வேதகிரி - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6362
அந்த மனிதரைப் பார்ப்பதற்குத்தான் ஆனந்தன் என்ற சிறுவன் வந்திருந்தான். பல வருடங்களுக்கு முன்னால் அவனுடைய பெரியப் பாவுடன் வந்துசேர்ந்து கொண்டவர்தான் சிறிய சுவாமியான தர்மானந்தா.
தன் அன்னையின் கையைப் பிடித்துக் கொண்டு தங்களுடைய சொந்த வீட்டை விட்டு மிகவும் தூரத்தில் வந்து வசித்த ஆனந்தன் என்ற சிறுவனுக்கு, குடும்ப உறவுகளின் சிதிலம் என்றால் என்னவென்று தெரியவில்லை. தன்னுடைய பெரியப்பா குடும்பத்துக்குச் சொந்தமான வீட்டில் இருக்கிறார் என்ற விஷயம் மட்டும் தெரியும்.
வளரும்போது ஒருநாள் போய் பார்க்க வேண்டும். அது ஒரு விருப்பமாக இருந்தது.
அப்படித்தான் தன்னுடைய பெரியப்பாவைப் பார்ப்பதற்காக ஆனந்தன் வந்தான். வீடு முற்றிலும் மாறிவிட்டிருந்தது. மிகப் பெரிய ஒரு ஆசிரமமாக சிகிச்சை மையமாக அதை மாற்றிவிட்டிருந்தார்கள்.
தன் பெரியப்பாவின் மார்பில் கிடந்து வளர்ந்ததும், தாடி ரோமங் களைக் கிள்ளி விட்டதும், அந்தக் கைகளில் அமர்ந்து கொண்டு கிராமத்தின் வயல் வரப்புகளின் வழியாக கோவில் குளத்திற்குச் சென்றதும், குளத்தில் நீந்துவதற்குக் கற்றதும், பள்ளிக்கூடத்தில் சேர்ந்ததும், சிலேட்டில் முதல் எழுத்து எழுதியதும் ஆனந்தனுக்கு தெளிவான நினைவுகளாக இருந்தன.
வறுமையின் பிடியில் பட்டு வீசி எறியப்பட்ட ஆனந்தன் என்ற சிறுவன் தன்னுடைய பெரியப்பாவின் கருணையை எதிர்பார்த்து சொந்த கிராமத்திற்கு வந்தான். என்னென்ன மாற்றங்களெல்லாம் உண்டாகி விட்டிருக்கின்றன. ஏராளமான நோயாளிகள்... குழந்தைத் துறவிகள்!
ஆயுர்வேத மருந்துகளின் கடுமையான வாசனை நிறைந்த சூழ்நிலை...
சுவாமி தர்மானந்தன் ஆனந்தனைப் பார்த்தார். ஒரே பார்வையில் அந்தச் சிறுவனை துறவிக்குப் பிடித்துவிட்டது.
“அருகில் வா...'' சுவாமி அழைத்தார்.
ஆனந்தன் அருகில் போய் நின்றான்.
“என்ன விஷயமாக வந்திருக்கிறாய்?''
துறவி கேட்டார்.
“பெரியப்பாவைப் பார்க்க வேண்டும்.'' நடுங்கிய குரலில் சொன்னான்.
சுவாமி எதுவும் கூறவில்லை. புகைப்படத்தை நோக்கி விரலைச் சுட்டிக் காட்டியவாறு சொன்னார்:
“அந்த புகைப்படத்தைப் பார்த்துவிட்டு போ. இதற்குமேல் இங்கு வராதே.''
ஆனந்தனுக்கு வருத்தமாக இருந்தது. மிகுந்த ஏமாற்றமும்.
சீடர்கள் கண்களை உருட்டினார்கள்.
ஏமாற்றத்துடன் ஆனந்தன் படிகளில் இறங்கினான். தன்னுடைய பெரியப்பாவைப் பார்க்க முடியவில்லை. தேம்பிக் கொண்டிருக்கும் மனதுடன் ஆனந்தன் மெதுவாகத் திரும்பிச் சென்றான்.
அது ஒரு பயணமாக இருந்தது. அதாவது- முடிவற்ற ஒரு பயணத்தின் ஆரம்பமாக இருந்தது.
அதற்குப் பிறகு அவன் தன் பெரியப்பாவைப் பார்க்கவே இல்லை. அடுத்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவர் மரணத்தைத் தழுவி விட்டார். சொத்துகள் முழுவதையும் சீடரான தர்மானந்தன் தன் கையில் வைத்துக் கொண்டார். மரணத்திற்கு முந்தைய நாளன்று உதவி பதிவாளரை வீட்டுக்கு வரவழைத்து, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, பதிவு செய்து அவற்றைத் தனக்கு சொந்தமாக ஆக்கிக் கொண்டார்.
எல்லா சொத்துகளும் தர்மானந்த சுவாமி திருவடிகளுக்குச் சொந்தமானவையாக ஆயின.
தொடர்ந்து துறவியாகவும் சிஷ்யையாகவும் இருந்த இளம் பெண்ணை தன்னுடைய மனைவியாக ஆக்கிக் கொண்டார். பொருட்கள் முழுவதையும் விற்றுப் பணமாக்கி அந்த ஊரை விட்டே போய்விட்டார் என்ற தகவலை அவன் தெரிந்து கொண்டான்.
துறவி என்றால் திருடன் என்ற தெளிவான உண்மை ஆனந்தனின் மனதில் ஒரு வெளிச்சத்தைப்போல நிறைந்திருந்தது.
“நீ என்ன தீவிரமான சிந்தனையில் இருப்பதைப்போல இருக்கிறதே?''
