உத்தராயணம் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6366
"விளையாட்டுக்காக சொல்லவில்லை அக்கவுண்டண்ட் பாபு''- நான் கூறியதை வைத்து வன்முறையில் ஈடுபடுபவர்களை ஆதரிக்கிறேன் என்று கருதிவிடக்கூடாது என்று நினைத்து நான் விளக்கிச் சொன்னேன்: "இன்னும் சொல்லப் போனால் நமக்கு என்ன பாதிப்பு, இந்த மாதிரியான விஷயங்களில்? நான் ஒரு இன்ஜினியர். நீங்க ஒரு அக்கவுண்டண்ட். நமக்கு நம்முடைய வேலைகள் இல்லையா என்ன?''- நான் ஒரு முட்டாள்தனமான சிரிப்பு சிரித்தேன்.
அக்கவுண்டண்ட் பாபு என்னை மன்னித்து விட்டான். பிறகு நாங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவனுடைய மகனுக்குக் காய்ச்சல் வந்ததைப் பற்றியும், ஒரு மாதத்திற்கு முன்னால் என்னுடைய குழந்தைக்கு வயிற்றுக்குக் கேடு வந்ததைப் பற்றியும் சந்தோஷத்துடன் பேசிக் கொண்டிருந்தோம்.
விளக்குக் கம்பத்தை அடைந்தபோது கண்பார்வை தெரியாத மனிதன் எங்களை நோக்கிக் கையை நீட்டினான். மன்னிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் கையை உயர்த்தி சைகை செய்துவிட்டு நாங்கள் நடந்தோம். எங்களுடைய சைகையைப் பார்க்காமலே, நாங்கள் கடந்து சென்றதும் குருடன் கைகளைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான். அதுதான் எப்போதும் நடப்பது. அவன் எங்களுடைய சத்தத்தைக் கேட்டு கையை நீட்டுவான். நாங்கள் மன்னிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் சைகை காட்டுவோம். அவன் அதைப் பார்க்காமலே உட்கார்ந்திருப்பான். குருடன் என்னிடமோ உங்களிடமோ பிச்சை கேட்கவில்லை. மனிதன் என்ற கேவலமான பொருளிடம். அவனுடைய கெஞ்சலுக்குக் குறிப்பிட்ட மனிதன் எப்படி எதிர்வினை ஆற்றுகிறான் என்பதோ, எதிர்வினை ஆற்றும் குறிப்பிட்ட மனிதன் யார் என்பதோ அவனுக்குத் தெரியாது. சாயங்காலம் மொத்தத்தில் இருப்பதையெல்லாம் சேர்த்துக் கிடைப்பதை அவன் கேவலமான மனிதர்களின் எதிர்வினையாக எடுத்துக் கொள்கிறான்.
என்னைச் சோதித்துப் பார்த்த முதல் ஸ்பெஷலிஸ்ட், அந்தக் காலத்தில் மந்திரவாதிகள் நோய்களை எப்படிக் கண்டறிந்தார்கள் என்பதை என்னிடம் சொன்னார். "வெளியே வாடா, வெளியே வாடா, உனக்குள் இருப்பதை இன்றைக்கு நான் வெளியே கொண்டு வர்றேன் என்று கூறியவாறு, பிரம்பால் அடித்து அடித்து அவர்கள் நோயாளிகளையே தங்களுக்கு இருக்கும் நோய் என்ன என்பதைக் கூற வைப்பார்கள். ஆனால் நாங்கள் அப்படிச் செய்ய மாட்டோம். உங்களுக்குள் இருப்பதை உங்களுக்கே தெரியாமல் நாங்கள் கண்டுபிடிப்போம்'' என்றார் அவர். நான்காவது மாடியில் அவருடைய க்ளினிக் இருந்தது. லிஃப்ட் பாதிக்கப்பட்டிருந்ததால் ஏறிச் சென்றபோது நான் மிகவும் களைப்படைந்து விட்டேன். நாற்காலியில் கால்களை நீட்டிக்கொண்டு சாய்ந்து படுத்தவாறு நான் அதைக் கேட்டேன். "எனக்குள் இருப்பவை அனைத்தும் மிகவும் சோர்வடைந்து போய்விட்டன டாக்டர். இன்றைக்கு உங்களால் எதையும் தெரிந்துகொள்ள முடியாது'' - நான் சொன்னேன். அவர் தன்னுடைய வரிசையற்ற பற்களைக் காட்டிச் சிரித்தார். அழகே இல்லாத பற்களாக இருந்தாலும் சந்தோஷத்தை வெளிப்படுத்தக்கூடிய சிரிப்பு. இரண்டு மணி நேரம் தொடர்ந்து அவர் என்னைச் சோதித்துப் பார்த்தார். சிரித்து தமாஷாகப் பேசிக்கொண்டே சாய்த்தும் நேராக நிற்க வைத்தும் படுக்க வைத்தும் உட்காரச் செய்தும்... என் உடலுக்குள் இருந்த குடல்கள், உறுப்புகள் எல்லாவற்றையும் அவர் வெளியே கொண்டு வந்தார். அடித்துச் சலவை செய்வதற்காக திறக்கப்பட்ட தலையணையைப் போல என்னைத் தலைகீழாகக் கவிழ்த்து, பிறகு எல்லாவற்றையும் பொறுக்கிச் சேர்த்து உள்ளே போட்டு வெளியே வந்தபோது, எனக்கு நான் ஒரு பொதுப் பொருளாக ஆகிவிட்டதைப்போல தோன்றியது. அரசாங்க உடைமையாக ஆக்கப்பட்டுவிட்ட கம்பெனியைப்போல ஆடம்பரமும் எளிமையும் ஒன்று கலந்திருந்தன.
