உத்தராயணம் - Page 12
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6367
தயார் பண்ணப்பட்டவையைப் பார்த்து திருப்தியடைவேன். பிரச்சினைகள் பல நேரங்களில் வரும் என்றாலும், வேலை பிரச்சினை இல்லாதது அல்ல என்றாலும், இந்த ஷாப்புக்குள் கிடைக்கக் கூடிய சந்தோஷம் ஒருவனுக்கு வேறு எங்கும் கிடைக்காது. தீர்க்கக்கூடிய பிரச்சினைகளே இருக்கின்றன. சந்திக்கக்கூடிய சவால்களே இருக்கின்றன. உருக்கப்பட்ட உலோகத்தைப்போல இருக்கும் ஒருவன் இதற்குள் நுழையும்போது அறியாமலே ஒரு காஸ்ட்டிங்காக மாறி உறுதிப்படைத்தவனாக ஆகிவிடுகிறான். செயல் என்பது இங்கு ஒரு அருளாக இருக்கிறது. அது ஒவ்வொருவனையும் அவனுடைய இடத்திலும் பாதையிலும் வேறுபாடு இல்லாமல் உறுதியாக இருக்கச் செய்கிறது.
ஓம்கார்நாத்தான் எனக்குக் கடமையைப் பற்றிச் சொல்லித் தந்தான். ஓம்காரை நான் சிறுவயதிலிருந்தே அறிவேன். அன்று அவன் கிராமத்திலேயே மிகவும் தாறுமாறாக நடக்கக்கூடிய பையனாக இருந்தான். மற்ற பிள்ளைகள் எல்லாரும் அவனைப் பார்த்து பயப்படவும் வழிபடவும் செய்தார்கள். ஆனால் நீண்ட காலத்திற்குப் பிறகு நகரத்தில் பார்த்தபோது ஓம்கார் வேறொரு மனிதனாக மாறிவிட்டிருந்தான். கீதையிலும் தர்மத்திலும் முழுமையான நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு கர்மயோகியாக அவன் இருந்தான். தேர்வுகளில் வெற்றி பெற்று வேலையில் சேர்ந்த பிறகு, ஒரு மேஜிஸ்ட்ரேட்டாக அவன் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அடிக்கடி உயர்ந்து கொண்டிருந்த காலம். மனிதனுக்கு உண்டாகக்கூடிய தவறுகள் பெரும்பாலும் அவன் தனக்கு சம்பந்தமில்லாத பணிகளில் ஈடுபடுவதால்தான் என்று அவன் நம்பினான். தன்னுடைய வெற்றிக்குக் காரணம், அமைதியாக தான் தன்னுடையதாக இல்லாத பிரச்சினைகளை மறந்து, தன்னுடைய செயல்களில் மட்டும் மையம் கொள்வதுதான் என்று அவன் கூறுவதுண்டு. நாம் நம்முடைய வேலையைச் செய்தால் மட்டும் போதாது. நம்முடையவையாக இல்லாமலிருப்பவற்றில் இருந்து விலகி நிற்கவும் வேண்டும். கடமை என்று அப்படிக் கூறப்படுவது தான் என்ன? நம்முடைய செயலை நாம் எப்படிக் கண்டுபிடிப்பது? ஒருநாள் நான் அவனிடம் கேட்டேன். தன்னுடைய வாதத்தை ஒரு சித்தாந்தமாகவே புரிந்து கொண்டிருந்த மனிதனாக ஓம்கார் இருந்தான். அவன் சொன்னான்: "ஒரு அவரை விதையை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் கடமை என்ன? முளைத்து, ஒரு அவரைச் செடியாக வளர்ந்து, கொம்பில் படர்ந்து, பூத்து, அவரை விதைகளை உண்டாக்கி காய்ந்து போவதுதான். ஆனால் எல்லா விதைகளும் ஒரே மாதிரி முளைக்கின்றன. காய்க்கின்றன. அவற்றுக்கு இடையே ஒரு வித்தியாசமும் இல்லை. மனிதன் மாறுகிறான். வளரவும் செய்கிறான்''- நான் மறுத்துச் சொன்னேன். ஓம்கார் கருணையே பார்க்காமல் என்னைத் திருத்தினான்: "தெய்வம், அவரைச் செடிகள் உண்டாகட்டும் என்று சொன்னபோது உண்டானதுதான் அவரைச் செடி என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? கஷ்டம்! உங்களுக்கு அந்த அளவிற்கு விவரம் இல்லாமல் போய் விட்டதா? பூமியில் வாழ்வு ஆரம்பமான அன்று முளைத்து, என்றைக்கும் வளர்ந்தும் பெரிதாகிக் கொண்டும் இருக்கும் பரிணாம மரத்தின் ஒவ்வொரு கொம்பிலும் இறுதிப் பழமும் வழித் தோன்றலும்தான் ஒவ்வொரு பிறவியும். வளர்ச்சி என்ற இந்த எண்ணற்ற கொம்புகளின் வழிகளில் ஒவ்வொருவனும், இறுதியில் அவரைக் கொடி கொம்பைக் கண்டுபிடிப்பதைப்போல சொந்த கர்மத்தைக் கண்டுபிடிக்கிறான்.'' எந்தச் சூழ்நிலை பின்தொடர்ந்தாலும் ஒவ்வொரு சமுதாயத்தின் நோக்கமும், அதற்குள் இருக்கும் ஒவ்வொரு தனி நபரின் கர்மத்தையும் மேலும் தெளிவாக