உத்தராயணம் - Page 19
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6368
இருப்பவற்றிலேயே மிகவும் தடிமனாகவும் உயரமாகவும் இருந்த குழாயில் இருந்து மிகவும் அதிகமாக அடர்த்தியான புகை வந்து கொண்டிருந்தது. அதைவிட சிறிய குழாயில் இருந்து அதைவிடக் குறைவான புகை வந்து கொண்டிருந்தது. எல்லாவற்றையும்விட சிறியதும் எடை குறைவானதாகவும் இருந்த குழாயில் இருந்து பொதுவாக புகை வருவதில்லை. ஆனால் இன்று அதிலிருந்து கருப்பு நிறத்தில் அடர்த்தியான புகை குபுகுபுவென்று வந்து கொண்டிருந்தது. பெரிய குழாயில் இருந்து சிறிய அளவில் புகை வந்து கொண்டிருந்தது. அது அசாதாரணமாக இருந்தது. ஏதாவது பிரச்சினை உண்டாகுமோ? நெருப்பு? விபத்து? வெடிப்பு? எனக்கு பதைபதைப்பு உண்டானது. நான் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். எதுவும் உண்டாகாது என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்ள முயற்சித்தவாறு கண்களை பின்னோக்கி எடுக்க முயன்றேன். நடக்கவில்லை. அவை மீண்டும் புகைக் குழாய்களிலேயே போய் மோதிப் பார்க்கத் தொடங்க, என்னுடைய பதைபதைப்பு மேலும் அதிகமானது. முன்பு எப்போதும் பார்த்திராத காட்சி அது. சிறிய குழாயில் இருந்து அப்படி புகை வரக்கூடாது. நான் வேகமாக வெளியேறி ஷாப்பிற்குச் சென்று ஃபோர்மேனை அழைத்தேன். அவர் வருவதற்குத் தாமதமானது. பொறுமையை இழந்த நான் அவரைக் கையைப் பிடித்து வெளியே கொண்டு வந்தேன். "பாருங்க... அது என்னன்னு பாருங்க'' என்றேன். அவரை அங்கேயே நிறுத்திவிட்டு, அவர்தான் அதற்குக் காரணம் என்பதைப்போல நான் புகைக் குழாய்களைச் சுட்டிக் காட்டினேன். எதுவும் புரியாததைப்போல் அவர் மூன்று நான்கு வினாடிகள் அதையே பார்த்துக்கொண்டு நின்றார். பிறகு என்னை நோக்கித் திரும்பினார். மீண்டும் குழாய்களைப் பார்த்தார். மீண்டும் என்னை நோக்கிப் பார்த்தார். கண்களுக்குப் பயிற்சி கொடுக்காத அந்த மனிதரால் அதன் தீவிரத்தைப் புரிந்து கொள்ள முடியாது. எனக்குக் கோபம் வந்தது. "எதுவும் புரியலையா? என்ன நீங்கள் ஆந்தையைப்போல உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? சிறிய குழாயில் புகை போவதைப் பாருங்க'' என்றேன் நான். "ஆமா... புகை... அது புகையாக இருக்காது. க்யாஸாக இருக்கும்''- அவர் சொன்னார்: "அது கெமிக்கல் டிவிஷன்தானே?'' "புகையாக இருந்தாலும் கேஸாக இருந்தாலும் அது அங்கு இல்லாமலிருந்தது. வழக்கமாக வந்ததில்லை. வரக் கூடாது...''- நான் சொன்னேன். "ஓ... நாம் இனிமேல் என்ன செய்வது?''- அவர் வெறுமனே நின்றிருந்தார். வெறுமனே. பதில் கிடைக்காமல். பதிலை எதிர்பார்க்காமல். சந்தேகங்கள் இல்லாத- பிரச்சினைகள் இல்லாத மனிதர். ஒரு ஆர்க்கெஸ்ட்ராவைக் கேட்டுக் கொண்டு நின்றிருப்பதைப்போல. மிகவும் விருப்பமான சிம்ஃபனி. நீரில் நிற்பதைப்போல நான் கீழே போகத் தொடங்கினேன். என்னுடைய சிம்ஃபனி. என் அக்கறையையும் கடமையையும் நான் மீண்டும் புரிந்து கொண்டேன். நாங்கள் இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது. நெருப்பு பற்றினால் என்ன? விபத்து உண்டானால் என்ன? கெமிக்கல் ப்ளான்ட்டில் எது உண்டானாலும், அதற்கு எதிர்வினை ஆற்ற எங்களால் முடியாது. கெமிக்கல் ப்ளான்ட்டில் என்ன உண்டானது என்று எங்களுக்குப் புரியவில்லை. எங்களுக்கு இதில் பொறுப்பு எதுவும் இல்லை. எங்களுக்கு அதில் ஆர்வம் இல்லை. அக்கறை இல்லை. இந்தோ- சீனாவில் வர்த்தக காம்ப்ளெக்ஸ் முழுவதையும் அழித்தும், இல்லா விட்டால் அழிக்காமல் இருந்தும், எதுவும் நடக்காததைப்போல எல்லாரும் அலுவலகத்திற்குள் போய்க் கொண்டோ திரைப்படம் பார்த்துக்கொண்டோ மனைவியுடன் இன்பம் கண்டுகொண்டோ இருக்கத்தான் செய்கிறார்கள். நீர் குடிக்க வேண்டும் என்ற தாகத்தால் பாழும் கிணற்றில் குதித்தவர்கள் அங்கு கிடந்து சாகிறார்கள். பம்பாய் காலப்போக்கில் புகை வண்டிகளின் சொர்க்கமாக ஆகிறது. கல்கத்தா அகதிகளின் விபச்சார சாலையாகவும் புரட்சிக்காரர்களின் கைத்திறனைக் காட்டும் பயிற்சி சாலையாகவும் இருக்கிறது. எங்களுடைய கம்பெனி ஒரு சேர்மனுக்குப் பின்னால் ஒன்று சேர்ந்து வரிசையாக நின்றுகொண்டு முன்னோக்கி நடைபோட்டுச் செல்கிறது. சர்வசாதாரணமான உண்மை எங்கள் இருவருக்கும் புரிந்தது. அதனால் நாங்கள் மேலும் சிறிது நேரம் அந்தப் புகையை அல்லது க்யாஸைப் பார்த்துக் கொண்டு நின்றுவிட்டு, அமைதியாகத் திரும்பிச் சென்றோம். அவர் தன்னுடைய பணிக்குச் சென்றார். நான் என்னுடைய வேலைக்கு.
