வேதகிரி - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6365
பொது வாகவே உங்களுக்கு என்மீது ஒரு கண் இருக்கிறது என்ற விஷயமும் எனக்குத் தெரியும். ஆட்சேபனை எதுவும் இல்லை. சந்தோஷம்தான்... ஆனால், ஒரு விஷயம்- அது நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே...''
இந்த அளவுக்கு தைரியத்துடன் ஒரு பெண் தானே வலிய வந்து கூறுகிறாள் என்றால், அவளுடைய மனதின் துணிச்சல் பலமானதாக இருக்க வேண்டும்.
உடனடியாக பதில் சொன்னான்:
“எந்த சமயத்திலும் நடக்காத விஷயம், கார்த்திகா. நான் என்னுடைய சசிதரனின் ஆன்மாவிடம் நன்றியுடன் இருக்க வேண்டும். அது இல்லாத ஒரு நல்ல உறவு... என்னிடமிருந்து அதை மட்டும் எதிர்பார்த்தால் போதும்...''
தன்னையும் அறியாமல் கூறிவிட்டோமோ என்பது தெரியவில்லை.
அதற்குப் பிறகு இன்றுவரை கார்த்திகா அப்படிப்பட்ட ஒரு வேண்டுகோளை வைத்ததேயில்லை.
இப்போதும் கார்த்திகா விதவையாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். தொலைபேசியிலும் கடிதத்திலும் நட்பு இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கார்த்திகாதான் ஜெய்ஷாவை அவனுடைய கையில் பிடித்துத் தந்தாள். நேரில் அல்ல- தொலைபேசியின் மூலமாக...
ஒருநாள் கார்த்திகாவின் ஃபோன்...
“மிஸ்டர் ஆனந்தன்... நீங்கள் ஒரு அனாதையான கண்பார்வை தெரியாத பெண்ணுக்கு ஸ்பான்ஸராக வேண்டும். என்னுடைய இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதில் தவறு எதுவும் உண்டாகாது. உங்களுக்கு கடவுளின் அருள் கிடைக்கும். பார்வை இல்லாவிட்டாலும் அவள் நல்ல திறமையான பெண்...''
“கார்த்திகா, உங்களின் கோரிக்கையை நூறு மடங்கு ஏற்றுக் கொள்கிறேன். அதற்கான ஆயத்தங்களைச் செய்து கொள்ளுங்கள்.''
அந்தச் சமயத்திலேயே அவன் பதில் சொன்னான்.
ஜெய்ஷா என்ற பார்வை தெரியாத பெண் அனாதை இல்லத்திற்கு வந்தாள். அன்றிலிருந்து பாதுகாப்பாளர் என்ற பதவியை அவன் ஏற்றெடுத்துக் கொண்டான். மாதம் தவறாமல் நல்ல ஒரு தொகையை அனாதை இல்லத்திற்கு அனுப்பி வைத்தான்.
இங்கிருந்து ஜெய்ஷாவை வாழ்க்கைத் தோழியாக்கிக் கொண்டு, நேராக பீர்மேட்டுக்கு...
கார்த்திகாவைத் தேடி-
அதற்குப் பிறகு இருப்பது எதைப் பற்றியும் தீர்மானிக்கவில்லை.
இப்படி ஒரு தீர்மானத்தை திடீரென்று அவன் எடுத்தான்.
ஒரு மனதின் குரலைப்போல...
வாழ்க்கையை நோக்கி ஒரு திரும்பிச் செல்லும் பயணம்...
மிகவும் சந்தோஷப்படப் போகிறவள் கார்த்திகாவாகத்தான் இருக்கும்!
பல வருடங்களாக மாதத்தில் ஒருநாள் மட்டுமே நினைத்துப் பார்க்கும் ஜெய்ஷா என்ற கண்பார்வை தெரியாத பெண்ணின் உருவம் மனதில் நிறைந்து நின்றிருந்தது. அதற்கொரு அர்த்தத்தை இன்றுவரை அவன் தந்ததில்லை.
தன்னுடைய வாழ்க்கையுடன், வாழ்க்கையின் ஒரு கண்ணியைக் கோர்ப்பதற்கு விரும்பிய கார்த்திகாதான் ஜெய்ஷா என்ற கன்னியை இப்போது இணைத்து வைக்கிறாள் என்ற விஷயம், நியதியின் அற்புதச் செயல்களில் ஒன்றாக இருக்கலாம்.
“ஆனந்தன்....'' திடீரென்று வந்த குரல் நினைவுகளிலிருந்து
மனதை விடுதலை செய்தது.
முன்னால் சிஸ்டர் ரோஸ்மேரி.
“வாங்க...''
பின்பற்றினான்.
அலுவலக அறையைத் தாண்டி வெளியே வந்த சிஸ்டர்
முன்னால் நடந்தாள்.
சிறிய ஒரு பிரார்த்தனை செய்யும் ஆலயத்திற்குள் சிஸ்டர் நுழைந்தாள். தரையும் மற்ற பகுதிகளும் மிகவும் நன்றாக அமைக்கப் பட்டிருந்த- அதிகம் பெரிய அளவில் இல்லாத ஒரு ஹால்...
