உத்தராயணம் - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6366
தயாரிப்பு நிர்வாகிக்கு நன்றி கூறிவிட்டு நான் எழுந்தேன். தொப்பியை எடுத்துத் தலையில் வைத்தேன். என்னுடைய நோயைப் பற்றி ஏதாவது அதிகமாகத் தெரிய நேரிட்டால் நான் நாளைக் காலையில் கூறுகிறேன்.
உயரத்தில் நிர்வாக அலுவலகம் இருக்கிறது. ஒரு சிறிய குன்று என்றே கூறலாம். அதற்கு மேலே நான்கு அடுக்குகளுடன் இரைச்சலுடன் அது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதைத் தவிர அங்கு நீர் இருக்கும் ஓவர் ஹெட் டேங்க் இருக்கிறது. கறுப்புநிறப் பாதைகளால் பெரிய சதுர அளவில் அமைக்கப்பட்ட பிரிவுகளின் பலவகைப்பட்ட இயந்திரங்கள் குன்றுக்குக் கீழே முழுமையாகப் பரந்து கிடக்கின்றன. அடுப்புகளும் குழாய்களும் கோணிகளும் வெளியே தள்ளி நின்று கொண்டிருக்கும் கட்டிடங்களும் ஷெட்களும்... ஒரு புகைவண்டிப் பாதை அவற்றுக்கு நடுவில் நுழைந்து பல பிரிவுகளாகப் பிரிந்து விரிகிறது.
பிரிந்து செல்லும் தண்டவாளங்களில் இணைக்கப்பட்டு விட்டதைப்போல ஒவ்வொரு பெட்டிகளும் ஆங்காங்கே தனித்தனியாக நின்று கொண்டிருக்கின்றன- அனாதையாக வெயிலை ஏற்றுக் கொண்டு. அந்தப் பக்கம் ஒரு புதிய கட்டிடத்தின் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. செங்கற்களைத் தலையில் வைத்துக் கொண்டு வேலை செய்யும் பெண்கள் படிகளில் ஏறிக் கொண்டிருக்கிறார்கள். ஒருத்தியின் தலையிலிருந்து செங்கற்கள் கீழே விழுகின்றன. யாருக்கோ காயம் உண்டாகியிருக்கிறது என்பது தெரிகிறது. ஆட்கள் சுற்றிலும் கூடுகிறார்கள். தூரத்தில் இருந்தவாறு அவ்வளவுதான் பார்க்க முடிகிறது. சத்தம் எதுவும் கேட்கவில்லை. ஒரு நிமிடம் நான் கண்களைக் கூர்மைப்படுத்திக் கொண்டு அதைப் பார்த்துக் கொண்டு நின்றேன். அலுவலகத்திற்குப் போய் விவரத்தைச் சொன்னால் என்ன என்று சிந்தித்தேன். வேண்டாம்... அது என்னுடைய வேலை அல்ல. தயாரிப்பு நிர்வாகி சொன்ன வார்த்தைகளை நான் ஞாபகப்படுத்திப் பார்த்தேன். அதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் யாராவது இருப்பார்கள். பிறகு... குறைப்பட்டுக் கொள்வதற்கு இதில் ஒன்றுமில்லை. புதிய வேலைகள் நடக்கின்ற இடத்தில் விபத்துக்கள் சாதாரணமாக நடக்கக்கூடியது தான். சில நாட்களுக்கு முன்னால் ஏதோ ஒரு இரும்புச் சாமானை எடுத்துத் தூக்கிக் கொண்டிருந்த க்ரேனுக்குக் கீழே சிக்கி ஒரு எரெக்ஷன் ஃபிட்டர் இறந்துவிட்டான். வேலை செய்பவன் வேலையால் கொல்லப்படுகிறான். பிரம்மாண்டமான பிரமிட்களின் வேலை நடந்தபோது, கற்களுக்கு அடியில் சிக்கி நூற்றுக்கணக்கான அடிமைகள் மரணத்தைத் தழுவியிருக்கிறார்கள். அவர்களுடைய நினைவுச் சின்னங்கள்தான் பிரமிட்கள். அவர்களுடைய தியாகத்தின்- தியாகத்தின் அல்ல- மரணத்தின் பிரமிட்கள் எகிப்திய நாகரீகத்தின் காலப் பெட்டகங்கள் அல்ல, பிணங்கள் இருக்கும் கல்லறைகள் என்று பேராசிரியர் ஒரு சொற்பொழிவில் கூறினார். நாகரீகத்தின் பாதையில் அடைந்த திறமையை மக்களின் நலனுக்காகப் பயன்படுத்துவதற்கு பதிலாக பிரமிட்கள் உண்டாக்கத் திருப்பி விட்டபோது, எகிப்திய நாகரீகத்தின் உட்பகுதி கரியானது. இறப்பதற்கு முன்பே ஃபரவோக்கள் பிணங்களை அடக்கம் செய்யும் கல்லறைகளைக் கட்டியவர்களாக இருக்கலாம். ஆனால் அவை கட்டப்பட்டபோதே அவர்களுடைய நாகரீகம் இறந்து விட்டிருந்தது. இறந்த பிறகும் நீண்டகாலம் அடக்கம் செய்யப்படாமல் எகிப்திய நாகரீகம் கிடந்தது. சந்தையில் இறந்து விழுந்த மனிதனின் பிணத்தைப்போல அல்ல. நடுங்க வைக்கும் பொருளாதார நிலைமை அவனுடைய மனைவி, பிள்ளைகள் ஆகியோரின் பாச உணர்வுகளில்கூட தளர்ச்சியை உண்டாக்கிக் கொண்டு அந்த இடத்தில் கிடந்தது. எகிப்திய நாகரீகத்தை அடக்கம் செய்ய வாரிசுகள் இல்லாமல் இருந்தார்கள். செங்கல் விழுந்து காயம்பட்ட மனிதன் இறந்தால் அவனை கம்பெனி அடக்கம் செய்யும். கம்பெனி, தொழிலாளர்களுக்குத் தந்தை மட்டுமல்ல- மகனும் மருகனும்கூடத் தான். இறுதிச் சடங்கு செய்யும் விஷயங்களில் கம்பெனிக்கு பெரிய அளவில் ஆர்வம் இருக்கிறது. இறந்தவர்களை அடக்கம் செய்வது மட்டுமல்ல- வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு அது கலை நிகழ்ச்சி களையும் நாடகங்களையும் ஏற்பாடு செய்து கொடுக்கிறது. அவற்றைப் பற்றிய விளக்கங்களும் படங்களும் "ஜெய் புல்லட்டி"னில் பிரசுரமாகி வருகின்றன.
