உத்தராயணம் - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6368
மாற்றமில்லை. பரிணாம மரத்தின் இறுதிக்கனி. இறுதி வழித் தோன்றல். நாகரீகத்தை எதிர்க்கும் முன்னேற்றம்.
நேற்று எங்களுடைய வானொலிக்கு பாதிப்பு உண்டானது. சாயங்காலம் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அதற்குள்ளிருந்து ஏதோ வெடிப்பதைப்போல ஒரு சத்தம் வந்தது. அதற்குப் பிறகும் எதுவும் கேட்கவில்லை. என்னுடைய மகனுக்கு வானொலியில் வரும், அவன் வளர்வதற்குப் பசியை ஏற்படுத்தும் டானிக் பற்றிய விளம்பரம் மிகவும் பிடிக்கும். அது வருவதற்காக அவன் காத்திருப்பான். வந்துவிட்டால் மருந்தை எடுத்துக்கொண்டு வருவான். நேற்று வானொலிக்கு பாதிப்பு உண்டானபோது, அவன் டானிக்கை மட்டுமல்ல- உணவையும் வேண்டாமென்று கூறிவிட்டான். வானொலிக்கு எப்படி கேடு வந்தது என்பதைத் தெரிந்து கொள்வதற்காகப் பிடிவாதம் பிடித்தான். அவன் அப்படித்தான். எல்லாம் சரியானபடி நடந்து கொண்டிருக்கும் வரையில் சந்தேகங்கள் இல்லை. கேடு வந்துவிட்டால், கொம்பு ஒடிந்துபோன கொடியைப்போல ஒடிந்து சாய்ந்து விடுவான். காலையில் பள்ளிக்கூடப் பேருந்தில் ஏறி அவன் பள்ளிக்குச் செல்கிறான்.
லிஃப்டில் ஏறி மூன்றாவது மாடிக்குச் செல்கிறான். ஒருநாள் லிஃப்டிற்கு பாதிப்பு உண்டானபோதுதான், அவனுக்கு லிஃப்ட் எப்படி செயல்படுகிறது என்ற சந்தேகம் உண்டானது. லிஃப்ட் எப்படி நின்றது என்பதைப் பற்றியோ வானொலிக்கு எப்படி கேடு வந்தது என்பதையோ சொல்லித் தர என்னால் முடியாது. அதற்கு நான் ஒரு லிஃப்ட் டெக்னீஷியனோ ரேடியோ மெக்கானிக்கோ இல்லையே! காஸ்ட்டிங் பிரிவில் பணியாற்றும் எஞ்ஜினியர் மட்டுமே நான். தன்னுடைய தந்தைக்கு அவருக்கென்று டிவிஷன் இருந்தது என்பதையும், தனக்கும் தன்னுடையது என்று ஒன்று இருக்கும் என்பதையும் வளர்ந்து வரும்போது அவனுக்குத் தெரிய வரும். தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் சந்தேகங்களை வெளிப்படுத்துவது எந்த அளவிற்கு கேலிக்கூத்தான விஷயம் என்பதையும் அவன் தெரிந்து கொள்வான். அவனைப் பார்ப்பவர்கள் எல்லாரும் கூறுகிறார்கள்- அவன் என்னுடைய இன்னொரு வடிவம் என்று. அவன் அவரை மற்றும் ஆன்டிரைனத்தின் வித்தா- என்னைப்போல வளர்ந்து, பேருந்தில் ஏறி, வேலைக்குச் சென்று, காஸ்ட்டிங்குகள் உண்டாக்கி வாழ்வதற்கு? மனிதனின் தாளம் காலநிலையோடு அல்ல; காலத்துடன்தான். தோட்டப் பணியாள் கூறுகிறான். தன்னுடைய குழந்தைகளை அவன் வித்துக்களாக ஆக்கி மண்ணில் விட்டுவிட்டுப் போகப் போவதில்லை. அவனை என்னவாக ஆக்க வேண்டுமென்று நானும் அவனுடைய தாயும் விவாதிக்கிறோம். எஞ்ஜினியர், டாக்டர், கலைஞன், க்ளார்க், தொழிலாளி, சலவை செய்பவன்? யாருக்குத் தெரியும்- அவன் என்னவாக வருவான் என்று? எது எப்படி இருந்தாலும் அவனுடைய ஆர்வம் என்ன என்பதைத் தெரிந்தே செய்ய வேண்டும் என்றேன் நான். அவனுக்கு அறிவு உண்டு என்ற விஷயத்தில் நாங்கள் ஒன்றுபடுகிறோம். அறிவுதான் மனிதனைத் தாவரங்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அறிவும் ஆசையும். அந்த அறிவில் இருந்து உருவானதுதான் இந்தக் கம்பெனி.
