உத்தராயணம் - Page 24
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6367
நான் நாற்காலியில் சற்று சாய்ந்து நிமர்ந்தேன். நாற்காலியின் கையில் கையை ஊன்றிக் கொண்டு இருக்கையில் இருந்து நிமிரலாம் என்று நினைத்து, வேண்டாம் என்று இருந்து விட்டேன். வேண்டாம்... உடற்பயிற்சி அல்ல. ஓய்வுதான் எனக்குத் தேவை. ஓய்வைப் புரிந்துகொள்ளவில்லையென்றால் களைப்புதான் உண்டாகும். பரவாயில்லை. என்னுடைய வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டன. மேஜை சுத்தமாக இருந்தது. நாள் முடிய ஆரம்பித்திருக்கிறது. கடிகாரத்தில் மணி மூன்றரை. காலண்டரில் தேதி பதினெட்டு. நாளை ஞாயிற்றுக் கிழமை. இனி வெயில்தான்.
வெயில்...
நான் நாற்காலியை விட்டு எழுந்து, வளையத்தில் இருந்து தொப்பியை எடுத்துத் தலையில் வைத்து, விருந்தாவன் கொண்டு வந்த விளையாட்டு பொம்மை இருந்த பெட்டியை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்லும் பாதை வழியாக நடந்தேன்.
நான் தூரத்தில் ஒரு இடத்தில் ரெயில்வே லைனைத் தாண்டிச் செல்ல வேண்டும். அதன் வழியாக ஒரு எஞ்ஜின் ஆறு ஏழு வேகன்களை இழுத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அதன் சத்தம் இங்கு கேட்கவில்லை. ஒவ்வொரு வேகனும் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் வெயில் பட்டு அதில் இருந்த பொருள் ஒரு மின்னலைப்போல ஒளிர்ந்தது. எல்லா வேகன்களிலும் ஒரே பொருள்தான் ஏற்றப்பட்டிருந்தது. அப்பால் இருக்கும் தொழிற்சாலையில் தயாரான ஏதோ உற்பத்திப் பொருள். அருகில் இருந்திருந்தால் தெரிந்திருக்கும். பரவாயில்லை. அவை அனைத்தும் கடந்து போவதற்குள் நான் மருத்துவமனைக்குச் செல்லும் திருப்பத்தில் திரும்பி விட்டிருந்தேன். மருத்துவமனைக்குச் சென்றால், காலையில் காயம் பட்ட மனிதனின் நிலைமையைத் தெரிந்து கொள்ளலாம். டாக்டரிடம் கேட்க வேண்டும்.
எங்கு தவறு நடந்திருக்கும்? ஒரு ஆதாரமும் இல்லை. பாவம் மனிதன். ரத்தம் சிந்தி, ஒடிந்தோ நசுங்கியோ போன உறுப்புகளுடன் படுத்திருப்பான். தலையில் அடி பட்டிருந்தால் உணர்வுகள் இல்லாமல் போகும். அதிர்ச்சியால் ரத்தக் குழாய்களில் ஏதாவது வெடித்திருந்தால், வாயிலும் மூக்கிலும் ரத்தம் வரும். பெரிய விபத்துகளில் குருதி இழப்பால்தான் பல நேரங்களிலும் காயம் பட்டவர்கள் மரணத்தைத் தழுவுகிறார்கள்.
கம்பெனியின் மருத்துவமனைக்கு முன்னால் ஒரு சிறிய தோட்டம் இருக்கிறது. இன்று காலையில் தோட்டக்காரன் காட்டிய மலர்கள் எல்லாவற்றையும் அங்கு பல பாத்திகளிலும் நான் பார்த்தேன். நான் அவற்றின் பெயர்களை நினைவுபடுத்திப் பார்க்க முயற்சித்து, வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.
டாக்டரின் பரிசோதனை அறைக்கு முன்னால் நான் நின்றிருந்தேன். பின்னால் இருபது படுக்கைகள் கொண்ட வார்டு. அதை நான் பார்த்ததில்லை. பரிசோதனை அறையிலும் க்ளினிக்கிலும் என்னுடைய வேலைகள் முடிந்துவிடும். நான் பரிசோதனை அறையின் ஓரத்திலிருந்த வெயிட்டிங் அறைக்குள் நுழைந்து நேராக நாற்காலியில் போய் உட்கார்ந்தேன். நான்கு மணி ஆவதற்கு இன்னும் நேரம் இருந்தது.
