உத்தராயணம் - Page 17
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6368
"சில நோய்களை சிகிச்சை செய்து இல்லாமல் செய்துவிடலாம்''- சாரதி என்னைத் தேற்றினார்: "கோடையில் கருகாத மரங்களும் இல்லையா? பிறகு... வயது அதிகமாகிவிட்டது என்பதற்காக ஒரு மனிதன் இறக்க வேண்டும் என்று இல்லை. தெரியுதா? டாக்டர்கள் கூறுவது என்ன தெரியுமா? மிகவும் குறைவான நபர்கள் மட்டுமே வயதானதால் தேய்மானம் வந்து உண்மையாகவே மரணத்தைத் தழுவுகிறார்கள்.
கொஞ்சபேர் நோயால் கொல்லப்படுகிறார்கள். அதிகமானவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும்!''
நான் சிரித்தேன்.
அவர் போனபிறகு, நான் என்னுடைய மரணத்தைப் பற்றிய சிந்தனையில் மூழ்கிவிட்டேன். எப்படி நான் மரணமடைவேன்? ஒவ்வொரு முறையும் பரிசோதனை முடிந்து வெளியே வரும்போது, சந்தோஷத்தை வெளிப்படுத்துவதற்கு பதிலாக என் மனைவியின் முகம் மேலும் அமைதியாக இருக்கும். இந்த வீட்டின் நோய் இறுதியில் ஒரு குணப்படுத்த முடியாத நோயாக ஆகி விடுமோ? என் மார்பில் தலையை வைத்துக்கொண்டு அவள் அழுகிறாள். ஆனால் அந்த அழுகைக்கான திரையை நீக்கிவிட்டு, நாட்களைத் தாண்டி அப்பால் பார்த்தால், அங்கு நான் என்னைச் சுற்றி நின்று கொண்டிருக்கும் டாக்டர்களைப் பார்க்கிறேன். "ரிலாக்ஸ்! ரிலாக்ஸ்!''- அவர்கள் கூறுகிறார்கள்.
எளிமையாக எடுத்துக்கொள்வதுதான் எளிமையாக முடிகிறது. எளிமையான வாழ்க்கைதான்... குணப்படுத்த முடியாத நோய்களுக்கு சிகிச்சை செய்யும் டாக்டர்கள்தான் புகழ் பெற்றவர்களாக ஆகிறார்கள். அவர்கள் தங்களுடைய இயலாமைக்கு கர்மத்தின் கொம்புகளுக்கு வடிவம் தருகின்றனர். ஓம்கார்நாத்தின் சரீரம் என்ன காரணத்திற்காக மனித சரீரத்தின் இயல்பான தன்மையைக் கைவிட்டது என்று அவர்கள் ஆராயவில்லை. அவனுடைய மூளையிலும் தாடையிலும் கண்களிலும் சேர்ந்திருந்த உலோகப் பொருட்களை எடுத்து அகற்ற முயற்சி செய்த அவர்கள், அவனுடைய சிறுநீரகத்தில் என்ன காரணத்திற்காகச் செயல்படும் ஆற்றல் இல்லாமல் போனது என்பதை ஆராய்ச்சி செய்யவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் அனைவரும் இறுதியில் தங்களுடைய நோயாளிகளை, அவர்கள் பின்னால் விட்டுவிட்டுப் போகப் போகிற குடும்ப உறுப்பினர்களுக்காக இன்ஷூர் செய்யும்படி அறிவுரை கூறினார்கள். அவர்களுடைய பிள்ளைகளை பலம்மிக்க வித்தின் மேலோட்டிற்குள் காப்பாற்றி வைப்பதற்காக. அவர்களுடைய குணப்படுத்த முடியாத நோய்களின் கொம்புகளில் படர்ந்து ஏறிக் கொள்வதற்காக. தானே உருவான காலநிலை... தோட்டக்காரன் கூறுகிறான். தானே உருவான காலநிலையின் கொம்பு. தானே உயர்த்திய கொம்பில் ஏறி விழுந்து மரணத்தைச் சந்திப்பவனுக்கு இன்ஷூரன்ஸ் கம்பெனிக்காரர்கள் பணம் தருவார்களா? யாருக்குத் தெரியும்? கொம்புகளில் எல்லாவற்றையும் அர்ப்பணம் செய்யும் உலகத்தில், இறுதியில் கொம்புகள் இருக்குமா இல்லையா என்பது மட்டும்தான் பிரச்சினையாக இருக்கும்.
