உத்தராயணம் - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6366
எங்களுக்கும் அது ஒரு ஜெய் கோஷம்தான். கம்பெனி அதன் வெற்றிக்காக எங்களை அழைக்கிறது. நாங்கள் அனைவரும் கம்பெனியின் போராளிகள். தொழிலாளிகளோ பங்காளிகளோ அல்ல. படைவீரர்கள்! அதன் சத்தத்தைக் கேட்டு நாங்கள் போரில் இறங்குகிறோம். அதன் வெற்றி எங்களுடைய வெற்றி. அதன் தோல்வி எங்களுடைய மரணம். கம்பெனியின் கேட்டில் பெரிய எழுத்துக்களில் எழுதி வைக்கப்பட்டிருக்கும்- நாங்கள் தினமும் காலையில் வாசித்து மனப்பாடம் செய்து வைத்திருக்கும் கோஷம் அதைத்தான் காட்டுகிறது: 'ஞய்ங் ஈர்ம்ல்ஹய்ஹ், ஞய்ங் ரர்ழ்ந் ச்ர்ழ்ஸ்ரீங், ர்ய்ங் ஈட்ஹண்ழ்ம்ஹய்.'
பத்து வருடங்களுக்கு முன்னால் ஜம்னாதாஸ் ஆஜ்மீரியா இண்டஸ்ட்ரீஸிலிருந்து வந்திருந்த நேர்முகத் தேர்விற்கான கடிதம் இந்த விதத்தில் இருந்தது: "இந்த நாளன்று காலை பதினோரு மணிக்கும் பன்னிரண்டு மணிக்கும் இடையில் உங்களால் எங்களுடைய தயாரிப்பு நிர்வாகியைத் தொழிற்சாலைக்கு வந்து சந்திக்க முடியுமா? இந்த இடத்தில் இருந்து புறப்படும் இந்த எண்ணைக் கொண்ட பேருந்தில் இவ்வளவு நிமிடங்கள் பயணம் செய்தால், நீங்கள் எங்களுடைய கம்பெனியின் கேட்டில் வந்து இறங்கலாம். பழைய டாக்கூர்பாடி நிறுத்தம் என்று கூறினால் போதும்." கம்பெனி எங்களின் சிறிய சிறிய விஷயங்களில்கூட ஆர்வம் காட்டுகிறது. சேர்ந்து ஒரு வருடம் கடந்தபோது, என்னுடைய சம்பளம் புதுப்பிக்கப்பட்டது. இரண்டு வருடங்கள் கடந்தபோது நான் வேலையில் நிரந்தரமாக ஆக்கப்பட்டேன். ப்ரமோஷன் கிடைத்தது. போனஸ் கூடியது... கம்பெனி அதன் வேலையாட்களுக்கு இருப்பிடங்களை வாடகைக்கு எடுத்துக் கொடுக்கிறது. அங்கிருந்து அவர்கள் கம்பெனிக்கு வருவதற்கு சொந்த பேருந்தை ஓட்டுகிறது. குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்கிறது. குடும்பப் பாதுகாப்புத் திட்டம்.... சிறியதாக இருந்தாலும் சொந்தமாக ஒரு மருத்துவமனை... கட்டுப்படுத்தப்பட்ட விலைக்கு பொருட்கள் கிடைக்கக் கூடிய தொழிலாளர்கள் கூட்டுறவு அங்காடி... முதலில் இருந்தே அவர்கள் என்னை காஸ்ட்டிங் பிரிவில் வைத்து விட்டார்கள். காஸ்ட்டிங்கில் தனிப்பட்ட முறையில் பயிற்சிகள் தந்தார்கள். அதற்குத் தேவையான இயந்திரங்களையும் அச்சுக்களையும் கொண்டு வந்து அந்தப் பிரிவையே நிறைத்து விட்டார்கள். வரைபடத்தையும் உலோகத்தையும் தந்தார்கள். நான் அவர்கள் கேட்பவற்றையெல்லாம் வார்த்துக் கொடுத்தேன். தீர்மானிக்கப்பட்ட எண்ணிக்கையில், கேட்டுக் கொண்ட வடிவத்தில், தேவையான உறுதியில்... நான் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு ஒரு குழந்தை பிறந்தது.
