உத்தராயணம் - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6366
உண்மையாகச் சொல்லப் போனால், நமக்கு நம்மைப் பற்றி எதுவுமே தெரியாது. இதற்கு ஏதாவது கேடு உண்டானால் சீர்படுத்துவதற்கு வேறு யாராவது வரவேண்டும். சீர்படுத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும்- தவறைக் கண்டுபிடிப்பதற்குக்கூட. நீங்கள் கம்பெனியின் ஒரு தொழிலாளி. உங்களை சரியான நேரங்களில் பரிசோதனை செய்து தவறுகளைச் சரிபண்ணி, பாதுகாத்து வேலைக்குப் போகும் வண்ணம் தயார் பண்ண வேண்டிய கடமை கம்பெனிக்கு இருக்கிறது.''
நான் முட்டாளாகி விட்டேன். இந்த உடலை வளர்த்து நல்ல முறையில் ஆக்குவது கம்பெனிதான். அந்த வகையில் பார்க்கப் போனால் இது எனக்குச் சொந்தமானது என்று கூறுவதைவிட, கம்பெனிக்கு உரிமையானது என்று கூறுவதே பொருத்தமானது. தயாரிப்பு நிர்வாகி சொன்னது சரிதான். "நீங்கள் சொன்னது எவ்வளவு சரியானது!''- நான் மன்னிப்பு கேட்கிற குரலில் சொன்னேன்: "சிறிய சிறிய குறைபாடுகள் இருந்தாலும், நான் செயல்பட முடியாதவனாக ஆகிவிடவில்லை என்பது மட்டும் எனக்குத் தெரியும். சார், உண்மையாகச் சொல்லப் போனால் எந்த ஒரு இயந்திரம் குறைபாடே இல்லாமல் இருக்கிறது? பயன்படுத்த முடிந்த எல்லாவற்றையும் பயன்படுத்த வேண்டும். இந்த நேரத்தில் ஒன்றைக் கூறட்டுமா? நம்முடைய அந்த சென்டெரிங் ப்ரஸ் கொஞ்ச காலமாகவே சும்மாவே இருக்கு. நாம் அதை ஏதாவதொரு விதத்தில் பயன்படுத்த வேண்டும்.''
தயாரிப்பு நிர்வாகி தலையை ஆட்டினார். அதற்கு அர்த்தம் நான் நிறுத்த வேண்டும் என்பதுதான். நான் நிறுத்தினேன். அந்த ஆள் ஆரம்பித்தார். "பாருங்க நண்பரே... முதலில் நீங்கள் பயன்படுத்த முடியாத மனிதராக ஆகிவிட்டீர்கள் என்று ஏன் சந்தேகப்படுகிறீர்கள்? அந்த ப்ரஸ் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்பதையும் கூறுகிறீர்கள்? அந்தப் ப்ரஸ் நினைக்குமா தான் கம்பெனிக்குப் பயன்படாமல் இருக்கிறோம் என்று? தொழிலாளியாக இருந்தாலும் இயந்திரமாக இருந்தாலும் முதலில் தேவைப்படுவது முழுமையான அர்ப்பணமும் நம்பிக்கையும்தான். தரப்பட்டிருக்கும் கடமைகளை முழுமையாகச் செய்ய வேண்டும். அந்தப் ப்ரஸ்ஸைப் பற்றிய விவரம் நம்முடைய எல்லா ரிப்போர்ட்களிலும் போகுதுல்ல? திட்டம் வகுப்பவர்களுடைய வேலையை அவர்கள் செய்யட்டும். நம்முடைய வேலைகளை நாம் பார்ப்போம். ஒவ்வொருவனும் தானே சிந்திக்கக்கூடிய ஒரு படை எந்தச் சமயத்திலும் வெற்றி பெற முடியாது.''
கம்பெனி ஏதோ ஒரு போரில் ஈடுபட்டிருக்கிறது. யாருக்கு எதிராக என்பதையோ எதற்காக என்பதையோ கேட்கக்கூடாது. மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும், தான் வேறு எதுவும் செய்யக்கூடாது என்பதைப் பற்றியும் உள்ள சிந்தனைக்கும் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் ஒரு போரில் இடமே இல்லை. கூறியதைப் பின்பற்றி நடக்காத போர்வீரனைவிட சந்தேகப்படுபவன் ஆபத்தானவன். அவன் உள்ளுக்குள்ளேயே இருக்கும் எதிரி. உள்ளுக்குள் இருந்துகொண்டே தோல்வியடையும்படிச் செய்வான். நல்ல உடல்நலத்துடன் இருக்கும் மனிதர்களும், பாதிப்புகள் இல்லாத இயந்திரங்களும்தான் ஒரு போரில் எப்போதும் ஈடுபட்டிருப்பார்கள் என்று கூறுவதற்கில்லை. அதற்கு மாறாக கேடுகள் கொண்ட, தேய்மானம் உண்டான இயந்திரங்களும் மனிதர்களும்தான் பல நேரங்களில் திரும்பத் திரும்ப செயல்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலை உண்டாகிறது. ஒவ்வொன்றின் தனிப்பட்ட திறமைகளும் தேவைகளும் அல்ல- ஒட்டுமொத்தமான உழைப்பும் வெற்றியும்தான் முக்கியம். நான் தயாரிப்பு நிர்வாகியின் நாற்காலிக்கு மேலே சுவரில் வைக்கப்பட்டிருந்த சேர்மனின் புகைப்படத்தையே பார்த்தேன். அதற்குக் கீழே எழுதப்பட்டிருந்தது: 'பட்ங் ங்ய்ற்ண்ழ்ங் ஈர்ம்ல்ஹய்ஹ் ள்ற்ஹய்க்ள் ள்ர்ப்ண்க்ப்ஹ் க்ஷங்ட்ண்ய்க் ண்ற்ள் ஈட்ஹண்ழ்ம்ஹய்.' இந்தப் பெரிய கம்பெனியின் செயல்பாட்டால் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த அலுவலகத்திற்குள் நுழையும்போது நம்முடைய சிறிய சிறிய கவலைகளையும் சிறுசிறு சந்தேகங்களையும் பெரிதாக்கிக் காட்டுவதன் மூலமாகவும், உயர்த்திப் பிடிப்பதன் மூலமாகவும் நாம் நம்மையே எந்த அளவிற்குச் சிறிதாக்கிக் காட்டிக் கொள்கிறோம் என்பதுதான் தெரிகிறது.