ஆனால் நான் எந்த அளவிற்குப் பொதுச் சொத்தாக ஆகிவிட்டிருந்தேனோ, அவர் அந்த அளவிற்கு உள்ளே போயிருந்தார். திறந்த சிரிப்பு படிப்படியாக முகத்தில் பதிந்திருந்ததைப்போல உணர்ந்தேன். தொடர்ந்து அதுவும் குறைந்தது. அவருடைய சொற்கள் தடைப்பட்டு விழுவதைப் போலத் தோன்றியது. இறுதியாக முற்றிலுமாக நின்றன. நாங்கள் இருவரும் எதிரெதிரில் இருந்த நாற்காலிகளில் சாய்ந்துகொண்டு, ஒருவரையொருவர் பார்த்து விழித்துக் கொண்டிருந்தோம். அவருக்கு எதுவும் புரியவில்லை என்று தோன்றியது. இறுதியில் நான் சொன்னேன்: "நோயாளியை அடித்து வாந்தி எடுக்க வைக்கும் மந்திரவாதியும், உள்ளே இருக்கும் எல்லாவற்றையும் கவிழ்த்து வெளியே கொண்டு வரும் டாக்டரும் ஒரே செயலைத்தானே செய்திருக்கிறார்கள் டாக்டர்? குறிப்பிட்ட மனிதனின் குறிப்பிட்ட உடல்நலக் கேடுகளை மட்டுமே மந்திரவாதிகளைப் போலவே கூர்மையான அணுகுமுறைகளும் அறிவியல் அறிவும் கொண்டிருக்கும் டாக்டர்களும் தேடிப் போகிறார்கள். தாங்கள் படித்த நோய்களை மட்டும் அவர்கள் எல்லா இடங்களிலும் தேடுகிறார்கள்.'' அவர் என்னையே கேள்வி கேட்பதைப்போலப் பார்த்தார். நான் சற்று வெட்கத்துடன் தொடர்ந்து சொன்னேன்: "நான் தொழிற்சாலைக்குப் போகும் வழியில் ஒரு கண்பார்வை தெரியாத மனிதன் இருக்கிறான் டாக்டர். அவன் தனக்குப் பிச்சை போடுபவர்களையும் பிச்சை போடாதவர்களையும் பார்ப்பது இல்லை. சில நேரங்களில் எனக்குத் தோன்றுகிறது- சில நோய்களை குருடர்களைப்போல கண்களே இல்லாதவர்கள் மிகவும் எளிதாகத் தெரிந்துகொள்கிறார்கள். உதாரணத்திற்கு- பாருங்கள். கேவலமான மனிதனின் கேவலமான எதிர்வினைகள்... கேவலமான நோய்கள்...''- நான் வேண்டுமென்றே நிறுத்தினேன். வேறு டாக்டராக இருந்திருந்தால், ஒருவேளை என்னை வெளியே போகும்படி கூறியிருப்பார். ஆனால் அந்த நல்ல மனிதர் எதையும் மோசமாக எடுத்துக்கொள்ளவில்லை. எப்படி எடுப்பார்? நாங்கள் கம்பெனியைச் சேர்ந்த மனிதர்கள். அவர் கம்பெனி நியமித்திருக்கும் ஸ்பெஷலிஸ்ட். எங்களுடைய நோய்களுக்கு சிகிச்சை செய்து எங்களை கம்பெனியின் செயலாற்றல் கொண்ட தொழிலாளியாக ஆக்குவது என்பது அவருடைய வேலை. அதனால் அவர் என்னை இன்னொரு ஸ்பெஷலிஸ்ட்டிடம் அனுப்பி வைத்தார்.
இரண்டாவது ஸ்பெஷலிஸ்ட் என் முகத்தைப் பார்த்து சிறிதுகூட சிரிக்கவில்லை. அவருடைய முகம் கல்லைப்போல இறுகிப் போய்க் காணப்பட்டது. ரெக்கார்டில் சேர்ப்பதற்காக என்னவோ கேள்விகளைக் கேட்டாரே தவிர, என்னிடம் சிறிதுகூட அவர் உரையாடவில்லை. பயன்படுத்தக்கூடியன, கேடுகளைச் சரி செய்து பயன்படுத்தக்கூடியன, கேடுகள் சரி செய்யப்படாதவை என்று மெஷின்களின் உதிரி பாகங்களைத் தரம் பிரிக்கும் தொழிற்சாலை ஃபோர்மேனின் முகத்தைப்போல அவருடைய முகத்தில் ஒரு சாதாரண தன்மை நிலவிக் கொண்டிருந்தது. ஃப்ளூவோ, கேஸ்ட்ரோ, என்ரட்டைட்டீஸோ பாதிக்கும் காலத்தில் டாக்டர்கள் இப்படி நோயாளிகளை ஒன்றிற்குப் பிறகு இன்னொன்றாகச் சோதனை செய்து பார்த்திருக்கிறேன். நோயின் தன்மையை அல்ல- கடுமையை மட்டும் புரிந்துகொள்ளும் ஒரு மனிதன்.... அவர் கண்டுபிடித்தது என்ன?
பேருந்து வந்தது. மஞ்சள் நிறத்தில் இருந்த கம்பெனிக்குச் சொந்தமான பேருந்து. சிவப்பு எழுத்துக்களில் அதன் பெயர்ப் பலகையில் கம்பெனியின் பெயர் எழுதப்பட்டிருந்தது- ஓஆஒ. ஜம்னாதாஸ் ஆஜ்மீரியா இன்டஸ்ட்ரீஸ். சாதாரண மனிதர்களுக்கு அது ஒரு வெறும் ஜெய் கோஷமாக மட்டுமே தோன்றும்.