வேதகிரி - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6362
“ச்சே... அதெல்லாம் இல்லை. நீயும் ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டுமென்பதால் மட்டுமே... வற்புறுத்தவில்லை.''
“வேண்டாம் ஃபெலிக்ஸ். என்னுடைய வாழ்க்கையில் இவற்றையெல்லாம் நான் விரும்பியதேயில்லை. எல்லாம் அவ்வப்போது வந்து சேர்ந்து விட்டிருக்கின்றன. ஃபெலிக்ஸ், என்னுடைய கடமை வேறொன்று என்ற விஷயத்தை நீ மறந்து விட்டாயா?''
“காலம் விட்டெறிந்துவிட்ட ஒரு கடமைக்குப் பின்னால் பயணம் செய்வதில் அர்த்தமே இல்லை ஆனந்தன். நாம் ப்ராக்டிக்கலாக இருப்பதற்குப் பார்க்க வேண்டும். நடைமுறை அரசியல் என்பதைப் பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறாய் அல்லவா? சமூகம் விரும்பு வதே அதைத்தான். நீ உன்னுடைய பாதையில் தனி மனிதனாகத் தானே சென்று கொண்டிருக்கிறாய்? வேதகிரியில் நீ தினமும் கற்றதும் அதுதானே?''
“ஆமாம்... உங்களால் புரிந்துகொள்ள முடியாது, ஃபெலிக்ஸ். இங்கே பார்... நாகரிகம் என்றால் என்னவென்று தெரியாத ஆதிவாசி கள்... பாதிப்பிற்கு ஆளானவர்கள்... வசதி படைத்தவர்களின் சுரண்ட லுக்கு இரையாகி வாழ்ந்து கொண்டிருக்கும் பத்து லட்சம் மக்கள்... கல்வி கற்காதவர்கள்... வெளிச்சத்தைப் பார்க்காதவர்கள்... அடிமைகள்... ஒரு நேரம் வயிற்றை நிறைப்பதற்கு இயலாதவர்கள்... நாம் அவர்களை மறந்துவிட்டோம்... அதாவது- நினைத்துப் பார்க்கவே இல்லை.''
ஆனந்தன் ஆழங்களுக்குள் நுழைந்து பேசுவதைப்போல இருந்தது.
“அவர்களுக்காக நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாய்?''
“எதுவுமே செய்வதற்கு என்னால் முடியாது என்ற விஷயம்
எனக்குத் தெரியும். ஆனால், ஒரு நெருப்புப் பந்தத்தை எரிய வைத்தால் போதாதா?''
ஃபெலிக்ஸ் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.
“நீ உன்னுடைய வாழ்க்கையை எப்போதாவது திரும்பிப் பார்த்திருக்கிறாயா ஆனந்தன்?''
ஃபெலிக்ஸ் ஒரு கேள்வியை விட்டெறிந்தான்.
“எப்போதோ மூடப்பட்டுவிட்ட ஒரு அத்தியாயமல்லவா அது?''
“நீதான் இழுத்து அடைத்தாய் என்பதுதானே உண்மை?''
“இருக்கலாம்...''
“இங்கே பார் ஆனந்தன். வேதகிரியின் கோட்பாடுகளைப் பின்பற்றிச் செல்வதற்கு உன்னால் முடியுமா?''
“முயற்சிக்கிறேன்... இயலும் என்ற நம்பிக்கை இல்லாவிட்டாலும்...''
“இங்கே பார் ஆனந்தன். கடந்த நூற்றாண்டின் பாதிக்குப் பிறகு உயர்ந்து கேட்ட ஒரு கோஷம் இருந்தது. விவசாய நிலம் விவசாயிக்கு... பிரபுத்துவத்திற்கு முடிவு கட்டுவோம். சமத்துவ அழகான வாழ்க்கை... அது ஒரு வெற்று கோஷமாக இருந்தது என்பதே இந்த நூற்றாண் டின் ஆரம்பத்தில்தானே நமக்குத் தெரிந்தது? அடிமைத்தனத்தில் விழுந்துவிட்ட ஒரு இனத்தை ஒரே கொடிக்குக் கீழே அணி வகுத்து நிற்கச் செய்யக்கூடிய ஒரு கோஷம்... நாம் அதை ஏற்றுக்கொண்டு பாடிக்கொண்டிருக்கவில்லையா?''
“ஆமாம்... ஆனால், நாம் அடையாளம் தெரிந்துகொண்டு விட்டோமே!''
“எதை அடையாளம் தெரிந்துகொண்டோம்? தலைமை வரிசையில் இருந்தவர்கள் ஐந்து நட்சத்திர சுக வசதிகளுக்குள் நுழைந்துவிட்டார்கள். கொடி பிடித்தவனின் பிள்ளைகள் வெயிலில் வாடிக் கொண்டிருந்தபோது, தலைமை வரிசையில் இருந்தவர்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் மேற்படிப்பு படிப்பதற்காக பறந்து சென்று கொண்டிருந்தார்கள். இதுதானே நடந்தது?''
“ஒரு பலமான அடி விழாது என்று யார் கண்டார்கள்?''