வாழ்க்கையை நீங்கள் விற்கிறீர்கள். மரணத்தையாவது ஒருவன் சொந்தமாக அனுபவிக்கக் கூடாதா என்றுதான் நான் கேட்கிறேன். எனக்கு இந்த இன்ஷூரன்ஸின் விளக்கத்தில் நம்பிக்கை இல்லாமலிருந்தது; ஆர்வமும். இந்த ஜோகியும் அந்த ஓம்காரும் சேர்ந்து என்னுடைய மனதை மாற்றி விட்டார்கள். யாருக்குத் தெரியும்? ஒருவேளை இதெல்லாம் தேவைப்படலாம். இல்லாவிட்டால் எதற்காக நான் அவனுடைய வீட்டிற்குச் சென்றேன். ஓம்காரின் வீட்டை விசாரித்துப் போனேன். அவனை எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு மணி நேரத்தில் ஜோகியும் குடும்பமும் எங்களுக்கு நீண்ட காலமாகப் பழக்கமுள்ளவர்களைப்போல ஆகிவிட்டார்கள்.
ஜோகியின் வீடு புதிதாகக் கட்டப்பட்டிருந்தது. அதன் ஃபிட்டிங்குகள், ஃபிக்சர்கள் எல்லாவற்றையும் அவர் காட்டிக் கொண்டிருந்தார். வீட்டின் ப்ளானோ அறைகளின் அளவோ ஓரியன்டேஷனோ எதுவும் இல்லை. அதற்கு மாறாக ஜன்னலின் க்ரில்கள், திரைச் சீலைகள், புதிய இனம் நீர்க் குழாய்கள், மின் விசிறிகள், விளக்குகள், அவற்றின் ஸ்விட்சுகள், ஃப்ரிட்ஜ், க்ரைண்டர், டேப் ரெக்கார்டர் என்று எல்லாவற்றையும் காட்டினார். அவற்றுடன் கொஞ்சம் நாய்களும் இருந்தன. அடைக்கப்பட்டிருந்த ஒரு அறை முழுவதும். சங்கிலிகளில் வேறு. அவை குரைத்துக் கொண்டிருந்தன. நாய்களின் குரைப்புச் சத்தம் வீட்டின் எல்லா விஷயங்களிலும் கலந்து விட்டிருந்தது. ஒவ்வொரு நாப்பையும் திருப்பி, புதிதாக வாங்கிய ஜப்பானிஸ் டேப் ரெக்கார்டரை அவர் எங்களுக்குக் காட்டினார். தொடர்ந்து பொத்தானை அழுத்தி அவருடைய மனைவியோ மகளோ பாடிய ஒரு ரவீந்திர சங்கீதத்தை மிதக்க விட்டார். இடையில் அவ்வப்போது நாய்களின் "பௌ பௌ" என்ற குரைக்கும் சத்தங்களும் அதோடு சேர்ந்து ரெக்கார்டு செய்யப்பட்டிருந்தன.
