உத்தராயணம் - Page 27
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6367
இறக்காமலும் இறந்து விடுவோமோ என்று தெரியாமலும் படுத்திருக்கும் அந்த நோயாளியைப் பற்றியும் நான் விசாரிக்கவில்லை. ஒருவேளை செங்கல் விழுந்து காயம்பட்டவனாகத்தான் இருக்கும் அது. அவன் இந்த நேரத்தில் உலகத்தில் இல்லை என்று வரலாம். நான் நுழைந்தபோது அவன் இருந்தான். மருத்துவ மனைக்குள் சென்றபோது இருந்த நான் இப்போது இருக்கிறேனா?
என் கையில் இருந்த அந்த எக்ஸ்ரே ஃபிலிம்களில் என்னுடைய மாறிய படம் இருக்கிறது. எனக்கு அதன் மொழி புரியவில்லை. ஆனால் கறுத்ததும் வெளுத்ததுமாக இருக்கும் அடையாளங்களில் அது என்னை உள்ளவை, இல்லாதவைகளுடன் பிரித்திருக்கிறது. அதற்கு முன்னால் இருக்கும் எல்லாவற்றையும் இந்த எக்ஸ்ரே இயந்திரம் இரண்டாகப் பிரித்துத் தருகிறது. மேன்மைகளையும் குறைவுகளையும் நல்லதையும் கெட்டதையும் புண்ணியத்தையும் பாவத்தையும் வெற்றியையும் தோல்வியையும் நட்பையும் பகையையும் பழையதையும் புதியதையும் கிழக்கையும் மேற்கையும் கிறிஸ்துவிற்கு முன்பையும் கிறிஸ்துவிற்குப் பின்பையும்... டாக்டர் எதையோ கூறட்டும். திங்கட்கிழமை நான் ஏதோ பேருந்தில் ஏறி எங்கேயோ போகிறேன். உலகம் இடிந்து விழட்டும். இங்கு நான் உருவாக்கப்பட்டுவிட்டேன். என்னைப்போல ஒவ்வொருவரும். தெளிவாக வேறுபாடு இல்லாமல். பேட்டர்ன் மேக்கர், டைஸிங்கர், டர்னர், மில்லர், அக்கவுண்டன்ட், எஞ்ஜினியர், டாக்டர்- ஒவ்வொருவனும் அவனவனின் அடையாளங்களை உயர்த்தித் தங்களை வெளிப்படுத்துகின்ற கறுத்ததும் வெளுத்ததுமாக இருக்கும் எக்ஸ்ரே ஃபிலிம்களை மார்பில் சேர்த்துப் பிடித்துக் கொண்டு, அடித்துச் சலவை செய்வதற்காக உட்பகுதி வெளிப்பகுதியான தலையணையைப்போல வரிசையாக நின்று கொண்டிருக்கிறார்கள்.
ஒருவனுக்கும் அவனுடைய எல்லையை விட்டு தாண்டிச் செல்லும் அதிகாரம் இல்லை. திறமை இல்லை. ஆசை இல்லை.
கடக்கக்கூடாத இடத்தை நான் எதற்காகக் கடக்கிறேன்? தெரிந்து கொள்ளக் கூடாததை ஏன் கறுத்த நிறத்தில் அடையாளப்படுத்தக் கூடாது? எனக்கு அப்பால் இருப்பவற்றுக்கு நேராக நான் கண்களை மூடிக் கொள்ள வேண்டும். எனக்கு வந்ததை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நான் என்ன படிக்க வேண்டும் என்பதை என்னுடைய தந்தையும் தாயும்தானே முடிவு செய்தார்கள்? நான் நல்ல ரேங்குடன் தேர்ச்சி பெற்றவுடன், ஜம்னாதாஸ் ஆஜ்மீரியா இன்டஸ்ட்ரீஸ் எனக்கு எந்தப் பேருந்தைப் பிடிக்க வேண்டுமென்பதையும் எங்கு இறங்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுக் கடிதம் அனுப்பியதே! எனக்குக் கிடைத்த ஆர்டர்கள் எல்லாவற்றிலும் அவற்றுக்குத் தேவைப்படும் ஸ்பெஸிஃபிகேஷன்கள் இருந்தன. நான் கேட்பதற்கு எதுவும் இல்லை. நான் எதையும் கேள்வி கேட்கவில்லை. யாருக்கு நேராகவும் வெடிகுண்டு வீசவில்லை. விழுந்து கிடக்கும் சரீரங்களைப் பொறுக்கி எடுக்க முயற்சிக்கவில்லை. பசியின் நெருப்பை அறியவில்லை. அபயம் தேடுபவனின் வேதனையைப் பார்க்கவில்லை. வெளி உலகத்தைப் பற்றி சிறிதும் குறைபட்டுக் கொள்ளவில்லை. வெளி உலகம் என்னிடம் நோய்கள் எதையும் ஊசி போட்டுச் செலுத்தவில்லை. எந்த அளவிற்கு எளிதாக இருந்தன என்னுடைய பாதைகள்! எந்த அளவிற்கு எளிமையாக இருந்தன என்னுடைய நாட்கள்! பிறகு எதற்கு இந்த ஃபிலிம்கள்மீது இந்தக் கோபம்...