சில நாட்களுக்கு முன்பு கரியாஹட்டில் சிறிதும் எதிர்பாராமல், என்னுடன் முன்பு எஞ்ஜினியரிங் படித்த ஒரு நண்பனைச் சந்தித்தேன். கல்லூரியை விட்ட பிறகு இவ்வளவு வருடங்களாகப் பார்த்ததில்லையென்றாலும், நாங்கள் எளிதில் அடையாளம் கண்டு கொண்டோம். ஆளுக்கொரு சிகரெட்டைப் புகைத்தவாறு நாங்கள் சேறு நிறைந்த வயல்கள் வரை நடந்தோம். ட்ராமில் ஏறி ஸியால்தாய், ஷ்யாம் பஸார் ஆகியவற்றின் வழியாக பெல்காசியா வரை சென்றோம். நிறைய ரத்தம் சிந்திய ஆடைகளுடன் இருந்த ஒரு இளைஞன் தன்னைப் பின்தொடர்ந்தவர்களை ஏமாற்றிவிட்டு, ஓடி வந்து எங்களுடைய ட்ராமில் ஏறினான். ஏறிய பிறகு பாக்கெட்டில் இருந்த துவாலையை எடுத்து இடக் கையில் இருந்த காயத்தில் அவன் இழுத்துக் கட்டினான். பிறகு வலக்கையால் கம்பியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு பயணம் செய்தான். தான் இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் குதித்து இறங்கி, ஒரு சிறு பாதையின் வழியாக ஓடி மறைந்தான். கண்டக்டர் அவனுக்கு டிக்கெட் கொடுக்கவில்லை. யாரும் எதுவும் கேட்கவில்லை. நாங்களும் வெளியே பார்த்துக் கொண்டிருக்க முயற்சித்தோம். சவ்ரன்கிரியை அடைந்தபோது இறங்கினோம். ஆளுக்கொரு காப்பியைப் பருகினோம். விக்டோரியா நினைவிடத்தில் சிறிது நேரம் வெயிலில் நின்றிருந்தோம். பிறகு பவானிப்பூரை நோக்கி நடந்தோம். செயின்ட் பால்ஸ் தேவாலயத்திலிருந்து ஆட்கள் பிரார்த்தனை முடிந்து திரும்பி வருவதை நாங்கள் பார்த்தோம். யாரும் யாருடனும் பேசவில்லை.
இழப்புகளைக் குறித்த வேதனையோ, நிறைவேறிய பிரார்த்தனைகளைப் பற்றிய சந்தோஷமோ அவர்களுடைய முகத்தில் தெரியவில்லை. ஓ... அப்போது அதுதான்... அது... என்பது மாதிரி கீழுதட்டைக் கடித்தவாறு அவர்கள் நடந்து சென்றார்கள்.
எங்கு வேலை என்பதையோ எங்களுக்குள் கேட்டுக் கொள்ளவில்லை. பழைய விஷயங்களைப் பற்றியோ இனி உள்ள நோக்கங்களைப் பற்றியோ பேசவில்லை. எங்களுக்குப் பேசுவதற்கு எதுவும் இல்லாமலிருந்தது. இந்த நகரத்தில் கொஞ்ச காலமாகவே இருந்து வந்திருக்கும் விஷயத்தைத் தெரிந்தவுடன், எங்களுக்கு தினமும் ட்ராமிலோ பேருந்திலோ சந்திக்கக்கூடிய அறிமுகமான நபரைப் போலத் தோன்றியது.
நான் கெமிக்கல் கம்பெனியின் சிவில் என்ஜினியரை அழைத்தேன். அடுத்த வாரம் இறுதியில் அவருடைய வேலை முடியும். சாலை சரியாகும். அப்போது அதற்கடுத்த திங்கட்கிழமை க்ரேனைக் கொண்டுவரச் சொல்ல வேண்டும். அந்த வாரத்திலேயே மெஷின் அமைக்கலாம். பேக்கிங்குகளைப் பிரித்து கம்பொனென்ட்களைத் தயார் பண்ணி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.