உத்தராயணம் - Page 22
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6368
"ஒரு மெஷினில் ஒரே பார்வையில் தெரிகிற சிறப்பு என்ன தெரியுமா?''- விருந்தாவன் கூறிக் கொண்டிருந்தார்: "அதற்கு டிப்ரீஸியேஷன்தான் இருக்கிறது. அப்ரீஸியேஷன் இல்லை. அதற்கு எதையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அது வளர்வதில்லை. வளர்ந்து வடிவமெடுத்து, முழுமை அடைந்த ஒரு நிலையில் அது வாழ்க்கையை ஆரம்பிக்கிறது. பிறகு தேய்ந்தும் வெடித்தும் கேடு உண்டாகியும் படிப்படியாக அது அழிகிறது. செயல்படுவது என்று வைத்துக்கொண்டால், அதனால் அதற்காக அழிகிறது என்றுதான் அர்த்தம். வாழ்வது என்று வைத்துக்கொண்டால் மரணமடைவது, தானே அழிவது என்று அர்த்தம். உற்பத்தி சம்பந்தப்பட்ட தொழிலில் நம்முடைய இரண்டு கருவிகள் இயந்திரமும் மனிதரும். மனிதனுக்கு டிப்ரீஸியேஷன் தவிர, அப்ரீஸியேஷன் என்ற குணமும் இருக்கிறது. அழிய ஆரம்பிப்பதற்கு முன்னால் அதாவது- அழியும் போதே மீண்டும் வளர்வது என்பதும் அவனுக்குச் சாத்தியமானதுதான். வளர்வது என்ற சாத்தியம் இருப்பதால் அழிவு என்பது முன்கூட்டி தீர்மானிக்கப்பட்டதோ கட்டாயமானதோ அல்ல.''
அவர் திடீரென்று நிறுத்தினார். அதற்குப் பிறகு அவர் பேசவில்லை. நானும். நாங்கள் அமைதியாக நடந்தோம்.
நாங்கள் கேன்டீனிற்குள் நுழைந்தோம். விருந்தாவன் ரொட்டியையும் மாமிசத்தையும் வரவழைத்தார். நான் தேநீரையும் பிஸ்கட்டையும். எனக்குப் பசி தோன்றவில்லை. விருந்தாவன் உணவுமீது விருப்பம் கொண்டவர். எனினும் அவருக்குத் தேவைக்கும் அதிகமான எடை இல்லை. சாப்பிடும் உணவுக்கும் ஒருவனுடைய எடைக்கும் சம்பந்தமே இல்லை. மெலிந்து இருப்பதும் தடிமனாக இருப்பதும் ஒவ்வொருவருடைய உடலின் இயற்கைத் தன்மையைப் பொறுத்தது. நான் மேஜைக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு சுற்றிலும் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்த்தேன். அவர்களில் எத்தனைப் பேர் இறக்கப் போகிறார்கள்? உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒரு மனிதனைப் பார்த்தால் அவன் எந்தச் சமயத்திலும் இறப்பான் என்று தோன்றவே தோன்றாது.
அதிகமான ஆட்கள் இருக்கும் நேரம் என்பதால் வெயிட்டர் உணவைக் கொண்டுவர நேரம் அதிகமானது. எங்களுக்கு அருகில் இருந்த சாப்பிடும் மேஜைமீது கையை ஊன்றிக் கொண்டு அங்கு அமர்ந்திருந்த மனிதனிடம் பேசிக் கொண்டிருந்த கேன்டீன் உரிமையாளரையே நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். "பாருங்க நண்பரே, வளையாமலும் குனியாமலும் இருப்பதால் ஒருவன் ஒரு பெரிய மனிதனாக ஆகிவிடப் போவதில்லை. இல்லையா?'' சாப்பிட்டுக் கொண்டிருந்த மனிதன் சிரித்தான். சந்தேகத்தைத் தீர்ப்பது மாதிரி அவர் திரும்பிப் பக்கத்து மேஜைக்கு முன்னால் இருந்த மனிதனிடமும் கேட்டார். பேசும்போது அவருடைய மீசை அசைந்து கொண்டிருந்தது. வெளுத்த மீசைக்குக் கீழே வெண்மையான பற்கள். அவர் இரண்டு தடவை சிரிப்பதைப்போலத் தோன்றும். கம்பீரமான சரீரத்தையும் பெரிய வயிறையும் கொண்டிருக்கும் ஒரு மனிதர். உரையாடுவது என்றால் அவருக்கு மிகவும் விருப்பம். ஒரு பழைய பட்டாளக்காரன் என்றும், போரைப் பார்த்தவன் என்றும் பெருமையாகக் கூறிக்கொள்ளும் அவருக்குக் கூறுவதற்கு நிறைய கதைகள் இருக்கும். "நீங்கள் பெட்டாலியன் ஹவில்தார் மேஜர் என்ற ஒருவனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?''- அவர் மீண்டும் தன் நண்பனை நோக்கித் திரும்பினார்: "ஒரு அங்குலம்கூட வளைய மாட்டார். செடியைக் குழிக்குள் மூடியதைப்போல இருப்பார். அர்த்தம் இல்லை. அவர் ஒரு நல்ல ஹவில்தார் மேஜராகவே ஆக முடியும். அவருக்கு ஒரு பெயர் இல்லை. அவரை யாரும் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள்...''
