உத்தராயணம் - Page 30
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6366
எல்லாவற்றுக்கும் பின்னால் ஆகாயத்திற்கு அருகில் சிவப்பு குறையத் தொடங்கியிருக்கிறது. நான் எதைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் சிந்திக்கவில்லை. வேகமாக நடக்கவில்லை. மெதுவாகவும் என்னுடைய தொப்பிக்குக் கீழே என்னுடைய உடல்நலம் அனுமதித்த வேகத்தில் கண்களுக்கு முன்னால் வந்த எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே நடந்தேன். கீழ்நோக்கிச் செல்லும் பாதை வழியாக தோட்டத்தின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டே நடந்தேன். தோட்டத்தில் சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் இருந்த பூக்கள் மலர்ந்து நின்றன. வெட்டப்பட்டிருந்த பச்சிலைச் செடிகள் அவற்றின் தோற்றத்தால் நிர்வாணமாக இருப்பதைப்போல காட்டியது. புல் தட்டுகள் பச்சை போர்வை விரிக்கப்பட்ட, யாரும் மிதிக்காத படிகளைப்போலக் காட்சியளித்தன.
கம்பெனியின் பேருந்து போய்விட்டிருந்தது. ஜெனரல் ஷிஃப்டில் வேலை செய்தவர்கள் எல்லாரும் போய்விட்டிருந்தனர். விருந்தாவனும் போயிருப்பார். இனி வெளியே போய் பப்ளிக் பேருந்தைப் பிடிக்க வேண்டும். சிறிது தாமதமாகும். பரவாயில்லை.
கேட்டைக் கடந்து வெளியே வந்தபோது நதியிலிருந்து குளிர்ச்சியான காற்று வீசிக் கொண்டிருந்தது. நதியின் கரையை ஒட்டியிருந்த பாதை வழியாக நான் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தேன்.
நதியில் படகுகள் நகர்ந்து கொண்டிருந்தன. தூரத்தில், நதிக்கு மேலே பாலத்தின் நிழல் நெளிந்தது.
வேலை முடிந்து செல்லும் பாபுக்கள் தனியாக பையைத் தூக்கிக் கொண்டு நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
நீலநிற சட்டை அணிந்த தொழிலாளிகள் பொரியும் கடலையும் விற்றுக் கொண்டிருந்தவர்களுக்கு அருகில் மண்ணில் சப்பணம் போட்டு உட்கார்ந்து மணிகளைக் கொறித்துக் கொண்டிருந்தார்கள்.
டையும் கோட்டும் கண்ணாடியும் அணிந்த ஒரு மனிதன் புல்மீது மல்லாந்து படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். அவனுடைய ப்ரீஃப்கேஸ் அருகில் மண்ணில் விழுந்து கிடந்தது.
கை நீட்டி அமர்ந்தவாறு ஒரு பிச்சைக்காரன் அவனுக்கு அருகில் வந்தான். அவன் ஏதாவது தரவோ இல்லை என்று சைகை செய்யவோ இல்லை.
பாதையில் இருந்த மரத்தின் நிழலில் அமர்ந்திருந்த பாவுல் பாடினான்: "படா துக் பாயா- ரே பாவுல் வா...''- பாவுலின் குரல் உயர்ந்தது. அவன் தன்னுடைய சக்தியையும் உயிரையும் முழுமையாகப் பாடலில் அர்ப்பணம் செய்து பாடிக் கொண்டிருந்தான். வயதான பாவுல். அவனுடைய நைந்துபோன ஆடைகள் கொஞ்சம் கொஞ்சமாக மிகவும் மோசமான நிலையை அடைந்து கொண்டிருப்பதைப்போலத் தோன்றியது. நரைத்த தாடி காற்றில் நாலா பக்கங்களிலும் பறந்தது. மூக்கு மேலே வருவதைப்போல தலையைச் சாய்த்து வைத்துக்கொண்டு, ஒரு கையைக் காதுக்குக் கீழே வைத்தவாறு இன்னொரு கையில் ஏக்- தாராவை ஆகாயத்தை நோக்கி உயர்த்திக் கொண்டு பஞ்சபூதங்களையும் அடையப் போவதைப்போல, அதைப் பாடி முடித்தவுடன் அவன் மரணமடைந்து விழுந்து விடுவதைப்போல...
எக்ஸ்ரே ஃபிலிம்களையும் விளையாட்டு பொம்மையையும் ஒரு கையில் மாற்றிவிட்டு இன்னொரு கையால் துவாலையை எடுத்து நான் கண்களைத் துடைத்தேன்.
"பாபு, நான் அலுவலகத்தில் காத்து நின்றிருந்தேன்''- தோட்டக்காரன் எங்கிருந்தோ மேலும் கீழும் மூச்சு விட்டவாறு வந்தான். "வெளியே போவதைப் பார்க்கவில்லை. அதனால்...''- கையில் ஒரு கட்டு கட்டிங்குகளுடன் அவன் என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே நின்றான். பெரிய நரைத்த மீசையைக் கொண்ட, உள்நோக்கி வளைந்த கிழவன். அவனுடைய கழுத்து எலும்புகள் மூச்சு விடுவதற்கு ஏற்றபடி உயர்ந்து கொண்டும் தாழ்ந்து கொண்டும் இருந்தன. அவனுடைய உயர்ந்து தாழ்ந்து கொண்டிருந்த மூச்சு விடுதலுக்கும் நிரந்தரமான சிரிப்புக்கும் இடையே ஒரு தாளகதியைக் கண்டுபிடித்ததைப்போலத் தோன்றியது. பாவம் கிழவன். அவனுக்குத் தெரியாது... "இது கந்த்ராஜ். வாசனை ஒரு சுற்றுப்புறம் முழுவதும் இருக்கும். இது டாலன் சம்பா. இரவு முழுவதும் மணம் நிலவைப்போல ஒளிர்ந்து கொண்டிருக்கும். பிறகு... இதோ... கொஞ்சம் விதைகளும் இருக்கு. நடுவதற்குப் பொருத்தமான நல்ல காலம் இல்லை. எனினும் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. வருடம் முழுவதும் இருக்கும். இந்தக் கோடை காலத்தைத் தாண்டிடுங்க...''
