வேதகிரி - Page 12
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6364
“சிஸ்டர் ரோஸ் மேரியைப் பார்க்க வேண்டும்.''
செக்யூரிட்டி கேட்டான்:
“பெயர் என்ன?''
“ஆனந்தன்... கூறினால் தெரியும்!''
செக்யூரிட்டி உள்ளே ஃபோனை கனெக்ட் செய்து பேசிவிட்டுத் திரும்பி ஆனந்தனைப் பார்த்து பணிவான குரலில் சொன்னான்:
“சார்... உள்ளே போங்க. இடது பக்கம் இருக்கும் கட்டடத்தில் முதலில் இருக்கும் அறைதான் அலுவலகம்.''
அவன் கேட்டைத் திறந்துவிட்டான்.
ஆனந்தன் மெதுவாக உள்ளே நுழைந்தான்.
சிறிய- அகலம் குறைவான சிமெண்ட் சாலை. இருபக்கங்களிலும் உயரமாக வளர்ந்திருக்கும் பூஞ்செடிகள்... கேட்டைத் தாண்டியவுடன் ஒரு சிறிய சிலுவை... சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் வடிவம் கண்ணாடிக் கூட்டிற்குள்... அதற்கடுத்து மாதாவின் சிலை... எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தி... சுற்றிலும் செடிகள்... மெதுவாக நடந்தான்.
முதலில் பார்த்த கட்டடத்தில் இருந்த அலுவலக அறையின் வாசலின் அருகில் நின்றான்.
ஒரு ப்யூன் நெருங்கி வந்தான்.
“ஆனந்தன் சார்... அப்படித்தானே? உட்காருங்க. சிஸ்டர் இதோ வந்திடுவாங்க...''
ஆனந்தன் உள்ளே நுழைந்து உட்கார்ந்தான்.
ஆனந்தன் என்ற பெயர் அந்த அனாதை இல்லத்தில் நன்கு தெரிந்த ஒரு பெயராயிற்றே! ஆளை நேரில் பார்க்கவில்லையென்றா லும், பல வருடங்களாகக் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெயர்... எல்லா மாதங்களிலும் அனாதை இல்லத்தில் சுக விவரங் களை விசாரிக்கும் குரல்... சிறிது நேரம் தாண்டியவுடன் சிஸ்டர் ரோஸ்மேரி அலுவலக அறைக்குள் வந்தாள்.
ஆனந்தன் எழுந்து கைகளைக் கூப்பி வணங்கினான்.
“வணக்கம் சிஸ்டர்...'' அந்த குரலைக் கேட்டதும் சிஸ்டரின் முகம் மலர்ந்தது. அதே ஆனந்தன்.
“வணக்கம்... இயேசு மிசையாவுக்கு வணக்கம், ஆனந்தன். குரலை மட்டுமே கேட்டு அறிமுகமான மனிதர் வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி... இந்த அனாதை இல்லம் முழுவதும் உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறது. உட்காருங்கள் மிஸ்டர் ஆனந்தன்.''
ஆனந்தன் உட்கார்ந்தான்.
எதிரில் சிஸ்டர் உட்கார்ந்தாள்.
ஒரு நிமிடம் அமைதியாகக் கடந்து சென்றது.
“உங்களுடைய கடிதம் கிடைத்தது. பதில் அனுப்பியிருந்தேன். கிடைத்ததல்லவா?''
“கிடைத்தது... மகிழ்ச்சி!''
ஐம்பது வயதைத் தாண்டியிருந்த சிஸ்டர் ரோஸ்மேரியின் முகத்தில் இளமை விலகிச் செல்ல முடியாததைப்போல ஒளிர்ந்து கொண்டிருந்ததைக் காணமுடிந்தது.
“ஸோ... நீங்கள் அதை முடிவு செய்து விட்டீர்கள்... அப்படித் தானே?''
“ஆமாம்... சிஸ்டர்... அப்படி முடிவு செய்ய வேண்டுமென்று ஒரு நிர்பந்தம் உண்டானது!''
“அதற்குக் காரணம் என்ன?''
“என்னுடைய நம்பிக்கைகளுக்கு அது தவிர்க்க முடியாத ஒன்றா கத் தோன்றியது. அவ்வளவுதான்...''
“இங்கே பாருங்க, ஆனந்தன்... இந்தக் காலத்தில் பார்வை சக்தியும் நல்ல உடல் ஆரோக்கியமும் அழகும் உள்ள ஒரு பெண்ணைக்கூட வாழ்க்கைக்குள் சேர்த்துக் கொள்ள தயாராக இல்லாத மனிதர்களுக்கு மத்தியில் கண்பார்வை இல்லாத ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை தருவதற்கு உங்களால் முடிகிறது என்றால், அது புண்ணியச் செயலே! ஜெய்ஷா... அவள் கண் பார்வை இல்லாத பெண்ணாக இருந்தாலும், நல்ல அழகி! அவள் இந்த அனாதை இல்லத்தின் தேவதை! கடந்த ஐந்து வருடங்களாக நீங்கள் அவளுக்கான செலவுகளைச் செய்து வருகிறீர்கள் என்ற விஷயம் மட்டுமே எங்களுக்குத் தெரியும். மாதம் தவறாமல் வந்துசேரும் அவளுடைய பெயருக்கான தொகையில்
அவளுடைய தேவைக்குமேல் அதிகமாக உள்ள தொகை அவளு டைய அக்கவுண்ட்டில் இப்போதும் இருக்கிறது... ஒரு நல்ல தொகை வரும்.''
