வேதகிரி - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6364
உள்மனதில் முன்பே ஜெய்ஷா தன்னைப் பார்க்கவும் பேசவும் செய்திருக்கிறாள் என்ற விஷயம் ஆனந்தனின் மனதை மிகவும் சந்தோஷப்படச் செய்தது.
இனி என்ன செய்வது? அந்த புண்ணியச் செயலைச் செய்வதற்கு இனியும் ஏன் தாமதிக்க வேண்டும்?
சில நடைமுறைச் செயல்கள் இருக்கின்றன என்று சிஸ்டர் சொன்னாளே!
“ஜெய்ஷா, கூறுவதற்கு இன்னும் ஏதாவது இருக்கிறதா?'' ஆனந் தன் கேட்டான்.
“இனி கூறுவதற்கு என்ன இருக்கிறது? எல்லாவற்றையும் நான் ஏற்கெனவே கூறி முடித்துவிட்டேன் அல்லவா? எவ்வளவோ காலமாக... அந்தக் குரலை நேரில் கேட்க வேண்டும் என்பது மட்டுமே மனதில் இருந்த எண்ணமாக இருந்தது. இங்கு எல்லாம் முழுமை அடைந்து விட்டதே!''
ஜெய்ஷாவின் குரலில் சந்தோஷத்தின் துடிப்பு!
சிஸ்டர் அவர்களுக்கு முன்னால் வந்து நின்றாள். அவளுடன் வேறு இரண்டு மூன்று கன்னியாஸ்திரீகளும், அங்குள்ள வேறு சில ஆட்களும்.
“பேச வேண்டியவற்றையெல்லாம் பேசியாகிவிட்டதா, குழந்தைகளே?''
சிஸ்டர் கேட்டாள்.
“மிகவும் முன்பே பேசியாகிவிட்டதே, மதர்!'' ஜெய்ஷா மகிழ்ச்சியுடன் சொன்னாள். சிஸ்டர் அவளைப் பிடித்து அருகில் நிறுத்திக் கொண்டாள்.
“ஜெய்ஷா, நீ மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறாயே!'' சிஸ்டர் மற்றவர்களுக்கு ஆனந்தனை அறிமுகப்படுத்தி வைத்தாள்.
“இவர்தான் ஆனந்தன்... பார்த்துக் கொள்ளுங்கள்... நமக்கு குரல் மூலம் மட்டுமே பழக்கமாகியிருக்கும் மனிதர். நம்முடைய நிறுவனத்திலேயே மிகவும் நல்ல ஒரு ஸ்பான்ஸர்...''
ஆனந்தன் அவர்களைப் பார்த்து கைகளைக் குவித்தான்.
அந்தக் கூட்டத்தில் சற்று வயதான ஒரு சிஸ்டர் இப்படி சொன்னாள்:
“கர்த்தரின் தீர்மானம் இது. உங்களுடன் கருணைமயமான கர்த்தர் எப்போதும் இருப்பார்- உங்களை வழி நடத்துவதற்கு...''
ஆனந்தன் தலையைக் குனிந்தான்.
அவள் கைகளை உயர்த்தி ஆசீர்வதித்தாள்.
“எங்களுடைய இந்த அழகுப் பெண்ணை இங்கிருந்து அழைத்துக் கொண்டு சென்றாலும், வருடத்திற்கு ஒருமுறையாவது இரண்டு பேரும் இங்கு கொஞ்சம் வந்துவிட்டுப் போக வேண்டும். மறந்து விடக் கூடாது...''
சிஸ்டர் ரோஸ்லின்தான் இப்படிச் சொன்னாள்.
“வருடத்திற்கு ஒருமுறை என்ற கணக்கு வேண்டாம்... வசதி உள்ளபோதெல்லாம் நாங்கள் இங்கு வருவோம். ஜெய்ஷாவின் சொந்த வீடாயிற்றே இது! என்னுடைய வீடும்... எங்களுக்கு வேறு யார் இருக்கிறார்கள்?'' ஆனந்தன் சொன்னான்.
“மகிழ்ச்சி. கர்த்தர் அருளட்டும்.''
அவர்கள் பிரிந்து சென்றார்கள். ஜெய்ஷா அவர்களுடன் சேர்ந்து நடந்தாள்.
ஆனந்தனும் சிஸ்டர் ரோஸ்லினும் மட்டும் இருந்தார்கள்.
“இங்கே பாருங்க, ஆனந்தன்... அனாதை இல்லத்தில் ஒரு திருமணம் நடக்கப் போகிறது. பெரிய கொண்டாட்டம் எதுவும் வேண்டாம். எனினும், இங்கு இருப்பவர்களும் எங்களுக்குத் தெரிந்த நல்ல மனம் கொண்டவர்களும் இதில் பங்குபெற வேண்டும் என்பது கட்டாயம். வரும் ஞாயிற்றுக்கிழமையைத்தான் அதற்காக நாங்கள் முடிவு செய்து வைத்திருக்கிறோம். காலையில் "ப்ரேயர்” முடிந்ததும், பெரிய பாதிரியார் வருவார். அனாதை இல்லத்தின் காப்பாளர்
அவர்தான். நாங்கள் எல்லா விஷயங்களையும் ஏற்கெனவே பேசி விட்டோம்.''
“சிஸ்டர், நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதன்படி நான் சந்தோஷத்துடன் நடக்கிறேன். உங்களுடைய மகிழ்ச்சிதான் என்னுடைய மகிழ்ச்சியும்.'' ஆனந்தன் சொன்னான்.
ஞாயிற்றுக்கிழமைக்கு இன்னும் இரண்டு நாட்கள் மீதமிருந்தன.
