உத்தராயணம் - Page 28
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6368
தாமதமானாலும் எனக்காகக் காத்திருப்பார்.
விழுந்து கொண்டிருக்கும் செங்கற்களுக்குக் கீழே நின்றுகொண்டு தப்பித்த தொழிலாளியைப்போல வியர்த்தும் தளர்ந்து போயும் மேலும் கீழும் மூச்சுவிட்டுக் கொண்டும் நான் மேனேஜிங் டைரக்டரின் வாசல் கதவைத் தட்டினேன்.
வயதானவராக இருந்தாலும் சுறுசுறுப்பான மேனேஜிங் டைரக்டர். எழுந்து நின்று ஒரு காலை உயர்த்தி நாற்காலியில் வைத்துக்கொண்டு யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் உரையாடலுக்கு மத்தியில் அவர் தலையால் வரவேற்று, கையை நீட்டி நாற்காலியில் உட்காரும்படி சைகை காட்டினார். அவருடைய கழுத்திலிருந்து டை தொங்கிக் கொண்டிருந்தது. வெள்ளிக் கம்பிகளைப்போல இருந்த நீளமான தலைமுடி தொங்கிக் கொண்டிருந்தது. மரியாதை உணர்வு காரணமாக இருக்கலாம். உரையாடலை சீக்கிரமே முடிப்பதற்காக அவர் வேகத்தைக் காட்டினார்.
தொலைபேசியைக் கீழே வைத்துவிட்டு அவர் எனக்கு நேராகப் பார்த்துப் புன்னகைத்தார். அப்படியே புன்னகைத்துக்கொண்டே பெல்லை அழுத்தினார். ப்யூனை அழைத்து தேநீர் கொண்டு வரும்படி சொன்னார். பிறகு அவர் அமர்ந்தார்.
"பிறகு... நான் எல்லாவற்றையும் கேள்விப்பட்டேன். நான் மிகவும் வருத்தப்படுகிறேன்''- எங்களுக்கிடையே இருந்த பூ ஜாடியைச் சற்றுத் தள்ளி வைத்து விட்டு, முன்னோக்கி நகர்ந்து எனக்காகக் காத்திருந்த அந்த மனிதர், நேராக விஷயத்திற்கு வந்தார். அவர் என்னைவிட முன்பே எல்லா விஷயங்களையும் அறிந்திருந்தார். எல்லாம் தெரியும் என்ற ஒரு வெளிப்பாடு அவருடைய முகத்தில் நிறைந்திருந்தது. அறியாமை பற்றிய குற்றத்துடன் என் தலை தானே குனிந்தது.
"எது எப்படி இருந்தாலும் நாளை மறுநாள் நீங்கள் ஸ்பெஷலிஸ்ட்டைப் பாருங்க''- அவர் தொடர்ந்து சொன்னார்: "டாக்டரிடம் உங்களுக்கான பரிசோதனையைத் தொடர்ந்து செய்யும்படி நான் கூறியிருக்கிறேன். நாங்கள் உங்களுக்காக செய்ய வேண்டியவை அனைத்தையும் செய்வோம். இதைக் கூறுவதற்குத்தான் உங்களை நான் அழைத்தேன். நீங்கள் உங்களுடைய நல்ல ஆயுள் முழுவதையும் கம்பெனிக்குத் தந்தீர்கள். கம்பெனி உங்களைக் கை கழுவிவிட்டு விடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை. உங்களுடைய கேஸ் சற்று தீவிரமானது. அதனால் கடுமையான மருந்தைச் சாப்பிட வேண்டியது வரலாம். எது எப்படி இருந்தாலும் அதை உங்களுடைய கம்பெனிதானே தருகின்றது!''
இதெல்லாம் யாருக்கும் தெரியாதவை அல்ல. கம்பெனிக்கு நான் தேவைப்படுகிறேன். எங்கள் எல்லாரையும். உண்மையாகச் சொல்லப்போனால் நாங்கள் இல்லாமல் இந்தக் கம்பெனிதான் என்ன? ஒரு நல்ல உற்பத்திப் பொருளின் விலை அதைத் தயாரிப்பதில் செலவழித்த மனித உழைப்பு என்பதுதானே சித்தாந்தம்? ஒவ்வொரு கம்பெனியின் நோக்கமும் உற்பத்திப் பொருட்களுக்கு விலை உண்டாக்கும் அதன் தொழிலாளர்களை கவனித்துப் பாதுகாப்பதுதான். அவர்களை நோய் அணுக்களுக்கு எதிராக ஊசி போட்டும் நோய் வந்தால் சிகிச்சை செய்தும் காப்பாற்றி வளர்க்க வேண்டும். அதற்காக கம்பெனிகள் மருத்துவமனைகளையும் கல்விக்கூடங்களையும் நடத்துகின்றன. கம்பெனியின் உரிமையாளர்களுக்கு லாபம் உண்டாக்கிக் கொடுப்பதற்கு அவர்கள் தேவையாயிற்றே! அவர்களுடைய போர்களில் உயிரை விட்டாவது போரிட்டு வெற்றி வாங்கிக் கொடுப்பதற்கு அவர்கள் வேண்டுமே!