“நான் இதுவரை ஜெய்ஷாவைப் பார்த்தது இல்லையே, சிஸ்டர்!'' ஆனந்தன் மெதுவான குரலில் சொன்னான்.
“பார்க்கலாமே! ஜெய்ஷாவின் பாதுகாப்பாளர்... இன்னும் சொல்லப்போனால் இப்போது அவளுக்கு வாழ்க்கையைத் தரப் போகும் மனிதர்! நான் அவளை அழைக்கிறேன்.''
“அவசரமில்லை சிஸ்டர்... இப்போதுகூட என் மனதிற்குள் ஜெய் ஷாவைப் பற்றிய ஒரு வடிவம் இருக்கிறது. பார்வை இல்லாத, வெளுத்த, உயரமான மெலிந்த அழகி என்ற ஒரு தோற்றம்...''
“அனைத்தும் உண்மைதான்... ஆனால், அவள் இப்போது கொஞ்சம் தடிமனாக ஆகியிருக்கிறாள். வயது இருபத்து நான்கு ஆகிறது அவளுக்கு.''
“தெரியும்... எல்லா விஷயங்களையும் நான் ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன்...''
“இங்கு சில நடைமுறைச் செயல்கள் இருக்கின்றன. தெரியுமல்லவா?''
“ம்... நான் அதற்குத் தயாராக இருக்கிறேனே! என்னுடைய ஒப்புதல் பத்திரத்தில் அவற்றையெல்லாம் நான் குறிப்பிட்டிருந்தேனே!''
“உங்களுடைய விஷயத்தில் எங்களுக்கு கவலை எதுவுமில்லை. அனைத்தும் தெளிவாக இருக்கின்றனவே! நீங்கள் அவளுடைய ஸ்பான்சர் மட்டுமல்ல; பாதுகாப்பாளரும்கூட அல்லவா? எந்த நிமிடமும் இங்கிருந்து அவளை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். எனினும், நான் கூறவேண்டியதைக் கூறினேன். அவ்வளவுதான்...''
“நான் வரும் விஷயம் ஜெய்ஷாவுக்குத் தெரியுமா, சிஸ்டர்?''
“தெரியுமா என்றா கேட்கிறீர்கள்? சரிதான்... நன்றாகக் கேட்டீர் கள்... ஒரு வாரத்திற்கு முன்பே எல்லா விஷயங்களையும் நாங்கள் அவளிடம் கூறிவிட்டோமே! அவள் இப்போது ஒரு கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். பீர்மேட்டிலிருந்து கார்த்திகா மேடம் அழைத்து குறிப்பாக பாராட்டினார்கள். ஆனந் தன், உட்காருங்கள். நான் இதோ வந்து விடுகிறேன்...''
சிஸ்டர் உள்ளே சென்றாள்.
பீர்மேட்டிலிருந்து கார்த்திகா மேடம்!
செல்வச் செழிப்பில் மிதந்து கொண்டிருக்கும் கார்த்திகாவை எப்போது பார்த்தோம்? நினைவுகளில் கார்த்திகா இப்போதும் பசுமையாக நின்று கொண்டிருக்கிறாள். தன்னுடன் அறிமுகமான பெண்களில் உடல்ரீதியான உறவு கொண்டிராத கார்த்திகா சசிதரன்... சசிதரன் என்ற நண்பனின் மனைவி. வாகன விபத்தில் மரணத்தைத் தழுவிய சசிதரனின் உயிரற்ற உடலைப் பெற்றுக் கொண்டதும், ஈமச் சடங்குகள் நடத்தி அடக்கம் செய்ததும் இப்போதும் ஞாபகத்தில் இருக்கின்றன.
ஒரு நண்பனின்... வசதி படைத்த நண்பனின் விதவையான கார்த்திகா...
ஒருநாள் ஒரு பனிக் காலத்தில் பீர்மேட்டில் அவர்களுடைய விருந்தினர் இல்லத்தில் மது அருந்திக் கொண்டிருந்தபோது கார்த்திகாவிடம் அவன் மனம் திறந்து பேசினான்.
பொதுவாக முதல் முறை பார்த்த பிறகு, ஒரு பெண்ணைப் பார்ப்பது என்பது படுக்கையறையிலாகத்தான் இருக்கும் என்ற ஆனந்தனின் தத்துவ விஞ்ஞானத்தைத் திருத்தி எழுதிய நிமிடம்...
“மிஸ்டர் ஆனந்தன்... எனக்கு சசிதரன் இல்லாமல் போய்விட்டார். ஏராளமான சொத்து- இந்தத் தனிமை என்னை பைத்தியம் பிடிக்கச் செய்துவிடும்போல இருக்கிறது. என்னுடைய குழந்தைக்கும் எனக் கும் நிழலாக என்னால் உங்களைப் பார்க்க முடியுமா, ஆனந்தன்?''
அந்த கேள்வி அதிர்ச்சியடையச் செய்வதாக இருந்தது.
திடீரென்று ஒரு பதில் கூற முடியாமல் தடுமாறிப் போய் இருந்தபோது, கார்த்திகா தொடர்ந்து சொன்னாள்:
“ஆனந்தன், உங்களைப் பற்றி சசிதரன் எல்லா விஷயங்களையும் கூறியிருக்கிறார். சுகவாசி என்ற விஷயம் எனக்குத் தெரியும்.