உத்தராயணம் - Page 18
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6368
ஆமாம் என்றோ இல்லை என்றோ மட்டும் பதில் கூறக்கூடிய கொஞ்சம் கேள்விகளைக் கேட்டு, அவற்றுக்கான பதில்களை எண்ணிப் பட்டியல்கள் மற்றும் க்ராஃப்களின் உதவியுடன் இறுதியில் எண்களாக ஆக்கி மொழி மாற்றம் செய்வதுதான் அவருடைய பாணி. நான் திறந்து பார்க்க தைரியம் கொள்ளாத நிராமயனின் ஆராய்ச்சிக் கட்டுரை இந்த விஷயத்தில் அவருக்கு மிகவும் அதிகமாக உதவியது.
இவை அனைத்தும் நடந்து கொண்டிருக்க, ஒரு பக்கத்தில் ஓம்காரும் என்னை பலவீனப்படுத்திக் கொண்டிருந்தான். "நீங்கள் உடனே இறந்துவிடுவீர்கள் என்று நான் கூறவில்லை. இறந்தபிறகு உங்களுடைய குடும்பத்திற்கு என்ன நடக்கும் என்பதைப் பற்றி நினைத்துப் பார்ப்பதும் பயனற்றது. அதையெல்லாம் நாம் முடிவு செய்ய முடியாது. நாம் நம்முடைய கர்மத்தை முழுமை செய்ய வேண்டும். அவ்வளவுதான். நீங்கள் உங்களுடைய குடும்பத்திற்காக நிறைவேற்ற வேண்டிய சில கடமைகள் இருக்கின்றன. இன்றைய உலகில் இவை அனைத்தும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன என்ற விஷயத்தில் நாம் அதிர்ஷ்டசாலிகள்தான். தெரியுமா? போன மாதம் என் மனைவியின் நெக்லெஸ் திருடு போய்விட்டது. பூஜை நடக்கும் நேரத்தில் கூட்டத்தில் இறங்கினாள். காணாமல் போய்விட்டது. தெரிந்த உடனே நான் காவல் நிலையத்திற்குப் போய் புகார் செய்தேன். நான் அவளிடம் எப்போதும் கூறுவது இதைத்தான்: கண்டுபிடிக்க வேண்டியது அவர்களுடைய வேலை. நாம் இதற்காகக் கண்ணீர் சிந்தி ஏதாவது பயன் இருக்கா?'' இவ்வளவும் ஆன பிறகு அவனுடைய மனைவி அந்த வாதத்தை எதிர்த்தது மட்டுமல்ல- சொல்லிச் சொல்லித் தேம்பி அழவும் ஆரம்பித்தாள். ஓம்கார் என்ன செய்வதென்று தெரியாமல் வெறுமனே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அந்தப் பெண்ணை சமாதானப்படுத்த வேண்டிய
பொறுப்பை நான் ஏற்க வேண்டியதிருந்தது. ஆனால் நான் கூறுவதற்கு என்ன இருக்கிறது? என்ன செய்ய முடியும்? இந்த விஷயத்தில் என்னாலோ ஓம்காராலோ ஒருவேளை- போலீஸாலோகூட எதுவும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. எல்லாரும் செயலற்றவர்கள். அப்படி வரும்போது ஒருவன் செய்ய வேண்டியது அவனுடைய கடமையை மட்டுமே. நான் என் கடமையைச் செய்து விட்டேன். அங்கு வைத்தே என் மரணத்தை எவ்வளவோ ரூபாய்களுக்காக பணயமாக எழுதிக் கொடுத்தேன். பிறகு யாரும் கூறாமலே ஒவ்வொரு மாதமும் புதிய பாலிஸி. ஒவ்வொரு முதல் தேதியிலும் ஒவ்வொன்றையும் மனைவியின் கையில் கொண்டுபோய் கொடுத்தேன். இது இத்தனை ஆயிரத்திற்கு, இது விபத்திற்கு, இது மகனின் படிப்பிற்கு, இது நோய் வந்தால் சிகிச்சைக்கு, இது கால் ஒடிந்தால்- இதெல்லாம் பின்னால் நடந்த கதை. ஒருநாள் அவள் தமாஷாகக் கேட்டாள்: "இந்த மாதிரி போனால் இறக்கும்வரை வாழ என்ன வழி?'' பைத்தியம் பிடித்ததைப்போல நான் மீண்டும் ஜோகியைத் தேடி ஓடினேன். ஏறி ஏறி சிவந்த கோட்டின்மீதே படர்ந்து ஏறிய நீலநிறக் கோட்டைபோல கொம்புகள் காணாமல் நான் திகைத்து நின்றேன். ஜோகி நிராமயனின் புத்தகத்தைத் திறந்து சிறிது நேரம் வாசித்தார். அன்று முதல் ஜோகியின் அறிவுரைப்படி நான் இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட்களை என் வீட்டிற்குள் நுழைய விடவில்லை. மறுநாளே கம்பெனி டாக்டர் என்னை அழைத்தார்- வழக்கமான சோதனைதான் என்ற பெயரில். என்னுடைய இந்தப் பரிசோதனைகளும் ஆராய்ச்சிகளும் ஆரம்பமாகவும் செய்தன. இங்கோ ஓம்கார் போய்விட்டான். நானும் ஜோகியும் எஞ்சியிருந்தோம். என்னுடைய பாலிஸிகளும் அவருடைய வாழ்த்து அட்டைகளும். பிறப்பிற்கும் இறப்பிற்கும் வரும் வாழ்த்து மடல்கள். இல்லை சாரதி, வேறொரு வகையான மரணமும் இருக்கிறது. கொலைப் பாதகம். ஆனால் கொலைப் பாதகத்திற்கும் தற்கொலைக்குமிடையே மிகுந்த வேறுபாடு எதுவும் இல்லை. உள்ளதும் மறுக்கக்கூடியதே. யார், யாரை என்று கேட்டால் மட்டும் புரிந்து கொள்ளக் கூடியது.
