உத்தராயணம் - Page 21
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6368
இறுதியில் அவர் கொண்டு வந்த அட்டைப் பெட்டியை எடுத்தவாறு நான் கேட்டேன்: "இது சரியாயிடுச்சா?'' "ம்... சரியாயிடுச்சு''- திடீரென்று சிரிப்பை வரவழைத்து, உற்சாகத்தை வெளிப்படுத்தியவாறு விருந்தாவன் சொன்னார்: "இதற்கு உள்ளே ஒரு கியர் உடைந்துவிட்டது. எல்லாம் பித்தளையால் ஆனது. இதுதான் இவற்றில் இருக்கும் கெட்ட விஷயமே. வேகமாகத் தேய்ந்து கேடு வந்திடும். இருந்தாலும் நான் இதை சரி பண்ணிட்டேன்.'' என்னுடைய மகனின் விளையாட்டு பொம்மை. விருந்தாவன் சென்ற வருடம் ஏதோ மெஷின்களைப் பரிசோதிப்பதற்காக ஜப்பானுக்குச் சென்றிருந்தபோது, இதைக் கொண்டு வந்தார்- அவனுக்குப் பரிசுப் பொருளாக. தானே ஓடுவதும் திரும்புவதும் நெருப்பைக் கக்குவதுமாக இருக்கும் ஒரு டேங்க். ட்ராக் செயினும் ஓடும்போது உண்டாகக்கூடிய சத்தமும் இயல்பாக இருந்தன. குழாயின் முகத்திற்குள்ளிருந்து நெருப்பு எரியும்போது உண்மையிலேயே பயம் தோன்றும். சத்தமும் புகையும்... ஷெல் இல்லை என்பது மட்டும்தான். அவன் அதை எப்போதும் தன் தாயின் பக்கம் திருப்பி விடுவான். எவ்வளவு பழகியிருந்தாலும், இப்போது அதன் முகத்திலிருந்து குண்டு வெடிக்கும்போது அவள் முகத்தை மூடிக் கொள்வாள். விளையாட்டு பொம்மைகள் இப்படி இருக்கக்கூடாது என்று நான் நினைப்பதுண்டு. ஆனால் இக்காலத்தில் அவை இப்படித்தான். குழந்தைகள் அவற்றை அப்படித்தான் எடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் பலவற்றையும் அப்படித்தான் ஏற்றுக் கொள்கின்றனர். அதனால் அதற்குக் கேடு வந்தபோது, வழக்கம்போல அது செயல்படுகிறது என்பதற்காக அல்ல- கேடு வந்துவிட்டது என்பதைப் பற்றிதான் அவன் ஆச்சரியப்பட்டான். எது எப்படியோ- விருந்தாவன் சென்ற முறை வீட்டிற்கு வந்தபோது அதை எடுத்துக்கொண்டு போனார். இப்போது சரி பண்ணவும் செய்திருக்கிறார். இனி ஆச்சரியப்பட வேண்டிய அவசியமில்லை.
நாங்கள் அறைக்கு வெளியே நடந்து திறந்து கிடக்கும் இடமாகப் பார்த்து டேங்கைத் தரையில் வைத்து ஸ்விட்சை அழுத்தினோம். அது சத்தத்தை உண்டாக்கிக் கொண்டும், தூசியைப் பறக்க விட்டுக் கொண்டும் ஓடியது. இடப்பக்கமும் வலப்பக்கமும் திரும்பி குண்டு வெடித்தது. தொடர்ந்து ஆபரேஷனை முழுமை செய்துவிட்டு பேஸை நோக்கித் திரும்பி வந்தது. முதல் ஷிஃப்ட் முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்த தொழிலாளிகள் சிலர் அந்தக் காட்சியைப் பார்க்கக் கூடினார்கள். நான் அவர்களிடம் அது ஜப்பானில் தயார் பண்ணப்பட்டது என்றும், ஜப்பான்காரர்களின் விளையாட்டுப் பொம்மைகள் உண்டாக்கக்கூடிய திறமை உன்னதமானது என்றும் சொன்னேன். அதைப் பார்த்துக்கொண்டிருந்த எல்லாரும் உண்மைதான் என்று ஒப்புக் கொண்டார்கள். ஜப்பான்காரர்களையும் ஜப்பானியர்களின் விளையாட்டு பொம்மையையும் எல்லாரும் பாராட்டினார்கள். அப்போது மதிய உணவு நேரமாக இருந்ததால் நாங்கள் டேங்கை எடுத்து பெட்டிக்குள் போட்டு உள்ளே கொண்டுபோய் வைத்து விட்டு, வெளியேறி கேன்டீனை நோக்கி நடந்தோம்.
நானும் விருந்தாவனும் ஒரே நேரத்தில் தொழிற்சாலையில் சேர்ந்தோம். நான் காஸ்ட்டிங் டிவிஷனில். அவர் மெஷின் ஷாப்பில். நாங்கள் ஒரே நாளன்று வேலையில் நிரந்தரமாக்கப்பட்டோம். எங்களுக்கு ஒன்றாகவே பதவி உயர்வு கிடைத்தது. கிட்டத்தட்ட எல்லாமே எங்களுக்கு ஒன்றாகத்தான் நடந்தன. ஒன்றே ஒன்றைத் தவிர- திருமணம். நான் திருமணம் செய்தேன். எனக்கொரு மகன் பிறந்தான். அவர் இன்னும் தனி மனிதராக இருக்கிறார். சிரமங்களைச் சந்தித்த மனிதர். அவரும் திருமணம் செய்து கொண்டிருந்தால் என் மகனின் வயதில் அவருக்கும் ஒரு குழந்தை இருந்திருக்கும். டேங்குகள் ஓட்டிக் கொண்டிருக்கும் மகனும் முட்டை ஃப்ரை செய்யும் மனைவியும் வீடும் தோட்டமும். அதிகாலை வேளை செய்தித்தாள். வாசலில் பால்புட்டிகள்...
