வேதகிரி - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6362
“வேண்டாம்... நான் மீண்டுமொரு முறை சிந்தித்துப் பார்த்துவிட்டு கூறுகிறேன். அந்தச் சமயத்தில் போதும்...''
நிர்மலாவின் முகத்தில் தெரிந்த பிரகாசம் அணைந்தது.
ஒரு நிமிடம் தேவி தியானத்தில் மூழ்கிவிட்டதைப்போல இருந்தாள்.
எல்லாவிதமான சுக சௌகரியங்களும் இங்கு இருக்கின்றன...
வெறுமனே நீங்கள் இங்கு இருந்தால் போதும்...
மனம் பின்னோக்கி அழைப்பதைப்போல இருந்தது.
வேண்டாம்...
இவ்வளவு காலம் முழுவதும் வாழ்ந்ததும் பயணம் செய்ததும் இப்படிப்பட்ட ஒரு நிலையை அடைவதற்காக அல்லவே! தெளிவான ஒரு தீர்மானத்திலிருந்து விலகிச் செல்ல முடியவில்லை...
நிர்மலாவின் அழைப்பை ஏற்றுக் கொண்டால், ஆனந்தனுக்கு ஒரு புதிய முகம்...
வேண்டாமென்று ஒதுக்கினால் இன்னொரு முகம்...
ஆனந்தன் அங்கிருந்து வெளியேறினான்.
நிர்மலா அமைதியாகப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
ஆனந்தன் வருவானா? வரலாம்... வராமல் இருக்கலாம்... ஆனந் தன் என்றென்றைக்குமாக தனக்கு இல்லாமல் போய் விடுவானோ? இன்னொரு ஆனந்தனைக் கண்டடைவதற்கு இன்றுவரை முடிய வில்லை.
தன்னை அறிந்திருப்பவன்...
தனக்குத் தெரிந்திருப்பவன்...
“ஆனந்தன்... நில்லுங்க...''
தன்னையும் அறியாமல் நிர்மலாவிற்குள்ளிருந்து அந்த சத்தம் வெளியே வந்துவிட்டது. ஆனந்தன் நின்றான். கவலை தோன்றியது. அப்படிப்பட்ட ஒரு பதிலைக் கூறியிருக்க வேண்டாம். மெதுவாக பின்னால் திரும்பி நிர்மலாவின் அருகில் வந்தான். நிர்மலா பீடத்தை விட்டு எழுந்து நின்றாள்.
ஆனந்தன் மெதுவான குரலில் சொன்னான்:
“நான் வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்லும் ஒரு பயணத்தின் ஆரம்பத்தில் நின்று கொண்டிருக்கிறேன். இனி ஒரு தயார் நிலையை மட்டுமே நான் செய்ய வேண்டும். அங்கு தோல்வியைச் சந்தித்தால், நான் இங்கு இருப்பேன். வாக்குறுதி அளிக்கிறேன்.''
ஆனந்தன் நிர்மலாவின் கையைப் பிடித்துக் கொண்டே சொன்னான்.
மின்சாரம் பாய்ந்ததைப்போல நிர்மலாவின் நரம்புகளில் அணுக்கள் சற்று நெளிந்தன.
எவ்வளவோ நாட்களுக்குப் பிறகு ஆனந்தனின் விரல்கள் தொட்டன.
“ஒருவேளை... வெற்றி பெற்றுவிட்டால்...?''
நிர்மலாவின் அந்தக் கேள்விக்கு ஆனந்தன் பதில் கூறவில்லை.
“என்ன கூறுவது? தோல்விகள்தானே என்னை எப்போதும் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அப்படியொரு நிலை வந்தால், எனக்காக ஒரு மஞ்சள் நிற ஆடையைத் தயார் பண்ணி வைத்திருங்கள்!''
ஆனந்தன் வேகமாக வெளியேறி நடந்தான்.
எதுவுமே கூற முடியாமல் நிர்மலா பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள்.
7
தன்னுடன் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் இப்போது தன்னிடமிருந்து ஒவ்வொரு வழிகளில் பிரிந்து செல்வதைப்போல ஆனந்தன் மனதிற்குள் நினைத்தான்.
அவரவர்கள் அவரவர்களுடைய பாதைகளை நோக்கித் திரும்பியிருக்கிறார்கள். அவர்களில் ஒருத்தி நிர்மலாவும்.
நிர்மலாவின் வழி ஆன்மிகத்திற்கான வழி.
இனி... ஒரே ஒருத்தி இருக்கிறாள்... டாக்டர் மாலதி.
மாலதியும் ஒரு விடைபெற்றுக் கொள்ளும் எல்லையில் நின்று கொண்டிருக்கிறாள் என்று தோன்றுகிறது. கூறவில்லை. அவ்வளவு தான்... கூறாமலே கூறினாளே! அன்று மாலதியின் குரல்- ஈரம் நிறைந்த குரல் இப்போதும் மனதில் பசுமையாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ஒரு பராக்கிரமச் செயலின் இறுதியில் வியர்வையில் நனைந்து போய் விட்டிருந்த உடலுடன், மேலும் கீழும் மூச்சு விட்டுக் கொண்டு தளர்ச்சியடைந்து களைப்பின் பாதிப்பில் அங்கு படுத்தி ருந்தபோது, மாலதியின் மெல்லிய குரல் செவியில் வந்து விழுந்து கொண்டிருந்தது- ஒரு குளிர்ச்சியைப்போல.
