உத்தராயணம் - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6367
அவனும் தன்னுடைய இடத்தை விட்டுப் பாதையின் ஓரம் வரை வந்தான். ஒரு ரகசியத்தைப் பேசுவதைப்போல நாங்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக நின்றுகொண்டு பேசினோம். "மனிதனின் தாளம் காலநிலையோடு அல்ல பாபு. காலத்துடன். காலநிலையை அவன் இறக்காமலும் வடிவம் மாறாமலும் எதிர்த்து நிற்கக் கற்றுக் கொண்டான்... பிறகு... மனிதன் தானே ஒரு காலநிலையை உண்டாக்கும்போது... அப்போது அதனை எதிர்த்து அவனால் நிற்க முடியாமல் போகிறது. தான் உண்டாக்கிய காலநிலைக்கு அவன் கீழ்ப்படிகிறான். காலத்துடன் உள்ள தாளத்தை அவன் இழக்கிறான்.''
"அது என்ன காக்காஜி?''- நான் புரியாமல் கேட்டேன்.
அவன் சிரிக்க மட்டும் செய்தான்.
"நீங்க என்னவெல்லாமோ சொன்னீங்க''- நான் சொன்னேன்: "சரி காக்காஜி. நீங்கள் எனக்கு நல்ல வாசனை கொண்ட மலர்களைத் தரும் ஒரு செடியைத் தர முடியுமா? இரவு நேரத்தில் மணத்தைப் பரப்பக் கூடியது?''
என் வீட்டின் படுக்கையறை இருக்கும் பகுதிக்கு அடுத்த கட்டிடத்தில் ஒரு சிறிய உணவு விடுதி இருக்கிறது. அவர்கள் எப்போதும் எச்சில் இலைகளையும் மற்ற அழுக்குப் பொருட்களையும் வெளியே கொண்டுவந்து போடுகிறார்கள். நகராட்சியின் வண்டி காலை நேரத்தில்தான் வரும். அதனால் தினமும் மாலை நேரம் வந்துவிட்டால் ஒவ்வொரு நாளின் அழுக்கு முழுவதும் மலை என குவிய, இரவு முழுவதும் நாங்கள் அதன் நாற்றத்தை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. பலமுறை நான் கடைக்காரனிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன். "பாருங்க சாஹிப்... முன்பு எங்கள் வீட்டில் பால் தரும் பால்காரன் இருந்தான்''- அவன் ஒரு கதையைக் கூற ஆரம்பிப்பான். "அவனுக்கு கறுப்பு நிறத்தைக் கொண்ட மனிதர்கள்மீது மிகுந்த வெறுப்பு. கறுப்பு மனிதர்கள் தாழ்ந்த ஜாதிக்காரர்கள் என்ற எண்ணம் அவனுடைய மனதில் இருந்தது என்று நினைக்கிறேன். நான் திருமணம் செய்த போது, என்னுடைய மனைவி ஒரு கறுத்த நிறத்தைக் கொண்டவளாக இருந்தாள். கறுப்பு நிறத்தில் இருந்தாலும் நல்ல அழகான பெண்ணாக அவள் இருந்தாள். கேட்டீங்களா? ஆனால் என்னுடைய பால்காரனுக்கு இதெல்லாம் புரியுமா? அவன் என்னிடம் அவளை விட்டெறியும்படி வேண்டிக் கொண்டே இருந்தான். பால் வேண்டுமென்றால் பெண்ணைக் கழற்றி விடணும். நான் அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டே இருந்தேன். சில நாட்கள் சென்றதும் அவள் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். அதுவும் கறுப்பு நிறத்திலேயே இருந்தது. பால்காரன் அப்போது ஒரு இறுதியான முடிவைத் தந்தான். பால் வேண்டுமென்றால் இரண்டு வாரங்களுக்குள் குழந்தையையும் தாயையும் ஆற்றில் வீசி எறிய வேண்டும் என்று அவன் சொன்னான். போதாதா?'' குளிர்காலத்தில் சாளரங்கள் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். பால் போன்ற நிலவு வெளிச்சம் உள்ள இரவு வேளைகள்கூட எங்களுக்குக் கறுப்பாகவே தெரிகிறது. இப்போது... வெப்பம் ஆரம்பமானவுடன் சாளரங்களைத் திறக்க வேண்டியதிருக்கிறது.
"இருக்கே! லேடி ஆஃப் தி நைட் என்ற ஒரு செடி இருக்கு. மெக்ஸிக்கன் ஜாஸ்மின்''- அந்த மனிதன் சொன்னான்: "வேறு செடிகளும் இருக்கு. நான் கட்டிங்குகள் தயார் பண்ணி வைக்கிறேன்.''
நான் அவனுக்கு நன்றி கூறிவிட்டு நடந்தேன்.
