உத்தராயணம் - Page 20
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6368
ஷெட்டின் எக்ஸ்டன்ஷன் வேலையையும் சற்று போய்ப் பார்க்க வேண்டும். வரட்டும்... அவை அனைத்தையும் அடுத்த வாரம் பார்த்துக் கொள்ளலாம். இன்று முடியாது. ஆர்வம் உண்டாகவில்லை. சோர்வாகவும் இருக்கிறது. இல்லாவிட்டாலும் இன்று அதற்கெல்லாம் நேரம் இருக்காது. மதியத்திற்குப் பிறகு டாக்டரைப் பார்ப்பதற்காகப் போக வேண்டும். இன்று இரண்டாவது ஸ்பெஷலிஸ்டின் ரிப்போர்ட்டும் கிடைக்கும். என் வயிறு கொஞ்சம் எரிந்தது. என்ன காரணமாக இருக்கும்? ஒன்றுமில்லை என்று நம்ப வேண்டும்.
நான் மீண்டும் தொலைபேசியை எடுத்து பேராசிரியரின் தொலைபேசி எண்ணைக் கேட்டேன். இன்று அவருடைய "நாகரீகங்களின் மரணம்" என்ற சொற்பொழிவு இருக்கிறது. வர முடியாத நிலை என்பதைக் கூற வேண்டும். இன்று என்னுடைய நோய் என்ன என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். தனிப்பட்ட முறையில் பேராசிரியர் அழைத்திருந்தார். என் மனைவியின் மாமா அவர். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய சொற்பொழிவுகள் கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கும். வரலாற்றில் எதுவும் நடக்கக் கூடாதது இல்லை. வாழ்க்கை முடியப் போவதில்லை, மனிதர்களை நம்புங்கள் என்றெல்லாம் இருக்கக் கூடிய வாதங்கள் அறிவு மற்றும் அனுபவத்தின் பின்பலம் கொண்டவை அல்ல. பலப்பல நாகரீகங்களும் கொடிகட்டி வாழ்ந்த இடத்தில் இன்று நிர்வாணமான மனிதர்கள் வேட்டையாடி குகைகளுக்குள் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். மாமிசமும் ரத்தமும் உள்ள மனிதர்கள் இருந்த இடத்தில் கற்சிலைகளும் பிரமிட்களும் இருக்கின்றன. அப்படித்தான் சென்ற சொற்பொழிவை அவர் முடித்தார். இன்று அவர் மரணத்தைப் பற்றிப் பேசுவார். நாகரீகங்கள் மரணமடைகின்றனவா? வயதாகி, ஓய்வு எடுப்பதற்காகச் சென்றுவிட்டன. நரம்புகள் தேய்ந்து, உறுப்புகளுக்குச் செயல்படும் தன்மை இல்லாமல் போய்... ஒருவேளை அவை கொலை செய்யப்படுகின்றனவோ? இல்லாவிட்டால் தற்கொலை? இன்கா சாம்ராஜ்யத்தை ஒரு காலத்தில் ஸ்பானியாடுகள் என்ற நோய்க் கிருமிகள் ஆக்ரமித்து அடையாளம்கூட இல்லாத அளவிற்குத் தவிடுபொடியாக்கிவிட்டிருக்கின்றன. செக்கோஸ்லோவேகியா என்ற நாட்டைச் சுற்றி வளைத்து நின்று கொண்டு டாக்டர்கள் மீண்டும் மீண்டும் கூறுகிறார்கள்: "ரிலாக்ஸ்! ரிலாக்ஸ்!''
டிவிஷனில் ஷிஃப்ட் மாறக்கூடிய நேரம் வந்திருக்கிறது. நான் மீண்டும் ஷாப்பிற்குள் சென்றேன். புதிய ஷிஃப்டில் வேலை செய்யும் தொழிலாளிகள் அனைவரும் வந்துவிட்டிருந்தார்கள். அவர்களுக்குத் தங்களுடைய இயந்திரங்களை ஒப்படைத்துவிட்டு பழைய பணியாட்கள் எல்லாரும் இப்போது வரிசை வரிசையாக நீர்க் குழாயை நோக்கி நகர ஆரம்பிப்பார்கள். கைகளையும் கால்களையும் கழுவிவிட்டு, க்ளாக் அறையிலிருந்து பையையும் சோற்றுப் பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு, பிறகு அவர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிச் செல்வார்கள். சற்று நேரத்தில் அவர்கள் வேலை பார்த்த இடங்களில் புதிய ஷிஃப்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலை பார்க்க ஆரம்பிப்பார்கள். ஒரு மனிதனின் இடத்தில் வேறொரு மனிதன் வந்திருக்கிறான் என்று தோன்றாது. ஒரு மனிதன் முடிக்காத வேலையை இன்னொரு ஆளால் முடிக்க முடியும். ஒரு அவரை விதையைப்போல இன்னொரு அவரை விதை. மாறுதல் தேவைப்படாத அளவிற்குப் பரிணாமம் முழுமையில் கொண்டு போய்விட்ட இறுதிக் கனி. எந்தவொரு இடத்திலும் தவறு நடக்கவில்லை. யாருக்கும் பாதை தவறவில்லை.