சார்ட்டையும் க்ராஃபையும் பார்த்து, ப்ரோக்ராம் தயார் பண்ணி, ப்ரோக்ராமுக்கு ஏற்றபடி திறமை உள்ளவரும் நமக்குத் தேவையானவற்றை நம்மைவிட நன்றாகப் புரிந்து கொள்ளக் கூடியவருமான ஒரு சேர்மனுக்குப் பின்னால் ஒன்றாக அணி திரண்டு நின்று... இடக்காலை எடுத்து வைத்து நடைபோட்டு, வளையத்தைப்போல வளைந்து, வளையாதபோது ஹவில்தார் மேஜரைப்போல வளையாமல் இருந்து... நல்ல உடல் நலத்துடன், மனைவியை சந்தோஷப்படுத்தி, மகனை வளர்த்து, "ஹௌ டூ டேக் கேர் ஆஃப் யுவர்ஷெல்ஃப்" என்பதைப் புரிந்துகொண்டு, பத்திரிகை படித்து தெரிய வேண்டியவற்றைத் தெரிந்து அறியக் கூடாததை மறந்து, மனதை சஞ்சலப்படுத்தும் விஷயங்களுக்கு எதிராக நின்று, எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி, நல்ல விஷயங்களை மட்டுமே கண்டு, எல்லாம் ஒழுங்காக இருக்கும் ஒரு உலகத்தில் ஒரு சிம்ஃபனியில் இருப்பதைப்போல மிதந்து... தேடலின் வழியில் அவரைக்கொடி கொம்பில் படர்வதைப்போல வளர்ச்சிக்கான கொம்பில் முதிர்ந்த பழமாகவும் இறுதி வழித் தோன்றலாகவுமாக இருந்துகொண்டு... முழுமையான நிலையில் தொடங்கி, அப்ரீஸியேஷன் இல்லாமல் டிப்ரீஸியேஷன் மட்டுமாகத் தேயவும் வெடிக்கவும் கேடு வரவும் செய்யும்போது மீண்டும் வடிவம் எடுக்க முடியாமல்... உயர்வின் உச்சியிலிருந்து கைப்பிடியை விட்டு, நடுங்கி மனதிற்கு வஞ்சனை செய்து... சொந்த மூளையைப் பொரித்து தக்காளி சாஸும் பச்சை மிளகாயும் கலந்து உண்டாக்கிய உணவுப் பொருளின் சுவையில் மூழ்கி... செயல்படுவது என்றால் அழிவது என்று அர்த்தமாகி... வாழ்வது என்றால் இறப்பது என்றாகி... இறந்தும் அடக்கம் செய்யப்படாமல் கிடக்கும் பிணங்கள்.... சுயநலவாதிகளில் சுயநலவாதியான ஹோப்கின் ஹோப்கின்ஸ் தான் செயல்படுகிறோம் என்றும் வளர்கிறோம் என்றும் பெரிதாக ஆகின்றோம் என்றும் தவறாகக் கணக்கிட்டான். பதினேழாவது வயதில் தான் அரண்மனை என்று கருதிக் கட்டி உயர்த்திய எலும்புக்கூட்டிற்குள் தன்னுடைய பன்னிரண்டு ராத்தல் எடை கொண்ட சரீரத்தை அடக்கம் செய்து கொண்டான். லண்டனில் அது ஒரு காட்சிப் பொருளாக ஆனது...
பாதையில் நடுவில் மார்பில் கையை வைத்துக்கொண்டு நான் பாம்பைப்போல நெளிந்தேன். என்னுடைய வெறுமைத்தனம் எனக்குள் ஒரு சுழல் காற்றைப்போல கிடந்து பிரிந்தது. சுழன்று சுழன்று அது உயர்ந்து போனபோது, நான் எரிந்து அணைந்த சிதையைப்போல தரையை நோக்கி இறங்க ஆரம்பித்தேன். நான் பாதையின் ஓரத்தில் இருந்த மரத்தை எட்டிப் பிடித்து அதில் சாய்ந்து அங்கே உட்கார்ந்தேன். அங்கேயே படுத்தேன். யாராவது என்னுடைய முகத்தில் சிறிது நீரைத் தெளிக்க மாட்டார்களா? யாரும் தெளிக்கவில்லை. அங்கு எந்த இடத்திலும் யாரும் இல்லை. நீரும் இல்லை. எங்கும் காய்ந்து கிடக்கும் வெயில். நான் இந்த வெயிலுக்கு முன்னால் விழுந்திருக்கிறேன்.
போகக்கூடாத இடத்திற்கு நீண்ட என்னுடைய கால்கள்... தெரிந்து கொள்ளக்கூடாததைத் தெரிந்து கொண்ட நான்... நான் வண்ணங்களைக் கலந்து விட்டிருக்கிறேன். என்னுடைய கையை நானே வேகச் செய்திருக்கிறேன். வெயிலில் வளர்ந்த ஒரு காலநிலைக்கேற்ப வளரும் செடியின் கசப்பை நான் அறிந்திருக்கிறேன்.
அந்த வெப்பத்தை எனக்குள்ளிருந்து வெளியே கொண்டு வந்த வியர்வையைக் கொண்டு குளிர வைத்து இறுதியில் நான் எழுந்து நின்றேன். மரத்தை விட்டு என்னுடைய கால்களுக்குச் சுமையை மாற்றினேன். நான் இறக்கலாம். ஆனால் எனக்குப் பிறகும் ஒரு கண்ணி இருக்கிறது. இறப்பதற்கு முன்பு எனக்குப் பிறகு இருக்கும் அந்த கண்ணியை எட்டிப் பிடிப்பதைப்போல நான் நடந்தேன்... நான் மேனேஜிங் டைரக்டரைப் பார்க்க வேண்டும். மேனேஜிங் டைரக்டர் என்னைப் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.