உத்தராயணம் - Page 26
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6368
டாக்டர் என்னை ஓய்வெடுக்க அனுமதித்தார். அவருடைய கைகள் மேஜைமீது இருந்த மஞ்சள்நிற உறையில் உயிரற்றவைபோல பதிந்திருந்தன. முகத்திலிருந்து உணர்ச்சிகள் இல்லாமல் போயிருந்தன. அமைதியும் உறுதியும் நிறைந்த குரலில் என் முகத்தைப் பார்த்துக் கொண்டே அவர் கூற ஆரம்பித்தார்: "உங்களுடைய மன ஓட்டத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் இருப்பது போன்ற நிலைமையில் இந்த மனபயம் சாதாரணமாக இருக்கக் கூடியதுதான். ஆனால், ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.'' அவருடைய குரல் திடீரென்று பெரிதானது. "உங்களுடைய விஷயத்தில் நாங்கள் எந்தச் சமயத்திலும் அலட்சியத்தைக் காட்டியது இல்லை. உங்களை நான் எந்த நேரத்திலும் சாதாரணமாக எடுத்துக் கொண்டதில்லை. உங்களை நாங்கள் எத்தனை வருடங்களாகப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்று உங்களுக்குத் தெரியாது.'' தொடர்ந்து மீண்டும் தாழ்ந்த குரலில் கூறினார்: "அது மட்டுமல்ல. எங்களுடைய சோதனைகள் எதுவும் தோல்விகளில் முடிந்ததில்லை. அவை எதையும் காட்டவில்லை என்று உங்களுக்குத் தோன்றுகிறது. உண்மை வேறு. அவை ஒவ்வொன்றும் ஒரு விஷயத்தை மேலும் மேலும் தெளிவுபடுத்தியது. இந்த ரிப்போர்ட்கள் அனைத்தும் பிறகும் அதையேதான் கூறுகின்றன. உங்களிடம் வெளி உலகம் திணித்தது என்றோ, அந்த உலகத்துடன் கொண்ட உறவால் வந்து சேர்ந்தது என்றோ எதுவும் இல்லை. உங்களிடம் மற்ற மனிதர்களிடம் இல்லாத எதுவும் இல்லை. ட்யூமர்களோ டிஷ்யூ மாறுதல்களோ இல்லை. நோய் அணுக்கள் இல்லை. காயங்கள் இல்லை. அல்சர் இல்லை. உங்களிடம் இருப்பது ஒரு நோய் அல்ல. உங்களிடம் இருப்பது ஒரு குறை. இயலாமை, இல்லாமை, பற்றாக்குறை...''
அவருடைய குரல் குறைந்து குறைந்து இல்லாமல் போனது. எனக்கு நேராக இருந்த பார்வை கூர்மையாகி, எனக்குள் திருகு உளிகளைப்போல ஆழமாக இறங்க ஆரம்பித்தது. நான் நடுங்கிப் போய்விட்டேன். ஒரு மந்திரவாதியைப்போல பிரம்பை எடுத்து அவர் என்னை இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் அடிப்பாரோ? வெளி உலகத்தில் இருந்து வராதது, எனக்குள்ளேயே இருப்பது... அவருடைய விரல் எனக்கு நேராக நீண்டு கொண்டிருந்தது. வாடா, வெளியே வாடா, உன் திருட்டுத்தனத்தை இன்று நான் வெளியே கொண்டு வருவேன்!
"என்னிடம் அப்படி என்ன இருக்கு டாக்டர்? எனக்கு என்ன?''- நான் குனிந்து மன்னிப்புக் கேட்கிற மாதிரி கேட்டேன். நான் கீழ்ப்படிந்து கொண்டிருந்தேன். "அப்படி இருக்காது டாக்டர். நான் வயதில் இளையவன். எனக்கு விபத்துகள் எதுவும் நடந்தது இல்லை. எனக்குக் கெட்ட பழக்கங்கள் இல்லை. நான் கம்பெனிக்கு எதிராக எதுவும் செய்தது இல்லை. நான் ஒரு சட்டத்தையும்... டாக்டர்!''