முன்பொருமுறை மார்க்கெட்டில் இருந்து மாமிசம் வாங்கிக் கொண்டுவந்தபோது, மாமிசத்தை மிகவும் விரும்பக்கூடிய என் மகன் ஒருநாள் ஒரு முழு மாமிசத்தையும் வாங்கிக் கொண்டு வரவேண்டும் என்று என்னிடம் சொன்னான். மாமிசம் பூசணிக்காயோ பலாப்பழமோ போன்ற பொருள் இல்லை என்பதையும், நம்மைப் போன்ற உயிரின் துண்டாக்கப்பட்ட பகுதி என்பதையும், தீனி கொடுத்து வளர்த்து பெரிதாக ஆகும்போது மனிதர்கள் அதனை வெட்டித் துண்டுகளாக்கி விற்பார்கள் என்பதையும் நான் அவனுக்கு விளக்கிக் கூற ஆரம்பித்தேன். அதைக் கேட்டு வந்த அவனுடைய தாய் என்னைத் திட்டினாள்: "குழந்தைக்கு நீங்க என்ன சொல்லித் தர்றீங்க? பிள்ளைகளின் மனதை ஏன் கெடுக்குறீங்க? அவர்கள் இதை ஏன் தெரிஞ்சிக்கணும்?'' ஒரு பிஸ்கட்டைக் காட்டி அவள் அவனை இழுத்துக் கொண்டு சென்ற போது, அதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்குக் குற்ற உணர்வு உண்டானது. உண்மைதான். நான் அவற்றையெல்லாம் அவனிடம் கூறியிருக்கக்கூடாது. எனினும் என்ன காரணத்தாலோ, அன்று சாயங்காலம் அவள் என்னைத் தேடி வந்தபோது, அவளுடைய கூந்தலில் இருந்த ஷாம்பூவின் வாசனையை முகர்ந்து கொண்டே நான் மீண்டும் சொன்னேன்: "எத்தனையோ முயல்களின் கண்களில் இந்த திரவத்தை ஊற்றிப் பார்த்து, அவற்றின் கண்களில் இருக்கும் கார்னியாவின் பாதிப்பைக் கணக்கிட்டுப் பார்த்த பிறகுதான் இந்த ஷாம்பூ கம்பெனிக்காரர்கள் மார்க்கெட்டில் இதை இறக்குகிறார்கள் என்ற விஷயம் தெரியுமா? நான் எங்கேயோ வாசித்த விஷயம் இது.'' தொடர்ந்து இரவில் மீண்டும், "இங்கே பாரு... மனிதர்கள் குழந்தைகளை உண்டாக்காமலே உடலுறவில் ஈடுபட்டு சந்தோஷத்தை அனுபவிப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். அதே நேரத்தில் தங்களின் வளர்ப்பு மிருகங்களைக் கொண்டு, அவர்கள் மேலும் அதிகமான குட்டிகள் பிறக்கும்படிச் செய்கிறார்கள். சரியான ஊசிகளைப் போட்டு, உடலுறவு கொள்வதன் மூலம் கிடைக்கக் கூடிய சுகத்தைக்கூட அவற்றிடமிருந்து அபகரித்துக் கொண்டு...'' என்று சொன்னேன். அப்போதும் எனக்கு குற்றவுணர்வு உண்டானது. நான் அவளைக் கவலைப்படச் செய்திருக்கக் கூடாது. என்னைக் கவலைப்படச் செய்யாமல் இந்த தத்துவத்தை என்னுடைய தயாரிப்பு நிர்வாகி எனக்குக் கூறிப் புரிய வைத்தார். சமீப மாதங்களில் கம்பெனியின் உற்பத்தி எந்த அளவிற்கு அதிகமானது என்பதையும், எவ்வளவு தொழிலாளர்களுக்கு அது என்னவெல்லாம் நல்ல விஷயங்களைச் செய்தது என்பதையும், விளையாட்டுகளிலும் போட்டிகளிலும் கம்பெனியில் பணியாற்றும் எந்தெந்த தொழிலாளர்களுக்குப் பரிசு கிடைத்தது என்பதையும் ஒவ்வொரு மாதமும் "ஜெய் புல்லட்டின்" என்ற கம்பெனியின் பத்திரிகை எங்களிடம் கூறிக் கொண்டிருக்கிறது. அறுபத்தைந்தில் நாட்டின் கால்நடைகளின் எண்ணிக்கை முப்பத்து நான்கரை கோடியாக இருந்தது. எழுபத்தைந்து ஆனபோது அது முப்பத்து ஐந்தரை கோடியாக ஆகிவிட்டது என்று போன வார பத்திரிகையில் பார்த்தேன். நான் திருத்திக் கொள்கிறேன். நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன என்பதை திட்டமிடுபவர்கள் கூறுகிறார்கள்.