உத்தராயணம் - Page 25
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6368
நூலை எழுதியவர் அதற்கு எக்ஸ்பெரிமென்ட் மற்றும் அகாடமிக்கான முறைகளைப் பற்றிய உன்னத விஷயங்களை விவரிக்கிறார். ஒவ்வொரு நோய்க்கும் அதன் அடையாளங்கள் மட்டுமல்ல- சூழ்நிலைகளும் இருக்கின்றன. அதனால் அடையாளங்கள் தொடக்கமோ முடிவோ அல்ல. அதே நேரத்தில் ஒவ்வொரு நோயும் அடையாளத்தை வைத்தே கண்டுபிடிக்கப்படுகின்றன. அவை அதன் தொடக்கமான சூழ்நிலைகளுக்கும் இறுதியான நோய்க்குமான கதவுகளைத் திறக்க உதவுகின்றன. அனுபவத்தில் இருந்து எடுத்த கதைகளையும் நிறைய நோயாளிகளின் படங்களையும் கொண்டு அவர் பக்கங்களை நிறைத்திருந்தார். அவலட்சணமாகவும் வீங்கிப் போயும் இருக்கும் முகங்களும் உடல்களும்... மங்கோலிஸம் என்ற நோய் பாதித்த மனிதனின் கண்கள் இரு பக்கங்களிலும் மேல் நோக்கிச் சாய்ந்தும் மூக்கும் காதுகளும் சப்பிப் போயும் சிறிதாகவும் நாக்கின் நுனி நீட்டிக் கொண்டும் இருக்கின்றன. டெட்டனஸ் நோயாளியின் முக வெளிப்பாடு, பாதி மூடப்பட்ட கண்களும் வீங்கிய கன்னங்களும் ஒட்டிப்போன உதடுகளும்... இவற்றுடன் அந்த மனிதன் ஒரு ரகசியம் நிறைந்த புன்னகையுடன் இருப்பதைப்போல இருந்தது. டீ-ஹைட்ரிஸம், மைக்ஸோடிமா, ஹைப்பர் தைராடியிஸம். நிமிர்ந்து நிற்க முடியாமல் இருக்க வேண்டும்- ஒரு மனிதன் வில்லைப்போல வளைந்து, உடலை பீடத்தில் ஊன்றிய கைகளில் தாங்கியவாறு நின்று கொண்டிருக்கிறான். அப்படியே நின்று கொண்டு அவன் நீண்டகாலம் வாழ்ந்தாலும் வாழலாம். ஹோப்கின் ஹோக்கின்ஸ் என்ற ஒரு வெயின்ஸ்காரன் 1754-ஆம் ஆண்டில் தன்னுடைய பதினேழாவது வயதில் முதுமையும் நரையும் வந்து இறந்துவிட்டான். அவனுக்குச் சாகும்போது பன்னிரண்டு ராத்தல் மட்டுமே எடை இருந்தது. வாழ்க்கையில் எந்தச் சமயத்திலும் பதினேழுக்கு மேலே இருந்ததில்லை. மரணத்திற்குப் பிறகு அவனை லண்டனில் ஒரு காட்சிப் பொருளாக வைத்திருக்கிறார்கள். ஹோப்கின் ஹோப்கின்ஸ் சாப்பிட்டதில்லை. அவனுக்குப் பசி இருந்தது. ஆனால் வெளியே இருக்கும் உணவுப் பொருட்கள் எதையும் ஏற்றுக் கொள்ள அவனுடைய ஜீரண உறுப்புகளால் முடியவில்லை. அதிக உணவு அவனுக்கு அதிக வளர்ச்சியாக இருக்கவில்லை. அதனால் அவன் தன்னுடைய உடலுக்குள் அடைந்து கிடந்த சொந்த சதைகளை உணவாக ஆக்கி வாழக் கட்டாயப் படுத்தப்பட்டான். பாவம் ஹோப்கின்ஸ்! தான் செயல்படுவதாகவும் வளர்ந்து கொண்டிருப்பதாகவும் பெரியவனாக ஆவோம் என்றும் அவன் நம்பினான். ஆனால் தன்னைத்தானே அழித்துக் கொண்டு தான் நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்று அவனுக்குத் தெரியாது. தன்னுடைய அழிவுடன் சேர்ந்த இருப்புத்தான் தனக்கு இருக்கிறது என்ற விஷயம் அவனுக்குத் தெரியாது. செயல்படுவது என்றால் தான் அழிவது என்பதுதான் அர்த்தம் என்று அவனுக்குத் தெரியாது. வாழ்வது என்றால் இறப்பது என்று அவனுக்குத் தெரியாது. ஹோப்கின் ஹோப்கின்ஸ் மிகப்பெரிய சுயநலவாதியாக இருந்தான். டிப்ரீஸியேஷன் மட்டுமே அறிந்திருக்கும் ஒரு மெஷின். அதனால் அவன் அரண்மனை என்று நினைத்துக் கட்ட முயற்சித்த அவனுடைய வீடு அவனுக்கே கல்லறையாகிவிட்டது...
டாக்டர் கதவுக்கருகில் நின்றுகொண்டு மன்னிப்புக் கேட்டவாறு உள்ளே வந்தார். எனக்கு ஏதாவது உடல்நலக் கேடு உண்டானதா? நான் உட்கார்ந்து சோர்வடைந்து விட்டேனா?
