வேதகிரி - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6362
“அவளுக்கு என்னவோ கணக்கு கூட்டல்கள் இருக்கின்றன. ஃப்ரான்ஸுக்கு ஒரு பயணம்... ஏதோ பிஸினஸ்... பரவாயில்லை... நல்ல ஐடியா... வேண்டாம் என்று நான் கூறவும் இல்லை.''
“நல்லது.... வாழ்க்கை என்ற ஒன்று ஆரம்பமாவதே, ஒரு பெண் உரிய இடத்திற்கு வந்துசேரும் போதுதானே?''
“உண்மையாக இருக்கலாம்..'' ஃபெலிக்ஸ் சொன்னான்.
ஆனந்தன் மனதிற்குள் நினைத்தான்.
ஃபெலிக்ஸ் மிகவும் மாறிவிட்டிருப்பதைப்போல அவனுக்குத் தோன்றியது. வாழ்க்கையை மென்மையாக அணுகியிராத மனிதன்... தீவிரமான சிந்தனைகள்... கரடுமுரடான அனுபவங்கள்... இவை எல்லாம்தான் உண்மை. எந்த விஷயத்தின்மீதும் பெரிய ஈடுபாடு இல்லை. கிறிஸ்துவையும் கிருஷ்ணனையும் விமர்சித்துக் கொண்டிருப்பான். ஒரே மாதிரி... மார்க்ஸை பல நேரங்களில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட்டிருக்கிறான். மார்க்ஸ் முடிவடைகிற இடத்திலிருந்து ஆரம்பிக்கக் கூடிய ஒரு தத்துவம்- அதுதான் ஃபெலிக்ஸின் மனதில் இருந்தது. அவனையும் அந்த வழியில் அவன் அழைத்துக் கொண்டு சென்றான். இறுதியில் வேதகிரியிலும் போய்ச் சேர்ந்தான். ஃபெலிக்ஸ் மாறிவிட்டானா?
அமைதிப் புரட்சி என்ற மடத்தனமான விஷயத்தைப் பற்றித்தான் அவனுடைய இறுதிப் புலம்பல் இருந்தது. அந்தப் புலம்பலும் இங்கு முடிந்துவிட்டதோ?
ஃபெலிக்ஸ் வாழ்க்கையின் இன்னொரு முனைக்குத் திரும்பிச் செல்கிறானோ?
தெரியவில்லை...
3
ஏழு கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும்.
ஆட்டோவில் சென்றால் என்ன? நடப்பதற்கு ஒரு மனநிலை இல்லை.
ஆனந்தன் ஆட்டோ நிறுத்தத்திற்கு வந்து ஆட்டோவில் ஏறி, போகக்கூடிய இடத்தைச் சொன்னான். சாலை மிகவும் கூட்டமாக இருந்தது. சாயங்கால நேரம் ஆகிவிட்டிருந்தது காரணமாக இருக்க வேண்டும். அலுவலகங்களில் பணியாற்றுபவர்களின் கூட்டம். வாகனங்கள், ஐ.டி. பார்க்குகளிலிருந்து வெளியேவரும் இளம் தலைமுறையினரை ஏற்றிக்கொண்டு வரும் பெரிய பேருந்துகள்... இப்படியும் அப்படியுமாக... நகரமும் நகரத்தின் எல்லைப் பகுதிகளும்... அனைத்தும் இப்போது ஐ.டி. பார்க்குகளின் பிடிகளுக்குள் சிக்கி விட்டிருக்கின்றன. கிராமப் பகுதிகள்கூட "ஸ்மார்ட் சிட்டிகள்' ஆகிவிட்டன. ஐ.டி. பார்க்குகள் தலையை உயர்த்திக்கொண்டு நின்று கொண்டிருக்கின்றன. அமெரிக்க வாழ்க்கை முறைக்கு மெதுவாக நுழைந்து கொண்டிருக்கும் ஒரு தலைமுறை...
தாராளமான பணம்... சம்பளம்... ஹைடெக் உணவு... ஊர் எவ்வளவோ மாறிவிட்டிருக்கிறது. புதிய புதிய துறைகள் திறந்து கொண்டிருக்கின்றன. நிலவிற்குச் செல்லக்கூடிய பயணத்திற்கான நாள் குறிக்கப்பட்டுவிட்டது.
பூமி வறண்டுபோகத் தொடங்கிவிட்டது.
மண்ணை நேசிப்பதற்கும் அதை கவனித்துப் பார்ப்பதற்கும் யாரும் இல்லை என்ற நிலை உண்டாகிவிட்டது. பழைய விவசாயிகள் தங்களுடைய பிள்ளைகளை ஐ.டி. கல்வி கற்பதற்கு அனுப்பி விட்டார்கள். அவர்கள் ஐ.டி. யுகத்தின் பகுதியாக ஆகிவிட்டார்கள். கை நிறைய பணம். விவசாய நிலம் வறண்டு போய்க் கிடக்கிறது. விவசாயம் இல்லை. அதாவது- விவசாய வேலைகளைச் செய்வதற்கு ஆட்கள் இல்லை என்ற சூழ்நிலை உண்டாகிவிட்டது. நாளை உணவுக்கு என்ன செய்வோம் என்பதை யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. ஐ.டி. புரட்சிக்குப் பின்னாலும் அணுசக்திக்குப் பின்னாலும் புதிய தலைமுறை பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறது.
பூமி மெதுவான குரலில் மனிதனின் காதுகளுக்குள் இப்படிச் சொன்னது:
"இங்கே பார், மனிதா... நீ இருட்டை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருக்கிறாய். நீ என்னை நோக்கித் திரும்பி வா... முன்னோர் கள் செய்தது அதுதான்...'