கைகள் இரண்டையும் கோர்த்து, தலைக்குப் பின்னால் கட்டிக்கொண்டு, நான் முன்னோக்கியும் பின்னோக்கியும் இரண்டு தடவை வீதம் நடந்தேன். பிறகு நாற்காலியின் கைகளில் முழங்கையை ஊன்றி, கால்களை முன்னோக்கி நீட்டி வைத்துக்கொண்டு, இருக்கையில் இருந்து உயர்ந்து கொண்டும் தாழ்ந்து கொண்டும் இருந்தேன். தலையை இடப் பக்கமும் வலப் பக்கமும் திருப்பினேன். ஒரே நிலையில் தொடர்ந்து அமர்ந்திருக்க வேண்டியவர்கள் பின்பற்ற வேண்டிய உடற்பயிற்சிகள் இவை. இந்த நோய் பாதித்த பிறகு நான் மேலும் அதிக நேரம் நாற்காலியில் அமரத் தொடங்கியிருக்கிறேன். நாற்காலியில் அமர்ந்தால் உண்டாகக்கூடிய உடல் ரீதியான வேதனைகள் உண்டாகாமல் இருக்க இந்த உடற்பயிற்சி உதவியாக இருக்கும். சில நாட்களுக்கு முன்னால் பாதையோரத்தில் இருந்த ஒரு புத்தக விற்பனையாளரிடமிருந்து வாங்கிய 'ஐர்ஜ் ற்ர் ற்ஹந்ங் ஸ்ரீஹழ்ங் ர்ச் ஹ்ர்ன்ழ்ள்ங்ப்ச்' என்ற புத்தகத்தில் இது இருக்கிறது. முதலில் நூல் நிலையப் பதிப்பாகவும் பிறகு பாக்கெட் புத்தகமாகவும் பல லட்சம் பிரதிகள் விற்பனையான புத்தகம். அமெரிக்காவில் எங்கோ உள்ள உடற்பயிற்சிக்கென்றே இருக்கும் ஒரு பல்கலைக்கழகத்தில் நீண்ட காலம் ஆக்யுப்பேஷனல் எக்சர்சைஸஸ் என்ற விஷயத்தைப் படித்த ஆள்தான் அந்தப் புத்தகத்தை எழுதியிருந்தார். நவீன உலகத்தில் விட முடியாத- எதுவும் முறைப்படி நடந்து கொண்டிருக்கும் வாழ்க்கையிலும், பெரிய உடற்பயிற்சிகளும் சாதனையும் இல்லாமலே, எவ்வளவோ எளிமையானதும் எல்லாருக்கும் இயலக்கூடியதுமான வழியில் எப்படி உடல்நலத்தைக் காப்பாற்றலாம் என்ற பிரச்சினைதான் அவரைக் கவர்ந்தது. அதில் அவர் வருடக்கணக்கில் நடத்திய ஆராய்ச்சியின் விளைவுதான் புத்தகம். ஒழுங்கும் இருப்பும் இல்லாமல் போன இடத்தில் மீண்டும் அவற்றை உண்டாக்குவதற்கான ஒரு புரட்சி. சில விநாடிகள் மட்டுமே செலவாகக்கூடிய எளிமையான உடற்பயிற்சிகள். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மீண்டும் செய்ய வேண்டும். வேறு பயிற்சிகளும் உண்டு. புகை வண்டியில் நின்று கொண்டு பயணம் செய்பவர்களுக்கும், நடந்து கொண்டும் நின்று கொண்டும் வேலை செய்யும் பேரர்களுக்கும், தபால்காரர்களுக்கும், நோய் பாதித்து நாள் கணக்கில் மெத்தையில் படுத்துக் கிடப்பவர்களுக்கும்கூட- எல்லாருக்கும் தங்களுடைய, தாங்கள் தாங்களைச் சந்திக்கக்கூடிய சூழ்நிலையில் செய்ய வேண்டிய பயிற்சிகள். தொடர்ந்து நீண்ட நேரம் வாசிக்கவோ எழுதவோ நேர்ந்தால் இடையில் அவ்வப்போது கண்களை உயர்த்தித் தூரத்தில் எங்கேயாவது இருக்கும் ஒரு பொருளில் நான்கைந்து விநாடிகள் கண்களைக் குவிக்க வேண்டும்.
நான் ஜன்னல் வழியாக தூரத்தில் பார்த்தேன். அப்படிப் பார்க்கும்போதெல்லாம் நான் கண்களை மையப்படுத்த உபயோகப்படுத்துவது தூரத்தில், எங்களுடைய கம்பெனியின் இணைப்பான கெமிக்கல் கம்பெனியின் ப்ளான்டில் இருந்து எழுந்து நின்று கொண்டிருக்கும் மூன்று புகைக் குழாய்களைத்தான். மூன்றுக்கும் மூன்று உயரங்கள் இருந்தன.