வேதகிரி - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6365
பிசின ஸில் வீழ்ச்சி... உடல் தளர்ந்தது... இளம் வயதைக் கொண்டவளாகவும் சதைப் பிடிப்புடன் இருந்தவளுமான அவனுடைய மனைவிக்கு அந்த விஷயம் தாங்கிக் கொள்வதைவிட மிகவும் பயங்கரமானதாக இருந்தது.
முன்பே வழி தவறிவிட்டிருந்த லாராவிற்கு தன் கணவனின் வீழ்ச்சி ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை...
ஆனால், மிகவும் சீக்கிரமே ஆனந்தன் அந்த உறவிலிருந்து விடுதலை பெற்றுவிட்டான். ஒரு தவிர்க்க முடியாத விஷயத்தைப்போல...
லாராவிற்கு மிகவும் வேதனை உண்டாகியிருக்க வேண்டும் என்று அப்போதே அவனுக்குத் தெரியும்.
இதோ, தன் மனைவியின் கவலையைப் பற்றி அவளுடைய கணவனே கூறுகிறான்...
அந்த விஷயத்திற்குள் மனம் செல்லாமல் இருக்க அவன் மிகவும் கவனமாக இருந்தான்.
அல்ஃபோன்ஸ் அதிகமாக மது அருந்தி, முழு போதையில் இருந்தான்.
இன்னொரு நாளிலும் அவன் தப்பித்து விட்டிருக்கிறான்.
ஒரு ஆட்டோவை அழைத்து அல்ஃபோன்ஸை ஏற்றி, ஆட்டோ கட்டணத்தையும் கொடுத்து அனுப்பிவிட்டு, ஆனந்தன் இன்னொரு திசையை நோக்கித் திரும்பினான்.
8
பனி விலகியிருக்கவில்லை.
புலர்காலைப்பொழுதின் குளிர்ச்சியான விரல் நுனியில் ஆற்றின் நீர் வளையங்கள் மெதுவாக முத்தமிட்டுக் கொண்டிருந்தன. விட்டுச் செல்ல இயலாததைப்போல...
ஆறு மெதுவாக கண்களைச் சிமிட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தது.
சிவன் ஆலயத்தின் அருகில் கரையைத் தழுவி ஓடிக் கொண்டிருந்த ஆற்றின் படிகளில் ஏராளமான ஆட்கள் குளிப்பதற்காக வந்திருந்தார்கள்...
சூரிய உதயத்திற்கு முந்தைய குளியலும் ஆலய தரிசனமும் புண்ணியத்தை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
ஒவ்வொரு குளியலுக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது.
உடல் சுத்தம், மன சுத்தம், செயல் சுத்தம்... இப்படி இப்படி...
ஆனந்தன் கல் படிகளில் இறங்கி ஆற்றில் மூழ்கி நிமிர்ந்தான்.
ஒருமுறை அல்ல... பலமுறை. ஒவ்வொரு முறை மூழ்கும்போதும் ஒவ்வொரு லட்சியம்!
உள்ளுக்குள் எங்கோ ஒரு திரை விலகல்...
கடந்து சென்றவை அனைத்தையும் பூர்வாசிரமம் என்று எழுதிக் கொள்ள வேண்டியதுதான். புதிய ஒரு புண்ணிய ஆசிரமத்திற்கான பாதையில் செல்லும் புதிய பயணம். ஒருவேளை இங்கிருந்துதான் பயணம் ஆரம்பமாக வேண்டும் என்ற கட்டாயம் காரணமாக இருக்கலாம்- இவ்வளவு தூரம் பயணம் செய்து அவன் இங்கே வந்து சேர்ந்ததற்கு.
அதிகாலை பூஜைக்காக நடையைத் திறந்தபோது ஆனந்தனும் அந்த இடத்தில் தலையைக் குனிந்து கொண்டு நின்றிருந்தான்.
மனதில் ஒரேயொரு சிந்தனை. இந்த திரும்பிவரும் பயணம் ஒரு ஆரம்பமாக இருக்க வேண்டுமே! கம்பீரமாக நின்று கொண்டிருந்த சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டு எவ்வளவு நேரம் அவன் நின்றிருந்தான் என்று தெரியவில்லை. மனம் முணுமுணுத்தது- "நட...”
நடந்தான். சிவன் ஆலயம் முழுவதும் சுற்றி வந்தான்.
தொழக்கூடிய எல்லா இடங்களிலும் தொழுதான்.
திரும்பி வந்தான்.
மனதிலிருந்து ஒரு சுமை இறங்கியதைப்போல இருந்தது.
ஆலயத்திற்கு வழிபாடு நடத்த வரும் அனைவரும் ஒருவேளை இப்படி மனதிலிருக்கும் சுமையை இறக்கி வைப்பதுதான் வழக்கமான ஒரு செயலாக இருக்கும்.
மிகவும் இறுதியில் மனிதன் வந்து நிற்பது இங்கேதான்.
பாவத்திலிருந்து விடுதலை பெற...
துயரங்களிலிருந்து விடுபட...
பாவத்திலிருந்து மனிதன் விடுதலை செய்யப்படுகிறானா?
துயரங்களிலிருந்து அவனுக்கு விடுதலை கிடைக்கிறதா?
தெரியவில்லை...
அனைத்தும் ஒரு கற்பனை...
