வேதகிரி - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6362
அதனால்தான் கூறுகிறேன்- நோ ஷேரிங். இன்னும் கொஞ்சம்
அழுத்தமாகக் கூறுவதாக இருந்தால்... இவள் என்னுடைய மனைவியாக ஆகப் போகிறாள்- மனதை சுத்தமாக வைத்துக்கொள்.''
மிகவும் தெளிவாக ஃபெலிக்ஸ் கூறினான்.
ஆனந்தன் மறுத்து எதுவும் கேட்கவில்லை. மனம் அப்படிப்பட்ட ஒரு நிலையில் இல்லை.
குளியலறைக்குள் நுழைந்தபோது நினைத்துப் பார்த்தான்.
ஃபெலிக்ஸிடம் ஒரு மாற்றம் உண்டாகி விட்டிருக்கிறதே!
அவனுக்கு என்ன ஆனது? முன்பெல்லாம் அவன் இப்படி இருந்த தில்லையே! வாரத்திற்கு ஒன்றோ இரண்டோ பெண்களைத் தள்ளிக் கொண்டு வருவான். அதற்குப் பிறகு சில நாட்கள் ஒரே கொண்டாட்டமாக இருக்கும்.
ஃபெலிக்ஸ் சுயநலம் கொண்டவனாக எவ்வளவு சிக்கிரம் ஆகிவிட்டிருக்கிறான்.
ஏதாவதொரு பெண்ணிடம் விழுந்துவிடக்கூடிய மனிதன் இல்லையே ஃபெலிக்ஸ்? என்ன ஆனது என்று தெரியவில்லை.
அதற்குப் பிறகு அதைப் பற்றி கூறாமல் இருக்க மாட்டான்.
சாப்பாட்டு மேஜையில் சூடான சப்பாத்தியும் கோழிக் குழம்பும் இருந்தன.
“தினமும் ஒரு நேரத்திற்கான உணவைத் தயார் பண்ணி வைப்பேன். நீ இப்போது இங்கு வருவாய் என்ற விஷயம் தெரியாதே! அதனால்...''
ஃபெலிக்ஸ் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே சொன்னான்.
ஆனந்தன் மென்மையான ஒரு சிரிப்பை வெளிப்படுத்தினான். அவ்வளவுதான். நல்ல பசி இருந்தது. மெதுவாக சப்பாத்தியைச் சாப்பிட்டான்.
“இல்லை... உனக்கு என்ன ஆனது? கடமையில் தவறு நேர்ந்து விட்டதா?'' ஃபெலிக்ஸ் கேட்டான்.
“ம்... தவறு எதுவும் உண்டாகவில்லை. இந்த மூவ்மெண்ட் தோல்வியைத் தழுவிவிடும். இலக்கை அடையாது. காலம் மாறி விட்டிருக்கிறது.'' ஆனந்தன் சொன்னான்.
“எனக்கு இந்த விஷயம் முன்பே தெரியும். உன்னுடைய உற்சாகத் தைக் கெடுக்கக் கூடாது என்று நினைத்தேன். அவ்வளவுதான். கேம்ப் எப்படி?''
“மிகவும் கடுமையாக இருந்தது. சாதாரண பலவீனம் கொண்ட வர்களால் அங்கு இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு முரட்டுத்தனம் நிறைந்ததாகவும் மிருகத்தன்மை கொண்டதாகவும் இருந்தது. மரணத்தை நேருக்கு நேராகப் பார்க்க நேர்ந்த நிமிடங்கள்... ஹோ... பயங்கரம்! ஆனால் ஒன்று... அதைப் பின்பற்றுவதற்கு இப்போதும் இளைஞர்கள் தயாராக வந்து நிற்கிறார்களே!''
ஆனந்தன் கொஞ்சம் கொஞ்சமாக பேசக் கூடியவனாக ஆனான்.
“அறியாமை காரணமாக... அவ்வளவுதான். சரி... என்ன திட்டம்?'' ஃபெலிக்ஸ் கேட்டான்.
“தற்போதைக்கு எதையும் தீர்மானிக்கவில்லை. அந்தக் கொள்கையை விட்டு விலகிவிட வேண்டும் என்பதையும் முடிவு செய்யவில்லை. அதற்கு ஒரு புதிய வடிவத்தைக் கொடுக்க வேண்டும்.''
“ம்... அதற்கு இப்படியொரு கடுமையான முயற்சி தேவையா?''
“தேவைதான்... தெரிந்துகொள்வதற்கும் அதைப் பற்றிய
அனுபவங்களைப் பெறுவதற்கும்...''
ஆனந்தன் ஃபெலிக்ஸைப் பார்த்து, விஷயத்தை மாற்றிக் கேட்டான்:
“என்ன... இப்படி ஒரு புதிய அனுபவம்? இவள் எங்கேயிருந்து வந்தாள்?''
“சொல்கிறேன்... உன்னிடம் கூறாதது மாதிரி எதுவுமில்லையே! இவளுடைய தாய்- தந்தை இருவரும் ஃப்ரான்ஸில் இருக்கிறார்கள். கோடீஸ்வர குடும்பம். அரவிந்தர் ஆசிரமத்தில் நான் இவளைப் பார்த்து கொத்திக் கொண்டு வந்தேன். தனிமையில் வாடிக் கொண்டிருந்த இவளுக்கு ஒரு ஆதரவு தேவைப்பட்டது. நிரந்தரமான ஒன்று...