நடத்திச் செல்கிறது என்று அவன் சொன்னான். நவீன யுகத்தின் உளவியல் விஞ்ஞானம் அனைத்திலும் கர்மத்தை நோக்கிய மீள் பயணத்தை அவன் பார்த்தான். எங்களைப் பார்ப்பதற்காக ஓம்கார் வந்திருந்தான். நாட்டில் எல்லா இடங்களிலும் தீவிரவாதிகள் சட்டம் உண்டாக்கியவர்களையும், சட்டத்தை நடத்திக் கொண்டிருப்பவர்களையும் கொன்று குவித்துக் கொண்டிருந்த காலம். ஒரு மெய்க்காப்பாளனோ, கையில் ஒரு ஆயுதமோகூட இல்லாமல் அவன் வந்தான். நாற்காலியில் சிந்தனையற்றவனாக, செயலற்றவனாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு அவன் சொன்னான்: "முன்பு நான்கு வர்ணங்களும் நான்கு ஆசிரமங்களும் இருந்தன. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நேரத்திலும் செய்ய வேண்டியது என்ன என்பதைத் தெரிந்து வைத்திருந்தான். சமூக வாழ்க்கைக்குப் படிப்படியான நிலையும் இருப்பும் இருந்தன. மெதுவாக அந்த படிப்படியான நிலையையும் இருப்பையும் நாம் மீண்டும் கண்டடைவோம். இந்த விஞ்ஞானமும் புரட்சியும் அதே படிப்படியான நிலையையும் இருப்பையும் குறி வைக்கின்றன.'' தொடர்ந்து அவன் கீதையில் இருந்து ஒரு சுலோகத்தைக் கூற ஆரம்பித்தான்:
"ஸ்ரேயான் ஸ்வதர்ம்மோ விகுண:
பரதர்ம்மாத் ஸ்வனுஷ்டிதாத்
ஸ்வர்தர்ம்மே நிதனம் ஸ்ரேய:
பரதர்ம்மோ பயாவஹ."
கீதையை உச்சரிக்கும்போது அவனுடைய கண்கள் தானாகவே பாதி மூடிக்கொள்ளும். முகம் மேல்நோக்கி உயரும். தியானத்தில் மூழ்கியிருப்பவன் அல்ல- சமாதியடையப் போகிற ஒரு மனிதனின் நிலையை அந்தச் சந்தர்ப்பங்களில் அவன் என்னிடம் உண்டாக்குவான். பயம் தோன்றும். மனம், சொல், உடல் ஆகியவற்றைக் கடந்தவன்தான் ஸ்திரப் பிரக்ஞன் என்று ஓம்கார் கூறுகிறான். நிலையான மனம் என்பது மரணமா? மரணம் அவனுடைய கண்களில் அப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டதோ? மரணம் என்பது ஒரு பாடலைப் போன்றது என்று யாரோ கூறுகிறார்கள். இந்த இனிய சிம்ஃபனியைக் கேட்டுக் கொண்டு நிற்கும்போது, என்னுடைய மனம் நீருக்குள் இறங்குவதைப்போல தாழ்வதாக எனக்குத் தோன்றுகிறது. இந்த சிம்ஃபனி எனக்கு விருப்பமுள்ளதாக ஆக்கியதில் ஓம்காருக்கு பங்கு இருக்கிறது. இறந்துபோன ஓம்கார்.
ரத்தப் புற்றுநோய்தான் ஓம்காரின் நோய். முப்பத்தைந்து வயதில் அவன் நோய் பாதித்த மனிதனாகிவிட்டான். இன்னும் சொல்லப் போனால் முப்பத்தைந்து வயதுவரை அவன் தனக்குள் வளர்ந்து கொண்டிருந்த நோயைப் பற்றித் தெரிந்திருக்கவே இல்லை. பாவம் ஓம்கார். தன் உடலுக்குள் மாறிக் கொண்டிருக்கும் விஷயங்களைப் பற்றி சிறிதும் தெரியாமல் அவன் திருட்டுத்தனங்களைக் கண்டுபிடித்துக் கொண்டும், அக்கிரமங்கள் செய்பவர்களை தண்டித்துக் கொண்டும் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருந்தான். ஆட்சி செய்வது எந்தக் கட்சியாக இருந்தாலும் அந்தந்த காலத்தில் இருக்கும் அரசாங்கங்களுக்கு எதிராக வாளைத் தூக்கியவர்களையெல்லாம் அவன் ஒன்றுபடுத்தினான். அப்போது தான் தன்னுடைய உயர்வின் உச்சியில், கடமையின் கொம்புகளில் இறுகப் படர்ந்து நின்றிருக்கும் நிலையில், அவனுக்குத் திடீரென்று கைகளும் கால்களும் பலத்தை இழப்பதைப் போலவும் தன்னுடைய பிடி விடுவதைப் போலவும் தோன்றத் தொடங்கியது. வேர்க் கடலையிலும் முட்டையிலும் கோதுமையிலும் மீனிலும் கலந்து அவனுடைய உடலுக்குள் சென்று சேர்ந்த தேவைக்கும் அதிகமான செம்பு, வழக்கம்போல வெளியே போகாமல் அவனுடைய குருதியில் கலந்துவிட்டிருந்தது. இதயத்திலும் கண்களிலும் மூளையிலும் அது போய்க் கலந்து, நரம்புகள் செயல்படாமல் போயின. கை விரல்கள் சுருண்டன. உறுப்புகள் நடுங்கின. நாக்கு தளர்ந்தது. உணவு நின்றது.