ஒருமுறை பேராசிரியரைப் பார்ப்பதற்காகப் போயிருந்தபோது, எனக்கு வழி தவறிவிட்டது. பாலிகஞ்சில் இருந்து மாறி ஒரு ஒடுங்கிய சந்துக்குள் அவர் வசித்துக்கொண்டிருந்தார். பலதடவை போயிருக்கிறேன். எனினும் வழி தவறிவிட்டது. நீண்ட நேரம் இங்கு மங்குமாக அலைந்தேன். அவருடைய வீட்டை அடையும்போது இரவாகி விட்டது. என் கதையைக் கேட்ட பேராசிரியர் என்னைப் பாராட்டினார். வழி தவறி செல்பவர்களைத் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார். "வீட்டிலிருந்து வெளியே வராத நீங்கள்தான் அதைக் கூறவேண்டும்'' - நடந்து களைத்துப் போயிருந்த நான் கோபத்துடன் சொன்னேன். "நான் இருப்பதே வழி தவறி வந்து சேர்ந்த இடத்தில்தான் குழந்தை...''- அவர் சொன்னார். தொடர்ந்து என்னை நெருங்கி வந்து தோளில் கையை வைத்து வயதான அவர் சொன்னார்: "வழி தவறாதவன் செய்வது கடமையை முழுமை செய்வது மட்டும்தான். கடமையும் செயலின் மரணம்தான் குழந்தை.'' அவருடைய நரை விழுந்த தாடி என் தலையில் மோதியது. சில நேரங்களில் அவர் திடீரென்று என்னிடம் பாசத்தைக் காட்டுவார். அவருடைய முகம் கவலையால் நிறைந்திருக்கும். தொண்டை தடுமாறும். தோளில் வைத்த கையைத் தயங்கித் தயங்கி எடுத்தவாறு அவர் நடந்து செல்வார். அவருக்குத் தெரியுமா? நான் இப்படியெல்லாம்- ஷாப்பிற்கு நடுவில் கையை நெஞ்சின்மீது வைத்துக் கொண்டு நான் நின்றுவிட்டேன். நெஞ்சுக்குள்ளிருந்து என்னவெல்லாமோ ஊர்ந்து போவதைப்போல இருந்தது. நான் ஒன்றுமே இல்லாதவனாக ஆகிவிட்டதைப்போல உணர்ந்தேன். என்ன இது?
அங்கிருந்து கொண்டு நிமிர்ந்து நின்றபோது, பழைய நிலைக்கு வந்தபோது எனக்கு முன்பு எப்போதும் தோன்றியிராத அளவிற்குத் தளர்ச்சி தோன்றியது. நான் வியர்த்துப் போயிருந்தேன். யாராவது என்னை இந்த நிலையில் பார்த்திருப்பார்களோ என்னவோ என்று நான் பயந்தேன். டாக்டர் அறிந்தால், தயாரிப்பு நிர்வாகியிடம் செய்தி போய்ச் சேர்ந்தால்... எல்லாவற்றையும் பார்க்கவும் எல்லார்மீதும் கண்களை வைத்திருக்கவும் செய்யும் கம்பெனி, எனக்குக் கிடைத்த இந்த வேலை, என்னுடைய நிலைமை... யாரும் பார்க்கவில்லை என்று நம்ப முயற்சித்தவாறு நான் மிகவும் மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்.
அப்போது என் தோளில் விருந்தாவன் தொட்டார். யார் என்று தெரியாமல் திடுக்கிட்டுத் திரும்பினேன். அவர்தான் என்பது தெரிந்ததும் நான் நீண்ட பெருமூச்சை விட்டேன். அவர் ஒரு கையை என் வலது தோளில் வைத்து, இன்னொரு கையால் இடக்கையைப் பிடித்துக்கொண்டு எனக்குப் பின்னால் நடந்தார். நான் எதிர்க்கவில்லை. எதுவும் கூறவுமில்லை. அவரும் எதுவும் கேட்கவில்லை. நாங்கள் அமைதியாக நடந்தோம். எங்களுடைய அந்த நிலையில் இருந்த நடையை யாராவது பார்க்கிறார்களா என்று அப்போது நான் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு மாறாக நிம்மதி தோன்றியது. ஒரு நோயாளிக்கு மட்டும் புரியக்கூடிய நிம்மதி.
அலுவலக அறையை அடைந்தபோது நான் பழைய ஆளாக மாறிவிட்டிருந்தேன். எனினும் பல நிமிடங்கள் நாங்கள் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தோம். எங்களுக்கு இடையே இருந்த மேஜையையும் அதன்மீது அவர் கொண்டு வந்து வைத்திருந்த அட்டைப் பெட்டியையும் பார்த்தார்- எங்களுக்கிடையே எங்களைப் பேசவிடாமல் இருக்கச் செய்த என்னுடைய நோயைக் காணாமல் இருக்க முயற்சித்துக்கொண்டு. அதைப் பற்றிப் பேச நாங்கள் இருவரும் விரும்பவில்லை. என்னை அறிந்திருக்கும் என்னுடைய நண்பர் விருந்தாவன்.