உத்தராயணம் - Page 29
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6368
"பிடிவாதக்காரர்கள்? சார்... நீங்க என்ன சொல்றீங்க? என்னுடைய...''
என்னுடைய நோய்.
ஆனால் என்னுடைய நோய் அல்ல. வெளி உலகம் எனக்குள் நோய் அணுக்கள் எதையும் செலுத்தவில்லை. எனக்கு ட்யூமர்கள் இல்லை. அல்சர் இல்லை. விபத்து எதுவும் நடந்ததில்லை. தலையில் செங்கல் விழவில்லை. வயதால் நரம்புகளுக்குத் தேய்மானம் வந்து உறுப்புகளின் செயல்படும் சக்தி இல்லாமல் போய் அவை செயல்படாமல் நின்று போய்விடவில்லை. எல்லாரும் எவ்வளவோ தடவை அதையேதான் கூறினார்கள். கண்களில் வழிந்த கண்ணீரைப் பார்க்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய மனைவி சமையலறைக்குள் போய்விட்டாள். தயாரிப்பு நிர்வாகி எப்போதும் இல்லாமல் என்னை எச்சரித்தார்- முட்டாளான சாரதி எனக்கு உதவுவதற்காக ஓடி வந்தார். அவர் கூறவும் செய்தார்- இது தற்கொலை என்று. இல்லை- இது கொலை பாதகம் என்று நான் வாதிட்டேன். தளர்ந்து விழப்போன என்னைத் தாங்கிக் கொண்டு நடந்தும், என்னுடைய நோயைப் பற்றி ஒரு வார்த்தைகூட கேட்க விருந்தாவன் முயற்சிக்கவில்லை. அவர்கள் எல்லாரும் நான் கயிறுக்குள் தலையை நுழைத்து நின்றிருக்கிறேன் என்பதைப்போல என்னைப் பார்த்தார்கள். அவர்களால் இதில் எதுவும் செய்ய முடியாது. அழவோ, எச்சரிக்கவோ, அறிவுரை கூறவோ, கை கழுவி விடவோ அல்லாமல்... நான் எந்த அளவிற்கு விளக்கிக் கூறுகிறேனோ, அந்த அளவிற்கு மனிதர்கள் என்னையே தான் குறை கூறுகிறார்கள். அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. ஒரு சாதாரண தோட்டக்காரன்கூட தன்னுடைய செடிக்கு அடியில் இருக்கும் மண்ணையும் மேலே இருக்கும் ஆகாயத்தையும் பற்றி விசாரித்துப் பார்ப்பான். ஆனால் எல்லா டாக்டர்களும் மந்திரவாதிகளைப்போல என்னையே கவனித்தார்கள். என்னுடைய உடலின் ஓரங்களில் இருந்து ஒரு அங்குலம்கூட அப்பால் பார்க்கத் தயாராக இல்லை. ஒரு நோயையும் அதற்கான அறிகுறியையும் அல்ல- அறிகுறிக்கு அப்பால்தான் பார்க்க வேண்டும் என்று தெரியவில்லை. இன்ஷூரன்ஸ் கம்பெனிக்காரர்களின் பிடிவாதத்தை அவர்கள் எல்லாரும் ஏற்றுக் கொண்டார்கள்... எனினும் டாக்டர்களிடம் சண்டை போட முடியாத அவர்கள் இன்ஷூரன்ஸ்காரர்களிடம் சண்டை போடுவார்கள். எனக்கு வேண்டி அல்ல- என்னுடைய மனைவிக்கும் மகனுக்கும் வேண்டி. நான் போய் விடுவேன். ஆனால் என்னுடைய மகன் வாழ்வான். மருந்தும் டானிக்கும் விளையாட்டுப் பொம்மையும் கல்வியும் கொடுத்து, எனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் சொல்லித் தந்து, நான் வளர்க்கும் என்னுடைய மகன்... என் மகனைப் பார்த்தவர்கள் எல்லாரும் கூறுகிறார்கள்- அவன் என்னுடைய இன்னொரு உருவம் என்று. என்னுடைய அச்சில் வார்த்து எடுக்கப்பட்டவன். என்னுடைய ஷிஃப்ட்டை ஏற்று வாங்க வேண்டியவன். என்னுடைய வம்சத்தை நிலைநிறுத்த வேண்டியவன்... என்னுடைய வம்சம் நிலைத்து நிற்கும். டானிக், விளையாட்டு, பயிற்சி ஆகியவற்றின் படிகளைக் கடந்து, கரிந்து போன தாவரத்தின் விதையைப்போல உரிய நேரத்தில் அவன் வளர்ந்து ஆளாவான். ஜம்னாதாஸ் ஆஜ்மீரியா இன்டஸ்ட்ரீஸின் காஸ்ட்டிங் பிரிவில் எஞ்ஜினியராக ஆவான். என்னைப்போல, என் மனைவியுடன் இரட்டையைப் பெற்றெடுத்ததைப் போன்ற பெண்ணைத் திருமணம் செய்து எனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் தெரிந்து, என் குறைபாடுகளுடன், தயாரிப்பு நிர்வாகியின் மகன் தயாரிப்பு நிர்வாகியாகவும், சேர்மனின் மகன் சேர்மனாகவும், எரெக்ஷன் ஃபிட்டரின் மகன் எரெக்ஷன் ஃபிட்டராகவும் உள்ள புதிய தலைமுறைக்குத் திரும்பும் இந்தக் கம்பெனியின் நிரந்தரமான தொழிலாளிகளின் கூட்டத்தில், பட்டாள பலத்தில், மக்கள் தொகையில்...
