உத்தராயணம் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6366
"இனிமேல் அதற்கு நீர் ஊற்ற வேண்டாம்'' - வாசலில் இருந்த செடிகளுக்கு ஊற்றுவதற்காக நீர் எடுத்துக்கொண்டு போன மனைவியிடம் நான் சொன்னேன். காலையில் வராந்தாவைக் கழுவும்போது ஒன்றோ இரண்டோ வாளி தண்ணீரைச் செடிகளுக்கு ஊற்றுவது அவளுடைய வழக்கம். "கொண்டுவந்துவிட்டேனே'' என்று கூறியவாறு அவள் வாளியில் இருந்த நீரைச் செடிகளின் கீழ்ப்பகுதியில் ஊற்றினாள்.
என்னுடைய சிறு வாசலில், என்னால் வளர்க்க முடிந்த தோட்டத்தில் ஆன்ட்ரிரைனத், டயாந்தஸ்ஸி ஆகியவற்றின் இரண்டு வரிசைகள் மட்டுமே இருந்தன. குளிராக இருக்கும் இரண்டு மூன்று மாதங்களில் அவை அங்கு ஒரு புதிய உலகத்தைப் படைத்தன. இப்போது கோடைகாலம் தொடங்கிவிட்டது. இனிமேல் அவை காயத்தான் வேண்டும்.
"வீட்டுத் தாவரங்களின் வாழ்க்கைச் சக்கரம் வினோதமானது''- நான் எனக்கிருக்கும் சிறிதளவு அறிவை அவளுக்கும் பரிமாறினேன். "நம்மை மாதிரி வயசாகிப் போய் உடல் தளர்ந்து அவை இறப்பது இல்லை. தட்ப வெப்ப நிலையில் உண்டாகும் மாற்றமும் பகல் நேரத்தின் கடுமையும் அவற்றின் மரணத்தைத் தீர்மானிக்கும் சக்திகள். காலநிலை அவற்றுக்கு அனுகூலமாக இல்லாதபோது அவை கூட்டத்தோடு அழிந்து போயிடும். காலநிலை அனுகூலமாக ஆகும்வரை அவற்றை அதற்குப் பிறகு பார்க்கவே முடியாது. உத்தராயண மாதங்களில் பூமியின் வடக்கு பாகங்களிலும் தட்சிணாயண மாதங்களில் பூமியின் தெற்குப் பகுதிகளிலும் மனிதர்கள் இல்லாத ஒரு சூழ்நிலையைக் கற்பனை பண்ணிப் பார்க்க முடியுமா?''- நான் சிரித்தேன்.
அவளுக்கும் அது ஒரு ஆச்சரியமான விஷயமாகவே தோன்றியது. அவளும் சிரித்தாள். அடுத்த சில நொடிகளில் சிரிப்பு திடீரென்று நின்றது. பொழுதுபோக்காகக்கூட அந்தக் கற்பனை என்னை பயமுறுத்தியது. ஒவ்வொரு வருடமும் சில மாதங்களுக்கு நம்முடைய இந்த பூமி சுடுகாடாக மாறுவது... பிறகு முன் தலைமுறையின் வாழ்க்கை அனுபவங்களுடன் எந்த விதத்திலும் தொடர்பில்லாத ஒரு தலைமுறை புதிதாகத் தோன்றி வருவது... பழைய தலைமுறையினர் விட்டுப் போன வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் பேருந்துகளிலும் அவர்கள் நுழைந்து ஆக்கிரமிப்பது...!
"நாம ஏதாவது நிரந்தரமா இருக்குற செடிகளையும் இனிமேல் வளர்க்கணும். மலர்கள் இல்லைன்னாக்கூட பசுமையாவது இருக்குமில்லையா?''- என் மனைவி சொன்னாள்.
"சரிதான்... இந்த சுடுகாட்டு வெறுமையைப்போல வாசல் இல்லாம இருக்கும். ஆனால் அந்தச் செடிகளுக்கும் கால நிலைக்கேற்றபடி இலை விழுறது அது இதுன்னு பல விஷயங்கள் இருக்கத்தான் செய்யும்.''
"மாறுதல் என்பது நல்லதுதான்.''
"மரணம்தான் மிகவும் மோசம். அப்படித்தானே?''
எப்போதும் இல்லாத ஒரு நிலையை விவாதம் சென்று அடைந்திருந்தது. அதுதான் காரணமாக இருக்க வேண்டும்- அவள் கேள்வி கேட்பதைப்போல என்னைப் பார்த்தாள். நான் உள்ளே சென்றேன். நிறைய வேலைகள் இருந்தன. தொப்பியையும் காலணிகளையும் சுத்தம் செய்ய வேண்டும். குளிக்க வேண்டும்.
அவளுக்கும் வேலைகள் இருந்தன. என்னை தயார் பண்ணி தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்க வேண்டும். பிள்ளையைப் படிக்கச் செய்ய வேண்டும். வேலை இல்லாதவர்கள் யாரும் இல்லை.
"நிற்பவன் உட்கார்ந்திருக்கிறான். உட்கார்ந்திருப்பவன் படுத்திருக்கிறான். படுத்துவிட்டால் இறந்து விடுவான்'' - இப்படி எங்களுடைய கம்பெனியின் சேர்மன் யாரையோ மனதில் வைத்துக்கொண்டு சொன்னார். "இந்த கம்பெனி நின்று கொண்டிருக்கவில்லை. ஓடிக் கொண்டே இருக்கிறது.'' அதைக் கூறுவதற்கு அவர் எதற்காக மே தினத்தைத் தேடிப் பிடித்தார் என்பது எனக்குப் புரியவில்லை. மே தினத்தில் மட்டுமல்ல- எல்லா முதல் தேதி அன்றும் ஒவ்வொரு தொழிலாளிகளுக்கும் கிடைக்கக்கூடிய கம்பெனியின் சம்பளப் பொட்டலத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் அதுதானே! பட்ங் ஈர்ம்ல்ஹய்ஹ் ண்ள் ர்ய் ற்ட்ங் ம்ர்ஸ்ங்.
