உத்தராயணம் - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6367
சூப்பர்வைசர்... ப்ளாஸ்டிக் மோல்டிங் ப்ரஸ் பண்ணி விடும் பல குழாய்களைக் கொண்ட ஒரு கூஜாவைப் போல இருக்கும் ஒரு மோல்டிங்கைப் பற்றித்தான் அவர் சொன்னார். க்ரைண்டரில் ஒரு ஆள் அவற்றின் ஜாய்ன்ட் லைனை இல்லாமல் செய்து கொண்டிருந்தான். எப்படி உண்டாக்கப்பட்டது என்ற விஷயம் அதைப் பயன்படுத்தும் மனிதனுக்குத் தெரியவே தெரியாது. எதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்பது அதை உண்டாக்கிய மனிதனுக்கும் தெரியாது என்று வைத்துக் கொள்ளுங்கள். இருவரும் ஒரே நிலையில்தான் இருக்கிறார்கள். உண்டாக்குபவனும் உபயோகிப்பவனும் எதற்காக இதை ப்ளாஸ்டிக்கில் காஸ்ட் செய்யச் சொன்னார்கள்? சூப்பர்வைஸர் அப்படிக் கேட்பாரோ என்று நான் பயந்தேன். நான் அவரைக் கோபித்தேன்: "எதற்கு திங்கள் கிழமை? இன்னைக்கு ஏன் தயார் ஆகவில்லை? எதற்கு செவ்வாய்க் கிழமையாக இருக்கக் கூடாது?''
சூப்பர்வைஸர் என்னையே திகைப்புடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்: "ஆனால் சார்... ப்ரோகிராம்...''
"ப்ரோகிராம்!''- எதற்காக அது ஒருமுறை தவறி நடக்கக்கூடாது என்ற எண்ணத்துடன் நான் சொன்னேன். நான் நடுங்கிக் கொண்டிருந்தேன். என்ன காரணத்திற்காகவோ- அவரும். ப்ரோகிராமை விட்டு இந்தப் பக்கமோ அந்தப் பக்கமோ நகர அவருக்கு அதிகாரம் இல்லை என்ற விஷயத்தை அவருக்கு ப்ரோகிராம் உண்டாக்கும். நான் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவனுடைய மெஷினுக்கு முன்னால் ஒரு ப்ரோகிராம் சார்ட்டை அவரும் தயார் பண்ணிக் கொடுத்திருக்கிறார். மோல்ட் செய்பவர்களுக்கும் மெஷின் செய்பவர்களுக்கும் மட்டுமல்ல- காஸ்ட்டிங்குகளின் பலத்தையும் வடிவத்தையும் அளவையும் சோதித்துப் பார்ப்பவர்களுக்கும்கூட. எல்லாரும் சுறுசுறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கைகள் இயந்திரங்களோடு சேர்ந்து ஓடிச் சேர்வதற்குப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. அவர்கள் ஃபீட் செய்கிறார்கள். டெலிவரியைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஸ்விட்ச்களை எட்டிப் பிடிக்கிறார்கள்.
லிவர்களைப் பிடித்துத் தொங்குகிறார்கள்- அவரைக் கொடி கொம்புகளில் இருப்பதைப்போல.
ஓடத் தொடங்கும் ட்ராமின் வெளிப்பகுதியைத் தள்ளி, தான்தான் அதை ஓடச் செய்தது என்றும், நிற்க ஆரம்பித்ததைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு, தான்தான் அதை நிறுத்தியது என்றும் பெருமையுடன் கூறிக் கொள்ளும் ஒரு ஊர்சுற்றிப் பையனை நான் ட்ராம் ஸ்டேஷனில் பார்த்திருக்கிறேன். ஒரு பைத்தியக்காரனாக இருந்தான். சரியான சத்துணவு இல்லாததால் மூளை வளராமல் போயிருக்க வேண்டும். பாவம்... ஒருநாள் ட்ராமிற்குக் கீழே சிக்கி செத்துப் போனான். உரிமையாளர்கள் இல்லாத பிணங்களைப் புதைக்கும் நகராட்சியின் குழுவினர் தவிர, போலீஸின் உதவியும் தேவைப்பட்டதால் அந்தப் பிணம் சற்று நேரம் அங்கேயே கிடந்தது. வாய் பிளந்து கையை விரித்துக் கொண்டு மூக்கில் இருந்தும் வாயில் இருந்தும் வழிந்த ரத்தம் காய்ந்து... ஒரு லைன் நின்று விட்டதால் ட்ராம்கள் அனைத்தும் தாமதமாயின. எங்களுக்கும் சிறிது நேரம் காத்து நிற்க வேண்டிய சூழ்நிலை உண்டானது. நாங்கள் காத்து நின்று கொண்டிருக்க, ஒரு ஃபோட்டோகிராபர் வந்து இறந்து கிடந்த சிறுவனின் படத்தை எடுத்தான். படம் சரியாகாமல் இருக்கவே அவன் பலவிதப்பட்ட மூலைகளில் நின்று ஃபோக்கஸ் செய்வதையும் தன்னைத்தானே திட்டிக் கொள்வதையும் நாங்கள் பார்த்தோம். பிணத்திற்கும், பிணமாக ஆவதற்கு முன்னால் இருந்த சிறுவனுக்கும் உரிமையாளரோ, உறவினர்களோ இல்லாமலிருந்ததால், ட்ராம்களை எரிக்க யாரும் வரமாட்டார்கள் என்ற உறுதி இருந்ததால், நாங்கள் எல்லாரும் அமைதியுடன் காத்து நின்றிருந்தோம். மறுநாள் வெளிவந்த பத்திரிகையில், மூலைகளில் இருந்து எடுத்த படங்கள் எதுவும் சரியாக இல்லாமல் போனதால் இருக்க வேண்டும். அந்த ஃபோட்டோகிராபர் நேராக நின்று எடுத்த படம் மட்டுமே பிரசுரமாகியிருந்தது.