மண்ணுடன் பச்சை இலையிலும் பேப்பரிலும் சுற்றி, பிறகு பத்திரமாக துணிப்பையில் வைக்கப்பட்டிருந்த கட்டிங்குகளையும் விதைகள் இருந்த பொட்டலத்தையும் அவன் என்னிடம் நீட்டினான். செடிகளின் தாளகதியைக் காணும் தோட்டக்காரன். ஒரு சுற்றுப்புறம் முழுவதும் நறுமணத்தைப் பரப்பக்கூடிய செடிகள். தனக்குள் அடைந்து கிடக்காமல் நிலவைப்போல எரிந்து படரும் மணம். இந்தக் கோடை பொருத்தமான காலமல்ல. உங்களுடைய தாளகதி காலநிலையுடன் அல்ல- காலத்துடன்தான். பிறகு... நீங்கள் உங்களுக்கென ஒரு காலநிலையை உண்டாக்கும்போது ஆமாம்... அப்போது அதற்கேற்றபடி ஆடியே தீரும். ஒன்று நிரந்தர தாவரம். இல்லாவிட்டால்- சீஸனல் தாவரம். உங்களுக்குப் புரிந்துவிட்டிருக்கிறது தோட்டக்காரரே! உங்களுக்கு மட்டும். எங்களுடைய அறிவு எங்களுக்கு மேலே வெயிலாகத் தோன்றி சுட்டுக் கொண்டிருக்கிறது. எங்களுடைய சக்தி, அதிகாரம், வெற்றி, வளர்ச்சி... இல்லை... ஒருவேளை உங்களுக்கும் தெரியவில்லை காக்காஜி. இந்த நிலைக்கு முடிவு இல்லை என்றால்..? இந்த வெயிலுக்கு மாறுதல் இல்லை என்றால்..? வடக்கே... வடக்கே... வடக்கே... நாங்கள் இருவரும் சற்று நேரம் அங்குமிங்குமாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தோம். அவனுடைய மேலும் கீழும் வேகமாக மூச்சுவிடும் போக்கும் சிரிப்பும் இல்லாமல் போயிருந்தன. என்னுடைய கண்கள் வற்றிப் போயிருந்தன. நாங்கள் வெறும் மனிதர்களாக ஆனோம். அவன் நீட்டிய கட்டிங்குகளும் விதைகளும் இருந்த பையை நான் வாங்கினேன். பொம்மை இருந்த பெட்டி அப்போது கீழே விழுந்துவிட்டது. நெருப்பைக் கக்கும் டேங்கின் விளையாட்டு. அவன் அதை குனிந்து எடுத்து என்னிடம் நீட்டினான். "அது போகட்டும் காக்காஜி. இந்தாங்க''- நான் அவனுக்கு எக்ஸ்ரே ஃபிலிம்களைக் கொடுத்தேன். "என் கையில் இடமில்லை.'' தோட்டக்காரன் பெட்டியையும் எக்ஸ்ரே ஃபிலிம்களையும் பிடித்துக்கொண்டு ஆச்சரியத்துடன் என்னையே பார்த்தான். நான் சிரித்தேன்.
பெரிய ஆரவாரம் உண்டாக்கியவாறு பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது. பொருட்களுடன் நான் உள்ளே ஏறினேன். வழக்கம்போல இல்லாமல் எனக்கு உட்கார இடம் கிடைத்தது. முன்னால் இல்லை என்றாலும் பின்னாலும் இல்லாத இருக்கை. இருக்கையில் அமர்ந்து நான் கட்டிங்குகள் இருந்த பையை கீழே வைத்தேன். பிறகு பின்னோக்கி சாய்ந்து உட்கார்ந்துகொண்டு மூச்சு விட்டேன். இந்த நாளில் நடந்த அனைத்தும் என் மனதில் இருந்து படிப்படியாக உயர்ந்து சென்றன. ஒரு நறுமணம் மட்டும் அங்கு எஞ்சி நின்றது. பேருந்திற்குள், பேருந்திற்கு வெளியே கலந்திருக்கும் எல்லாவற்றின்மீதும் நிலவைப்போல எரிந்து கொண்டிருக்கும், தனக்குள் அடைந்து கிடக்காத, தன்னுடையதல்லாதவைமீது பரவும்... எனக்கு என்ன காரணத்தாலோ சந்தோஷம் உண்டானது.
மடியில் இருந்த தொப்பியைச் சுற்றிக் கைகளைக் கோர்த்து வைத்துக்கொண்டு, கால்களை முன்னாலிருந்த இருக்கைக்குக் கீழே நீட்டி, தலையைப் பின்னோக்கிச் சாய்த்து, கண்களைப் பாதி மூடிக்கொண்டு நான் ஓய்வெடுத்தேன். படிப்படியாக உறக்கம் வரத் தொடங்கியபோது நான் வேறு எதைப்பற்றியும் நினைக்காமல் அந்த நறுமணத்தில் மட்டும் இறங்கி நின்றேன்.