உத்தராயணம் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6366
அந்த ஒன்றின்மீது மட்டும் என்ன காரணத்தாலோ ஆர்வம் குறைவதே இல்லை. இப்போது... இந்த நிமிடத்தில்... எனக்குத் தோன்றுவது என்ன தெரியுமா? எப்படியாவது என்னுடைய மூளையை தலைக்குள் இருந்து பெயர்த்து எடுத்து, துண்டு துண்டாக அறுத்து எண்ணெய்யில் பொரித்து, கொஞ்சம் வெங்காயத்தையும் முந்திரிப் பழத்தையும் முந்திரிப் பருப்பையும் சேர்த்து, தக்காளி சாஸையும் நல்ல நீளத்தைக் கொண்டிருக்கும் பச்சை மிளகாயையும் சேர்த்துச் சாப்பிடணும்போல இருக்கு!''
நிராமயன் ஆயுதத்தை வைத்துக்கொண்டு, அடங்கிப் போவதைப்போலத் தோன்றியது. அவர் நோயாளியாக மாறிவிட்டிருப்பது தெரிந்தது. குடும்பமும் நண்பர்களும் அவர் இப்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகக் கூறுகிறார்கள். முன்பு பார்த்த எலும்புக் கூடாக இப்போது அவர் இல்லை. அப்போதைய வெறுப்பும் கோபமும் முள்ளம்பன்றியின் குணமும் இல்லை. அவரை மனிதர்கள் விரும்புகிறார்கள். அவர் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் கற்பித்து, மனைவி- பிள்ளைகளுடன் சுகமாக சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய எடை அதிகரித்திருக்கிறது. அவர் எவ்வளவு கிலோ வனஸ்பதியைப் பயன்படுத்துகிறார்? எழுபதில் எவ்வளவு...
சமீப வருடங்களில் நான் வனஸ்பதியின் பயன்பாட்டைக் குறைத்திருக்கிறேன். இனிப்பைக் குறைக்கவில்லையென்றாலும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறேன். மாமிச உணவுமீது எனக்கு ஆர்வம் இல்லாமல் போயிருக்கிறது. இடையில் அவ்வப்போது சிகரெட் புகைக்கிறேன். அதில் அந்த அளவிற்கு ஈடுபாடு இல்லை. என்னுடைய குணம் மாறுகிறது என்று அர்த்தம். குணம் மாறுவது என்பது ஒரு நோயா என்ன? என்னவோ? வயது அதிகமாகிக் கொண்டு போகிறது என்பதற்கான அடையாளங்கள் என்று எடுத்துக்கொண்டால் போதும். நான் வயதானவன் அல்ல. ஒரு குழந்தைக்குத் தந்தையாக ஆகிவிட்டேனே! இன்னும் ஒரு குழந்தையும்... டாக்டரிடம் அதைப் பற்றிக் கேட்க வேண்டும். ஆனால் டாக்டர்கள் இருக்கிறார்களே, அவர்கள் என்னென்னவோ கூறுகிறார்கள். ஒரு மாத்திரைகூட நான் உட்கொள்ள அவர்கள் தரவில்லை. பரிசோதனை செய்து மட்டும் பார்க்கிறார்கள். பரிசோதனை செய்வதும் சோதித்துப் பார்ப்பதும்... எக்ஸ்ரே எடுத்து, ரத்தத்தைச் சோதனை செய்து பார்த்தார்கள். என்னவோ ஊசி மூலம் செலுத்தி அதன் விளைவைத் தெரிந்து
கொண்டார்கள். கார்டியோக்ராம்... பயோப்ஸி... மீண்டும் ரத்தம்... மீண்டும் எக்ஸ்ரே... இன்று இரண்டாவது ஸ்பெஷலிஸ்ட்டின் ரிப்போர்ட்டும் வந்துவிடும்.
"இன்னைக்கு என்ன சார் தாமதமா வந்திருக்கீங்க?''- அலுவலகத்தில் அக்கவுண்டன்டாக இருக்கும் கார்பாபு. சரிதான். நான் சற்று தாமதமாக வந்து விட்டேன். காங்குலியின் வெற்றிலைப் பாக்குக் கடையைக் கடந்து, பார்வை தெரியாத மனிதன் பிச்சை எடுக்கும் விளக்கு மரத்திற்கு அருகில் நாங்கள் சந்திப்போம். சந்திப்பது அல்ல- நான் வரும் வழியில் வரும் அவன், என்னைவிட வேகமாக நடக்கும் காரணத்தால் பிச்சைக்காரனின் விளக்குக் கம்பத்திற்கு அருகில் என்னை வந்து அடைந்து விடுகிறான். என்னைத் தவிர இந்தப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஏறும் கம்பெனியின் இன்னொரு தொழிலாளி கார்பாபு. கார்பாபு கடிகாரத்தைப் பார்த்தான். முன்கூட்டியே வந்தாலும் இல்லாவிட்டாலும் அவனுக்கு சற்று வெற்றிலை போட நேரம் இருக்கிறது. நாங்கள் கடையை நோக்கி நடந்தோம்.