அதாவது- ஒரு வாழ்க்கை. நான் அதைத் தருகிறேன் என்று ஏற்றுக் கொண்டேன். அவளை இங்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டேன். இதுதான் சுருக்கமான கதை...''
“பரவாயில்லை... நல்லது.'' ஆனந்தன் இவ்வளவுதான் சொன்னான்.
"நான் இப்படியெல்லாம் மாறிவிட்டிருக்க மாட்டேன் என்று நினைத்தாய்... இல்லையா ஆனந்தன்?''
“இல்லை... யார் எப்போது எப்படி மாறுவார்கள் என்று யாருக்குத் தெரியும்? இதுதானே அதற்கு சரியான பதிலாக இருக்க முடியும்...''
“இல்லை ஆனந்தா... நாம் எவ்வளவோ எவ்வளவோ விஷயங்களைச் சுவைத்தோம். அனுபவித்தோம். ஒரு குண்டு வெடிப்பு நிகழ்வதற்கு மனம் தூண்டிக் கொண்டே இருந்தது. அது நடந்துவிட்டது என்று மனதில் நினைத்துக் கொண்டால் போதும்...''
ஃபெலிக்ஸ் அழகாகக் கூறினான்.
“குட்... நான் எதையும் எதிர்க்கமாட்டேன் என்ற விஷயம்தான் உனக்குத் தெரியுமே? நடக்கக் கூடிய விஷயங்கள்... எது எப்படியோ... நல்ல சரக்கு... நிறம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் உனக்கு அவள் பொருத்தமானவள்தான்...''
“புத்திசாலி! மிகவும் அழகான தொழில்... நாம அவளை அனுமதித் தால் போதும்... ஹ...ஹ... முன் அனுபவம் இருக்க வேண்டும்... நாமும் அப்படிப்பட்டவர்கள்தானே?''
ஃபெலிக்ஸ் தேற்றுவதைப்போல சொன்னான்.
ஆனந்தன் லேசாக சிரித்தான்.
“ம்... உன் நேரம்... நடக்கட்டும்...''
தூங்குவதற்காக சென்றபோது ஆனந்தன் நினைத்தான்.
நட்பு என்பதற்கான அர்த்தம் முழுமை அடையக் கூடிய ஒரு உறவு- அதுதான் ஃபெலிக்ஸுடன் கடந்த ஒரு பத்தாண்டு காலமாக இருந்தது. உலகத்தில் மிகவும் அரிதாக பார்க்கக் கூடிய ஒரு நட்பு...
முழுமை அடைந்த நட்பு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அகராதி எழுதலாம்...
ஆனால், இனி ஃபெலிக்ஸ் தன்னிடமிருந்து விலகி நடந்து சென்றுவிட்டான் என்ற சூழ்நிலை உண்டாகி விட்டிருக்கலாம். அது தவிர்க்க முடியாத ஒன்றுதானே!
தனிமையில் இருக்கும் வாழ்க்கை... பிறகு இரண்டாக ஆகிறது. இரண்டிலிருந்து மூன்றுக்கும்... பிறகு நான்கிற்கும்... அதைத் தாண்டியும் அது போய்ச் சேரும். மீண்டும் தனிமை.. தன்னந்தனியாக... ஓடிக் களைத்து எதுவுமே செய்ய முடியாமல் மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டுக்கொண்டு, தளர்ந்து போய் மரணத்தின் கைகளில் கண்களை மூடிச் சேரும்போது...
தனிமையில்தானே இருப்பார்கள்... எல்லாரும்!
கதவை அடைக்காமலே ஆனந்தன் படுக்கையில் சாய்ந்தான். எந்தச் சமயத்திலும் கதவை அடைத்து தூங்கிய பழக்கமே இல்லையே!
வாழ்க்கையும் அப்படித்தானே இருந்து வந்திருக்கிறது... இதுவரை.
பயங்கரமான காட்டின் குளிரிலும் மழையிலும் பனியிலும் வெயிலிலும் வாழ்ந்த இரவுகளிலிருந்து விடுதலை பெற்று பழைய இடத்திற்குத் தேடி வந்தபோது, மனதிற்கே தெரியாமல் அவன் தூக்கத்தின் கைகளில் விழுந்துவிட்டிருந்தான்.
காலையில் ஃபெலிக்ஸ்தான் ஆனந்தனை எழுப்பினான்.
“நல்ல... மிக அருமையான காபி... இவள் மிகவும் நன்றாக சமையல் செய்கிறாள். பருகிப் பார்...''
ஃபெலிக்ஸ் அழைத்தான். உண்மைதான்... காபி மிகவும் சுவையாக இருந்தது. ருசித்துப் பார்த்த முதல் மடக்கிலேயே தெரிந்துவிட்டது.
“இவள் ட்ரிங்க் விஷயத்தில் எப்படி!'' வெறுமனே கேட்டான்.
“ஒரே நேரத்தில் ஒரு பைன்ட் குடித்து முடித்தாலும், அதற்குப் பிறகும் குடிக்கலாம் என்று கூறுவாள். புதுச்சேரி சரக்கை அடித்து பழகிய நாக்கு ஆயிற்றே!'' ஃபெலிக்ஸ் சிரித்தான்.
“அப்படியென்றால் இரண்டு பேருக்கும் தினமும் ஒவ்வொரு புட்டி...''
“இல்லை... கட்டாயமில்லை... கடந்த ஒரு வாரமாக மது அருந்த வேண்டும் என்று தோன்றவே இல்லை... இருவருக்கும்.''
“அது சரி... வாழவேண்டும் என்பது மட்டுமே ஆசை...''