"டாக்டர், படர்ந்து பிடிக்கும் ஒரு கொடிய நோய்க்கு நடுவில் மாட்டிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை நினைத்துப் பாருங்கள்''- நான் சொன்னேன்: "கடந்து போகும் ஒவ்வொரு மணி நேரமும் அவனுக்கு விலைமதிப்பு உள்ளது. பொக்கிஷத்தைப் போன்றது. அதற்கு மாறாக நோயால் பாதிக்கப்பட்ட ஒருவனை நினைத்துப் பாருங்கள். நோயுடன் இருக்கும் ஒவ்வொரு மணி நேரமும் அவனுக்கு இழப்பாகிறது. வெறுப்பைத் தரும் இந்த ஆப்டிமம் பாயிண்ட்டின் எந்தப் பகுதியில் நான் இருக்கிறேன் டாக்டர்? தயவு செய்து சொல்லுங்க...''
"அந்தக் கொடிய நோய் என்னவாக இருக்கும்?''- அவர் தன்னுடைய வாடிய முகத்தில் ஒரு புன்சிரிப்பைக் கொண்டு வருவதற்கு வலிய முயற்சித்துக் கொண்டே, நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். கையில் இருந்த பெரிய மஞ்சள்நிற உறையை மேஜைமீது வைத்துவிட்டு, அதன்மீது தன்னுடைய இரண்டு கைகளையும் ஊன்றித் தலையை ஆட்டிக்கொண்டே தொடர்ந்தார்: "இல்லை. ஒரு கொடிய நோய்க்கான பிரச்சினை நிச்சயமாக இல்லை. எது எப்படி இருந்தாலும் இருப்பவை அனைத்தும் குறிப்பிடத்தக்க கேஸ்கள்தான்.''
"ஆமாம்... அங்குதான் உங்களுக்குத் தவறே உண்டாகிறது. அதைக் கூறுவதற்கான சுதந்திரத்தை எனக்குத் தாருங்கள். என்னைப் பரிசோதனை செய்த முதல் ஸ்பெஷலிஸ்ட்டின் முன்னால் நடந்ததைப்போல நான் கட்டுப்பாட்டை இழந்து விட்டேன். அகாடமிக்கோ எக்ஸ்பெரிமென்டலோ ஆன விஷயங்களில் இருந்து நீங்கள் எல்லாரும் ஒருமுறை வெளியே வர வேண்டியதிருக்கும். வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்த்து படிக்க வேண்டியதிருக்கும். ஒருவரை அல்ல- ஆயிரக்கணக்கான பேர்களைக் கடந்து போகும் எல்லாரும் பட்டாளத்தில் இருப்பதைப்போல ஒரே தாளகதியில் நடந்து செல்கிறார்கள் என்பது, ஒரு குருடனுக்குத்தான் தெரியும் என்பதுதான் வருத்தமான விஷயம். தாளகதியில் உண்டாகக்கூடிய தவறைச் சுட்டிக்காட்ட, அறிவில்லாத சிறுவன் தேவைப்படுகிறான் என்ற விஷயமும்தான். எங்கோ ஒரு கொடிய நோயின் அணுக்கள் ஒளிந்திருக்கவில்லை என்று யாருக்குத் தெரியும் டாக்டர்? அவை நம்மீது பாய்ந்து விழ நேரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று? மனிதர்கள் ஒவ்வொருவராக இறந்து விழலாம்- விஷத்தால் பாதிக்கப்பட்ட லோக்கஸ்ட்டுகளைப்போல. கூடாகிப் போன நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு, நின்றுபோன இதயத்தைத் துடிக்க வைக்க முடியாமல் வழியிலும் வீட்டிலும் தொழிற்சாலையிலும்... நாடுகளும் பெரிய நிலப் பகுதிகளும் ஆட்கள் இல்லாமல் போகும்... ரத்தமும் மாமிசமும் உள்ள மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருந்த இடத்தில் துரும்பு பிடித்த தொழிற்சாலைகள் நின்று கொண்டிருக்கும். அதன் முதல் இரை நானாக இருப்பேனோ? நீங்கள்தான் அதைக் கண்டுபிடிக்கப் போகிற முதல் டாக்டராக இருப்பீர்களோ? உங்களுடைய உழைப்பிற்குப் பிரதிபலனாக மருத்துவ விஞ்ஞானம் அதற்கு உங்களுடைய பெயரைத் தரும். ஓ... மன்னிக்கணும் டாக்டர். நான் வருத்தப்படுகிறேன். தன் சொந்தப் பெயரை ஒரு நோய்க்குக் கொடுப்பது என்பது யாரும் விரும்பக்கூடிய ஒரு விஷயம் அல்ல. எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் எவ்வளவு சக்தி படைத்ததாகவும் யாராலும் கீழ்ப்படியச் செய்ய முடியாததாகவும் இருந்தாலும்... டாக்டர் நான் ஒரு விஷயம் கேட்கட்டுமா? ஹோப்கின் ஹோப்கின்ஸ் என்ற மனிதனின் நோயின் பெயர் என்ன?''
"ஹோப்கின் ஹோப்கின்ஸா?''- ஹோப்கின் ஹோப்கின்ஸின் கதை இருந்தப் பக்கத்தில் வைத்த விரலுடன், நான் அப்போதும் கையில் பிடித்திருந்த "க்ளினிக்கல் மெத்தேட்ஸ்" என்ற நூலையே டாக்டர் வெறித்துப் பார்த்தார்.
"ஓ... பரவாயில்லை... பரவாயில்லை... என்னை மன்னிச்சிடுங்க. நான் என்னவெல்லாமோ கூறிவிடுகிறேன்''- புத்தகத்தை மேஜைமீது வைத்துவிட்டு, நடுங்கிக் கொண்டிருக்கும் கைகளுடனும் தொடர்ந்து பேசியதால் மூச்சுவிட முடியாமல் திணறிக் கொண்டும் நான் உட்கார்ந்தேன்.