வேதகிரி
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6361
வேதகிரியின் நெற்றியிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருக்கும் நடைபாதையின் வழியாக அவன் திரும்பி வந்தான். மணித்துளிகளும் நிமிடங்களும் கடந்துபோனதை அவன் அறியவில்லை. மணிகள் கடந்து சென்றதையும் அவன் அறியவில்லை. வேதகிரியின் கோட்பாடுகள் முட்டைகளாக கர்ப்பப்பைக்குள் பெருகிவிட்டிருந்தன.
அவற்றை பூமியின் ஆழங்களுக்குள் மறைத்து வைக்க வேண்டும். மறைத்து வைக்கப்படும் முட்டைகள் அனைத்தும் ஒருநாள் திறக்கும். அப்போது வெளியே வருவது ஓராயிரம் குஞ்சுகளாக இருக்கும். அந்த ஓராயிரங்கள் இப்பூமி முழுவதும் நிறைந்து கிடக்கும் என்பதுதானே அவனுடைய பயணத்தின் உள்ளார்ந்த அர்த்தமே!
"ஆனந்தன்... நீ எங்கே போகிறாய்?'
யாரோ கேட்பதைப்போல இருந்தது. யார் கேட்கிறார்கள்?
வேறு யாருமல்ல... அவனுடைய மனசாட்சிதான்.
மனசாட்சியின் கேள்விக்கு பதில் கூறுவதற்கு அவன் கடமைப் பட்டிருக்கிறானே! காரணம்- அந்த மனசாட்சியிடம் கேள்விகேட்ட பிறகுதான் வேதகிரியின் பாறைகளையும் அருவிகளையும் காடுகளையும் உயர்ந்து நின்று கொண்டிருக்கும் குன்றுகளையும் மிதித்து ஏறிச் சென்றதும், அடர்ந்த காட்டின் ஆழமான குகைகளுக்குள் எங்கெல்லாமோ அலைந்து திரிந்ததும்...
மீண்டும் கேள்வி உரத்துக் கேட்கிறது.
"ஆனந்தன், நீ எங்கு போகிறாய்? பதில் கூறவில்லை?'
"புறப்பட்ட இடத்திற்குத்தான்...'
பதில் தெளிவாகப் புரிந்ததா என்று தெரியவில்லை.
"புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வருவது என்ற விஷயம் இந்த மிகப்பெரிய பயணத்திற்கு மத்தியில் உனக்கு சாத்தியமா ஆனந்தன்?'
மீண்டும் இதோ, மனசாட்சியின் இன்னொரு கடுமையான கேள்வி.
அந்த உண்மையின் அதிர்ச்சியிலிருந்து ஓடி மறைந்து கொள்ள முயற்சிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
இந்த நீண்ட பயணம் புறப்பட்ட இடத்தை நோக்கியா?
கருவிலிருந்து எப்போதோ விட்டெறியப்பட்ட உயிரின் பலமும், செயலின் நோக்கமும் நிறைந்த இந்த நீண்ட பயணத்தின் மூலமாகத்தான் புறப்பட்ட இடத்திற்குப் போய்ச்சேர முடியும்.
இயலாத விஷயம்...
பிரபஞ்சத்தைப் படைத்த சிற்பி அப்படிப்பட்ட ஒரு இறுதி முடிவுக்கான வழியை உருவாக்கி வைக்கவில்லையே! கர்ப்பப் பைக்குள்ளிருந்து உருவத்துடனும் அசைவுகளுடனும் பூமியில் வேகமாக குதித்து விழும் பிறப்பு என்ற மிகப்பெரிய ஆச்சரிய அம்சத்திற்கு, எந்தச் சமயத்திலும் கர்ப்பப் பைக்குள் திரும்பிச் செல்லும் செயல் சாத்தியமே இல்லை.
அவன் இந்த பிரபஞ்சத்தின் மண்ணுக்கு இருப்பவன்... காற்றுக்கு இருப்பவன்...