ஒருமுறை மட்டுமே, "என்னுடைய கம்பெனியில் என்னைப்போல கவனமாகப் பார்த்துக் காப்பாற்றும் மனிதர்கள் எத்தனைப் பேர் இருக்கிறார்கள்" என்பதை நான் கேட்டிருக்கிறேன். அதுவும் சிறிதும் எதிரிபாராமல்- அப்போது எனக்கு அருகில் நின்றிருந்த ஒரு சார்ஜ்மேனிடமோ வேறு யாரிடமோ. ஒரு நாடு அதன் மக்கள் என்பதைப்போல ஒரு கம்பெனி அதன் பணியாட்கள் இல்லாமல் வேறென்ன? தொழிற்சாலையின் ஒரு புதிய பிரிவின் துவக்கம் நடந்து கொண்டிருந்தது- நான் சேர்ந்த சமயத்தில். ஏதோ ஒரு அமைச்சர் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவருடைய பேச்சு முழுவதும் எல்லா வார்த்தைகளும் கிட்டத்தட்ட கேள்வி வடிவத்தில் முடிந்து கொண்டிருந்தன. நாட்டையும் உலகத்தையும் வாழ்க்கையையும் பற்றிய பிரச்சினைகள். யாரும் அவற்றுக்கு பதில் கூறவில்லை. அமைச்சரும் சொல்லவில்லை. எல்லாருக்கும் அவற்றுக்கான பதில் தெரியும் என்று தோன்றியது எல்லாருக்கும் தெரியும் என்று அவருக்கும். அதனால் அவை கேள்விகளே அல்ல என்பது மாதிரி பார்வையாளர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவை கேள்விகளே அல்ல என்ற எண்ணத்துடன் அவர் கேட்டுக் கொண்டும் இருந்தார். அதற்கு மத்தியில் நான் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு எனக்கு அருகில் நின்றிருந்த சார்ஜ்மேனைப் போல் தோன்றிய அந்த கறுத்த மனிதனிடம் என்னுடைய சிறிய கேள்வியைக் கேட்டேன்: "நண்பரே, இந்த கம்பெனியின் தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?'' அந்த மனிதன் அதற்கு பதில் எதுவும் கூறவில்லை. ஒரு கையை காதுக்குப் பின்னால் வைத்துக்கொண்டு அவன் சொற்பொழிவாளரின் பதில் இல்லாத கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தான். ஒன்று- அந்த மனிதனுக்குக் கேட்கும் சக்தி குறைவாக இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் என்னுடைய கேள்வியை அங்கு கேட்டுக் கொண்டிருந்த மற்ற கேள்விகளைப்போல பதில்கூறத் தேவையற்றது என்று நினைத்து ஒதுக்கியிருக்க வேண்டும். எது எப்படி இருந்தாலும், மக்கள் நடுவில், அதுவும் முக்கியமான ஒரு மனிதர் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருக்கும்போது உரத்த குரலில் பேசுவது சரியான ஒரு விஷயம் இல்லையே! அதனால் நான் அதையும் பதில் இல்லாத கேள்வி என்று நினைத்து ஒதுக்கி வைத்துவிட்டு, சற்று தூரத்தில் நின்றிருந்த ஒரு மரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த மரத்திற்கு ஒரு சிறப்பு இருந்தது. இரண்டு தொழிற்சாலை ஷெட்களுக்கு நடுவில் ஒரு பிடி மண்கூட தெரியாத கான்க்ரீட் போடப்பட்ட தரையில், அந்த கான்க்ரீட்டிலிருந்து முளைத்து வந்ததைப்போல அது நின்றிருந்தது. டாக்கூர்பாடி என்று அறியப்பட்டிருந்த ஒரு ஜமீன்தாரின் அரண்மனையாக முன்பு இருந்த இடத்தில்தான் எங்களுடைய கம்பெனி இருந்தது. கம்பெனி அந்த இடத்தை வாங்கி, அங்கு தொழிற்சாலையை உண்டாக்கியபோது மற்ற அனைத்தையும் அழித்தாலும், மனிதர்கள் வழிபாடு செய்து கொண்டிருந்த அந்த மரத்தை அப்படியே விட்டுவிட்டார்கள். அறிவியல் வளர்ச்சிக்காக வாதாடும்போதுகூட, பாரம்பரியத்துடனும் மனிதர்களின் நம்பிக்கைகள் மீதும் கம்பெனிக்கு இருந்த அக்கறையைத்தான் அது காட்டுகிறது. ஆனால் அன்று அதைப் பார்த்தபோது எனக்குப் பெரிய அளவில் வருத்தம் உண்டானது. அதிலிருந்து கண்களை எடுத்து, மீண்டும் நான் பதில் இல்லாத கேள்விகளைக் கேட்டவாறு அந்த தொழிற்சாலை வாசலில் நின்று கொண்டிருந்த மனிதர்களைப் பார்த்தேன். அவர்களும் அந்த மரத்தைப்போல அந்த காங்க்ரீட்டில் பிறந்து வந்தவர்களைப்போல நின்றிருந்தார்கள்.
ஒரு மரத்தால் அது முளைத்த இடத்திலிருந்து அசைய முடியாது. தாவரங்களைப் பொறுத்தவரையில் சரியில்லாத காலநிலையில் அது காய்ந்துவிடும். இல்லாவிட்டால் காலநிலைக்கு ஏற்ற வண்ணம் இலை உதிர்ந்து, தளிர்கள் முளைத்து, பூக்கள் பூத்துக் கொண்டிருக்கும். கடையைச் சுற்றி காங்கிரீட் அமைத்தால், அது அதை ஏற்றுக் கொள்கிறது. மனிதர்கள் அப்படி அல்ல. எனினும் அந்தத் தொழிற்சாலையின் வாசலில் இருந்த காங்கிரீட்டில் ஒரே இடத்தில் நின்றுகொண்டு பதில்கள் இல்லாத கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த மனிதர்களை மீண்டும் பார்த்தபோது, நான் கேட்ட கேள்வியின் முக்கியமற்ற தன்மையையும் ஏமாற்றத்தையும் என்னால் திடீரென்று புரிந்துகொள்ள முடிந்தது. இந்தக் கம்பெனியின் தொழிலாளர்கள் எண்ணிக்கை எவ்வளவாக இருந்தால் என்ன? பத்தோ? பத்தாயிரமோ? லட்சமோ? கோடியோ? அதற்குப் பிறகு நான் அந்தக் கேள்வியை யாரிடமும் கேட்பதேயில்லை. ஒருவேளை அது யாருக்கும் தெரியாமல் இருக்கலாம்.