ஆலயங்கள் நிறைந்த நகரத்தின் ஒரு லாட்ஜில் அறை எடுத்தான். இன்று அங்கு தங்க வேண்டும் என்று தோன்றியது. நாளை பொழுது புலரும் நேரத்தில் புறப்படும் புகை வண்டியில் வடக்கு திசை நோக்கிச் செல்லும் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.
தனிமை நிறைந்த ஒருநாள்...
நடுத்தர மனிதர்கள் வந்து செல்லும் ஒரு இடம் என்பது முதலில் பார்த்தபோதே தெரிந்தது. தாங்கக்கூடிய அளவுக்கு அறையின் வாடகை இருந்தது.
மிக அருமையான காற்றும் வெளிச்சமும் உள்ள, சுத்தமும் சுகாதாரமும் உள்ள அறை... பேக்கை அறையில் வைத்தான். ஆடை மாறியது. சிறிது நேரம் சாளரத்திற்குப் பின்னால் நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.
அங்கு அமர்ந்திருந்தால் அந்த சிறிய நகரத்தின் ஒரு பகுதியை நன்றாகப் பார்க்க முடியும். மேற்கு திசையிலிருந்து குளிர்ச்சியான காற்று வீசிக் கொண்டிருந்தது.
திரும்பி வரும் வழியின் முதல் படியில் கால் வைத்ததைப்போல ஒரு தோணல்.
மீண்டுமொரு முறை ஃபெலிக்ஸ், மாலதி ஆகியோரின் முகங்கள் மனதில் தோன்றி மறைந்தன.
ஒருவேளை ஃபெலிக்ஸ் நம்பாமல் இருக்கலாம்.
காரணம் இருக்கிறது. அவன் பலமுறை ஆனந்தனுக்கு அறிவுரைகள் கூறியிருக்கிறான். அப்போதெல்லாம் அவன் விலகியே சென்றிருக்கிறான்.
மாற்றம் என்பதே திடீரென்றுதான் நடக்கும் என்ற விஷயமே இப்போதுதான் அவனுக்குத் தெரிகிறது.
கணக்கு போட்டுக் கொண்டிருக்கும் ஒரு வளர்ச்சி நிலைக்கு ஒருவேளை இது இயலாத ஒன்றாக இருக்கலாம். சொல்லப் போனால், இது தன்மீது சுமத்தப்பட்ட கடமையின் முடிவாகக்கூட இருக்கலாம். இல்லையென்றால் இப்படித் தோன்றுவதற்கு வாய்ப்பில்லையே!
மனம் வெறுமையில் இருக்கும் ஒரு இரவு...
மது இல்லை... போதை தரும் மாது இல்லை...
உறக்கம் தழுவியது எப்போது என்று தெரியவில்லை...
பொழுது புலர்ந்தவுடனே பயணத்திற்குத் தயாரானான். புகைவண்டி நிலையத்தை அடைந்தான். வடக்குப் பக்கம் செல்லும் புகைவண்டி வருவதற்கு இன்னும் நேரம் இருந்தது. காலை பத்திரிகையை வாங்கி லேசாக கண்களை ஓட்டினான்.
கூட்டம் அதிகமாக இருந்தாலும், ஆனந்தனுக்கு அமர்வதற்கு இடம் கிடைத்தது.
மனதை அலட்சியமாக உலாவ விட்டு ஜன்னலின் வழியே பார்த்துக்கொண்டிருந்தான். ஓடி மறைந்துகொண்டிருந்த காட்சியைப் பார்க்கும்போது என்னவோ ஒரு சுவாரசியம் தோன்றியது.
அவ்வப்போது நிற்கும் நிலையங்களில் மக்கள் இறங்குவதும் ஏறுவதுமாக இருந்தார்கள்.
வண்டி அந்த சிறிய ஸ்டேஷனில் நின்றபோது, நேரம் சாயங்காலத்தை நெருங்கி விட்டிருந்தது.
புகைவண்டி நிலையத்தை விட்டு அவன் வெளியே வந்தான்.
ஆட்டோ நிறுத்தத்திற்குச் சென்று ஆட்டோவில் ஏறி போகக் கூடிய இடத்தைக்கூறினான். ஓட்டுனர் நன்கு தெரிந்தவனைப்போல ஆட்டோவை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து கிளம்பினான். சிறிது நேர ஓட்டத்திற்குப் பிறகு, ஒரு சிறிய சந்திப்பைத் தாண்டியவுடன் ஆட்டோவின் வேகத்தைக் குறைத்து ஒரு பெரிய கேட்டுக்கு முன்னால் நிறுத்தினான்.
ஆனந்தன் இறங்கி ஆட்டோவிற்கான கட்டணத்தைக் கொடுத்தான். ஆட்டோ சிறிய சத்தமொன்றை உண்டாக்கியவாறு திரும்பி ஓடி மறைந்தது.
கண்களுக்கு முன்னாலிருந்த கேட்டுக்கு மேலே இருந்த பெயர்ப் பலகையில் கண்களைப் பதித்தான்.
"மேரி மாதா பார்வையற்றோர் பள்ளி!'
"நாம் சரியான இடத்திற்குத்தான் வந்து சேர்ந்திருக்கிறோம்!'
அவன் நினைத்தான்.
கேட்டுக்கு அருகில் ஒரு சிறிய டைம் ஆபீஸ். செக்யூரிட்டியாக நின்றிருந்த மனிதன் தலையை உயர்த்தினான்.