எனக்கு அறிவு இருக்கிறது என்று என்னுடைய தந்தை கூறுவதுண்டு. நான் ஒரு எஞ்ஜினியராக ஆக வேண்டுமென்று என் தந்தைதான் முடிவெடுத்தார். என்னை இலக்கியம் படிப்பவனாக ஆக்க வேண்டும் என்பது என் தாயின் விருப்பம். நான் இளம் வயதில் கவிதைகள் எழுதுவேன். ஒரு கவிஞனாக ஆகியிருந்தால் எப்படி இருக்கும் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். ஒருவேளை எனக்குப் பரிசுகள் கிடைத்திருக்கலாம். பல்கலைக் கழகத்தில் ஃபெல்லோஷிப் கிடைத்திருக்கலாம். இல்லாவிட்டால் நான் திரைப்படத்தில் பாடல்கள் எழுதிக் கொண்டிருக்கலாம். நான் அரசியலுக்குள் நுழையாமல் இருந்திருப்பேன் என்று கூறுவதற்கில்லை. சோஷலிஸ்டாக ஆகியிருக்கலாம். ட்ராமிற்கு அடியில் சிக்கி இறக்கும் குழந்தைகளின் தற்கொலைகள். அன்பிற்கும் உணர்வுகளுக்கும் அடிப்படையாக இருக்கும் பொருளாதாரப் பாதுகாப்பு. ஆட்சியில் தவறு இழைத்தல். வெளிநாட்டு ரகசியப் போலீஸ். இல்லாவிட்டால் யாருக்குத் தெரியும், அந்தப் பாதையில் ஒரு புரட்சிவாதியாகக்கூட ஆகியிருக்கலாம். வெடிகுண்டு வீசியிருக்கலாம். ட்ராஃபிக் போலீஸ்காரர்களின் கழுத்தை அறுத்து, வயிறைத் திறந்து, குடல்மாலை சூடி, நாராயண நம என்று... எங்கு இருந்தாலும் நான் தோல்வியைச் சந்தித்திருக்க மாட்டேன். எனக்கு அறிவு இருக்கிறது. கடமை உணர்வு உண்டு. கொம்பில் படர்ந்து ஏறக்கூடிய வீரியம் இருக்கிறது. அதனால் என் தந்தை என்னை எஞ்ஜினியரிங்கிற்கு அனுப்பியபோது, நான் ஒரு எஞ்ஜினியராக ஆனேன். நல்ல ஒரு எஞ்ஜினியர். லிஃப்ட் எப்படி நின்றது என்பதைப் பற்றியோ, வானொலி எப்படி பாதிக்கப்பட்டது என்பதைப் பற்றியோ எனக்குத் தெரியாது. பேட்டர்ன்கள் உண்டாக்குவதில் மாஸ்டர் எனக்கும் மாஸ்டர்தான். டர்னிங்கும் மில்லிங்கும் மெஷினிங்கும் நான் செய்தால் சரியாக வராது. எதற்காக ஆர்டர் எண் ஸி- 712, இரும்பிற்குப் பதிலாக அலாய் மூலம் உண்டாக்கப்படுகிறது என்பதற்கான காரணத்தை என்னால் கூற முடியாது. எதற்காக முப்பது சரக்குகள் வேண்டும் என்பதோ, பதினெட்டாம் தேதி சரியாக வராது- பதினேழாம் தேதியே முடித்துவிட வேண்டும் என்பதோ, ஸி-712 என்றால் என்ன என்பதோ எனக்குத் தெரியாது. ஆனால் அது எப்படி, எத்தனை, எந்த தேதிக்கு உண்டாக்கப்பட வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதுதான் என்னுடைய வேலை. என்னுடைய வெற்றிக்கும் நிம்மதிக்கும் உடல் நலத்திற்கும் காரணம் என்னுடைய சிம்ஃபனி. ஓம்கார் கூறியதில் அர்த்தம் இருக்கிறது. என்னுடைய தயாரிப்பு நிர்வாகி கூறியதிலும்தான். "ஸ்ரேயான் ஸ்வதர்ம்மோ விகுண:" எல்லாரும் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள ஆரம்பித்தால், என் காஸ்டிங் டிவிஷனிலிருந்து ஒரு காஸ்ட்டிங்கூட வெளியே வராது. நிலைமையும் காலமும் தவறும். சேர்மனுக்குப் பின்னால் இருக்கும் ஒற்றுமை கட்டவிழ்ந்து கீழே விழும். அதற்குள் சண்டையும் புரட்சியும் நடக்கும். நாம் நம்முடைய கம்பெனிக்கு உள்ளே எதிரிகள் ஆவோம். நாம் போரில் வெற்றி பெறப் போவதில்லை.
எந்த வரைபடத்தைப் பின்பற்றி எவ்வளவு அளவு பரப்புள்ள உலோகத்தைப் பயன்படுத்தி, எப்படி, எந்த எடையில், எவ்வளவு காஸ்ட்டிங்குகள், எந்த தேதிக்குத் தயார் பண்ண வேண்டும் என்று உள்ள தத்துவத்தைத் தெரிந்து கொண்டிருப்பதால், நான் ஜம்னாதாஸ் ஆஜ்மீரியா இன்டஸ்ட்ரீஸில் எஞ்ஜினியராக ஆனேன். ஒரே அளவில், ஒரே எடையில், ஒரே வடிவத்தில் உள்ள காஸ்ட்டிங்குகளைத் தயார் பண்ணினேன். என்னுடைய பணியில் நான் நிரந்தரமானேன். எனக்கு இங்க்ரிமென்ட்டும் பதவி உயர்வும் கிடைத்தன. என்னுடைய திறமைக்கேற்றபடி எனக்கு போனஸ் கிடைக்கிறது. நான் வெற்றி பெற்றேன். என்னையும் குடும்பத்தையும் சிகிச்சை செய்ய கம்பெனிக்குச் சொந்தமான டாக்டர் இருக்கிறார். நானும் என் மனைவியும் நேரம் கிடைக்கும்போது நல்ல ஹோட்டல்களில் உணவு சாப்பிடப் போகிறோம். என்னுடைய மகன் வளர்வதற்கான பசியை உண்டாக்கக்கூடிய, அதிக உணவை அதிக வளர்ச்சியாக மாற்றக்கூடிய டானிக் சாப்பிடுகிறான்.