உத்தராயணம் - Page 16
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6368
எனக்குப் புகார்கள் இல்லை. எனக்கு வசிப்பதற்கு, கெட்டுப்போன உணவுப் பொருட்களை வெளியே எறியும் உணவுச் சாலைக்கு அருகிலாக இருந்தாலும், நல்ல ஒரு வீடு இருக்கிறது. போன வருடம் முன்பு வசித்த சிறிய வீடு இருந்த இடத்தில் கம்பெனி எனக்கு இந்தப் பெரிய வீட்டைத் தந்தது. அடுத்த வருடம் இதைவிட நல்ல ஒன்று கிடைக்கும். வீட்டில் வேண்டிய அளவிற்கு ஃபர்னிச்சர்களும் ரெஃப்ரிஜிரேட்டரும் இருக்கின்றன. சீக்கிரமே நான் ஒரு கார் வாங்குவேன்.
சென்ற கோடை காலத்தில் நாங்கள் காடுகளுக்குச் சுற்றுலா சென்றோம். பெரிய பெரிய மரங்களுக்குக் கீழே இருந்த அழகான புல் பரப்புகளைப் பார்த்து நாங்கள் கூடாரங்கள் அமைத்தோம். கொம்புகளையும் இலைகளையும் வெட்டிக் கொண்டு வந்து வேலிகள் கட்டினோம். கொம்புகளைக் கொண்டு வந்து தாங்கி நிறுத்தி, தூரத்திலிருந்த தடாகத்திலிருந்து கேம்ப்பிற்கு நீர் கொண்டு வந்தோம். மாலை நேரத்தில் மான்களை வேட்டையாடினோம். இரவு வேளையில் சுள்ளிகளைக் கொண்டு நெருப்பைப் பெரிதாக்கி, ஒருவரையொருவர் காட்டுவாசிகள் என்று கூறி தமாஷ் பண்ணினோம். அடுத்த கோடைகாலத்தில் நாங்கள் டார்ஜிலிங்கிற்குச் செல்வோம்.
நான் மேஜைமீது பேப்பர் வெயிட்டாக வைத்திருந்த மைக்ரோமீட்டரை எடுத்து அதன் ஸ்பிண்டிலுக்கும் ஆன்விலுக்குமிடையில் என்னுடைய சுட்டுவிரலை வைத்தேன். பிறகு ஸ்பிண்டிலைத் திருப்பினேன். எனக்கு என்னுடைய விரலின் அளவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மைக்ரோமீட்டரைக் கொண்டு சரியாக என் சுட்டுவிரலை அளக்க முடியாது. விரலில் வேதனை உண்டாகும்வரை நான் அதன் ஸ்பிண்டிலைத் திருப்பிக் கொண்டிருந்தேன். அழுத்தத்தின் அளவு தாண்டியவுடன் வேதனை நின்றுவிட்டது. ஸ்பிண்டில் முன்னோக்கி நகரவில்லை. அதன் முனை வெறுமனே திரும்பிக் கொண்டேயிருந்தது.
தபாலில் வந்த வாழ்த்து அட்டையை மேஜையின்மீது வைத்து, அதற்கு மேலே வைப்பதற்கு மைக்ரோமீட்டர் வேண்டும் என்பதைப்போல மெசெஞ்சர் தயங்கி நின்றிருந்தான். நான் அதை எடுத்தவுடன் அவன் திருப்தி அடைந்து திரும்பிச் சென்றான். நான் கார்டை வெளியே எடுத்தேன். ஜோகி அனுப்பியிருந்தார். ஜோகியும் குடும்பமும். எனக்கும் குடும்பத்திற்கும். ஆனால் கார்டு அனுப்பும் அளவிற்கு இப்போது என்ன ஒரு விசேஷம்? ஹாங்... ரவீந்திரநாதனின் பிறந்தநாள்! ஜோகி அப்படித்தான். ஒரு சந்தர்ப்பத்தையும் விடுவதில்லை. காலண்டரில் சிவப்பு எழுத்தைப் பார்த்துவிட்டால் ஒரு கார்டை அனுப்பி விடுவார். பிறப்பாக இருந்தாலும் மரணமாக இருந்தாலும்- அது யாருடையதாக இருந்தாலும். இப்படித்தான் என்னுடைய மனைவி கூறுவாள்: "அவர் இன்ஷுரன்ஸ்காரர்."