இங்கு இப்படிக் காத்திருக்கும்போது ஒவ்வொரு முறையும் என்னுடைய கவனத்தை ஈர்ப்பது அறையின் மூலையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு நவீன சிற்பம்தான். இரும்பாலான ஃப்ளாட், தகடு, கம்பி, ஆங்கிள் ஆகியவற்றால் வெல்ட் செய்து உண்டாக்கப்பட்டது அது. எதற்காக சிற்பி அதை அப்படி உண்டாக்கியிருக்கிறார் என்று நான் ஆச்சரியப்படுவேன். அந்தக் காலத்தில்தான் மனிதர்கள் இப்படியெல்லாம் செய்திருக்கிறார்கள். கல்லை, மரத்தை, உலோகத்தைக்கூட உருக்கி, அடித்து, சரி செய்து வடிவப்படுத்தி இருக்கிறார்கள். இப்போது அப்படிப்பட்ட சிரமமான வழிகளை யார் ஏற்றுக் கொள்கிறார்கள்? எல்லாவற்றையும் தூள் தூளாக்கி, உருக்கி, திரவமாக மாற்றி, மோல்டுகளில் ஊற்றி, காஸ்ட் செய்வதுதான் இப்போதைய பாணி. எளிதாக யாரும் செய்யலாம். ஒரே வடிவமைப்பில், எந்தவொரு வித்தியாசமும் இல்லாமல் எவ்வளவு எண்ணிக்கையில் வேண்டுமென்றாலும் உண்டாக்கலாம். சொல்லப்போனால்- அந்த வெறும் சிரமத்தின்மீது கொண்ட ஆர்வத்தால் மட்டுமா அந்த மனிதர் இதைச் செய்தார்? எனக்குப் புரியவில்லை. புரியாதது என்ற ஒன்று அங்கிருந்த எல்லாவற்றிலும் கலந்து விட்டிருந்தது. ஜன்னல் வழியாகத் தோட்டத்தையும், அங்கிருந்த பெயர் தெரியாத மலர்களின் புரியக் கூடிய அழகையும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவற்றின் அழகு என்னிடம் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வை உண்டாக்கியது.
அப்படியே எவ்வளவு நேரம் நான் உட்கார்ந்திருப்பேன்? தூங்கிவிட்டேன் என்று நினைக்கிறேன். டாக்டரின் "ஹலோ?" என்ற சத்தம்தான் என்னை அந்தப் புரியாத தூக்கத்தில் இருந்து மீளச் செய்தது. "மன்னிக்கணும். ஒரு நோயாளியின் நிலைமை கொஞ்சம் ஆபத்தானது''- அவர் சொன்னார்: "நான் ஒரு பதினைந்து நிமிடங்களில் வருகிறேன். இதோ.... இவற்றைப் பார்த்துக் கொண்டிருங்க...'' ஷெல்ஃபில் இருந்து கொஞ்சம் படங்கள் போட்ட பத்திரிகைகளை அவர் எடுத்து என்னிடம் தந்தார். "இல்லாவிட்டால் ஓய்வு வேண்டுமென்றால், இதோ இங்கே போங்க... என் அறைக்கு. இங்கே ஒரு ஈஸி நாற்காலி இருக்கு.''
"பரவாயில்லை டாக்டர். இந்த வெப்பம்தான்...''- நான் சொன்னேன்: "தாங்க முடியாத காலநிலை. மனிதனைத் தளர்வடையச் செய்யுது.'' அவர் அதைக் கேட்கவேயில்லை. படங்கள் போட்ட பத்திரிகைகளுடன் அவர் என்னை கையைப் பிடித்து அவருடைய அறைக்கு அழைத்துச் சென்றார்.
டாக்டரின் ஈஸி நாற்காலியில் அமர்ந்து நான் பத்திரிகைகளின் பக்கங்களைப் புரட்டினேன். கனமான ஆர்ட் பேப்பரில் கண்களில் சிறிதளவில்கூட தொந்தரவு உண்டாக்காத அழகான வண்ணங்களில் அச்சடிக்கப்பட்ட படங்கள். உயரத்தில் இருக்கும் நீலநிறத்தில் பறந்து கொண்டிருக்கும் ஆகாய விமானங்கள், பெரிய அளவில் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள், டூத் பேஸ்ட், சிகரெட், மார்ட்டினி, சிரித்துக்கொண்டிருக்கும் முகங்கள், விரிந்த கண்கள், இசை, மகிழ்ச்சி, வெற்றி... பதினைந்து நிமிடங்கள்.
டாக்டர் வரவில்லை- இந்தப் பதினைந்து நிமிடங்களுக்குள். அந்த நோயாளி இறந்திருக்கலாம். அல்லது- இறக்காமலும் இறப்போமா என்று தெரியாமலும் படுத்திருக்கலாம். இப்போது நான் எழுந்து பத்திரிகைகளை மடித்து வைத்துவிட்டு அறைக்குள்ளேயே சுற்றி நடந்தேன். சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த ஒரு மருந்து கம்பெனியின் காலண்டரில் இருந்த படத்தைப் பார்த்தேன். அந்தக் காலத்தில் வைத்தியர்கள் மகரிஷிகளாக இருந்த காலத்தில் ஒரு மகரிஷி தன் ஆசிரமத்தில் செய்யும் சிகிச்சையைக் காட்டும் படம். சீடர்கள் நோயாளி தப்பித்துச் செல்ல முடியாத மாதிரி, அவனுடைய கை, கால், தலை ஆகியவற்றை அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் காலண்டரைப் பார்ப்பதை விட்டுவிட்டு, பிறகும் நடந்தேன். இறுதியில் ஷெல்ஃபில் இருந்து "க்ளினிக் கல் மெத்தேட்ஸ்" என்ற ஒரு புத்தகத்தை எடுத்து மீண்டும் நாற்காலியில் வந்து உட்கார்ந்தேன்.
வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளைப் பார்த்தும் படித்தும் சிகிச்சை செய்தும் கிடைக்கக்கூடிய அறிவை ஆதாரமாகக் கொண்ட சிகிச்சை முறைக்கு க்ளினிக்கல் முறை என்று கூறுகிறார்கள்.