வேதகிரி - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6365
ஆனந்தனின் உள் மனதில் ஒரே தடுமாற்றம்!
அந்தச் சிறிய நகரத்தின் நல்ல ஒரு துணிக்கடைக்குள் நுழைந்து சில ஆடைகளை வாங்கினான். தொடர்ந்து நகைக் கடைக்குள் நுழைந்தான். சில தங்க நகைகளை வாங்கினான். தான் கை பிடிக்கும் பெண்ணின் உடலில் எதையாவது அணிவிக்கவில்லையென்றால் அது ஒரு குறையாக இருக்காதா?
9
ஆனந்தா, நீ எங்கே போகிறாய்?'
ஒரு கேள்வி எழுந்தது.
முன்பொருமுறை இந்த கேள்விக்கு அவன் பதில் அளித்தான்: "புறப்பட்ட இடத்துக்கு...'
ஆனால், இப்போது அந்த பதிலை மாற்றினான்.
"வாழ்க்கைக்கு... வாழ்க்கைக்கு...'
மிகவும் தெளிவாகவே பதிலைச் சொன்னான்.
மனம் விடுவதாகவே இல்லை. மீண்டுமொருமுறை கேள்வி!
"இந்த வாழ்க்கைக்காகத்தான் நீ காத்திருந்தாயா?'
"அப்படி இல்லை... ஆனால், இப்போது இப்படி மாறியிருக்கிறேன்!'
குரல் கம்பீரமாக இருந்தது. பதில் தெளிவாக இருந்தது.
அதற்குப் பிறகு கேள்வி வரவில்லை.
அறையில் இப்போது ஆனந்தன் மட்டுமே...
ஒரு மிக அருமையான நறுமணம் அறைக்குள் பரவுவதைப் போல இருந்தது.
ஒரு வளையல் சத்தம் ஒலிப்பதைப்போல இருந்தது.
ஒரு குலுங்கல் சிரிப்பு கேட்கிறதே! மணியோசையைப்போல...
ஆமாம்... அது ஜெய்ஷாவின் குரல்தான்... ஜெய்ஷாவிடமிருந்து வந்த நறுமணம்தான் அறையில் பரவி இருந்தது.
அவளுடைய வளையல் சத்தமே அது.
ஆனந்தன் பரவச நிலைக்குள் சிக்கிக் கொண்டதைப்போல உணர்ந்தான்.
இப்படிப்பட்ட ஒரு சஞ்சலநிலை இதற்கு முன்பு மனதிற்கு உண்டானதில்லை.
மனம் லேசானதைப் போல இருந்தது.
ஆன்மாவில் மென்மையான விரல்கள் தொட்டன.
ஜெய்ஷா இங்கு எங்கோ நிறைந்து நின்று கொண்டிருப்பதைப் போல இருந்தது. சிந்தனையிலும் கனவிலும் மூச்சிலும் அமைதி யிலும் ஜெய்ஷா...
கண்களை மூடினாலும் கண்களைத் திறந்தாலும் ஜெய்ஷா மட்டும்...
ஆனந்தனுக்கு சிரிக்க வேண்டும்போல இருந்தது.
கண்களுக்குப் பார்வை இல்லாவிட்டாலும் அவள் தன்னைப் பார்த்திருக்கிறாள். நீண்ட நாட்களுக்கு முன்பே...
பிறப்பின் பார்க்காத பக்கங்களை நோக்கி தனக்கே தெரியாமல் வெளிச்சத்தைப் பரவவிடுகிறாளே!
எங்கு... யார் இந்த உறவை எழுதி வைத்தது?
இப்போதும் அதற்கு ஒரு பதிலை ஆனந்தனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அனாதை இல்லத்திற்கு ஃபோன் செய்தான்.
சிஸ்டர் ரோஸ்மேரிதான் ஃபோனை எடுத்தாள்.
“என்ன ஆனந்தன்? உங்களுக்கு தூக்கம் வரவில்லையா?''
சிஸ்டரின் சிரிப்புச் சத்தம் உரத்துக் கேட்டது.
“இல்லை... வெறுமனே... கொஞ்சம்...''
“ஜெய்ஷாவுடன் பேசவேண்டும்.. அப்படித்தானே? நான் கொடுக்கிறேன்.''
சிறிது நேரம் கழித்து ஜெய்ஷா லைனில் வந்தாள்.
“ஹலோ ஆனந்தன்... நான் இந்த அழைப்பை இப்போது எதிர்பார்த்தேன்.''
“ஜெய்ஷா...? எப்படி? சந்தோஷமா?''
“உண்மையாகவே... சொல்லப்போனால்- இந்த பூமியிலேயே மிகவும் அதிகமாக சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும் பெண் நானாகத்தான் இருக்க வேண்டும். அப்படித்தானே?''
“ஜெய்ஷா, உண்மையாகவே நீ என்னுடைய மனதிற்குள் நுழைந்த பிறகு எனக்கு தூக்கம் என்பதே இல்லாமல் போய்விட்டது!''
“அப்படியென்றால் நான் எந்த அளவிற்கு உறங்காமல் இருந்திருக்கிறேன் என்ற விஷயம் இப்போது புரிகிறதா?''
“எனக்கு அந்த விஷயத்தை ஏன் தெரிவிக்கவில்லை?''
“நீங்கள் மிகப்பெரிய மனிதர்... என்னைவிட எவ்வளவோ தூரத்தில்... உயரத்தில்... ஒரு சிறிய கண் பார்வை இல்லாத பெண் ஆசைப்படுவதற்கு எவ்வளவோ வரையறைகள் இருக்கின்றன... இல்லையா ஆனந்தன்?''