ஆனந்தனுக்கு சிரிப்பு வந்தது.
வேதகிரியின் நரம்புகளின் வழியாக ஓடி, பலம்பெற்று, ஏதோ திசையை நோக்கி வேகமாகப் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் ஆற்றின் கரையில் ஆனந்தன் நின்றிருந்தான்.
இந்த ஆற்றைக் கடக்க வேண்டும்.
வேதகிரியின்மீது ஏற வேண்டும் என்றால், இந்த ஆற்றைக் கடந்தே ஆகவேண்டும்.
வேதகிரியிலிருந்து திரும்பி வருவதற்கும் இந்த ஆற்றைக் கடக்க வேண்டும்.
வேதகிரி ஆறு!
ஆயிரம் கைகளையும் ஆயிரம் நாக்குகளையும் கொண்டிருக்கும் ஆறு.
இந்த ஆற்றின் கைகள் எத்தனையெத்தனை வாழ்க்கைகளை கருணையே இல்லாமல் வாங்கிவிட்டிருக்கின்றன.
எத்தனையெத்தனை வாழ்க்கைகளை இந்த ஆற்றின் கைகள்
அந்தக் கரையிலிருந்து இந்தக் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தி ருக்கிறது?
அவள் மிகவும் அமைதியாக, ஆழத்தை உள்ளுக்குள் மறைந்து வைத்துக்கொண்டு ஓடிக் கொண்டிருந்தாள்.
ஆனந்தன் ஒரு சிலையைப்போல சில நிமிடங்கள் அதே இடத்தில் நின்றிருந்தான்.
"என்ன ஆனந்தன், ஆற்றைக் கடக்கவில்லையா?'
எங்கிருந்தோ யாரோ கேட்கிறார்கள்.
"ஆமாம்... ஆற்றைக் கடக்க வேண்டும்... கடந்தே ஆகவேண்டும்...'
இப்படித்தான் பதில் வந்தது.
ஒரு நாள் அந்தக் கரையிலிருந்து ஆற்றைக் கடந்து வருவதற்காக இதே மாதிரி நின்றிருந்தான். இப்போது இதோ, அந்தக் கரைக்குச் செல்வதற்காக எதிர்பார்த்து நின்று கொண்டிருக்கிறான்.
முதலில் நடைபெற்றது லட்சியத்தை நோக்கிய பயணம்...
இது திரும்பி வரும் பயணம் என்ற வேறுபாடு மட்டுமே.
பயணம் இலக்கை அடைந்துவிட்டதா?
அந்தக் கரையிலிருந்து ஒன்றோ இரண்டோ ஆட்களை ஏற்றிக்கொண்டு ஒரு பரிசல் மெதுவாக ஆற்றைக் கடந்து வந்து கொண்டிருப்பதை ஆனந்தன் பார்த்தான்.
பரிசலை செலுத்தும் அதே பழைய மனிதன்தான். கறுத்து தடித்த ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த மனிதன்! பரிசல் நெருங்கி வந்து கொண்டிருந்தது. துறையில் மூன்று ஆட்கள் இறங்கினார்கள். இரண்டு ஆண்களும் ஒரு இளம்பெண்ணும்... வயதில் இளையவர்கள்... ரத்தம் துடித்துக் கொண்டிருக்கும் கண்களை விரித்து ஆனந்தனைப் பார்த்தார்கள்.
“வேறு யாரும் இல்லையா?'' பரிசல்காரன் கேட்டான்.
“இல்லை...'' ஆனந்தன் பதில் சொன்னான்.
பரிசல் சுழன்று சுழன்று வேதகிரியின் மார்பின் வழியாக அந்தக் கரையை நோக்கி நகர்ந்தது.
2
இரவு வெகுநேரம் ஆனபிறகுதான் ஃபெலிக்ஸின் வீட்டையே அடைந்தான்.
