உத்தராயணம் - Page 23
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6367
அவருக்கு இதெல்லாம் எப்போதோ நடந்திருக்க வேண்டும் என்பதுதான் விஷயமே. ஏழு வருடங்களுக்கு முன்பு என்னால் என் மனைவியைவிட நல்லவளாகவோ மாறுபட்டவளாகவோ உள்ள ஒரு பெண்ணை அவளுக்கு பதிலாக நினைத்துப் பார்க்கவே முடியாது. அதே நேரத்தில் அவளை நான் சந்தித்துக் காதலித்தோ, பழக்கமாகி தேர்ந்தெடுத்தோ திருமணம் செய்து கொள்ளவும் இல்லை. என்னுடைய உறவினர்கள்தான் அவளை எனக்காகத் தேர்ந்தெடுத்தார்கள். திருமணம் முடிந்து, பிள்ளைகளுடனும் குடும்பத்துடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் நன்கு பழக்கமான உறவினர்கள். அதனால் இதில் தவறுக்கோ பிரச்சினைகளுக்கோ இடமே இல்லை. திருமணத்திற்கு முன்பு நாங்கள் இருவரும் டாக்டரைப் போய்ப் பார்த்தோம். திருமணத்திற்குப் பிறகு நாங்கள் எங்களுடைய குடும்பத்தைத் திட்டமிட்டோம். கர்ப்பமாக இருந்த போது முதலில் எல்லா மாதங்களும், பிறகு மாதத்தில் இரண்டு தடவைகளும் தவறாமல் அவள் டாக்டரைப் போய்ப் பார்த்தாள். அவர் தந்த மருந்துகளைச் சாப்பிட்டு அவர் கூறிய உடற்பயிற்சிகளைச் செய்தாள். இருநூற்று எண்பதாவது நாளன்று என்னுடைய மகன் பிறந்தான். அவனை முறைப்படி குழந்தை சிகிச்சை ஸ்பெஷலிஸ்டை வைத்து பரிசோதனை செய்தோம். உரிய நேரங்களில் போலியோ கொடுத்தோம். டிஃப்தீரியாவிற்கு எதிராக ஊசி போட்டோம். பசியை உண்டாக்கக்கூடிய, அதிக உணவை அதிக வளர்ச்சியாக மாற்றக் கூடிய டானிக்கைக் கொடுத்தோம். அவன் வளர்ந்தான். இப்போது கின்டர்கார்டனிற்குப் போகிறான். அடுத்த வருடம் பள்ளிக்குச் செல்வான். சமீபத்தில் ஒருநாள் முதல் பாடத்தில் ஏதோ சந்தேகம் வந்தபோது, எனக்கு அதைச் சொல்லித் தர முடியவில்லை. என்ன அது? எதுவாக இருந்தாலும் தேவையில்லை. இறுதியில் படித்த பாடம்தான் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. முதலில் படித்தது வேண்டுமென்றால், இனியும் படிக்க வேண்டும்.
"இரட்டை பெற்ற இரண்டு பெண்களில் ஒருத்தியைத்தான் இவர் கல்யாணம் பண்ணினார்''- உரிமையாளர் அப்போது தன் நண்பரிடம் கூறினார். அவருடைய இரண்டுமுறை சிரிப்பிற்குப் பதிலாக அவரின் நண்பர் ஒரு தடவை சிரிப்பைத் திருப்பிக் கொடுத்தார். "இரட்டைக் குழந்தைகள் பிறந்தன என்று சொன்னால் போதாது. அறுத்துப் பிரித்தெடுத்துவிட்டார்கள். ஒரே மாதிரி இருந்த இரட்டைக் குழந்தைகள். ஒன்றாக இருக்கும்போது அடையாளம் கண்டுபிடிப்பது கஷ்டமாக இருப்பதை நினைத்து, ஒன்றைக் குழந்தையாக இருக்கும்போதே உறவினர்களில் யாரோ கொண்டுபோய் தனியாக வளர்த்தார்கள். ஆனால் இரண்டின் விதியும் ஒன்றாகவே இருந்தது. ஒன்றுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால், இன்னொரு குழந்தைக்கும் வரும். ஒன்று விழுந்து கையை ஒடித்துக் கொண்டபோது, இன்னொன்றும் விழுந்து கையை ஒடித்துக் கொண்டது. இரண்டு பேர்களின் திருமணமும் ஒன்றாகவே நடந்தது. அவர்களின் இரட்டைக் குணம் அங்கேயே நின்றதா என்ன? ஒருத்தி பிரசவம் ஆனபோது இன்னொருத்தியும் பிரசவமானாள். இரண்டும் ஆண் குழந்தைகள். பிறகு இரண்டு பேருக்கும் கர்ப்பம் கலைந்தது. மூன்றாவது தடவை அவருடைய மனைவி இன்னொருத்தருடன் சேர்ந்து கர்ப்பம் தரித்தபோது அவருக்குத் தாங்க முடியவில்லை. இப்படி வேறொருவனின் பெயரில் வாழ என்னால் முடியாது என்று அவர் நீதிமன்றத்தில் கூறினார். கர்ப்பிணியான மனைவியை அவர் கழுத்தை நெறித்துக் கொன்றார். அதுதான் அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் முதல் தடவையாக உண்டான வித்தியாசம். அவள் இப்போதும் வருடந்தோறும் பெற்றுக் கொண்டிருக்கிறாள். அதில் சில இரட்டைக் குழந்தைகள்.''