விபத்து மூலம்தான் மரணம் உண்டானது என்று போலீஸ் கூறுகிறது என்றும்; இல்லை- பட்டினியின் காரணமாக அவன் தற்கொலை செய்துகொண்டான் என்று சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் கூறுகிறார் என்றும் ஒரு ரிப்போர்ட்டும் பிரசுரமாகி இருந்தது. அன்று பம்பாயில் இருக்கும் ஹோட்டலின் அல்ல- என்னுடைய மகன் வழக்கமாக சாப்பிடும், வளரும் குழந்தைகளுக்குப் பசியை உண்டாக்கும் டானிக் விளம்பரம் வந்திருந்தது. "இன்க்ரிமென் சாப்பிடுங்கள்! அது அதிக உணவை, அதிக வளர்ச்சியாக மாற்றுகிறது. இன்க்ரிமென் சங்கத்தில் சேருங்கள்! வளர்வதற்கான பசியை உண்டாக்குங்கள்." கூடைப் பந்தை எட்டிப் பிடிக்க முயலும் குழந்தைகளின் மற்றும் தலை நீளமாகக் கொண்ட ஒரு ஒட்டகச் சிவிங்கியின் படமும்...
நான் அலுவலக அறையில் இருந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்து ஒரு தேநீரை வரவழைத்தேன். தேநீர் ஒரு டானிக் அல்ல. இல்லாவிட்டால்... அதுதானா? சரி... டானிக் என்றால் என்ன? அதிக உணவை அதிக வளர்ச்சியாக ஆக்கும்- வளர்வதற்கான பசியை உண்டாக்கும்- கூடைப் பந்தை எட்டிப் பிடிக்க உதவும் பொருளா? ஆனால் இன்க்ரிமென்னின் தயாரிப்பாளர்கள் உணவுப் பொருட்களைத் தயாரிப்பவர்களின் ஏஜெண்டுகள் அல்ல. இன்க்ரி மென்னுக்கு மட்டும்தான். அவர்களுக்குத் தங்களுடைய க்ராஃபில் மட்டுமே கண். அறுபதில் தேயிலை உற்பத்தி மூன்று லட்சம் டன்னாக இருந்தது. அறுபத்தைந்திலும் எழுபத்தைந்திலும் எவ்வளவு ஆனது என்று நேற்று கேட்டேன். நேற்றைக்கு முந்தின நாள் என்னவாக இருந்தது? ஒருவேளை வெட்ரினரி பட்டதாரிகளின் எண்ணிக்கை...
தேநீர் இறங்குவதற்கு நடுவில் நான் நேற்று இறுதி ஷிஃப்டில் பணியாற்றும் ஷிஃப்ட் எஞ்ஜினியர் மேஜைமீது வைத்துவிட்டுப் போயிருந்த ரிப்போர்ட்டை எடுத்தேன். என்னவெல்லாம் மெஷின்கள் செயல்பட்டன, எவ்வளவு பணியாட்கள் வேலை செய்தார்கள், என்னவெல்லாம் ஆர்டர்கள் தயாராயின, எந்த நிலையில் வேலை நின்றது... இப்போது சனிக்கிழமை முதல் ஷிஃப்ட் நடக்கிறது. இனியும் ஒரு ஷிஃப்ட் இருக்கிறது. அது முடிந்தால் இந்த வாரம் முடிவடைகிறது. திங்கட்கிழமை காலையில் வீக்லி புரொடக்ஷன் ரிப்போர்ட் தயாராகும். அதற்கு முன்னால் அடுத்த வாரத்திற்கான ப்ரோகிராமைத் தயார் பண்ண வேண்டும். முதலில் முழு வாரத்திற்கான டார்கெட். பிறகு ஒவ்வொரு நாளுக்கும் உரியது. முதலில் செய்ய வேண்டியது. பிறகு செய்ததன் ரிப்போர்ட். சுவரில் க்ராஃப் இருக்கிறது. அதில் இரண்டையும் குறிக்க வேண்டும். மேலே செல்லும் சிவப்புக் கோடு, அதில் பிரிந்து செல்லும் நீலநிறக் கோடு. ப்ரோகிராமும் ப்ரொடக்ஷனும். எனக்குப் பிடித்துத் தொங்குவதற்கான கொம்புகள். நான் ஏறி ஏறிச் செல்கிறேன். ஏற ஏற எனக்கு அதற்கடுத்தும் கொம்புகள் கிடைக்கின்றன. வனஸ்பதி தயாரிப்பாளர்களுக்கு, தேயிலைத் தோட்டக்காரர்களுக்கு, வெட்ரினரி பட்டதாரிகளுக்கு, கள்ளக் கடத்தல்காரர்களைப் பிடிப்பவர்களுக்கு, பசி உண்டாக்குபவர்களுக்கு, பசியால் இறப்பவர்களுக்கு, தலைப்பகுதியில் இருப்பவர்களுக்கு, தலையில் செங்கற்கள் விழுபவர்களுக்கு. நான், நாங்கள், நாம் வளர்கிறோம். நமக்கு வளர்ச்சிதான் இருக்கிறது.