாட்சி என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால்! இப்படிப்பட்ட கேள்விகளுக்கே இடமில்லாமல் போயிருக்கும். பதில் கூறவேண்டிய கடமையும் இருந்திருக்காது.
இனி யாரிடமாவது விடைபெற்றுக் கொள்ள வேண்டுமா?
ஓ... யாருமில்லை. யாரிடமும் இதுவரை ஒரு விடைபெற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலை தனக்கு உண்டானதில்லையே!
அதாவது-
விடைபெற்றுக் கொள்வதாக இருந்தால் அதை அமைதியாகவே கேட்டுக் கொள்வதுதான் நடந்திருக்கிறது.
தன்னையே அறியாமல் அவன் மது அருந்தும் பாருக்கு முன்னால் வந்து நின்றிருந்தான்.
எவ்வளவோ நாட்கள் பாதங்களுக்கே தெரியாமல் வந்து நின்ற நகரத்திலேயே புகழ்பெற்ற பார்!
எத்தனையோ நாட்கள் அந்த பாரின் வெளிச்சத்தில் அவன் உட்கார்ந்திருக்கிறான்.
“மிஸ்டர் ஆனந்தன்...''
எதிர்பாராமல் வந்த அழைப்பைக் கேட்டு அவன் பின்னால் திரும்பிப் பார்த்தான்.
அல்ஃபோன்ஸ்...
திடீரென்று அல்ஃபோன்ஸைப் பார்த்ததும் அவனுக்கு ஆச்சரியம் உண்டானது. வாழ்க்கையைக் கொண்டாடிக் கொண்டே நடந்து திரியும் ஆங்கிலோ இந்திய நண்பன்...
“ஓ... அல்ஃபோன்ஸ்... என்ன? இங்கே...?''
ஒரு பாருக்கு முன்னால் நின்றுகொண்டிருக்கும் முழு குடிகாரனான ஒரு மனிதனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டுமா என்று தோன்றியது- திடீரென்று அப்படியொரு கேள்வியைக் கேட்டுவிட்டான்.
“மை... ஃப்ரண்ட்... உங்களைப் பார்க்க நேர்ந்தது ஒரு அதிர்ஷ்டமான விஷயம். மொத்தத்தில்... ஒரு பெக் குடிப்பதற்கான பணம்தான் கையில் இருக்கிறது.''
அல்ஃபோன்ஸின் முகத்தில் ஒரு மெல்லிய சிரிப்பு படர்ந்தது.
“கவலைப்பட வேண்டாம்... நான் இல்லையா... என்ன வேண்டுமோ குடிங்க...''
அவனையும் அழைத்துக்கொண்டு பாருக்குள் நுழைந்தான்.
மெல்லிய வெளிச்சம் பரவிக் கொண்டிருந்த பாருக்குள் எப்போதும் உட்காரக் கூடிய மூலையில் போய் உட்கார்ந்தான்.
“மன்னிக்க வேண்டும் அல்ஃபோன்ஸ்... உங்களுக்கு ஒரு கம்பெனி தர என்னால் முடியவில்லை... காரணம்... நான் மது அருந்துவதை நிறுத்திவிட்டேன்....''
அதைக் கேட்டு அதிர்ந்துபோய் விட்டானோ? நம்ப இயலாத தைப் போல அவனுடைய முகம் ஆனந்தனை நோக்கி உயர்ந்தது.
“நம்புங்க... இது உண்மை...'' ஆனந்தன் சொன்னான்.
"லாரா உங்களை விசாரித்தாள். உங்களைப் பார்க்காததில் அவளுக்கு மிகவும் கவலை...''
திடீரென்று லாராவைப் பற்றி நினைத்துப் பார்த்ததும், ஆனந் தனின் மனம் லேசாகத் துடித்தது.
லாரா... அல்ஃபோன்ஸின் மனைவி.
அழகான தோற்றத்தைக் கொண்ட ஆங்கிலோ இந்தியப் பெண். நிறைய மது அருந்துவாள். நன்றாகப் பழகுவாள். எந்தவொரு கபடமும் இல்லாமல்... கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் பழகுவாள்.
தன்னுடைய சொந்த கணவனிடமிருந்து கிடைக்காத சுகம், கணவனின் நண்பர்களிடமிருந்து சரியாகக் கிடைக்கும்படி செய்திருக்கும் பெண்!
ஆங்கிலோ இந்தியன் ஸ்டைலில் இருக்கும் லாராவுடன் கொண்டிருந்த உறவை, ஒருநாள் மனப்பூர்வமாக அவன் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தான்.
முதலில் வேதனை தோன்றியது.
ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆகவேண்டும் என்று மனம் கூறியது. காரணம்- முழுமையாகத் தெரியவில்லை. ஆனால், அது நடந்தது. லாராவைத் தன்னிடமிருந்து பிரிக்கவில்லையென் றால், வேறு பல விஷயங்களுக்கும் தான் சாட்சியாக இருக்க வேண்டியது இருக்கும் என்று அவன் மனம் சொன்னது.
அப்பாவி மனிதனான அல்ஃபோன்ஸின் பரிதாபமான நிலையைப் பார்த்து இரக்கம் உண்டானது. உடல் ஆரோக்கியமாக இருந்த காலத்தில் அவன் லாராவை விரல் நுனியில் கட்டி வைத்திருந்தான்.
அதிக நாட்கள் அதை அவனால் தொடர்ந்து கொண்டிருக்க முடியவில்லை. அவனுடைய வீழ்ச்சி திடீரென்று உண்டானது.