நான் திருமணம் செய்துகொண்ட காலத்தில் அவர் காதல் வயப்பட்டிருக்கிறார். காதலி மற்றும் காதலனின் இல்லத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களுடைய திருமணத்தை ஒப்புக் கொள்ளவில்லை. அவர்களோ உறவினர்கள் சம்மதிக்கும் வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தார்கள். அவள் எம்.ஏ. பாஸ் ஆனாள். பத்தொன்பதாவது நூற்றாண்டின் அமெரிக்க இலக்கியத்தில் டாக்டர் பட்டம் பெறுவதற்காக ஆராய்ச்சி ஆரம்பித்தாள். அவர் கம்பெனியின் ஸ்காலர்ஷிப்பில் தொழில் அறிவியலில் மேற்படிப்பு படிக்கச் சென்றார். அவள் ஹாஸ்டலில் தங்கினாள். அவர் ஹோட்டலில். அவர்கள் தினமும் தொலைபேசியில் பேசிக் கொண்டார்கள். எல்லா மாலை வேளைகளிலும் சந்தித்துக் கொண்டார்கள். தினமும் இரவில் காதல் கடிதம் எழுதினார்கள். பத்து பதினைந்து பக்கங்கள் வரக்கூடிய காதல் கடிதங்கள். நீண்ட ஏழு வருடங்கள் அப்படியே கழிந்தன. அவர்களுடைய காதல் எங்களுக்கு இடையே ஒரு கதையாக ஆனது.
ஏதோ ஒரு மெஷினின் உதிரி பாகத்திற்காக டிசைன் செய்ய வேண்டிய ஒரு ஜிக்கைப் பற்றி அவர் கூறினார். பல வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்யக்கூடிய ஒரு ஜிக்கை உண்டாக்குவது என்பது மிகவும் சிரமமான ஒரு வேலை. ஆனால் அப்படியொன்றை உண்டாக்கிவிட்டால், மற்றவர்களின் வேலை மிகவும் எளிதாகி விடும். ஜிக் உண்டாக்குவது என்பது அறிவைப் பயன்படுத்திச் செய்ய வேண்டிய விஷயம் என்பதால், அதில் சிறப்பு இருக்கிறது என்று நான் சொன்னேன். "அறிவைப் பயன்படுத்த வேண்டியதிருக்கிறது என்பதல்ல உன்னதத்திற்கு அடையாளம்''- அவர் ஒப்புக் கொள்ளவில்லை. "தானே அந்த வேலையை ஏற்றெடுப்பதுதான் முக்கியமான விஷயம். தோல்வியடையலாம் என்ற சாத்தியத்தைக் கூட மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இங்கு நடக்கக் கூடாதது என்று ஒன்றில்லை. சிரமமானது என்றாலும் எல்லாம் நடத்திக் காட்டக் கூடியதுதான். நடத்திக் காட்ட வேண்டும். அந்தக் கால மன்னர்களைப்போல இவ்வளவு நாட்களுக்குள் பதிலைக் கண்டுபிடிக்கவில்லையென்றால், கழுத்து அறுக்கப்படும் என்று யாரும் கூறவில்லையென்றாலும்!''- அவர் சொன்னார்.
தொழில் அறிவியல் படித்த பிறகு தன்னுடைய மெஷின் ஷாப்பின் வேலை தவிர, கம்பெனியின் ப்ளானிங் கமிட்டியில் ஒரு ஆலோசகராகவும் விருந்தாவன் வேலை பார்க்கிறார். சற்று தூரம் நடந்த பிறகு அவர் மீண்டும் தொடர்ந்தார்: "மனிதனின் செயல்கள் அனைத்தையும் கிட்டத்தட்ட மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலாவது- சொந்த விருப்பத்தால் செயல்படுவது. இரண்டாவது- மற்றவர்களைப்போல நடப்பது. இறுதியானது- மற்றவர்கள் கூறியபடி நடப்பது. தொழிற்சாலையில் பணி செய்யும் தொழிலாளர்களைப் பொறுத்தவரை தானே செய்வது என்பதைப்போல மற்றவர்களைப்போல நடப்பதும் இல்லாமலிருக்கிறது. பின்பற்றுவது மட்டும்தான் எஞ்சியிருப்பது. எங்கே இருந்தாலும்... உங்களுக்கு அந்தக் கிழவன் பாவுலின் பாட்டு ஞாபகத்தில் இருக்கிறதா? "பாவுல் ஆமி ஏக்- தாராதெ பேம்தே கான்"- வீணைக்கு ஒரு கம்பியே இருக்கிறது என்றாலும், ஒவ்வொரு பாவுலும் தன்னுடைய பாட்டைத் தனியாகப் பாடவேண்டும்.''
தொழிற்சாலைக்கு வெளியே ஆற்றின் கரையில் பாடியவாறு நடந்து கொண்டிருக்கும் பாவுலைப் பார்த்துக்கொண்டே விருந்தாவன் நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பார்.