அந்த வார்த்தைகளெல்லாம் எனக்குத் திடீரென்று அர்த்தமே இல்லாதவைகளாகத் தோன்றின. நான் அவரைக் கோபப்படச் செய்து விட்டேனோ என்பதையும், கோபப்படச் செய்தால்தான் என்ன என்பதைப் பற்றியும் சிந்திக்கவே இல்லை. இந்த வகையான விஷயங்கள் எதுவும் இனிமேல் எனக்குப் பொருட்டே அல்ல என்பது மாதிரி திரும்பிப் பார்க்காமல் நான் நடந்தேன்.
"சார்... எனக்கு ஒரு விஷயத்தைக் கூற முடியுமா? இந்தக் கம்பெனியின் சங்க...''- மீண்டும் அந்த அர்த்தமற்ற கேள்வி! எவ்வளவோ வருடங்களுக்கு முன்னால் இந்தக் கம்பெனியின் வாசலில் கூட்டமாக வந்து நின்றிருந்த அதன் போர்ப்படை வீரர்களில் ஒருவனாக நின்று கொண்டு, அருகில் நின்றிருந்த மனிதனிடம் எடுத்துக் கூறிய, அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்- அந்த மனிதன் கேட்காமல் போன, அதே முட்டாள்தனம் நிறைந்த சந்தேகம்... கஷ்டம்! கஷ்டம்! வெளியே வந்ததைக் கடிவாளத்தைப் பிடித்து இழுத்து நான் நிறுத்தினேன்.
"கேளுங்க... கேளுங்க...''- திடீரென்று பூ ஜாடியை நகர்த்தி வைத்துவிட்டு மீண்டும் உருகத் தொடங்கியிருக்கும் உலோகத்தைப் போல ஆகி, புன்னகையை மலரவிட்டு, சுறுசுறுப்புடன் மேனேஜிங் டைரக்டர் சொன்னார்: "உங்களுடைய சந்தேகம் என்னவென்று கூறுங்கள். எதுவாக இருந்தாலும் எங்களிடம் சொல்லுங்க. உங்களுடைய இதயத்தைத் திறங்க. தயங்க வேண்டாம்.''
பூ ஜாடியை நகர்த்தி வைத்தவாறு நேராகப் பார்த்துக் கொண்டிருந்த அவருடைய முகத்தையே நான் ஒரு முட்டாளைப்போல வெறித்துப் பார்த்தேன்: "ஓ... ஒண்ணுமில்லை. ஒண்ணுமில்லை'' நான் கண்களைத் தாழ்த்தினேன். "நான் என்னவெல்லாமோ நினைச்சிட்டேன். முக்கியமே இல்லாத விஷயங்கள்... வெறும் முக்கியமே இல்லாத விஷயங்கள்... எல்லாவற்றையும் விடுங்க. நான் புறப்படட்டுமா?''
நான் வேகமாக எழுந்தேன். தொப்பியை எடுத்துத் தலையில் வைத்தேன். எக்ஸ்ரே ஃபிலிம்களையும் விளையாட்டுப் பொம்மையையும் வாரி எடுத்துக் கொண்டு கதவை நோக்கித் திரும்பினேன். திரும்பி வந்து, மேனேஜிங் டைரக்டர் நீட்டிய கையைப் பிடித்துக் குலுக்கினேன். வெளியே வந்தபோது, திகைத்துப் போய் நின்றிருந்த அந்த மனிதர் மீண்டும் அழைத்துச் சொன்னதைக் கேட்டேன். "உங்களுக்கு எந்த பிரச்சினை இருந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும் நேராக என்னிடம் வந்து சொல்லலாம். சிறிதும் தயங்க வேண்டாம். கூச்சப்பட வேண்டாம். நாங்கள் முடிந்தவரையில்...''
அந்த வார்த்தைகள் அனைத்தும் எனக்குத் திடீரென்று அர்த்தமே இல்லாதவையாகத் தோன்றின. நான் அவரைக் கோபப்படுத்தி விட்டேனோ என்பதைப் பற்றியும் கோபப்படுத்தினால்தான் என்ன என்பதைப் பற்றியும் நான் சிந்திக்கவேயில்லை. இந்த வகையான விஷயங்கள் எதுவும் இனிமேல் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்பது மாதிரி திரும்பிப் பார்க்காமல் நான் நடந்தேன்.
வெளியே வந்தபோது அலுவலகம் விடப்பட்டுவிட்டிருந்தது. மேனேஜிங் டைரக்டரின் ப்யூன் மட்டும் வாசலில் காத்து நின்றிருந்தான். அவருடைய கார் போர்ட்டிக்கோவில் நின்றிருந்தது.
மலையின் அடிவாரத்தில் ப்ளான்ட்டுகள் வழக்கம்போல புகையைக் கக்கிக் கொண்டும் சத்தம் உண்டாக்கிக் கொண்டும் நின்றிருந்தன. தொழிற்சாலையில் இரண்டாவது ஷிஃப்ட் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு ஷிஃப்ட் இருக்கிறது- இரவில். ஸைடிங்கில் இரண்டு எஞ்ஜின்கள் அவற்றின் வேகன்களைத் தேடி அலைந்து கொண்டிருந்தன. புதிய கட்டிடத்தின் வேலை நின்றுவிட்டிருக்கிறது.