ஃபெலிக்ஸின் குரல், சிந்தனைகளிலிருந்து ஆனந்தனை சுய உணர்வுக்குக் கொண்டு வந்தது.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை... வெறுமனே...''
“உன்னைப் பற்றி சிவகாமி ஒரு கமெண்ட் சொன்னாள்.''
ஃபெலிக்ஸ் சிரித்தான்.
“என்ன அது?''
“உனக்கு பெண்கள் விரும்புகிற ஒரு தோற்றம் இருக்கிறது என்று சொன்னாள்.''
“ஓஹோ... அப்படியா?'' ஆனந்தன் மென்மையாக சிரித்தான்.
“இன்னொரு விஷயத்தையும் சொன்னாள். என்னைப் பார்ப்பதற்கு முன்னால் உன்னைப் பார்த்திருந்தால், அவள் உன்னுடன் சேர்ந்து வந்திருப்பாளாம்.''
அதைக் கேட்டு ஆனந்தன் சற்று அதிர்ச்சியடைந்து விட்டான்.
எதுவும் பதில் கூற முடியவில்லை.
“இந்த பெண்களின் மனதே... யாரால் வாசிக்க முடிகிறது?'' ஃபெக்லிக்ஸ் சிரித்தான். அவன் அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால், ஆனந்தனின் மனதில் ஒரு தர்மசங்கடமான நிலை உண்டானது.
மனதிற்குள்ளிருந்து யாரோ மெதுவான குரலில் முணுமுணுப்பதைப் போல இருந்தது.
இனிமேல் இங்கே தொடர்ந்து இருக்கக் கூடாது.
சிறிது நேரம் சென்றதும் சிவகாமியை அழைத்துக் கொண்டு ஃபெலிக்ஸ் வெளியேறினான்.
“நாங்கள் சிறிது சுற்றிவிட்டு வருகிறோம். இவள் என்னவோ பர்ச்சேஸ் பண்ணணுமாம்.''
ஃபெலிக்ஸ் சொன்னான்.
“நீங்களும் எங்களுடன் வரலாம். ஆட்சேபனை இல்லை.'' மணி ஒலிப்பதைப்போல இருந்தது சிவகாமியின் குரல்.
“நன்றி... நீங்கள் போய்விட்டு வாருங்கள். நான் இங்கேயே இருக்கிறேன்.''
ஆனந்தன் சொன்னான்.
அவர்கள் போய்விட்டார்கள்.
அவர்கள் ஒரு குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஃபெலிக்ஸைப் பொறுத்த வரையில், எந்தச் சமயத்திலும் இப்படியொரு விஷயத்தைச் சிந்தித்துப் பார்க்கக்கூட முடிந்ததில்லை.
வேறொரு தளத்தில் வாழ்க்கை அவனை விசி எறிந்துவிட்டிருந்ததே! எவ்வளவு சீக்கிரமாக மாறுதல் உண்டாகிவிட்டிருக்கிறது.
தான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம் என்ற ஒரு மெல்லிய சிந்தனை ஆனந்தனின் மனதில் எங்கோ ஒரு நெருப்புப் பொறியைப் போல தோன்றிவிட்டிருந்தது. உண்மையிலேயே அதுதானே நடந்திருக்கிறது.
அறையைப் பூட்டிவிட்டு வெளியேறினான்.
ஃபெலிக்ஸ் திரும்பி வருவதற்கு நேரமாகும். பெரும்பாலும் அவர்கள் ஏதாவது உணவகத்திற்குள் நுழைந்து உணவு சாப்பிட்டு விட்டுத்தான் திருப்பி வருவார்கள். இரவில் தாமதமாகக்கூட வரலாம். எப்போதும் போகக் கூடிய மலபார் பகுதியைச் சேர்ந்த செய்து முஹம்மதின் தேநீர் கடையில் சூடான தேநீர் குடித்துவிட்டுத் திரும்பி வந்தபோது, மிகவும் வயதான ஒரு பெண் பிச்சைப் பாத்திரத்தை நீட்டிக் கொண்டு அவனுக்கு முன்னால் நின்றிருந்தாள்.
ஹோட்டலில் இருந்து வாங்கி விரல்களுக்கு மத்தியில் வைத்திருந்த ரூபாய் நோட்டை அந்தப் பாத்திரத்தில் போட்டான்.
முகத்தைப் பார்க்க முயற்சிக்கவில்லை.
வயதான கிழவி என்ற விஷயம் மட்டும் தெரியும். ஆதரவற்றவளாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எல்லா பிள்ளைகளும் கைகழுவி விட்டவளாக இருக்க வேண்டும்.
அந்தப் பெண்ணுக்கு கடந்த காலம் என்ற ஒன்று இருந்திருக்கு மல்லவா?
இல்லாமல் இருக்க வாய்ப்பில்லையே! அழகும் உடல் ஆரோக்கியமும் இருந்த ஒரு காலம்- திருமணமானவனாக இருந்திருப்பாள். சில பிள்ளைகளையும் பெற்றிருப்பாள். இப்போது அந்தப் பிள்ளைகள் பெரியவர்களாக ஆகியிருப்பார்கள். இப்போது அந்தப் பிள்ளைகள் இவளைத் தெருவில் விட்டெறிந்திருப்பார்கள்...
இன்று சர்வசாதாரணமாக நடந்துகொண்டிருப்பதும் அது தானே!
ஒரு மின்னலைப்போல தன் அன்னையின் உருவம் ஆனந்தனின் மனதில் வந்து நின்றது.
என்றோ... எவ்வளவோ வருடங்களுக்கு முன்னால் தன் தாயிடம் ஒரு வார்த்தைகூட கூறாமல் வாழ்க்கையின் இருண்ட பாதையில் நடந்து சென்ற நாள்...