இன்ஷூரன்ஸைப் பற்றி ஒரு வார்த்தைகூட அன்று அவர் பேசவில்லை. உண்மையாகச் சொல்லப் போனால் அவர் ஒரு இன்ஷூரன்ஸ்காரர் என்ற விஷயம்கூட எனக்குத் தெரியாது. பிறகு ஒருநாள் ஓம்காருடன் சேர்ந்து என்னுடைய வீட்டிற்கு வந்தபோது தான் அவர் திடீரென்று முகமூடிகளைக் கழற்றி வானத்திலிருந்து குதித்ததைப்போல எனக்கு முன்னால் குதித்தார். இடுப்பிலிருந்து ஒரு மேற்கத்திய திரைப்படத்தில் கதாநாயகன் பிஸ்டலைப் இழுத்துப் பிடித்திருந்த வேகத்துடன், எங்கிருந்து என்று தெரியாது- நிராமயனின் ஆராய்ச்சிக் கட்டுரையான "இந்தியாவின் நடுத்தரக் குடும்பங்களின் பொருளாதார நிலைமை"யை வெளியே எடுத்து, அதிலிருந்த கணக்குகளையும் சார்ட்களையும் வரைபடங்களையும் எனக்கு முன்னால் நீட்டி எறிய ஆரம்பித்தார். ஐந்தாண்டு திட்டம் முதல் வீட்டிற்கு வரும் பணியாட்களுக்குக் கொடுக்கும் சம்பளம் வரை உள்ள ஆயுதங்கள்... அவர் கூறியது எதுவும் எனக்குப் புரியவில்லை. ஆனால் முதல் அதிர்ச்சியில் இருந்து விடுபட்டபோது படிப்படியாக நான் அந்த வார்த்தை வீச்சுகளுக்குப் பின்னால் இருந்த பழைய ஜோகியை, ஜோகீந்திரநாதனை அடையாளம் கண்டுபிடித்தேன். அறைகளையும் கதவுகளையும் சாளரங்களையும் விட்டுவிட்டு, மின்சார ஸ்விட்ச்களிலும் டேப் ரெக்கார்டரிலும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஜோகி... அவருக்கு என்னுடைய வாழ்வோ மரணமோ மரணத்தின்மூலம் உண்டாகக்கூடிய என் மனைவியின் இழப்போ, வேதனையோ எதுவும் அல்ல முக்கியம். வேலைக்காரர்களின் சம்பளமும் அரிசியின் விலையும் டானிக்குகளின் டோசேஜும்தான் முக்கியம். எனக்கு முன்னால் சுட்டிக்காட்டப்பட்ட இந்த நூறாயிரம் ஆயுதங்களுக்கு முன்னால் நான் செயலற்று நின்றுவிட்டேன். என்னுடைய வாழ்க்கை அல்ல... மரணம், கொஞ்சம் பணத்திற்காக கை மாறக்கூடிய, கைமாற்ற வேண்டிய ஒரு பொருளாகி விட்டது. பயம் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் நம்பிக்கையாக மாறும். உதிரும் மணல், அழுத்தத்தால் பாறையாக உறுதிப்படுவதைப்போல. அந்தப் பருவத்தில்தான் அவிழ்த்து விடப்பட்ட நாய்களைப்போல அவர் அந்த முகத்தில் அடிக்கக் கூடிய கேள்வியை என்னை நோக்கி எறிந்தார்: "நீங்கள் உங்களுடைய மனைவிமீது அன்பு வச்சிருக்கீங்கள்ல? அவர் பிச்சை எடுக்க வேண்டும் என்பது உங்களின் எண்ணமா?'' அத்துடன் எஞ்சி இருந்த எதிர்பார்ப்பும் தகர்ந்து விழுந்தது. அன்பு என்பது தானே வளரக்கூடிய ஒரு உணர்ச்சி அல்ல என்றும்; பொருளாதார பாதுகாப்பு இல்லையென்றால், அதற்கு இலையும் கொம்பும் அல்ல- வேர்கூட கிடைக்காது என்றும்; ஒரு மார்க்சிஸ்ட்டாக இல்லாமல் இருந்தாலும்- அவர் எனக்குக் கூறிப் புரியவைத்தார்.