உத்தராயணம்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6367
சுராவின் முன்னுரை
மலையாளத்தின் புகழ்பெற்ற நவீன எழுத்தாளர்களில் ஒருவரான ஆனந்த் (Anand) எழுதிய ‘உத்தராயணம்’ (Utharayanam) புதினத்தை அதே பெயரில் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். 1936-ஆம் ஆண்டில் பிறந்த ஆனந்தின் முழுப் பெயர் பி.சச்சிதானந்தன். சிவில் எஞ்ஜினியரிங் பட்டதாரியான இவர் போர்பந்தர், வங்காளம் தொடங்கி இந்தியாவின் பல இடங்களிலும் பணியாற்றியிருக்கிறார்.
நான்கு ஆண்டுகள் ராணுவத்தில் இருந்திருக்கிறார். புதுடில்லியில் சென்ட்ரல் வாட்டர் கமிஷனில் ப்ளானிங் டைரக்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார். இப்போது இவர் வசிப்பது புதுடில்லியில்.
இவரின் முதல் நூல் ‘ஆள் கூட்டம்’. கேரள சாகித்ய அகாடமி விருது (Kerala Sahithya Academy Award), வயலார் விருது (Vayalar Award) போன்ற பல விருதுகள் ஆனந்தைத் தேடி வந்திருக்கின்றன. ‘ஆள் கூட்டம்’ நாவலுக்குக் கிடைத்த யஸ்பால் விருதையும் ‘அபயார்த்திகள்’ என்ற நூலுக்குக் கிடைத்த கேரள சாகித்ய அகாடமி விருதையும் சில காரணங்களால் இவர் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் ஆனந்த், ‘உத்தராயணம்’ நாவலை 1982-ஆம் ஆண்டில் எழுதினார். இலக்கிய வாசகர்கள் மத்தியில் சிறப்பான ஒரு பெயரை இப்புதினம் பெற்றிருக்கிறது. இந்நாவலைப் படிக்கும்போது, ஆனந்தின் பரந்த அறிவையும் புதுமையாக எழுத வேண்டும் என்ற அவரின் ஆர்வத்தையும் நம்மால் உணர முடியும். பலதரப்பட்ட மலையாள எழுத்தாளர்களின் படைப்புகளையும் மொழிபெயர்த்திருக்கும் நான் ஆனந்தின் நல்ல ஒரு இலக்கிய ஆக்கத்தை மொழி பெயர்த்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா (Sura)