காங்குலி வெற்றிலை தயார் பண்ணுவதற்கு மத்தியில் அக்கவுண்டண்ட் பாபு என்னிடம், தன் பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு சேனிட்டரி இன்ஸ்பெக்டரின் மனைவி கல்லூரியில் படிக்கும் ஒரு இளைஞனுடன் ஓடிவிட்டாள் என்பதையும், அவர்களுக்கிடையே இருந்த உறவு விஷயம் தனக்கு முன்பே தெரியும் என்பதையும், தொடர்ந்து அந்த விஷயத்தில் தான் என்ன செய்ய முடியும் என்று நினைத்து பேசாமல் இருந்ததையும் சொன்னான். "சரிதான் சாஹிப். ஒருவனைத் திருமணம் செய்துவிட்டால், குஷ்டரோகியாக இருந்தாலும் பெண்கள் அவனுடன்தான் வாழ வேண்டும்''- வெற்றிலை தயார் பண்ணுவதற்கு மத்தியில் காங்குலிதான் அதற்குப் பதில் சொன்னான். "வேறொண்ணும் இல்லை சாஹிப். குடும்பத்தை யாரும் அலங்கோலப்படுத்திவிடக் கூடாது. அந்த சஞ்ஜய் ஸ்டோர்ஸின் உரிமையாளரான முகர்ஜி பாபுவின் வீட்டில் வேலை செய்யும் வயதான பெண்ணைப் பார்த்திருக்கீங்கள்ல? தாடையில் வெட்டு விழுந்திருப்பதைப் போன்ற ஒரு தழும்பைக் கொண்டிருக்கும் பெண்? இளம் வயதில் நாங்கள் ஒருவரையொருவர் விரும்பினோம். அப்போ அது நடக்கல. இன்னொரு வகையில் சொல்வதாக இருந்தால் அது நடக்காது என்று நானே நினைத்துக் கொண்டேன். திருமணம் ஆனபிறகு தெரியுமா? இங்கு வெற்றிலை வாங்குவதற்குக்கூட நான் அவளை வரவிடமாட்டேன். இப்போ... வயசாயிடுச்சு. ஆணும் பெண்ணும் சமமா ஆயாச்சு...''
வெற்றிலையை மென்றுகொண்டு நடப்பதற்கு மத்தியில் காங்குலியால் உற்சாகப்படுத்தப்பட்ட அக்கவுண்டண்ட் பாபு பேசிக் கொண்டிருந்தான். "உண்மையைச் சொல்லத்தான் வேண்டும். மனிதனுக்கு முதலில் தேவையானது பணிவுதான். முதலில் அடக்கம். அதற்குப் பிறகுதான் மற்ற அனைத்தும். உங்களுக்கு இந்த பாடாவில் வசிக்கும் மரேஸ் முகர்ஜி என்ற ஒரு ஆளைத் தெரியுமா? அவருக்கு ஒரு மகன் இருந்தான். குழந்தையாக இருக்கும்போது அவனைப் பார்க்குறதுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா? நாங்கள் அவனை நாடகத்தில் நடிக்க வைப்போம். ஒருமுறை சொல்லித் தந்தால் கிளி சொல்லுவதைப்போல அதே மாதிரி சொல்லுவான். நரசிம்ம அவதாரத்தில் பிரகலாதனாக அவன் வருவதைக் கட்டாயம் பார்க்க வேண்டும். "நாராயணாய நம... நாராயணாய நம" என்று கூறும்போது, நாடகம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் கைகளைக் குவித்து வணங்குவார்கள். வளர்ந்தபோது ஒரு வார்த்தை சொன்னால் கேட்காதவனாக அவன் ஆகிவிட்டான். பிறகு கழுத்து அறுப்பதும் புரட்சியும்... அவனுடைய நடவடிக்கைகள் எப்படி எப்படியோ ஆயிடுச்சு! சமீபத்தில் ஒருநாள் கையில் இருந்த ஒரு குண்டு வெடித்து அவன் இறந்து போயிட்டான்.''
"அதில் ஆச்சரியப்பட என்ன இருக்கு கார்பாபு?'' - நான் தமாஷாகச் சொன்னேன்: "எல்லாரும் ஹிரண்யாய நம என்று சொல்லிக் கொண்டிருக்கும் காலத்தில், நாராயணாய நம என்று சொல்லும்படிதானே முதல்ல இருந்து நீங்க அவனுக்குக் கற்பித்துத் தந்தீங்க?''
பேசுவதில் அதிக விருப்பம் கொண்டவனாக இருந்தாலும் நகைச்சுவையைப் புரிந்துகொள்ள அக்கவுண்டண்ட் பாபுவால் முடியவில்லை. தமாஷ் விஷயத்தில் மட்டுமல்ல- வெறுமனே பதில் சொன்னாலும் மறுத்துக் கூறுகிறோம் என்றே அவன் புரிந்து கொண்டிருப்பான். அதனால் நான் பொதுவாக வெறுமனே சிரித்துக்கொண்டு நடந்து விடுவேன். பிச்சைக்காரனின் விளக்கு மரத்திலிருந்து பேருந்து வரை இருக்கும் தூரம். ஆனால் இன்று என்ன காரணத்தாலோ, எனக்கு பதில் சொல்ல வேண்டும் என்று தோன்றியது.
"சரிதான்... இது நாராயணாய நம என்று சொல்வதைப் போன்றதா?'' - அவன் எதிர்த்தான். "உங்களைத்தான்... வேறு யாரையும் அல்ல... இதற்காகக் குறை சொல்ல வேண்டியது.''