உத்தராயணம் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6366
மாமிசம் வாங்குவதற்காக வரிசையில் நின்றிருந்த நான் அதைப் பார்த்தேன். அந்த மனிதனின் மனைவியையும் பிள்ளைகளையும் நான் பார்த்திருக்கிறேன். மார்க்கெட்டிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் பிச்சைக்காரர்கள் அவர்கள். எப்போதும் பிச்சைக்காரர்கள் இல்லை. அடுப்புக் கரியைக் கொண்டு வந்து வீட்டில் தருவது, விலை குறைவான உணவுக் கடைகளில் எச்சில் பாத்திரங்களைக் கழுவுவது ஆகிய சிறு சிறு வேலைகளை அவர்கள் செய்வார்கள். எதுவும் முடியாத நேரங்களில் பிச்சை எடுப்பார்கள். செத்து விழுந்தபோது, பிணத்தை அடக்கம் செய்வதற்கான செலவில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக மனைவியும் பிள்ளைகளும் அந்த மனிதனைத் தங்களுக்குத் தெரியவே தெரியாது என்று கூறி ஒதுங்கிக் கொண்டார்கள். பிணத்தை எடுத்துப் புதைக்காததற்காக அவர்களை யாராவது பழி சொல்வார்களோ? வரிசையில் நின்றிருந்த எங்களையும்? சொந்தம் இல்லாத பிணத்தைப் புதைக்க நகராட்சியில் அதற்கென்றே பிரிவு இருக்கிறது. அதனால் எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் நாங்கள் அவன் இறப்பதைப் பார்த்துக்கொண்டே ஒரு எஸ்கலேட்டரில் நகர்வதைப்போல க்யூவில் நகர்ந்து கொண்டிருந்தோம். "அன்பிற்கும் உணர்ச்சிக்கும் அடிப்படையாக இருப்பது பொருளாதாரப் பாதுகாப்புதான் என்பது எவ்வளவு சரியான விஷயம்!" - எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த கம்யூனிஸ்ட்காரரான விபூதி சர்க்கார் சொன்னார். காவல் நிலையத்தில் இரண்டு முறை அழைத்து விசாரித்த பிறகு, சமீபகாலமாக அவர் அதிகம் பேசுவதில்லை. எனினும் மனிதன்தானே? சில நேரங்களில் எதையாவது கூறி விடுவார். மாமிசம் வாங்குவதற்கான க்யூவில் நின்றிருந்தாலும், முழுமையாகக் கைகளைக் கழுவவில்லை என்று தானே சமாதானமும் கூறிக் கொண்டார். பின்னால் நின்றிருந்த நானும் கஸ்டம்ஸ் க்ளார்க் மகாபாத்ராவும் அது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டு தலையை ஆட்டினோம். கால்களை ஷூக்களுக்குள் தள்ளி நுழைத்து, தொப்பியை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு, ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து, மனைவியின் இடக் கன்னத்தை ஒரு முறை தொட்டுவிட்டு நான் வெளியேறினேன். வானொலியில் தலைப்புச் செய்திகள் அப்போதுதான் முடிந்திருந்தன. ஆனால், நான் வெளியேறிவிட்டேன். நடக்கும் போதுகூட அதைக் கேட்கலாம். வனஸ்பதியின் உற்பத்தி அறுபத்தைந்தில் நான்கு லட்சம் டன்னாக இருந்தது, எழுபத்தைந்தில் நான்கரை லட்சமாக அதிகரித்திருக்கிறது. சென்ற வருடம் இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று எட்டு கள்ளக் கடத்தல்காரர்களைக் கைது செய்து, முப்பத்தேழு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. நடந்து கொண்டே நான் செய்திகளைக் கேட்டேன். அதைக் கேட்க முடியாத தூரத்தை நான் அடைந்தவுடன் அவள் வானொலியை ஆஃப் செய்து விடுவாள்.