கேட்பதற்கு யார் இருக்கிறார்கள்? ஐ.டி. யுகத்திற்குள் மனிதன் வேகமாகப் பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறான்.
ஏரியின் கரையை அடைந்ததும், ஆட்டோ நின்றது. மீட்டருக்கான கட்டணத்தையும், அதற்குமேல் டிப்ஸையும் கொடுத்துவிட்டு அவன் வெளியே இறங்கினான். அங்கு வந்து எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டன. இந்த மிகப் பெரிய நகரத்தின் தாகத்தைத் தீர்த்து வைத்துக் கொண்டிருக்கும் ஏரி. நீர்ப்பரப்பு உயர்ந்திருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே நகரம் வெப்பத்தில் தகித்துக் கொண்டிருந்தது. குடிநீருக்காக மக்கள் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தார்கள். மழை இரக்கம் காட்டியதன் காரணமாக, ஏரி நிறைந்து காணப்பட்டது. நீர் மட்டம் உயர்ந்துவிட்டது. இன்னும் சில நாட்களுக்கு நீருக்குப் பஞ்சம் இல்லை. இயற்கை இரக்கம் காட்டவில்லையென்றால், குடிக்கும் நீர்கூட இல்லாத சூழ்நிலை உண்டாகிவிடும். எந்தவொரு நானோ தொழில்நுட்பத்தாலும் அதைச் செய்ய முடியாதே! ஏரியின் மேற்குப் பகுதியிலிருந்த பாதையின் வழியாக ஆனந்தன் மெதுவாக நடந்தான்.
முன்பு அந்த இடம் சுத்தமான கிராமமாக இருந்தது.
கண்களுக்கு எட்டாத அளவுக்கு வயல்வெளிகள்...
இன்று வயலை இல்லாமல் செய்துவிட்டு, மக்கள் ஃப்ளாட்டுகளைக் கட்டிவிட்டிருக்கிறார்கள்.
டாக்டர் மாலதியின் விலை உயர்ந்த ஃப்ளாட்.
மாலதி- நடுத்தர வயதைக் கொண்ட டாக்டர். அழகான தோற்றத் தைக் கொண்டவள். இரண்டு குழந்தைகளுக்கு அன்னை. கணவர் கைவிட்டுப் போய்விட்டதாகக் கூறுகிறாள். நகரத்தின் மதிப்புமிக்க மருத்துவ மையத்தில் மருத்துவராக டாக்டர் மாலதி பணியாற்றிக் கொண்டிருக்கிறாள்.
தமிழ்ப் பெண்.
மொழி தடையாக இருக்கவில்லை.
முதலில் நட்பு.
அதைத் தொடர்ந்து அந்த நட்புக்கு வடிவ வேறுபாடுகள் உண்டாயின. அந்த நட்பு படுக்கையறைக்குள் நீண்டு செல்வதற்கு ஆனந்தனுக்கு அதிக நாட்கள் ஆகவில்லை.
மாலதிக்கு தன்மீது இருப்பது காதலா? வெறியா? தெரியவில்லை.
இந்த உறவு ஆரம்பமாகி நான்கு வருடங்கள் ஆகிவிட்டன.
வாழ்க்கைக்குள் அழைக்கும் டாக்டர் மாலதியை, ஒரு பதிலால் கூட ஆனந்தன் சந்தோஷத்திற்கு வழி உண்டாக்கித் தரவில்லை.
ஆனால், அந்த உறவு இதே மாதிரியே தொடர்ந்து கொண்டி ருக்கட்டும் என்று ஆனந்தன் விரும்பினான்.
டாக்டர் மாலதிக்கு ஒரு மனம் இருக்கிறது. ஆணை காதலிக்கக் கூடிய ஒரு இதயமும். மாலதியின் கணவருக்கு எங்கு தவறு நேர்ந்தது?
பல நேரங்களிலும் சிந்தித்துப் பார்த்திருக்கிறான். ஒருநாள் கேட்கவும் செய்திருக்கிறான்.
"உங்களுக்கு அது புரியவில்லையா என்ன?' மாலதியிடமிருந்து அந்தக் கேள்விதான் வந்தது.
தனக்குப் புரிந்ததா? இப்போதும் சந்தேகம் எஞ்சி இருக்கிறது.
உடலுறவு விஷயத்தில் ஆனந்தனுக்குப் புதிய ஒரு உலகத்தின் அனைத்து வாசல்களையும் திறந்துவிட்ட டாக்டர் மாலதி... இன்னும் புரிந்துகொள்ள முடியாத ஒரு புதிராக மனதில் நிறைந்து நின்று கொண்டிருக்கிறாள். ஒரு மருத்துவராகப் பணியாற்றிக் கொண்டி ருக்கும் பெண்ணுக்கு ஆணின் உடல் விஞ்ஞானத்தைப் பற்றி நன்கு தெரியுமல்லவா? படுக்கையறையில் மாலதியின் மிகச் சிறந்த நடவடிக்கைகளில், தெரிந்து கொண்டிராத ஒரு உலகத்தின் எல்லையற்ற தன்மைக்குள் பறந்து உயர்ந்து செல்ல முடிவதற்கு அதுதான் காரணமாக இருக்க வேண்டும்.
இன்னும் ஒரு வகையில் கூறுவதாக இருந்தால், பெண் டாக்டர்களுடனும் நர்ஸுகளுடனும் உடலுறவு கொள்ளும் போதெல்லாம் புதிய புதிய இன்ப அனுபவங்களில் ஆனந்தன் மூழ்கிப் போய்விட்டிருக்கிறான். ஒருவேளை தன்னிடமிருந்து ஆனந்தன் விலகிச் சென்றுவிடக்கூடாது என்று மாலதி விருப்பப் பட்டிருக்கலாம்.