உத்தராயணம் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6366
எல்லா விமானங்களும் குண்டு வீசி தகர்க்கப்பட்டுவிட்டன என்று இன்னொரு நாட்டின் அதிகாரி கூறியிருக்கிறார். வறட்சியின் காரணமாக ஒரு ஊரில் மனிதர்கள் புற்களையும் வேர்களையும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது எந்த நாடாக இருக்கும்? ஏதோ நாடுகளில் இருந்து ஏதோ நாடுகளுக்கு அகதிகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறார்கள். பசியும் வன்முறையும் அதிகமாக ஆனதன் காரணமாக மனிதர்கள் இறந்த வண்ணம் இருக்கிறார்கள். பத்திரிகைகள் அந்தச் செய்திகள் ஒவ்வொன்றையும் பிரசுரிக்க வேண்டும். அது பத்திரிகைகளின் கடமை. நகரத்தில் தலை இல்லாத நான்கு உடல்கள் கிடைத்திருக்கின்றன. தாகம் எடுத்து அலைந்து திரிந்த எழுபது கிராமத்து ஆட்கள் தண்ணீர் இல்லாத ஒரு பாழும் கிணற்றுக்குள் விழுந்து இறந்துவிட்டார்கள். இந்தக் கோடை காலத்தில் பருத்தியின் சுகத்தைத் தரக்கூடிய அதே நேரத்தில்- சுருக்கங்கள் விழாமல் இருக்கும் ஆடைகளை அணியுங்கள். புகையிலைக்காக உண்டாக்கப்பட்ட ஃபில்டர், ஃபில்டருக்காக உண்டாக்கப்பட்ட புகையிலை. எப்போது பம்பாய் புகைவண்டிகளின் ஒரு சொர்க்கமாக ஆகப் போகிறது? அங்கு புதிதாகத் திறக்க இருக்கும் ஒரு ஹோட்டல் விசாரிக்கிறது. அதன் நோக்கம் பம்பாயை அப்படிப்பட்டவர்களின் ஒரு கனவாக ஆக்குவதுதான். முட்டையின் ஓரங்கள் பாதிப்படையாமல், வெள்ளை வட்டத்திற்குள் உருண்டையாக இருக்கும் மஞ்சள் வட்டத்துடன் தயார் பண்ணிப் பரிமாறுவது என்பது என்னுடைய மனைவியின் கடமை. அதை சாப்பிடுவது என்னுடைய வேலை.
பத்திரிகையை மேஜைமீது வைத்துவிட்டு நான் ஸ்டவ்வில் க்யாஸை அதிகரித்துக்கொண்டிருந்த என் மனைவிக்குப் பின்னால் போய் நின்றேன்.
"இந்த முட்டைகளைப் பற்றி அவர்கள் கூறுவது என்ன தெரியுமா?''- நான் சொன்னேன்: "கோழி உடலுறவு கொண்டாலும் அவை பெருகுவதில்லை என்று வைத்துக்கொள். மனிதர்களுக்கு சாப்பிடுவதற்காக மட்டுமே முட்டைகளை உண்டாக்குவது. தேவைப்படுகிற அளவிற்கு புரோட்டீன், வைட்டமின் ஆகியவற்றைச் சேர்ப்பது... வெஜிட்டேரியன் முட்டைகள்! ஆண் கோழிகளின் உதவியே இல்லாமல் பெண் கோழிகளே உண்டாக்குவது...''
அவள் சட்டியில் ஊற்றிய முட்டையின் ஓரத்தை மெது மெதுவாக ஸ்பூனால் சரிபண்ணிக் கொண்டிருந்தாள். அவளுடைய கண்கள் ஈரமாக இருப்பதை நான் பார்த்தேன். நான் அவளுடைய தோளில் கையை வைத்து கழுத்தில் இருந்த கறுத்த புள்ளியைத் தடவினேன். என் மனைவி... என்னுடைய எல்லா தொந்தரவுகள் எல்லாரையும்போல அவளையும் கவலைகொள்ளச் செய்கிறது. மற்றவர்கள் பரிதாபப்பட்டு கைகழுவி விட்டு விடலாம். அவளுடைய விதி- வெளியே காட்டிக் கொள்ளக்கூடாது. அனுபவிக்க வேண்டும். அவளை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக நான் ஒரு தமாஷ் சொன்னேன்: "நாம் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னால் காதலித்திருந்தோம் என்றால் அந்தக் கதையைக் கொஞ்சம் சிந்தித்துப் பார். நல்ல தமாஷாக இருக்கும் இல்லையா? அப்படியே இல்லையென்றாலும் நமக்கு இப்போ என்ன குறைச்சல்? குறைப்பட்டுக் கொள்வதற்கு எதுவும் இல்லை. தேவைப்படும் அனைத்தும் இருக்கின்றன... நம் மகனுக்கு ஒரு தங்கை வேணுமா என்ன?''