“இப்போது எனக்கு குற்றவுணர்வு உண்டாகிறது, ஜெய்ஷா. இந்த அளவிற்கு தாமதமானதற்கு...''
“அது தேவையில்வலை... இங்கே பாருங்க... எல்லாம் அதற்கென்று இருக்கக்கூடிய நேரத்தில்தான் நடக்கும் என்பது தெரிகிறதா?''
“இப்போது அது புரிகிறது. என் சிந்தனைகள் அப்படிப்பட்ட தில்லை, ஜெய்ஷா. நான் மாறிவிட்டேன்... எவ்வளவோ மாறி விட்டேன்...''
“அந்த மாற்றம் என் வாழ்க்கைக்கு வெளிச்சமாக ஆகியிருக்கிறது. உணவு சாப்பிட்டு விட்டீர்களா?''
“இல்லை...''
“ஏன்?''
“தோன்றவில்லை...''
“சாப்பிடுங்க... இனி அருகில் அமர்ந்து ஊட்டுவதற்கு நான் இருக்கிறேன் அல்லவா ஆனந்தன்?''
“சரி... ஜெய்ஷா, நான் மீண்டும் அழைக்கிறேன்.''
“ஆனந்தன் உங்களின் அந்த அழைப்பிற்காகத்தானே நான் காத்திருக்கிறேன்?''
“பை... பை... ''ஃபோன் "கட்' ஆனபோது மனதில் ஒரு வெறுமை யின் வருடல் உண்டானது.
10
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே ஆனந்தன் தயாராகி விட்டான். புத்தாடை அணிந்தபோது இனம் புரியாத ஒரு சந்தோஷம்... ஒரு புத்துணர்வு... அறையைப் பூட்டினான். முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாடகைக் கார் லாட்ஜுக்கு முன்னால் தயாராக நின்று கொண்டிருந்தது.
மெதுவாக ஓடிக் கொண்டிருந்த காரின் பின்னிருக்கையில் சாய்ந்து உட்கார்ந்திருந்தபோது, மனதில் சில முகங்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன.
எந்தச் சமயத்திலும் பார்த்தே இராத தன் தந்தையைப் பற்றிய நினைப்பு...
எப்போதும் அன்பைப் பொழிந்த தாயின் முகம்.
"அம்மா, இந்த மகன் வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறான்... ஆசீர்வதிக்கணும்.'
அவனையே அறியாமல் மனதிற்குள் எழுந்த உள் மனதின்
அழுகை...
கார் அனாதை இல்லத்தை அடைந்தபோது, அங்கு ஆட்கள் கூடியிருந்தார்கள்.
மிகவும் அருமையாக அலங்கரித்திருந்தார்கள்.
வெளியே தன்னை எதிர்பார்த்து நின்றுகொண்டிருப்பதைப்போல சிஸ்டர் ரோஸ்மேரியும் மற்றவர்களும்... உற்சாகமான வரவேற்பு...
அவர்களுடன் சேர்ந்து உள்ளே நடந்தான்...
கடவுளின் பீடத்திற்கு முன்னால் நின்றிருந்த பெரிய பாதிரியாருக்கு முன்னால் போய் நின்று, தன்னை அவருடன் அறிமுகப்படுத்திக் கொண்டான்.
பாதிரியார் தன் இரு கைகளையும் உயர்த்தி ஆசீர்வதித்தார்.
“தேவதைகளும் கருணை வடிவமான கர்த்தரும் உங்களை ஆசீர்வதிக்கட்டும்...'' அவர் ஆசீர்வதித்தார்.
ஆனந்தனின் கண்கள் தேடின.
ஜெய்ஷாவை சற்று பார்க்க வேண்டும். அவள் புதுமணப்பெண்ணின் கோலத்தில் எப்படி இருப்பாள்?
அடுத்த நிமிடம் ஜெய்ஷா வந்தாள். அவளை சிஸ்டர்களின் ஒரு கூட்டம் சூழ்ந்து வந்து கொண்டிருந்தது.
அவன் அவளைப் பார்த்தான்.
கண்களுக்கு முன்னால் தூய வெள்ளை நிற சிறகுகளைக் கொண்ட ஒரு தேவதை... மணமகளின் கோலத்தில் ஜெய்ஷா பிரகாசித்துக் கொண்டிருந்தாள்.
ஆனந்தனின் மனதில் ஒரே மலர்ச்சி...
கடவுளின் பீடத்திற்கு முன்னால் ஆனந்தனும் ஜெய்ஷாவும் அருகருகே நின்றிருந்தார்கள்.
சடங்குகள் ஆரம்பமாயின.
மணிச்சத்தம் உரத்து ஒலித்தது.
புன்னகை படர்ந்த முகத்துடன் ஜெய்ஷா ஆனந்தனுக்கு முன்னால் நின்றிருந்தாள்- ஒரு பெண்ணின் வாழ்க்கை வளமாகிற அபூர்வ நிமிடம்...
“ஆனந்தன்... நில்...''
ஒரு உரத்த சத்தத்தைக் கேட்டு எல்லாரும் அதிர்ச்சியடைந்தார்கள்.
ஆட்களின் கூட்டத்திலிருந்து கருப்பு நிற உடை அணிந்த இரண்டு பேர் கடவுளின் பீடத்தை நோக்கி பாய்ந்து வந்தார்கள்.
ஆனந்தன் ஒரு அதிர்ச்சியுடன் தன் முகத்தை உயர்த்திப் பார்த்தான்.
நடுங்கி விட்டான் ஆனந்தன்.
அதோ நின்று கொண்டிருக்கிறார்கள்- கருப்பு ஆடைகள் அணிந்த இரண்டு பேர்...
அவர்கள்... அவர்கள்...