தொப்பியையும் ஷூக்களையும் துடைத்து சுத்தம் செய்து விட்டு, சவரம் செய்து முடித்து, குளித்து, ஆடைகள் அணிந்து, பத்திரிகையுடன் நாற்காலியில் உட்கார்ந்தபோது எப்போதும்போல சமையலறையிலிருந்து மனைவி கேட்டாள்: "ஆம்லெட் வேணுமா? ஃப்ரை வேணுமா?''
"தாமதம் செய்யாமல் எதையாவது தயார் பண்ணு''- நான் சொன்னேன்.
நான் எதற்காக அப்படிச் சொன்னேன்? மணி ஏழரைதான் ஆகிறது. பேருந்து எட்டேகால் மணிக்குத்தான். எட்டு ஐந்துக்குப் புறப்பட்டால் பேருந்து நிறுத்தத்தை அடைந்துவிடலாம். நான் அவசரப்பட வேண்டிய அவசியமே இல்லை. வழக்கம்போல ஃப்ரை என்று கூறினாலே போதும். சமீபகாலமாக எல்லா விஷயங்களும் இப்படி வழக்கத்தை விட்டு விலகி நடந்து கொண்டிருக்கின்றன.
அவள் அதைக் கேட்கவேண்டிய அவசியமே இல்லை. நான் பொதுவாகவே முட்டை ஃப்ரைதான் சாப்பிடுவேன். எனினும் தினமும் தொழிற்சாலைக்குப் போவதற்காகத் தயார் பண்ணிக் கொண்டு நாற்காலியில் வந்து உட்காரும்போது, என்னுடைய விருப்பத்திற்கேற்றபடி எதையாவது எனக்குத் தயார் பண்ணித் தருகிறோம் என்ற தன்னுடைய சிறு திருப்திக்காகத்தான் அவள் கேட்கிறாள், "ஆம்லெட் வேணுமா... ப்ரை வேணுமா?" என்று. எனக்கு சில விருப்பங்கள் இருக்கின்றன என்று எனக்கு நானே திருப்திப்பட்டுக் கொள்வதற்காக நான் பதில் கூறுகிறேன், "ஃப்ரை" என்று. நான் ஃப்ரையை விரும்ப ஆரம்பித்திருக்கிறேன். பரந்த வெள்ளை வட்டத்திற்குள் சிறிய மஞ்சள் வட்டத்தைக் கொண்டிருக்கும் முட்டை ஃப்ரை. ஓரங்கள் பாதிப்படையாமல் முழுமையான வட்ட வடிவத்தில் மோல்டில் வார்த்தெடுத்ததைப்போல என் மனைவி மிகவும் அழகாக முட்டையை வார்த்தெடுப்பாள். நான் வற்புறுத்தி அது நடக்கவில்லை. அதுவும் அவளுடைய ஒரு திருப்தி, தனித்துவம்.
"காலையில் ஏதோ ஒரு சோர்வு. அதனால் அப்படிச் சொன்னேன்''. அவளுடைய அந்த சிறிய சந்தோஷத்தைக் காயப்படுத்தி விட்டோமோ என்று தோன்றியதால் மன்னிப்பு கேட்கிற மாதிரி நான் சொன்னேன். "பிறகு... ஆம்லெட்டாக இருந்தால் என்ன, ஃப்ரையாக இருந்தால் என்ன? உடைவதற்கு முன்புதான் முட்டைக்கு வடிவம் என்பதே.
உடைபட்டுவிட்டால், விருப்பங்களைப் பற்றி பிடிவாதம் பிடிப்பதில் அர்த்தமே இல்லை.''
உடலுக்குச் சற்று பாதிப்பு என்பதைக் கேட்டவுடன் அவள் சிறிது அக்கறையுடன் என்னைப் பார்த்தாள். தொடர்ந்து மெல்லிய சிரிப்பு ஒன்றை வரவழைத்தவாறு, சமையலறையைத் தேடிச் சென்றாள். மருத்துவப் பரிசோதனைகள் ஆரம்பமானதற்குப் பிறகு அவளுக்கு எல்லா விஷயங்களிலும் சந்தேகமும் பதைபதைப்பும் தான்.
நான் நாற்காலியில் சாய்ந்து பத்திரிகையை விரித்தேன். பொறியியல் துறைகளில் உற்பத்தி அதிகமாகியிருக்கிறது. தொழில்துறையில் நல்ல ஒரு சூழ்நிலை உண்டாகியிருப்பதற்கு அடையாளம் அது என்று அரசாங்க அதிகாரி கூறியிருக்கிறார். இந்தோ சைனாவில் ஏதோ தொழிற்சாலைக் கட்டிடம் முழுவதும் வெடிகுண்டு வெடித்ததால் நாசமாகி இருக்கிறது. எல்லாம் அழிந்த பிறகு, தங்களுடைய விமானங்கள் எந்தவிதக் கெடுதலும் உண்டாகாமல் திரும்பி வந்து சேர்ந்துவிட்டன என்று வெடிகுண்டு வெடிக்கச் செய்த நாடு கூறுகிறது. இல்லை- எதுவும் நாசமாகவில்லை.