உத்தராயணம் - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6367
வார்த்தையால் விளக்கிக் கூற முடியாத அளவிற்கு வேதனையையும் திணறலையும் சகித்துக் கொண்டு, இறுதியில் எந்தவொரு தீவிரவாதியாலும் ஆக்கிரமிக்கப்படாமல், காயமெதுவும் அடையாமல் அவன் தானே மரணத்தைத் தழுவினான். மனம், வாக்கு, காயம் ஆகியவற்றில் சுத்தமானவனாக இருந்து கொண்டு ஓம்கார் கர்மத்தில் மூழ்கியபோது, அவனுடைய சரீரம் அதன் இயல்புத் தன்மையை இழந்ததை யார் அறிந்தார்கள்? ஒரு மருத்துவராலும் அதை மீண்டும் அதுவாக ஆக்க- அவனை அவனாக ஆக்க முடியவில்லை.
நான் ஹஸ்ஸன் மாஸ்டர் என்று அழைக்கும் எங்களுடைய மாஸ்டர் பேட்டர்ன் மேக்கரைத் தேடி நடந்தேன். புருவம்கூட நரைத்த கிழவர். நீண்டகால சேவைக்குப் பிறகு ஹஸ்ஸன் மாஸ்டர் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். மாஸ்டருக்குப் பொறுப்புகள் எதுவும் மீதமில்லை. பிள்ளைகளின் பிள்ளைகளுக்குக்கூட திருமணமாகி வேலைகளையும் அவர் தேடிக் கொண்டார்கள். அதற்குப் பிறகும் மாஸ்டர் வேலை செய்து கொண்டிருந்தார். ரெக்கார்டுகளில் பதினைந்து வயது குறைவாகக் காட்டப்பட்டிருந்தது. வயதைக் குறைவாகக் காட்டியது தானல்ல- மேனேஜ் மெண்ட்தான் என்று அவர் கூறுகிறார். தொழிற்சாலைக்கு அவரைத் தேவைப்படுகிறது. "இல்லாவிட்டால் நான் எப்போதோ ஓய்வு பெற்றிருப்பேன்'' - மாஸ்டர் கூறுவார்.
நான் சென்றதை மாஸ்டர் பார்க்கவில்லை. கஷ்டமான ஒரு மாடலில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். கஷ்டமானவற்றை அவர் மற்றவர்களுக்குத் தருவதில்லை. "எப்படி இருக்கு வேலை மாஸ்டர்?''- நான் குசலம் விசாரித்தேன். நிமிட நேரத்திற்கு முகத்தை உயர்த்தி காலை வணக்கம் கூறிவிட்டு மீண்டும் பணியில் கண்களைப் பதிய வைத்துக் கொண்டே அவர் சொன்னார்: "பாருங்க சார்... கிட்டத்தட்ட இதே மாதிரி ஒன்றை நான் பத்து வருடங்களுக்கு முன்னால் உண்டாக்கியிருக்கேன். உங்களுக்குத் தெரியாது. அப்போது நீங்கள் தொழிற்சாலையில் இல்லை. பல தடவை முயற்சி பண்ணிய பிறகுதான் சரியாக வந்தது. அதனால் இதைப் பார்த்த போது நினைத்தேன்- போவதற்கு முன்னால் இன்னொருமுறை இதில் வேலை செய்ய வேண்டும் என்று. பிறகு... ம்... ஒரு வித்தியாசம் மட்டும்... அப்போது அது இரும்பில் காஸ்ட் செய்யப்பட்டது. என்ன காரணத்திற்காக இதை அலாயில் காஸ்ட் செய்யச் சொன்னார்கள்?'' யாரால் பதில் சொல்ல முடியும்? நான் அதைக் கூறுவேன் என்று அவரும் எதிர்பார்க்கவில்லை. மாஸ்டர் மீண்டும் தன் வேலையில் மூழ்கிவிட்டார்- அலாய் ஆக இருந்தால் என்ன, இரும்பாக இருந்தால் என்ன என்ற நினைப்புடன்.
நான் அவரிடம் ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்வதாக நோக்கம் என்று கேட்டேன். "எத்தனையோ வருடங்கள் வேலை செய்து விட்டேன். எவ்வளவோ சிரமங்கள் நிறைந்த மாடல்களை உண்டாக்கி விட்டேன். எனக்கு இப்போது புரியாதது ஒன்றுதான்''- அவர் வேலையிலிருந்து கண்களை எடுக்காமலே தொடர்ந்தார்: "எதற்காக இவர்கள் வயதாகிவிட்டது என்று சொல்லி வேலை செய்பவர்களைப் போகச் சொல்கிறார்கள்? வாழ்க்கையே வேலைதானே? வாழ முடியாத அளவிற்கு வயது ஆகும் ஒரு விஷயம் இருக்கிறதா என்ன?''
"அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன''- நான் விளக்கிச் சொன்னேன்: "முதலாவது- வயதானவர்கள் இளைஞர்களுக்காக இடத்தை விட்டுத்தர வேண்டும். இரண்டாவது- வயதானவர்கள் தங்களின் வேலையை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்க வேண்டும்.''