"உங்களுடைய குற்றம் அல்ல. சாதாரணமாக அது இருக்கக் கூடியதுதான். என் மகன் மட்டும்தான் இந்த பரேடில் சரியாக மார்ச் பண்ணி நடக்கிறான் என்று முன்பு ஒரு தாய் கூறவில்லையா?''- டாக்டர் மீண்டும் முகத்தில் ஒரு புன்னகையைக் கொண்டுவர முயற்சித்தார். அவருடைய குரலில் மீண்டும் கனவு வந்து சேர ஆரம்பித்திருப்பதைப்போலத் தோன்றியது. "தனக்குக் குறைபாடுகள் இருக்கின்றன என்று உலகத்தில் உள்ள ஒருவனும் ஒப்புக் கொள்ள மாட்டான். உங்களுக்கு இந்த கம்பெனியுடன் ஒத்துப்போக முடியவில்லை. அதனால் நீங்கள் ஒவ்வொரு நோய்களையும் கண்டுபிடிக்கிறீர்கள். காலநிலையைப் பழிக்கிறீர்கள். இப்படி இருப்பது ஒரு நோய் அல்ல, நண்பரே. இது வளர்ச்சியாகிறது. இது வளர்ச்சிக்கான காலநிலை. வளரும் மனிதன் தனக்கென்று ஒருகால நிலையை உண்டாக்குகிறான். அதற்கேற்றபடி அவன் வளர வேண்டும். நீங்கள் வெப்பத்தின்மீது பழியைச் சுமத்துகிறீர்கள். நெருப்பில் உருகாமல் உங்களால் உலகத்தை காஸ்ட் செய்ய முடியுமா? நீங்கள் அதிகரிக்கச் செய்த நெருப்பால் நீங்கள் தன்னைத்தானே உருக்கி வடிவத்தை அடைகிறீர்கள். அதற்கேற்றபடி செயல்படுகிறீர்கள். உஷ்ணம்தான் ஒரு இயந்திரத்தைச் செயல்பட வைக்கிறது என்பதை உங்களிடம் நான் கூற வேண்டுமா? சொல்லுங்க. ஒரு இயந்திரத்தின் மேஜிக்தான் என்ன? அதன் பாகங்களுக்கு அதன் சக்திமீது வைத்திருக்கும் நம்பகத்தன்மையும் கடுமையான உழைப்பும் நீக்கு போக்கு இல்லாத பணிவும்...'' சற்று அவர் நிறுத்தினார். தான் அமர்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்து வந்து என்னுடைய தோளில் கையை வைத்துக்கொண்டு அவர் தொடர்ந்தார்: "இதற்கு அர்த்தம் உங்களை நாங்கள் கைவிட்டு விட்டோம் என்பதல்ல. எங்களைப் போன்ற டாக்டர்களுக்கு இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. மருந்தும் ஆபரேஷன் கத்தியும். இன்னும் ஒரு சோதனையும் நடத்த வேண்டியிருக்கிறது- முடிவு என்பதற்காக. நாளை மறுநாள் நீங்கள் வேறொரு இடத்திற்குச் செல்கிறீர்கள். நாளை மறுநாள்- திங்கட்கிழமை.''
தொடர்ந்து அவர் புதிய ஸ்பெஷலிஸ்ட்டின் கார்டை என்னிடம் தந்தார். அவருடைய சேம்பருக்குச் செல்லக்கூடிய பேருந்து எண்ணையும் எங்கு இறங்க வேண்டும் என்பதையும் இறங்கிய பிறகு எந்த வழியாக நடக்க வேண்டும் என்பதையும் எனக்கு விளக்கிக் கூறினார். நான் எதுவும் கூறவில்லை. அவர் கூறியவை அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். எழுந்தபோது எக்ஸ்ரே ஃபிலிம்களும் அதன் ரிப்போர்ட்டும் வைக்கப்பட்டிருந்த மஞ்சள்நிற உறையை அவர் என் கையில் தந்தார். நான் அதை வாங்கினேன். அப்போதும் மேஜைமீதிருந்த புத்தகத்தை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதைக் கண்டதும் அவர் அதை எடுத்து ஷெல்ஃபில் அது இருந்த இடத்தில் வைத்தார். அதற்குப் பிறகும் நான் எதுவும் கூறவில்லை. எதுவும் பேசாமல் எக்ஸ்ரே ஃபிலிம்களை வாங்கிக் கொண்டு, மகனுடைய விளையாட்டு பொம்மை இருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு நான் நடந்தேன். வாசலை அடைந்தபோது அவர் மீண்டும் பின்னால் இருந்து கூறினார்: "நான் ஒரு விஷயத்தை மறந்தே விட்டேன். மேனேஜிங் டைரக்டர் உங்களைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார். தாமதமானாலும் உங்களுக்காக அலுவலகத்தில் காத்திருப்பதாகவும் பார்த்த பிறகே போவதாகவும் சொன்னார்.''
பார்க்க வருபவர்களின் ஓய்வறையையும் சிற்பத்தையும் வாசலில் இருந்த பூக்களையும் தோட்டத்தையும் கடந்து நான் பாதையின் வழியாக நடந்தேன். வெயில் சாய்ந்திருக்கிறது. எனினும் வெப்பம் இருந்தது. நான் பாதையின் வழியாக நிழல் இருந்த பக்கமாக நகர்ந்து நடந்தேன். தளர்ச்சி என்னுடைய கால்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தது. தடுமாறி விழாமல் இருப்பதற்காக நான் கீழே பார்த்தவாறு நடந்தேன். எல்லாரும் ஏதாவது ஒன்றுடன் சம்பந்தப்பட்டு இருக்கின்ற சுறுசுறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த தொழிற்சாலையில், இங்கு தனியாக ஒரு பாதையின் வழியாக நான் கீழே பார்த்தவாறு நடந்து போய்க் கொண்டிருந்தேன். செங்கல் விழுந்து காயமான அந்தக் கூலிக்காரனைப் பற்றி நான் விசாரிக்காமல் விட்டுவிட்டேன்.