உதாரணத்திற்கு- இந்தத் தோட்டங்கள். வேறு எந்தக் கம்பெனி கரியும் புகையும் கழிவுப் பொருட்களும் இருக்கும் அதன் தொழிற்சாலை காம்பவுண்டிற்குள் இதைப் போன்ற ஒரு தோட்டத்தையும், இவ்வளவு மரங்களையும் வளர்த்துக் கொண்டிருக்கும்? ஓவர் ஹெட் டேங்கிலிருந்து கீழ்நோக்கி வரும் சரிவு முழுவதும் ஒவ்வொரு படியிலும் புல் தட்டுகளும் மலர் படுக்கைகளும்தான். தோட்டத்தில் ஆட்கள் வேலை செய்கிறார்கள். வயதான தோட்ட வேலை செய்யும் மனிதன் தன்னுடைய மடித்துக் கட்டப்பட்ட வேட்டியுடனும் பனியனுடனும் எழுந்து நின்று எனக்கு வணக்கம் சொன்னான். அவன் இப்போது சூப்பர்வைசராக ஆகியிருக்கிறான். எனினும் வேலையில் தொழிலாளிதான். மற்ற வேலை செய்யும் ஆட்களுடன் சேர்ந்து வேலை செய்து கொண்டிருப்பான். எதிரில் இருக்கும் ஒரு பகுதியில் நிறைந்து நின்றிருக்கும் வெள்ளை நிற மலர்களைச் சுட்டிக் காட்டி நான் கேட்டேன்: "அந்த மலரின் பெயர் என்ன காக்காஜி? அந்த வெள்ளை நிற மலர்...'' அந்த வழியாகப் போகும்போதெல்லாம் நான் ஏதாவது பூவின் அல்லது செடியின் பெயரையோ அவை வளர்க்கப்படும் விதத்தையோ கேட்பேன். அந்த ஆள் எல்லாவற்றையும் விளக்கிக் கூறுவான். பிரிந்து போகும்போது நான் அதை மறந்து விடுவேன். என்னால் அந்தப் பெயர்களை ஞாபகத்தில் வைத்திருக்க முடியாது. எனினும் மலர்களைப் பார்க்கும்போது நான் மீண்டும் கேட்கத்தான் செய்வேன்.
"அது டைமோர் ஃபித்திக்கா ஆச்சே! நல்ல பிரகாசமான வெள்ளை நிறம். பனியைப்போல இருக்கும்''- அந்த ஆள் சொன்னான்: "பிறகு... இது ஸினியாவின் ஒரு ஹைப்ரிட். சட்டன் கம்பெனியின் ஸ்பெஷல். என் கையில் கொஞ்சம் விதை இருக்கு. தரட்டுமா?''
"இந்த சீசனல் செடிகளுக்கு ஒரு கெட்ட குணம் இருக்கு காக்காஜி'' - நான் சொன்னேன்: "பூக்குறப்போ அவை திருவிழாதான். ஆனால் காயும்போது அவை வாசலில் ஒரு சுடுகாடாக மாறி விடுகின்றன.''
அந்த ஆள் உரத்த குரலில் சிரித்தான். "அப்படிச் சொல்ல முடியாது பாபு. அவை மரணம் அடைவது இல்லை. சுடுகாடு உண்டாக்குவதும் இல்லை. காலநிலை பொருத்தமாக இல்லாதபோது அவை அதிக பாதுகாப்பு உள்ள வித்தின் ஓட்டிற்குள் உறங்கப் போய்விடுகின்றன என்பதே சரியானது. பிறகு... சூழ்நிலைகள் மாறும்போது, திரும்பவும் வெளியே வந்து படர்ந்து பந்தலாக நிற்கின்றன. பெரனியல் தாவரங்கள் அந்த மாதிரி உறங்கப் போவதற்கு பதிலாக, கால நிலைக்கு ஏற்றபடி வடிவத்தை மாற்றிக் கொண்டு நிற்கின்றன. அதுதான் அவற்றின் தாளம். தாளத்தில் வித்தியாசம். அவ்வளவுதான் பாபு.''
"அப்படியென்றால்... காக்காஜி நம்முடைய தாளம் என்ன?''- நான் கொஞ்சம் வழியைத் தாண்டிச் சென்று கேட்டேன்.
அந்த ஆள் மீண்டும் சிரித்தான்.