நடக்கும்போது நான் எதற்காகவோ நிராமயனைப் பற்றி நினைத்தேன். அந்த மனிதருக்கு என்ன நடந்தது? யாருக்குத் தெரியும்? சமீபத்தில் பார்த்தபோது அவர் மிகவும் மாறியிருப்பதைப் போலத் தோன்றியது. முன்பெல்லாம் அறுத்துத் துண்டாக்குவதைப்போல அவர் பேசுவார். நாக்கால் அல்ல- ஒரு வாளால் அவர் பேசுவதைப்போலத் தோன்றும். எல்லா விஷயங்களைப் பற்றியும் அவருக்கு கருத்துகள் இருந்தன. எந்த விஷயத்தையும் இரண்டாகக் கிழித்துப் பேசுவார். அவர் கிழித்ததைத் தைத்துச் சேர்ப்பது என்பது மிகவும் சிரமமான ஒரு காரியமாக இருக்கும். என் மனைவியின் மாமாதான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். வரலாற்றுப் பேராசிரியரான அவர் சொன்னார்: "இதோ... கண்ணுக்குத் தெரியாத ஆயுதத்தை வைத்திருக்கும் ஒரு பட்டாளக்காரர்.'' வயதான பேராசிரியர் கூர்மையான தாடியையும் தடிமனான புருவங்களையும் கொண்டிருந்த இளைஞரான நிராமயனை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு வந்தார். அப்போது அவர் ஸ்டேட்டிஸ்டிக்ஸில் பட்டம் வாங்கி, டாக்டர் பட்டம் வாங்குவதற்காக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அவருடைய விஷயம் எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. "இந்திய நடுத்தரக் குடும்பங்களின் பொருளாதார நிலை தொல்லை தராத ஒரு விஷயம்!''- நான் சொன்னேன். ஆனால் அவர் குரலைத் தாழ்த்திக்கொண்டு கண்களின் ஓரங்களின் வழியாக என்னைப் பார்த்தவாறு கூறினார்: "அது ஒரு சிறிய விஷயம் இல்லை. ஒரு சிறிய கத்தி. ஆபரேஷன் கத்தி.'' அதனால் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் என்ற விஷயத்தையே அறுத்து அதன் பொய்மையை வெளியே காட்ட அவர் நினைத்தார். அதை அவர் செய்தாரா என்று எனக்குத் தெரியாது. நீண்ட காலத்திற்குப் பிறகு அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளை நான் புத்தக வடிவத்தில் பார்த்தேன். இன்சூரன்ஸ்காரரான ஜோகியின் புதிய வீட்டில்தான் அதைப் பார்த்தேன். அங்கு அது ஒரு மத நூலைப்போல வழிபடும் இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. இங்கு நிராமயனை எடுத்துக்கொண்டால் இப்போது அவர் கல்லூரியில் ஆசிரியர். அந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்ப்பதற்கான தைரியம் அப்போது இல்லை. முன்பு நான் மெட்டல் காஸ்டிங், டைஸிங் ஆகியவை பற்றிய தொழில்நுட்பங்களைப் பற்றிப் பேசியபோது, அவர் தன்னுடைய கூர்மையான தாடியைத் தடவிக் கொண்டிருந்தார். இப்போது அவர் தாடியைத் தடவுவதற்கு பதிலாகத் தலையை ஆட்ட ஆரம்பித்திருக்கிறார். நான் அவரை தொழிற்சாலையைப் பார்ப்பதற்காக அழைத்துக் கொண்டு வந்திருந்தேன். ஒவ்வொரு ப்ளான்ட்டின் பொறுப்பில் இருந்த மனிதனும் விளக்கிக் கூறியவற்றைக் கேட்டு அவர் தலையை ஆட்டினார். ஒரு பிரிவைப் பார்த்து முடியும்போது, அதன் சார்ஜ்மேனிடம் நன்றி சொன்னார். புதிய பிரிவிற்குச் செல்லும்போது, அங்கு இருக்கும் ஆளுக்கு வணக்கம் சொன்னார். பிறகு தலையை ஆட்டாமல் ப்ளான்ட்டுகளுக்கு மத்தியில் வேகமாக நடந்தார். வணக்கத்தையும் நன்றியையும் ஒரே நேரத்தில் சொன்னார். இறுதியாக- கடைசி இரண்டு பிரிவுகளைப் பார்க்காமலேயே, நாங்கள் கேன்டீனில் போடப்பட்டிருந்த நாற்காலியில் வந்து விழுந்தோம். சிறிது நேரத்திற்கு எதுவும் பேசவில்லை. தொடர்ந்து தேநீரையும் எங்களுடைய கேன்டீனில் சிறப்பு தின்பண்டமான இனிப்புப் பலகாரத்தையும் வரவழைத்தோம். அவருக்கு அந்தப் பலகாரத்தை மிகவும் பிடித்திருந்தது. நாங்கள் இன்னொரு முறை தலா ஒரு ப்ளேட்டை வரவழைத்தோம். பால் கட்டியா, மைதாவா, அரிசி மாவா- இவற்றில் அந்தப் பலகாரத்தில் பெரும்பான்மையாக இருப்பது எது என்று அவர் என்னிடம் கேட்டார். எனக்குத் தெரியவில்லை. சற்று தூரத்தில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த கேன்டீனின் உரிமையாளரை நான் அழைத்தேன். பேசிக் கொண்டிருப்பதில் அதிக விருப்பத்தைக் கொண்டிருக்கும் அவர் கவனிக்கவே இல்லை. "வேண்டாம் விட்டுடுங்க...''- நிராமயன் என்னைத் தடுத்தார். "இனிப்பு பலகாரத்திற்கு சுவை இருக்கிறது என்பது தெரிந்திருந்தால் போதும். ஆனால் உங்களுடைய தொழிற்சாலை மிகவும் போர் அடிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது நண்பரே! இன்னும் சொல்லப்போனால் இனிப்பையும் புளிப்பையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் மீதி அனைத்தும் முட்டாள்தனமாக இருக்கின்றன. எவ்வளவு தடவை ஆனாலும் போர் அடிக்காதது இது ஒன்றுதான்- உணவு.