பிறகு எதற்கு மேனேஜிங் டைரக்டர் இதையெல்லாம் என்னிடம் கூற வேண்டும்? இதைக் கூறுவதற்கு எதற்காக என்னை வரவழைத்தார்? எனக்காக அலுவலக நேரம் முடிவடைந்த பிறகும் எதற்காகக் காத்திருக்கிறார்? சார், ஆனால் இது ஒரு நோய் அல்ல. இதற்கு சிகிச்சை இல்லை. பரிசோதனை செய்யச் செய்ய தொடர்ந்து ஒன்றே ஒன்றை மட்டுமே வெளியே கொண்டு வரும் அந்தப் பரிசோதனைகள்தான். நான் தளர்ந்து போயிருக்கிறேன். என்னுடைய உள்ளம் வெறுமையாகிவிட்டிருக்கிறது. என்னால் இனிமேல்...
"என்ன எதுவும் பேசாம இருக்கீங்க? தேநீர் குடிங்க...'' - அவர் என்னை அழைத்தார். ப்யூன் தேநீர் கொண்டு வந்து வைத்ததை நான் பார்க்கவில்லை. ஒருவகையான செயலற்ற தன்மையுடன் நான் தேநீர் கோப்பையை எட்டிப் பிடித்தேன். அதிலிருந்த தேநீரில் மூழ்கினேன்.
என்ன கூறவேண்டுமென்று தெரியாததைப்போல மேனேஜிங் டைரக்டர் மேஜைமீது இருந்த பேப்பர்களைப் புரட்டிக் கொண்டிருந்தார். பூ ஜாடியை எடுத்து வெறுமனே முன்னால் நகர்த்தி வைத்தார். அதில் சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் இருந்த மலர்கள் எங்களுக்கு இடையே வந்தன. அந்த மலர்களுக்குப் பின்னால் அவருடைய முகம். உருகிய உலோகத்தைப்போல படிப்படியாக உறைவதையும் அசைவே இல்லாமல் ஆவதையும் நான் பார்த்தேன். சலனங்கள் எதுவும் இல்லாத முகத்திற்குக் கீழே, வேறு யாருடையவோ என்று தோன்றுகிற மாதிரி அவருடைய கைகள் மீண்டும் பேப்பர்கள்மீது செயல்பட்டுக் கொண்டிருந்தன. பூ ஜாடி மீண்டும் முன்னோக்கி நகர்ந்தது. அவருடைய முகம் முழுமையாக மறைந்து விட்டது. ஒவ்வொரு முறையும் தேநீர்க் கோப்பையிலிருந்து குனிந்து நிமிர்ந்தபோது நான், எனக்கும் மேனேஜிங் டைரக்டருக்கும் இடையே அந்த சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் இருந்த மலர்களைப் பார்த்தேன். தோட்டத்திலிருந்து காலையில் பறித்தெடுத்த மலர்கள். அவை வாடத் தொடங்கியிருக்கின்றன. மலர்ந்த நாளன்றே வாடும் மலர்கள். அதற்குப் பிறகும் மலர்கள் மலர்கின்ற செடிகள். வெயிலில் வாடாத செடிகள். வெயிலில் மட்டுமே பூக்கும் செடிகள். சென்ற கோடையில் நாங்கள் காடுகளுக்குச் சுற்றுலா போயிருந்தோம். மரங்களுக்குக் கீழே கூடாரங்கள் அமைத்தோம். கொம்புகளையும் இலைகளையும் வெட்டி... கொம்பை மத்தியில் வெட்டி, செடிகளில் கட்டி... வேட்டையாடி இரவில் நெருப்பைப் பெரிதாக எரிய விட்டு... அடுத்த கோடையில் நாங்கள்... நாங்கள்... நான்... விருந்தாவன் தனக்கு அறிமுகமில்லாத ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வருவார். ஏழு வருடங்களுக்கு முன்னால் நான்... ஏழு வருடங்களுக்குப் பிறகு.... நான் முடியும் இடத்தில்... என்னுடைய தேநீர் தீர்ந்திருக்கிறது. மேனேஜிங் டைரக்டரின் தேநீர் தீர்ந்திருக்கும். பார்க்க முடியாது.
மலர்களுக்குப் பின்னாலிருந்து மேனேஜிங் டைரக்டர் தொண்டையை வெளிப்படுத்தும் குரலில் கூறினார்: "பிறகு... கம்பெனி உங்களுடைய காரியங்களுக்காக உண்மையாகவே முயற்சிக்கும் என்று நான் கூறுகிறேன். உங்களுடைய வாரிசுகள்...''
"சார்... என்னுடைய...''
"ஆமாம்... ஆமாம். அதைத்தான் நான் சொன்னேன். நீங்கள் உங்களுடைய நல்ல ஆயுள் முழுவதையும் கம்பெனிக்குக் கொடுத்திருக்கீங்க. கம்பெனி உங்களுடைய குடும்பத்தைக் கை விட்டுடும்னு நீங்க நினைக்கிறீங்களா? நாங்கள் உங்களுடைய மனைவிக்கும் மகனுக்கும் முடியக்கூடிய எல்லாவற்றையும் செய்வோம். எங்களுடைய குடும்பப் பாதுகாப்புத் திட்டம்... பிறகு உங்களுடைய இன்ஷூரன்ஸ்... அதைப் பற்றிய எல்லா விவரங்களையும் எங்களிடம் கொடுங்க. நாங்கள் முடிந்த வரையில் முயற்சிப்போம். ஒரு கல்லைக்கூட நாங்கள் புரட்டாமல் விடமாட்டோம். பிறகு... இந்த மாதிரியான கேஸ்களில் இன்ஷூரன்ஸ் கம்பெனிக்காரர்கள் கொஞ்சம் பிடிவாதமாக இருப்பார்கள் என்பது தெரியும்ல?''