"முடியவில்லை... விட்டுப்போவதற்கு... ஆனால் போகாமல் இருக்க முடியாதே... காரணம்- நீங்கள் எந்தச் சமயத்திலும் எனக்கு மட்டுமே இருப்பீர்கள் என்று தோன்றவில்லை!'
யாரிடம் என்று இல்லாமல் கூறுவதைப்போல டாக்டர் மாலதி கூறிக்கொண்டிருந்தாள்.
அது ஒரு தீர்மானமாக இருந்திருக்க வேண்டும்.
மனதில் இருக்கும் ஆசைகள் நொறுங்கிப் போன காமவயப்பட்ட ஒரு பெண்ணின் இறுதியான முடிவின் ஒலி வடிவம்.
அதற்கு ஒரு பதிலைக் கூறவில்லை.
எப்போதும் அப்படித்தான்.
தெளிவான ஒரு பதிலை வார்த்தைகளால் கூறுவதில்லை. அது அவனுக்கு ஒரு குணமாகவே இருந்தது.
முழுமையற்ற நிலையில் நிறுத்திவிடுவது...
டாக்டர் மாலதி அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
எந்தப் பெண்ணாக இருந்தாலும் அப்படித்தானே தீர்மானிப்பாள்!
மனதில் விருப்பப்படும் ஆண் பிடிகொடுக்காமல் நழுவிச் செல்லும்போது...
ஒருவேளை இனி பார்க்கும்போது டாக்டர் மாலதி வேறொரு பெண்ணாக மாறாமல் இருக்க வாய்ப்பில்லை.
நிர்மலாவைப்போலவேதான்...
இப்போது இதோ நிர்மலாவும் மாறிவிட்டிருக்கிறாள்.
ஆனால், நிர்மலா இப்போதும் அவன் தனக்கு அருகில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். துறவியின் ஆடை அணிந் திருக்கும் இந்த வேளையில்கூட...
பெண்ணின் மனதை யாராலும் தெரிந்து கொள்ள முடியாது என்ற விஷயம் எவ்வளவு சரியானது! பார்ப்பதற்குத் துறவி!
ஆசீர்வாதம் வாங்குவதற்கு ஏராளமான ஆட்கள்- பாதங்களில் விழுந்து வணங்கி வழிபடக்கூடிய ஒரு பெண்... அவள் காமவயப் பட்டிருக்கும் நிகழ்காலத்திலேயே கடவுளின் வடிவம் என்ற வேடத்தை எடுத்து அணிந்து கொண்டிருக்கிறாள்.
எழுபது வயது கடந்துவிட்ட குருநாதரின் உடலில் சூறாவளியை எழச் செய்த சிஷ்யை, இப்போது இதோ புதிய வேடத்தில் மாதா நிர்மலா மயியாக மாறிவிட்டிருக்கிறாள்...
"சந்நியாசம்' என்ற வார்த்தைக்குப் பின்னால் பொய்மைகள், பித்தலாட்டங்கள், வஞ்சனைகள்! ஆனால், மக்கள் அதை நம்புகிறார்கள். உயர்வான ஒரு வட்டத்தை அவர்கள் இந்த சந்நியாசிகளுக்கு அளிக்கிறார்கள். சிஷ்யர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது. பக்திவயப்பட்ட ஒரு வட்டத்தை அவர்கள் போலி சந்நியாசிகளைச் சுற்றிப் படைக்கிறார்கள்.
அவர்கள் கூறும் அனைத்தும் கடவுளின் வார்த்தைகளாக மாறு கின்றன.
அவர்களுடைய பார்வை "கடாட்ச”மாக ஆகிறது. தொடுவது, "ஆசீர்வாதம்' என்றாகிறது.
அவர்களுடைய கால் பாதங்களில் தங்களுடைய அனைத்து துன்பங்களையும் சமர்ப்பிக்கிறார்கள். நாட்டின் நாலா பக்கங்களிலும் ஆசிரமங்கள் உண்டாகின்றன.
ஆங்காங்கே ஒவ்வொரு கிளைகள்... ஆலயங்கள்... இனி நிர்மலாஜி உலக சுற்றுப் பயணத்தை ஆரம்பிப்பாள்.
உலகம் முழுவதும் இருக்கும் வசதி படைத்த பக்தர்கள் நிர்மலா மாதாவிற்காக கிளைகள் ஆரம்பிப்பார்கள். மாதா உலக சுற்றுப் பயணம் செய்து முடித்து திரும்பி வரும்போது, க்ரீன் கார்ட் திறக் கப்படும்.
ஒரு சோதனையும் இல்லாமல் கோடிக்கணக்கில் வெளிநாட்டுப் பணம், தங்கம், ரத்தினங்கள்... பஜனை சத்தம் இங்கு தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும்.
நிர்மலா மிகப்பெரிய பணக்காரியாக ஆவாள்.
அதற்குப் பிறகு திருட்டுத்தனமாக சம்பாதித்த பணம் முழுவதையும் வெள்ளையாக ஆக்குவதற்கு மருத்துவமனைகளும் அனாதை இல்லங்களும் உருவாகும்.
தேவைப்பட்டால் தன்னுடைய சொந்தப் பெயரில் நாளிதழ், தொலைக்காட்சி ஆகியவற்றையும் தொடங்குவாள். ஆனந்தனுக்கு சிரிக்க வேண்டும்போல தோன்றியது.
ஆணின் உடலில் உள்ள பலத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டு நின்று கொண்டிருக்கும் ஒரு சாதாரண பெண்ணுக்கு வந்து சேர்ந் திருக்கும் மாற்றத்தின் முப்பெருக்கி வடிவம்!