“எதுவுமே உண்டாகாது என்ற விஷயம் தலைமை வரிசையில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும். இப்போது உலகத்தில் உள்ள எந்த இடத்திலும் அந்த "இஸ'மே இல்லாத நிலை உண்டாகி இருக்கிறது. இங்கு நம்முடைய மாநிலத்தில் மட்டும் கொஞ்சம் பேர் அதைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊரின் வளர்ச்சிக்கு குறுக்காக நின்று கொண்டிருக்கிறார்கள். ஊர் வளர்ச்சியடைந்து விட்டால் "இஸ'த்தை வைத்து வியாபாரம் பண்ணிக் கொண்டிருப் பவர்கள் இழக்கப்போவது ஒரு சாம்ராஜ்ஜியத்தை இல்லையா?''
“இங்குதான் வேதகிரியின் கோட்பாடுகளின் முக்கியத்துவம் வருகிறது... சுரண்டப்பட்ட அடிமைகளுக்கு நடுவில் நாம் நெருப்புப் பந்தத்துடன் இறங்கிச் செல்ல வேண்டும். அவர்களுக்கு அறிவுரை கூறி விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும்.''
“யாரால் அதைச் செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்த்திருக்கிறாயா? சாத்தியமே இல்லாத விஷயம். காலம் கடந்துவிட்டது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் ஆனந்தன்.''
ஃபெலிக்ஸ் குவளையை காலி செய்தான். மீண்டும் நிறைத்தான். குவளைகள் நிறைவதும் காலி ஆவதுமாக இருந்தன.
சுய உணர்வு கொண்ட மனதின் செயல்பாடு படிப்படியாக
அசைவே அற்ற ஒரு நிலையை அடைந்துவிட்டதைப்போல தோன்றியது... அவர்களுக்குடையே.
5
பகலின் வெளிறிப்போன முகத்தையே பார்த்துக்கொண்டு ஆனந்தன் நின்றிருந்தான்.
நேற்று மது அருந்திக் கொண்டிருப்பதற்கு மத்தியில் ஃபெலிக்ஸ் விட்டெறிந்த கேள்விகள் மீண்டும் மனதில் எழுந்து கொண்டிருந்தன.
ஃபெலிக்ஸ் முழுமையாக மாறிவிட்டிருந்தான். நல்லது... தனக்கு ஒரு வகையில் இயலாமல் போனது, ஃபெலிக்ஸுக்கு முடிந்திருக் கிறதே!
ஆனந்தன் நினைத்துப் பார்த்தான்.
பன்னிரண்டாவது வயதில் எப்போதோ வாழ்க்கையில் புரிந்து கொள்ளலின் முதல் வெளிச்சம் உண்டான ஒரு அனுபவம்...
சித்த குருகுல ஆசிரமத்தின் வாசற்படியில் ஆனந்தன் என்ற பன்னிரண்டு வயது சிறுவன் நடுங்கிக் கொண்டிருக்கும் கால்களுடன் நின்று கொண்டிருந்தான்.
அவன் பிறந்து விழுந்த மண் பிள்ளைப் பருவத்தில் எட்டு வைத்து எட்டு வைத்து நடந்த மண்... ஏழு வயது வரை துள்ளிக் குதித்து ஓடிய மண்... இலஞ்சி மரங்கள் வளர்ந்திருந்த இடமும் செண்பகத் தோட்டமும்...
பெரியப்பாவைப் பார்ப்பதற்குத்தான் ஆனந்தன் சித்த குருகுல ஆசிரமத்திற்கு வந்தான். தந்தையின் பாசமென்றால் என்னவென்று தெரிந்திராத ஆனந்தனுக்கு பாசத்தைக் கொடுத்து வளர்த்தது
அவனுடைய தந்தையின் அண்ணனான பெரியப்பாதான். சந்நியாசம் பூண்ட மனிதர்... ஏழாவது வயதில் ஒரு பறித்து நடுதல்... அனைத்தும் இழக்கப்பட்டு விட்டன. பன்னிரண்டாவது பெரியப்பாவைப் பற்றிய நினைவுகள் மனதை ஆக்கிரமித்து விட்டிருந்தன.
ஒரு பயணம்... கால்நடையாகத்தான். யாரிடமும் கூறவில்லை. இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், கூறுவதற்கு யார் இருக்கிறார்கள்? கையற்ற நிலையில் இருக்கும் தாய்...
ஆசிரமம் நிறைய மக்கள்.
தீராத நோய்களுக்கு வழி தேடி வந்திருப்பவர்கள்-
அறையும் நிறையும் உள்ள அந்தப் பழைய ஓலையாலான பாரம்பரிய வீடு அப்படியேதான் இருந்தது. நீளமான திண்ணையில் சிறிய சுவாமி தர்மானந்தா அமர்ந்திருந்தார். இளமை நிறைந்த அழகான தோற்றத்தைக் கொண்ட சுவாமிகள். நீண்டு வளர்ந்த, கறுத்து சுருண்ட அடர்த்தியான தலைமுடியும் தாடியும்... காவி ஆடை... மிதியடி... கழுத்தில் ருத்திராட்ச மாலை...
கலை வேலைப்பாடுகள் கொண்ட தூணுக்கு எதிரில் இருந்த சிறிய அறையில் பெரிய ஒரு படம் கண்ணாடி போட்டு மாட்டப் பட்டிருந்தது. குருவின் படம்... தாடியும் முடியும் வளர்ந்திருக்கும் கோபமான முகபாவம் கொண்ட அந்த பெரிய படம்... இரு பக்கங்க ளிலும் எரிந்து கொண்டிருக்கும் குத்து விளக்குகள்... குரு உயிருடன் இருக்கிறார் என்பது இன்னொரு உண்மை.
அந்த குரு ஆனந்தனின் பெரியப்பா...