காலை ஷிஃப்டில், ஷிஃப்ட் எஞ்ஜினியர் தன்னுடைய ரிப்போர்ட்டுடன் வந்தார். நான் மைக்ரோமீட்டரில் இருந்து கையை எடுத்து அவருடைய ரிப்போர்ட்டை வாங்கினேன். எந்த நிலையில் ஷிஃப்ட் பொறுப்பை ஏற்றார், எவ்வளவு பணியாட்கள் வந்திருந்தார்கள், எந்தெந்த மெஷின்கள் செயலாற்றின... நான் அவரிடம்- குறிப்பாக ரிப்போர்ட் செய்வதற்கு ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன். ஒன்றுமில்லை என்று அவர் சொன்னார். மெஷின்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை. தொழிலாளர்கள் எல்லாரும் வந்திருந்தார்கள். அனைத்தும் நல்ல முறையிலேயே நடந்திருக்கின்றன. பத்திரம். அதிக கட்டுப்பாடு. நடக்கும் ஷிஃப்ட் மற்றும் அடுத்த ஷிஃப்ட் ஆகியவற்றின் ப்ரோக்ராம்களை நான் பரிசோதித்துப் பார்த்தேன். சார்ட்களையும் க்ராஃப்களையும் பார்த்தேன். பிறகு புதிய ஆர்டர்களை எடுத்தேன். "தயவு செய்து இந்த ப்ரோக்ராம் தயார் பண்ணுவதில் எனக்கு உதவ முடியுமா?'' - போவதற்காக எழுந்து நின்ற எஞ்ஜினியரிடம் நான் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன். அவர் உற்சாகத்துடன் தயாரானார். சில நேரங்களில் கவனக்குறைவை வெளிப்படுத்தினாலும், அறிவும் விவரமும் உள்ள ஒரு இளைஞன் சாரதி. விவரம் இருந்தாலும் பொறுப்பைப் பற்றிய உணர்வு இல்லாத மனிதர் என்று அவரைப் பற்றி எல்லாரும் கூறுவார்கள்... ஃபோர்ஜிங் ஷாப்பில் இருந்து அவரை இங்கு மாற்றியதற்குக் காரணமும் அதுதான். ஆனால் என்னிடம் அவர் முழுமையான உற்சாகத்தைக் காட்டுகிறார். எனக்கு உடல்நல பாதிப்பு உண்டான பிறகு, என்னிடம் அவருக்கு தனிப்பட்ட ஈடுபாடு உண்டாகிவிட்டது. நாங்கள் தேவைப்பட்ட காஸ்ட்டிங்குகளை தேவைப்படும் முடிவு செய்யப்பட்ட தேதிகளில் கிடைக்கக்கூடிய விதத்தில் தொழிலாளிகள் மற்றும் மெஷின்களின் திறமைக்கேற்றபடி ப்ரோக்ராம் உண்டாக்க ஆரம்பித்தோம். அதற்குப் பிறகு ப்ரோக்ராமை முழுமை செய்யத் தேவைப்படும் பொருட்களின் கணக்குகளைப் பார்த்தோம். பிறகு தொகைகளையும் டார்கெட்டுகளையும் சுவரில் நிறமுள்ள பென்சில்களைக் கொண்டும் பின்களைக் கொண்டும் குறித்தோம். எல்லாவற்றிலும் அவர் எனக்கு உதவினார். எனினும் எல்லாம் செய்து முடிந்தபோது நான் களைத்துப் போய்விட்டிருந்தேன். அவரிடம் உட்காரும்படி சைகை காட்டிவிட்டு, நான் என் நாற்காலியில் உட்கார்ந்தேன். நாங்கள் ஆளுக்கு ஒரு தேநீரை வரவழைத்தோம். பிறகு வெப்பத்தைப் பற்றிப் பேசினோம். ஆமாம்... கோடை வந்துவிட்டது. அவர் ஒப்புக் கொண்டார். இனி ஒரு "கோல்ட் வேவ்" உண்டாகப் போவது இல்லை. வெப்பம் அதிகரிக்கும். அவர் என்னிடம் என் நோயைப் பற்றி விசாரித்தார். எனக்கும் ஓய்வு தேவைப்படுகிறது என்றும்; நான் விடுமுறை எடுக்கத்தான் வேண்டும் என்றும் சொன்னார். "ஓய்வு? ஓய்வு எதற்கு?'' - நான் கேட்டேன். "செத்த பாம்பின் வால் அசைவதைப் போன்றது அது. இறப்பதாக இருந்தால் பணியில் இருந்துகொண்டே இறக்க வேண்டும். பிரமிட் கட்டும்போது கல்லுக்குக் கீழே சிக்கி மனிதர்கள் இறக்கவில்லையா? அதைப்போல...''
"நீங்கள் சொன்னது களைப்பைப் பற்றி... நான் ஓய்வு என்று குறிப்பிடுவது வேறு. வேலைதான்.'' சாரதி சிரித்துக்கொண்டே சொன்னார்: "இந்த ஆர்டர், ப்ரோக்ராம், டார்கெட் ஆகியவற்றுக்கு பதிலாக சொந்த ஆர்வத்துக்கேற்றபடி அமையும் ஏதாவது வேலை. பிறகு... பாம்பின் வால்- அது கிட்டத்தட்ட நாம் செய்யும் வேலைகள் தான். இந்த ப்ரோக்ராம், சார்ட் எல்லாம். பிரமிடுகள் பிணங்களின் கல்லறையாக இருந்தன அல்லவா? அவற்றை உண்டாக்கியது ஃபரவோக்கள் அல்ல. இறந்த ஃபரவோக்கள்தான். ஆன்மிக முறையில் இறந்துவிட்டவர்கள். மம்மிகள், தங்களின் கல்லறைகளை உண்டாக்குவதற்காக மீண்டும் கண்களைத் திறந்து வந்தவர்கள்.''
"இவையெல்லாம் ஏதோ தவறான சிந்தனைகள் என்று நான் நினைக்கிறேன்''- நான் சொன்னேன்: "உண்மையிலேயே சொல்லப் போனால் எனக்கு ஒரு நோயும் இல்லை. அதற்காக தயாரிப்பு நிர்வாகி இன்று காலையில் என்னை அதிகமாகத் திட்டிவிட்டார். அவர் சொன்னது உண்மைதான். உண்மையிலேயே இதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது டாக்டர்கள்தானே! நாம் அல்ல. பிறகு... இந்தக் காலத்தில் என்னவெல்லாம் புதிய புதிய நோய்கள் இருக்கின்றன! அதுபோக... நீங்கள் ஓய்வு என்பது வேலை செய்யாமல் இருப்பது அல்ல என்று சொன்னதைப்போல, உடல்நலம் என்பது நோய் இல்லாத நிலையாக இருக்க வேண்டும் என்றில்லையே!''