"இல்லை. என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை சார்''- மாஸ்டர் தலையை உயர்த்தினார். அவர் பலமாகத் தலையை ஆட்டினார்: "எல்லாருக்கும் இன்று இல்லாவிட்டால் நாளை செத்து இடத்தைக் காலி பண்ணணும். பென்ஷனில் அனுப்புவதால் கிடைக்கக் கூடிய காலியிடங்கள் செத்துப் போவதாலும் கிடைக்கும். இரண்டாவது- இங்கிருந்து ஓய்வு பெற்றுப் போய்விட்டால்... இங்கிருந்து போன பிறகு வேறு என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள்? வேறு என்ன... என்ன செய்வது?'' - அவருடைய தலையாட்டல் நின்றது. குரல் தடுமாறியது. தலையை மீண்டும் குனிந்து கொண்டு அவர் மீண்டும் தன்னை நோக்கித் திரும்பினார்.
எனக்கு அவர்மீது இரக்கம் உண்டானது. இப்போது நிர்வாகம் அனுமதிப்பதாக இருந்தால் அவர் தன்னுடைய வயதைக் குறைத்துக் கொள்வார்.
நான் பதிலெதுவும் கூறுவேன் என்று எதிர்பார்க்காததைப்போல அவர் மீண்டும் பணியில் மூழ்கிவிட்டார். நான் அவருடைய மேஜைமீது கிடந்த ஒரு வரைபடத்தைப் பார்த்தேன். அனுமதிக்கப்பட்டிருக்கும் டாலரன்ஸ். உலோகம் குளிர்ச்சியடையும் போது சுருங்குவதற்காக முதலிலேயே அதிகரித்து வைக்க வேண்டிய அளவு. அந்த அளவுக்கேற்றபடி செட் செய்த கான்ட்ராக்ஷன் ரூல். காஸ்ட் செய்யும் உலோகத்தின் விரிசலுக்கு ஏற்றவண்ணம் நீட்டிய சென்டிமீட்டர்கள். பேட்டர்ன் மேக்கரின் சென்டிமீட்டருக்கு சென்டிமீட்டரின் நீளமில்லை. அவருடைய சென்டிமீட்டர்கள் முன்கூட்டி முடிவு செய்தபடி நீளவும் சுருங்கவும் செய்யும். ஹஸ்ஸன் மாஸ்டருக்கு சொந்தமாக ஒரு அளவு இல்லை. ஹஸ்ஸன் மாஸ்டர் ஹஸ்ஸன் மாஸ்டர் அல்ல. மற்றவர்கள் உத்தரவு பிறப்பிக்கும் மாஸ்டர்தான் ஹஸ்ஸன். வேலையிலிருந்து போன பிறகு வேறு என்ன... பேட்டர்ன் மேக்கிங்தான் ஹஸ்ஸனின் வேலை. அதில் அவர் அசாதாரணமான திறமையைப் பெற்றிருந்தார். முழுமையான ஈடுபாட்டால் மாஸ்டராக ஆனார். அதனால் வேறொன்றும் இல்லாதவராக ஆனார். இந்த சிம்ஃபனி அல்லாமல் அவருக்கு ஒரு சிம்ஃபனி இல்லை. வாழ்க்கை இல்லை. இது நின்றால் அவர் நிற்பார். விபத்துகள் எதையும் சந்திக்காமலும் க்ரேனுக்கு அடியில் சிக்காமலும் செங்கற்கள் தலையில் விழாமலும் எழுபதாவது பிறந்த நாளில் ஓய்வு எடுப்பதற்காக வீட்டை அடையும்போது திடீரென்று ஹஸ்ஸன் மாஸ்டர் தன்னுடைய ரத்தம் கெட்டுவிட்டதைப் பார்ப்பாரோ? தான் எப்போதோ தான் அல்லாததாகிவிட்ட உண்மையை? அமைதியாக வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல், தெரியாமல் தன்னுடைய கண்கள் மூலம் நீட்டிய பார்வையை எங்கேயோ ஒரு திருகு உளியைப்போல கூர்மையாகச் செலுத்தி அவர் வேலை செய்து கொண்டிருந்தார். இறந்த பிறகு எகிப்திய நாகரீகம் நீண்ட காலம் அடக்கம் செய்யப்படாமல் கிடந்தது. இறந்ததற்குப் பிறகும் சூரியன் மறைவது வரை பாம்பின் வால் அசைந்து கொண்டிருக்கும்...
தூணில் கையை வைத்து நான் ஆர்க்கெஸ்ட்ராவைக் கேட்டுக் கொண்டு நின்றிருந்தேன். அதன் ராகம் எப்போதும் இல்லாத மாதிரி மிகவும் சோகமயமாக இருப்பதைப்போல தோன்றியது. ஒரு பாட்டு கர்பானாவைப்போல. எனக்கு என்னுடைய மனைவியின் ஈரமான கண்கள் ஞாபகத்தில் வந்தன. அவள் எதற்காக அழுதாள்? நான் அவளிடம் அன்பை வெளிப்படுத்தி நீண்ட நாட்களாகிவிட்டன. இன்று காலையில் அவளுடைய கழுத்தில் இருந்த கறுப்புப் புள்ளியை வருடிக் கொண்டே அன்புடன் வார்த்தைகளைக் கூறியதில் எனக்கு சந்தோஷம் உண்டானது.
"திங்கட்கிழமை எல்லாம் தயாராகும்'' - நான் உறக்கத்திலிருந்து விழித்ததைப்போல திரும்பிப் பார்த்தேன்.