நாங்கள் அமைதியாக நடந்தோம். தான் பார்த்திராத வரப்போகும் மணமகளைப் பற்றி அவர் சிந்தனையில் மூழ்கியிருந்தார். என்னுடைய களைப்பையும் அறியாத நோயையும் தோழமையாக்கிக் கொண்டு நானும் நடந்தேன். நாங்கள் இருவரும் மற்றவர்களின் மனதிற்குள் இருக்கும் உலகத்தைத் தொட விரும்பவில்லை. என் டிவிஷனுக்கு முன்னால் வந்தபோது, எப்போதும் இல்லாத வகையில் என் தோளில் கையை வைத்துக் கொண்டு அவர் இதை மட்டும் சொன்னார்: "சரி... அப்படியென்றால்... நாம் இனியும் பார்ப்போம். அது மட்டும் உண்மை.'' அவருடைய தொண்டை தடுமாறியதைப்போல இருந்தது. என் தோளில் அவருடைய கையின் அன்பு நிறைந்த அழுத்தத்தை நான் உணர்ந்தேன். இனிமேல் இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் அவர் வருவார்- தனக்கு அறிமுகமில்லாத ஒரு பெண்ணையும் அழைத்துக் கொண்டு. அதற்கிடையில் நோய்வாய்ப்பட்ட என்னுடைய நாட்களுக்கு ஒரு முடிவும் இல்லை.
அடிக்கொருதரம் நான் கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே ஷாப்பின் வழியாக வேகமாக நடந்து, ஒரு கடமை முடிந்தது என்பது மாதிரி அறைக்குத் திரும்பி வந்தபோது முதல் ஷிஃப்ட்டின் ரிப்போர்ட் மேஜைமீது இருந்தது. அதில் வேகமாகக் கண்களை ஓட்டினேன். எல்லாம் ஒழுங்காக இருந்தன. ப்ரோக்ராம், டார்கெட் ஆகியவற்றை அனுசரித்து அதிகமாகவும் இல்லை, குறைவாகவும் இல்லை. சிவப்புக் கோடு, நீலக் கோடு ஆகியவற்றின் சுகமான திருமணம். அதை எடுத்து ஷிஃப்ட் ரிப்போர்ட்கள் இருந்த ஃபைலில் வைத்தேன். பிறகு முன்பே தயாராக்கி வைத்திருந்த பேப்பர்கள் எல்லாவற்றிலும் கையெழுத்துப் போட்டு ராக்கில் வைத்தேன். டாக் ஃபைலைப் பார்த்தேன். சர்க்குலர்களையும் நோட்டீஸ்களையும் அறிவிப்புப் பலகையில் இடுவதற்காகக் கொடுத்தனுப்பினேன். எல்லாம் முடிந்ததும் தபாலில் வந்திருந்த "மெக்கானிக்கல் என்ஜினியரிங்" என்ற பத்திரிகையின் கவரை உடைத்து, புரட்டிப் பார்த்தேன். அப்போது வெல்ஃபேர் சர்வீஸைச் சேர்ந்தவர்களும் தொழிலாளர்களும் யூனியனின் உறுப்பினர்களும் க்ரேனுக்கு அடியில் சிக்கி இறந்த எரெக்ஷன் ஃபிட்டரின் குடும்பத்திற்காகப் பணம் கேட்டு வந்தார்கள். யூனியன் கேட்டுக் கொண்டபடி அந்த மனிதனின் மகனுக்குக் கம்பெனி எரெக்ஷன் ஃபிட்டர் வேலையைக் கொடுத்திருக்கிறது. எனினும் ஒரு மரணத்தின் இழப்பு எஞ்சியிருக்கிறதே! நான் என்னுடைய பங்கு பணத்தைக் கொடுத்தேன். அவர்கள் சென்றதும் இரண்டாவது ஷிஃப்டில் பணியாற்றும் ஷிஃப்ட் எஞ்ஜினியர் உள்ளே வந்தார். நான் அவரிடம் ஏதாவது ரிப்போர்ட் செய்ய வேண்டியதிருக்கிறதா என்று கேட்டேன். "இல்லை" என்று அவர் சொன்னார். "மெஷின்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. பணியாட்கள் எல்லாரும் வந்திருக்கிறார்கள். எல்லாம் ஒழுங்காக நடந்து கொண்டிருக்கின்றன. நல்ல முறையில்...''- அவர் கூறினார். ப்ரோடக்ஷன் கன்ட்ரோலர் கேட்டிருந்த ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட் இருக்கிறது. நான் அவரிடம் சொன்னேன்: "டைப் செய்ய அனுப்பி இருக்கிறேன். கிடைத்தவுடன் நீங்களே கையெழுத்துப் போட்டு அனுப்பிடுங்க. இன்னைக்கு நான் கொஞ்சம் முன்னாடியே போகணும்.''
அவர் போனதும் நான் ஜன்னல் வழியாகக் கெமிக்கல் ப்ளான்டின் புகைக் குழாய்களைப் பார்த்தேன். இப்போது அவை சரியாக இருந்தன. இருப்பவற்றிலேயே மிகவும் பெரிதாக இருக்கும் குழாய்க்குள் இருந்து மிகவும் அடர்த்தியான புகை, அதைவிட சிறிய குழாயில் இருந்து குறைவான புகை, மிகவும் சிறியதில் இருந்து எதுவும் வரவில்லை. எல்லாம் பழைய மாதிரி.