அப்பால் இருக்கும் கெமிக்கல் கம்பெனியின் ப்ளான்டில் இருந்து வரும் அழுக்கு நீருக்கான பெரிய குழாய்களைப் பதிய வைப்பதற்காக நீளமாக குழி வெட்டி வைத்திருக்கிறார்கள். என்னுடைய பிரிவுக்குச் செல்லும் பாதை. எங்களுடைய கம்பெனியின் ஒரு சப்ஸிடியரி அது. அதனால் இந்த வழியாக அப்பால் இருக்கும் பொது வாய்க்காலுக்கு அவர்களுடைய அழுக்கு நீரைக் கொண்டு செல்லும் பைப்புகளை இடுவதற்கான அனுமதி அவர்களுக்குக் கிடைத்தது. அவர்களுடைய சிவில் எஞ்ஜினியர் ஒருநாள் இங்கே வந்து பேசி தேநீர் அருந்திவிட்டு தொலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டுச் சென்றார். டிவிஷனுக்குச் சென்று அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்க வேண்டும்- எப்போது இந்தப் பணி முடிவடைகிறது என்று. வழி சரியாகாமல் புதிதாக வந்திருக்கும் டைஸிங்கில் மெஷினை உள்ளே கொண்டு வந்து வைக்க க்ரேனைக் கொண்டுவர முடியாது.
நான் முதல் யூனிட்டில் இருக்கும் என்னுடைய அலுவலக அறைக்குள் நுழைந்து தொப்பியைக் கழற்றி வளையத்தில் தொங்க விட்டு, துவாலையை எடுத்துத் தலையைத் துவட்டினேன். கண்ணாடிக் குவளையில் நீர் எடுத்துக் குடித்தேன். மின் விசிறியைப் போட்டேன். உண்மையாகவே வெயிலுக்கு வெப்பம் அதிகரித்திருந்தது. கோடையாக மாறியிருக்கிறது.
மேஜைமீது இருந்த தாள்களில் நான் வேகமாகக் கண்களை ஓட்டினேன். பழைய ஆர்டர்கள்தான் அதிகமாக இருந்தன. பல விதப்பட்ட காஸ்ட்டிங்குகளைப் பற்றிய விளக்கங்களும், பார்ட் எண்ணும், தயார் பண்ண வேண்டிய எண்ணிக்கையும், கொடுக்க வேண்டிய தேதியும். புதியவையும் இருந்தன. வரைபடங்கள், ஸ்பெஸிஃபிகேஷன்கள்... தாள்கள்மீது மேஜைமேல் இருந்த ஒரு மைக்ரோ மீட்டரை எடுத்து பேப்பர் வெயிட்டாக வைத்துவிட்டு, ஒன்றிரண்டு இன்டண்டுகளில் கையெழுத்துப் போட்டேன். தொடர்ந்து நான் ஷாப்பை நோக்கி நடந்தேன்.
ஷாப்பில் இயந்திரங்கள் அனைத்தும் செயல்பட்டுக் கொண்டிருந்தன. பணியாட்கள் அனைவரும் அவரவர்களின் இடத்தில் இருந்தார்கள். பேட்டர்ன் மேக்கர், பேட்டர்ன் மேக்கருக்கான பணியில். டைஸிங்கர், டைஸிங்கருக்கான வேலையில். கார்பெண்டரும் மெஷினிஸ்ட்டும் டர்னரும் மில்லரும்... தொழிலாளிகள், சார்ஜ்மேன், ஃபோர்மேன், எஞ்ஜினியர்... தேனீக்களின் கூட்டிலிருந்து வருவதைப்போல, நிரந்தரமாகக் கூடவோ குறையவோ செய்யாமல் ஒரே தாளத்தில் உள்ள ஒரு சத்தம்... ஷாப்பிற்குள் நடக்கும்போதெல்லாம் அதற்குள் மனிதர்களின் மற்றும் இயந்திரங்களின் அசைவுகளும் சத்தங்களும் ஆச்சரியப்படும்படியான ஒரு தாளத்தில்... ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவிற்கு ஒன்றாகச் சேர்ந்து லயத்தில் ஈடுபட்டு, ஒரு ஆர்க்கெஸ்ட்ராவாக வடிவம் எடுத்திருப்பதைப்போல எனக்குத் தோன்றும். இங்கு ஒவ்வொருவனும் ஒரு ஸ்பெஷலிஸ்ட் தான். ஒருவனும் இன்னொருத்தனின் வேலையைச் செய்ய முடியாது. தன்னுடைய வேலையைப் பற்றி யாருக்கும் சந்தேகமும் இல்லை. ஆம்லெட்டா, ஃப்ரையா- இவற்றில் எதை உண்டாக்க வேண்டும் என்று யாரும் கேட்க மாட்டார்கள். கெட்டுப்போன உணவுப் பொருட்களின் கெட்ட நாற்றத்தைப் பற்றி யாரும் குறை கூற மாட்டார்கள். கல்லூரி மாணவர்களுடன் ஓடிப் போகும் மனைவிகளுக்கோ, வெடிகுண்டை வீசும் அமரேஷ் முகர்ஜியின் பிள்ளைகளுக்கோ இங்கு இடமில்லை. எல்லாரும் அந்த ஸிம்ஃபனியில் தாங்களே இணைந்து விடுகின்றனர்.
ஒவ்வொரு நாளும் காலையில் வந்தவுடன் நான் எல்லா யூனிட்களையும் ஒரு தடவை சுற்றிப் பார்ப்பேன். இயந்திரங்களின் செயல்பாடுகளைப் பற்றி விசாரிப்பேன். மனிதர்களின் செயல்பாட்டைக் கூர்ந்து பார்ப்பேன். தயார் பண்ணப்பட வேண்டியவற்றைப் பற்றி கட்டளைகள் பிறப்பிப்பேன்.