“மதரீதியான நம்பிக்கை எதுவும் உங்களுக்கு இல்லையென்றா லும், நாங்கள் புனிதமாகக் காணும் இந்த இடத்தில் வைத்தே நீங்கள் ஜெய்ஷாவைப் பார்க்க வேண்டும். இரண்டு பேருக்கும் மனங்களைத் திறக்கக்கூடிய சந்தர்ப்பம்... கர்த்தாவை சாட்சியாக நிறுத்தி...''
ஆனந்தன் அதற்கு பதில் கூறவில்லை.
மனம் அமைதி நிலவும் ஒரு கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதைப்போல தோன்றியது.
சிஸ்டர் சென்ற அடுத்த நிமிடத்தில் ஜெய்ஷா ஆனந்தனுக்கு முன்னால் வந்து நின்றாள்.
கருப்பு நிறக் கண்ணாடி அணிந்த, அமைதியான, விரிந்த சிரிப்பையும் கொண்ட ஒரு அழகான முகம்... உடல் அப்படியொன்றும் அதிகமாக மெலிந்திருக்கவில்லை. வெளுத்த நிறம்... நல்ல வளர்ச்சி... பெரிய மார்பகங்கள்... தெய்வம் ஒரே ஒரு விஷயத்தைத் தவிர, வேறு எல்லாவற்றையும் வாரி வழங்கிவிட்டிருந்தது.
ஒரு அற்புதக் காட்சியைப் பார்த்து அனுபவிக்கும் மிக அருமை யான ஒரு நிமிடம்...
“ஹாய்... ஜெய்ஷா...'' ஆனந்தனின் குரல் அவளுக்கும் புரிந்தது.
“ஹாய்... ஆனந்தன்...'' பதில் வந்தது. மணி முழக்கத்தைப் போன்ற குரல்.
“நாம் முதல் முறையாகப் பார்க்கிறோம்.'' ஆனந்தன் சொன்னான்.
“இல்லை... எவ்வளவோ நாட்களாக நான் பார்த்துக் கொண்டிருக் கிறேன்... கேட்டுக் கொண்டும் இருக்கிறேன். என்னை இங்கு ஒப்படைத்த நாளிலிருந்து...''
“ஆனால், நான் உன்னை இப்போதுதானே பார்க்கிறேன்! ஹொ... மிகப் பெரிய இழப்புதான்!''
“என்னுடைய பிரார்த்தனையை தெய்வம் இப்போதுதான் கேட்டிருக்க வேண்டும். ஆனந்தன், இப்படிச் செய்ய வேண்டும் என்று உங்களை எது தூண்டியது? இதுவரை வெறும் ஒரு ஸ்பான்ஸராக மட்டும்தானே நீங்கள் இருந்து வந்தீர்கள்.''
ஜெய்ஷா புத்திசாலித்தனமான பெண் என்பது புரிந்தது. நன்றா கப் பேசுகிறாள்.
“ஜெய்ஷா, நீதான் சொன்னாய் அல்லவா? உன்னுடைய பிரார்த்தனையை இப்போதுதான் தெய்வம் காதில் வாங்கியிருக்கிறது என்று. அதுதான் காரணமாக இருக்க வேண்டும். என்னைப் பற்றி...''
“தெரியும்... எவ்வளவோ தெரியும்... கார்த்திகா அக்கா உங்களை என்னுடைய மனதிற்குள் ஆழமாகப் பதிய வைத்திருக்கிறார்களே! அப்போதிருந்தே நான் ஒவ்வொரு விநாடியும் நிமிடமும் உங்களுடன் இரண்டறக் கலந்துவிட்டேன். ஒருநாள் என்னை ஏற்றுக் கொள்வதற் காக வருவீர்கள் என்று என் மனம் கூறிக் கொண்டிருந்தது.''
ஓ... இனி கூறுவதற்கு என்ன இருக்கிறது? விளக்குவதற்கு என்ன இருக்கிறது? எல்லாவற்றையும் அவளே தீர்மானித்து விட்டாளே!
சிறிது நேர அமைதி நகர்ந்து கொண்டிருப்பதைப்போல இருந்தது.
“எனக்கு வெளியே பார்க்கும் சக்தி இல்லை... அந்த ஒரே ஒரு குறை...''
“எனக்கு வெளியே பார்க்கும் சக்தி இருக்கிறது. உள்ளே பார்க்கும் சக்தியும்... இங்கு அந்த ஒரு குறை பிரச்சினையே இல்லை. உன்னை வழி நடத்திச் செல்ல என்னால் முடியும். உனக்கு அன்பைத் தரவும்... வாழ்க்கையைத் தரவும்...'' ஆனந்தனின் வார்த்தைகள் அவளை உணர்ச்சிவசப்படச் செய்தன.
ஆனந்தனின் மனதில் வேதனை கலந்த ஒரு எண்ணம் வந்து விழுந்தது.
தாமதமாவிட்டதைப்போல அவன் உணர்ந்தான்.
தன்னுடைய பாதையிலிருந்து எப்போதோ விலகி வந்திருக்க வேண்டும்!
எதற்காக இப்படி எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்?
இனி என்ன கூறுவது என்பதைப் பற்றி ஜெய்ஷா சிந்தித்துக் கொண்டிருந்தாள். அப்போது ஆனந்தனும் அதே நிலையில் இருந்தான்.
ஒருவரோடொருவர் அறிமுகமாகிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டது நடந்துவிட்டது...
நீண்டகாலமாக பழக்கம் கொண்டவர்களைவிட இப்போது ஒரு படி முன்னால் நின்று கொண்டிருக்கிறார்கள்.