"பிறகு... இன்னொரு விஷயம்...''- ரொட்டியும் மாமிசமும் வந்தவுடன், ஆர்வத்துடன் இருப்பதைப்போல மாமிசம் இருந்த தட்டில் இருந்து ஒரு துண்டை எடுத்து அதை எலும்பிலிருந்து பிரித்துக் கொண்டே விருந்தாவன் கூறினார்: "நான் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன்.''
அவர் மாமிசத் துண்டில் இருந்து கண்களை எடுக்கவே இல்லை. அதை வாயில் இடவும் இல்லை. எலும்பிலிருந்து பிரித்த பிறகும் அதனுடன் விளையாடிக் கொண்டிருந்தார்- கூறுவதற்குத் தயங்கக்கூடிய ஒரு விஷயத்தை ரிகர்ஸல் செய்து கொண்டு வந்து கூறுவதைப்போல. ஏழு வருடங்களைக் காதலில் கழித்த ஒரு மனிதர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
"கடைசியாக... கடைசியாக...''
நான் சந்தோஷத்தை வெளிப்படுத்தினேன். "எந்த அளவிற்கு எதிர்பார்த்திருந்த விஷயம்... இன்னொரு பக்கம் என்ன ஒரு பெரிய செய்தி!''
"அடுத்த மாதம் முதல் வாரத்தில்... நான் அடுத்த வாரத்திலிருந்து விடுமுறை எடுக்க திட்டமிட்டிருக்கிறேன்''- அவர் தன்னுடைய மாமிசத் துண்டை வாய்க்குள் திணிக்க முடிவெடுத்தார்.
"தேனிலவு எங்கே?''
அவர் வாயில் இருந்த மாமிசத் துண்டுடன் சிரிக்க முயன்றார். "குறிப்பாக எங்கும் போகும் எண்ணமில்லை. எங்களுடையது ஒரு பழைய குடும்பம் என்ற விஷயம் தெரியும்ல? பல ஆச்சாரங்களும் சடங்குகளும் இருக்கும். அப்படியே நேரம் அங்கேயே கழிந்து விடும்.''
"அப்படின்னா கடைசியில் அவங்க சம்மதிச்சிட்டாங்க?''- நான் கேட்டேன்.
"இல்லை... இல்லை... இது வேறு''- அவர் திடீரென்று ஒரு புதிய மாமிசத் துண்டைப் பொறுக்கி எடுத்து எலும்புடன் போராட ஆரம்பித்தார். "இது... இது... அவர்கள் நிச்சயித்தது. சுமிதாவை நான் பிரிந்து இரண்டு மூன்று மாதங்களாகிவிட்டன. நாங்கள் பிரியணும்னு முடிவெடுத்துட்டோம்.''
எப்படி அது நடந்தது என்று நான் கேட்கவில்லை. அவர் கூறவும் இல்லை. அந்த விஷயம் அங்கேயே முடிந்துவிட்டதைப் போல, அவருடைய திருமணத்தையும் காதலையும் பற்றி எனக்கோ அவருக்கோ இதற்குமேல் பேசுவதற்கு எதுவும் இல்லை என்பதைப்போல நாங்கள் அமைதியாக இருந்தோம். நான் எனக்கு முன்னால் உட்கார்ந்து ஆர்வத்துடனும் விருப்பத்துடனும் ரொட்டியையும் மாமிசத்தையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த விருந்தாவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். நடக்கக் கூடாதது நடந்து விட்டது என்று பிரச்சினையே இல்லை. பூமியில் வாழ்வு ஆரம்பமான நாளன்று தொடங்கியதும் என்றென்றும் வளர்ந்து கொண்டும் பரவலாகிக் கொண்டும் இருப்பதுமான பரிணாமத்தின் தூண்டுதலால் மட்டும் தூண்டப்பட்டு... என்னுடைய கர்மத்தின் கொம்பைக் கண்டடைந்துவிட்ட உத்வேகத்துடன்... தன்னுடைய மூளையின் மாமிசத்தை அறுத்து எடுத்து எண்ணெயில் பொரித்து, வெங்காயத்தையும் முந்திரிப் பழத்தையும் முந்திரிப் பருப்பையும் சேர்த்து வறுத்து, தக்காளி சாஸைக் கலந்து... நான் என் தேநீருக்கும் பிஸ்கட்டிற்கும் திரும்பினேன். எனக்குப் பசி தோன்றியது. எனக்கு என்னுடைய மாமிசம். ஒவ்வொருவனுக்கும் அவனவனின் மூளை.
அவருக்குக் கிடைத்திருக்கும் மனைவி எப்படிப்பட்டவளாக இருப்பாள்? அவர் காதலித்த பெண்ணை எனக்குத் தெரியும். அழகும் அறிவும் உலக அனுபவமும் உள்ள ஒரு பெண் சுமிதா. அவள் இல்லாமல் வேறொரு பெண்ணை அவருடைய மனைவியாகக் கற்பனை பண்ணிப் பார்ப்பதற்குக்கூட கஷ்டமாக இருந்தது. சொல்லப் போனால்- அவர் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணும் அப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று ஒன்றும் இல்லையே! யாராக இருந்தாலும் திருமணம் செய்து கொள்பவள் தான் மனைவி.