“இனி நான் என்ன செய்ய வேண்டும், சிஸ்டர்? சொல்லுங்க...''
“ஞாயிற்றுக்கிழமை உங்களுடைய திருமணமாயிற்றே. அதற்கான ஆயத்தங்களைச் செய்ய வேண்டாமா? சடங்குகளில் நம்பிக்கையில்லை யென்றாலும், தாலிகட்டுதல் என்ற சடங்கு இருக்கிறதே! மணமக்களுக்கு புத்தாடை... நகைகள்... இதெல்லாம்...''
சிஸ்டரின் உதடுகளில் புன்னகை மலர்ந்தது.
“எல்லாவற்றையும் நீங்களே பார்த்துக் கொண்டால் போதும், சிஸ்டர். இங்குதான் தொகை இருக்கிறதே!''
“ஆனந்தன், அதற்காக நீங்கள் எதுவும் சிரமப்பட வேண்டியதில்லை. நாங்கள் எல்லா காரியங்களையும் இங்கு செய்து முடித்துவிட்டோம். வெறுமனே சொன்னேன்... அவ்வளவுதான்... அவளுக்கு நகைகள் எடுத்தாகிவிட்டன. ஆடைகள் எடுத்தாகி விட்டன. அனைத்தும் முடிந்து விட்டன. தற்போதைக்கு நீங்கள் இரண்டு நாட்களுக்கு எங்கே தங்கப்போகிறீர்கள்?''
“புகைவண்டி நிலையத்திற்கு அருகில் ஒரு அறை ஏற்பாடு செய்ய வேண்டும். எனக்காக கூறுவதற்கும் உடன் இருப்பதற்கும் யாருமே இல்லை என்பது உங்களுக்கே தெரியுமில்லையா சிஸ்டர்?''
“எல்லாம் தெரியும்... நாங்கள் எல்லாரும் இருக்கிறோமே! உங்களுடனும் ஜெய்ஷாவுடனும் கார்த்திகா மேடம் வர வாய்ப்பு இருக்கிறதா?''
“வேண்டாம்... நாங்கள் அங்குதானே பயணம் போகப் போகிறோம்!''
ஆனந்தன் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.
இன்னும் இரண்டு நாட்கள்...
மனதில் நினைத்தான்... அந்த இரண்டு நாட்களை எதற்காக இனியும் நீட்டிக் கொண்டிருக்க வேண்டும்? இந்த நிமிடமே ஜெய்ஷாவின் கையைப் பிடித்துக் கொண்டு இந்த அனாதை இல்லத்தின் படிகளில் இறங்கிச் செல்வதற்கு தான் தயார்தானே?
புகைவண்டி நிலையத்திற்கு அருகில் இருந்த நல்ல ஒரு ஹோட்டலில் ஆனந்தன் அறை எடுத்தான்.
மதுவிற்கு விடை...
புகை பிடித்தலுக்கு விடை...
போதைப் பொருட்களிடமிருந்து ஒரு விடைபெற்றுத் திரும்பும் பயணம்... புதிய ஒரு மனிதன்!
ஃபெலிக்ஸையும் டாக்டர் மாலதியையும் அதிர்ச்சியடையச் செய்ய வேண்டும். ஒருவேளை, மாதா நிர்மலா ஆச்சரியப்படலாம். காரணம்- ஆனந்தனின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தால், தன்மீது அவன் படர வேண்டும் என்று இப்போதும் ஏங்கிக் கொண்டிருக்கும் புதிய துறவி அவள்!
ஒருவேளை, ஃபெலிக்ஸ் கேட்பான்:
"நீ ஒரு வார்த்தை கூறியிருக்கக் கூடாதா?'
அவர்கள் ஆனந்தனைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் ஆயிற்றே! ஆனால், இப்படிப்பட்ட ஒரு மாற்றத்தை அவர்கள் சிறிதும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். எப்போதும் தனி மனிதனாக பூக்களிலிருந்து பூக்களுக்கு தேனைக் குடித்துக் கொண்டு தாவிக் கொண்டி ருக்கும் ஒரு அசாதாரண பிறவி என்பதுதானே ஆனந்தனின் இயற்கை குணமாக இருந்து வந்திருக்கிறது!
ஒரு திருத்தி எழுதும் செயல் இங்கு ஆரம்பிக்கிறது...
இனி ஒரு இடத்தில் நங்கூரத்தை இட வேண்டும்.
புகழ் பெற்ற பிஸினஸ் கன்சல்டன்ட் என்ற நிலையில் மிகப்பெரிய நிறுவனங்கள்... ஒவ்வொரு புதிய உற்பத்திப் பொருட்களின் மார்க்கெட்டிங் உத்தி... வடிவமைப்பு... கூறும் சம்பளம்... எல்லாவற்றையும் வீணடித்துக் கொண்டிருந்தானே!
இனி அது நடக்காது.
ஒரு மையப்படுத்தும் குணம் வேண்டும். மிகப்பெரிய ஒரு அலுவலகம்... பல பணிசெய்யும் ஆட்கள். எல்லாரையும் ஒழுங்குபடுத்த வேண்டும். கடந்து சென்ற நாட்களில் நடந்த வழிகள் பலவற்றிடமும் விடைபெற்றுக் கொள்வது என்பதுதான் முதல் காரியமாக இருக்கும்.
தேவைப்பட்ட பலவும் தேவையற்றவையாக இருந்தன.
இன்றுவரை ஏதோ ஒரு உலகத்தை நோக்கிச் செல்லும் பயணமாக இருந்தது. அந்தப் பயணத்தை இதோ இன்னொரு உலகத்தை நோக்கித் திருப்பி விடுகிறான். மனசாட்சிக்கு முன்னால் தோல்வியை ஒப்புக் கொள்கிறானோ?