குறையொன்றும் இல்லை. குறைப்பட்டுக் கொள்வதற்கு எதுவும் இல்லை. ஃப்ரை பண்ணிய முட்டையை முள்ளால் எடுத்து வாய்க்குள் போடுவதற்கு முன்னால் நான் நினைத்தேன். படித்துத் தேர்ச்சி பெற்று நான் ஒரு இன்ஜினியராக ஆகிவிட்டேன். ஜமுனாதாஸ் அஜ்மீரியா இன்டஸ்ட்ரீஸுக்குச் சொந்தமான தொழிற்சாலையில் காஸ்ட்டிங் பிரிவில் வேலையில் சேர்ந்தேன். தினமும் காலையில் சாப்பிட்டு முடித்து தொப்பியையும் ஷூக்களையும் அணிந்து தொழிற்சாலைக்குச் செல்கிறேன். அவள் வளர்ந்து பெண்ணாகிவிட்டாள். என் மனைவியாக ஆகி விட்டாள். எனக்குச் சாப்பாடு தயாரித்துக் கொடுத்து, என்னுடைய சுக சௌகரியங்களை கவனிக்கிறாள். எங்களுக்கு ஒரு நான்கு வயது மகன் இருக்கிறான். இனியும் ஒன்று பிறக்கலாம். அதற்குமேல் பிறக்கக்கூடாது என்று அரசாங்கம் கூறுகிறது. நாங்கள் இப்போதும் இளம் வயதைக் கொண்டவர்களே. நாங்கள் சட்டத்தை மீற மாட்டோம். சட்டத்தின்மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நன்கு பழகுகிறோம். எங்களுடைய குடும்ப வாழ்க்கை திருப்தியாகவே இருக்கிறது.
போரில் வெற்றிகள், தொழில் துறையில் அமைதியான சூழ்நிலை, கிராமப் பகுதியில் வறட்சி போன்ற செய்திகளைக் கொண்ட பத்திரிகை காற்றில் பறந்து நாற்காலிகளுக்குக் கீழே போனது. நான் அதைப் படித்து முடித்துவிட்டேன். இனிமேல் அது எனக்குப் பயன்படாததாள், தூக்கத்திலிருந்து கண் விழித்து, பற்களைச் சுத்தம் செய்து, பால் குடித்து வரும் என் மகனுக்கு அது விளையாட்டுப் பொருளாக இருக்கும். அங்குமிங்குமாக கிழித்து அவன் விமானங்கள் உண்டாக்குவான். அவனுக்கு குறும்புத்தனம் அதிகம். அவனுடைய அம்மாவின் குற்றச்சாட்டு. பிள்ளைகளுக்குக் கொஞ்சமாவது குறும்புத்தனம் இருக்க வேண்டாமா? குறும்புத்தனம் என்பது பிள்ளைகளின் வேலை. வறட்சியையோ வறுமையையோ போரையோ பற்றிய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பது என்பது அவனுக்கோ அவனுடைய தாய்க்கோ எனக்கோ முடிகிற விஷயங்களா? அவற்றை நாங்கள் தீர்த்து வைப்போம் என்று காலையில் எங்களுக்கு பத்திரிகை தரும் பத்திரிகைக்காரனோ, அதை எழுதக்கூடிய செய்தியாளரோ நினைக்கவில்லை. மனிதர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் இருக்கிறது. விஞ்ஞானம் இருக்கிறது.
பிரச்சினைகள் இருக்கின்றன என்பதையும், அவை யார் மூலமாவது தீர்க்கப்பட்டு விடுகின்றன என்பதையும் பத்திரிகைகள் நமக்கு அறிவிக்கின்றன. நாம் அறிந்து கொள்கிறோம்; அவ்வளவுதான். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர்களுக்கென வேலை இருக்கிறது. ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு ஆர்வம். சற்று வயதான ஒரு மனிதர் பம்பாயில் புதிய ஹோட்டல் திறக்கப்படுவதற்காகக் காத்திருக்கிறார். சுகமாக வாழ்வதில் நம்பிக்கை வைத்திருக்கும் ஏதாவது தொழிலதிபராக இருக்க வேண்டும். சற்று நரைக்க ஆரம்பித்திருக்கும் ஃப்ரெஞ்ச் தாடி.. அருமையாகத் தைக்கப்பட்டிருக்கும் சூட்டும் சோடியாக் டையும்... தட்டிலிருந்து முள்ளால் எதையோ எடுத்து வாய்க்குள் நுழைப்பதற்கு மத்தியில் அவர் ஒரு சிறிய ஓரப் பார்வையை மட்டும் நம்மீது படர விடுகிறார். உணவுமீது மிகுந்த விருப்பம் கொண்ட மனிதராக இருந்தாலும், சாப்பாட்டு மேஜைக்கு முன்னால் அறுபது டிகிரி சாய்ந்து உட்கார்ந்துகொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அந்த மனிதரும் மிகுந்த அவசரத்தில்தான் இருக்கிறார். எது எப்படி இருந்தாலும், தலை இல்லாத உடல்களோ பாழும் கிணற்றில் கிடக்கும் பிணங்களோ அந்த மனிதரின் மூளையில் இருக்காது என்பது மட்டும் உண்மை. ராணுவ ஆட்சியோ, இனப் போராட்டமோ, தனிமனித விடுதலையோ அந்த மனிதரை பாதிக்காது. போன வாரம் மார்க்கெட்டில் ஒரு மனிதன் நின்று கொண்டிருந்த நிலையில் கீழே விழுந்து இறந்துவிட்டான். மாமிசக் கடைகளில் இருந்து வரும் அழுக்கு நீருக்கு அருகில் படார் என்று விழுந்தான். வாய்க்காலில் இருந்து தானே நீரை எடுத்து உதட்டில் வைத்தான்.