ஃபெலிக்ஸ் உறங்கிவிட்டிருக்கவில்லை. முன்கூட்டி தகவல் தெரிவிக்காமலே, ஃபெலிக்ஸின் வீட்டுக்கு அவன் வந்திருந்தான்.
கேட்டிற்கு அருகில் இருந்த அழைப்பு மணியில் விரலை அழுத்தினான். சிறிது நேரம் கடந்த பிறகு, முன்பக்க கதவைத் திறந்து ஃபெலிக்ஸ் வெளியே வந்தான்.
“ஆஹா! இது யார்? ஆனந்தனா? நீ திரும்பி வந்துவிட்டாயா?''
ஃபெலிக்ஸால் நம்பவே முடியவில்லை. காரணம்- அவன் திரும்பி வருவான் என்று நினைத்திருக்கவேயில்லை- பயணம் ஆரம்பித்தபோது.
“ம்... திரும்பி வந்துவிட்டேன்...'' ஆனந்தன் அவ்வளவுதான் சொன்னான்.
ஃபெலிக்ஸ் ஆனந்தனையே வெறித்துப் பார்த்தான். அவன் மிகவும் மெலிந்து விட்டிருந்தான். ஐந்தாறு மாத காட்டு வாழ்க்கை யின் ஒரு பாதிப்பாக கண்களுக்கு முன்னால் ஆனந்தன் இதோ நின்று கொண்டிருக்கிறான்.
பயணம் புறப்பட்டபோது எந்த அளவுக்கு உற்சாகம் நிறைந்த வனாக அவன் இருந்தான்!
சிவந்த வானத்தின் விளிம்பை எட்டிப்பிடித்துவிட வேண்டும் என்ற வெறி?
அனைத்தும் அணைந்துபோய்விட்ட உயிரற்ற கண்களுடன் ஆனந்தன் நின்று கொண்டிருந்தான்.
“உள்ளே வா... சற்று குளித்து களைப்பை நீக்கு... இங்கு இன்னொரு விருந்தாளியும் இருக்கிறார்... அறிமுகமாகிக் கொள்ளலாம்.''
அறைக்குள் நுழைந்தபோதே தோன்றியது- விருந்தாளி ஒரு பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று. ஃபெலிக்ஸ் அவளை எங்கிருந்து அழைத்துக் கொண்டு வந்திருப்பான்? அப்படியே இல்லையென்றாலும், ஃபெலிக்ஸ் அந்த விஷயத்தில் படு கில்லாடி ஆயிற்றே!
ஃபெலிக்ஸ் உள்ளே பார்த்து அழைத்தான்.
சிவகாமி வந்தாள். உயர்ந்து, மெலிந்த, மாநிறத்திலிருந்த ஒரு சுத்த தமிழ்ப் பெண். பார்ப்பதற்கு நல்ல தோற்றத்தைக் கொண்டவளாக இருந்தாள். அழகான கண்கள்... உதடுகள்... சற்று பெரிய மார்பகங்கள்... அடர்த்தியான கூந்தல்... நைட்டி அணிந்திருந்தாள். ஆனந்தனின் கண்கள் சிவகாமியின்மீது பதிந்ததை ஃபெலிக்ஸ் தெரிந்துகொண்டான்.
"மீட் மிஸ்டர் ஆனந்தன். ஐ ஹேட் டோல்ட் எபௌட் ஹிம்...''
ஃபெலிக்ஸ் சிவகாமியிடம் கூறினான். சிவகாமியின் உதட்டில் ஒரு சிரிப்பு மலர்ந்தது.
“இதோ பார் ஆனந்தன்... இவளை ஷேர் பண்ணிக் கொள்ள மாட்டேன். இவள் எனக்கு மட்டுமே சொந்தமானவள். புதுச்சேரியிலிருந்து தூக்கிக்கொண்டு வந்தேன். ஒரு நிரந்தரமான ஏற்பாடு...