உத்தராயணம் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6366
தெரிந்திருந்தாலும் அதை நான் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒரு வயலில் எவ்வளவு விளைச்சல் உண்டானது என்று நீங்கள் கேட்கிறீர்கள். அதில் எவ்வளவு நெல் செடிகள் இருந்தன என்று கேட்கவில்லை. ஒரு கம்பெனியில் வேலை செய்பவர்கள் யாராக இருந்தாலும் எவ்வளவு எண்ணிக்கையில் இருந்தாலும் அது ஒரு படை. ஒரு படையில் அறியப்படுபவன் ஒருவன்தான். அதன் கமாண்டர். தேனீக்களுக்கு அவற்றின் ராணி. எங்களுக்கு எங்களுடைய சேர்மன்.
பேருந்தில் இருந்தபோது தூக்கம் வந்தது. பாதை நல்லதாகவோ மோசமானதாகவோ இருக்கட்டும்- சக்கரங்கள்தான் உருள்கின்றன. உருளக்கூடியதும் திரும்பக்கூடியதுமாக இருப்பது எதுவானாலும் அது தூக்கத்தைக் கொண்டுவரத்தான் செய்யும். விருப்பப்பட்டு தூங்கவில்லை. ஆனால் தூங்க ஆரம்பித்துவிட்டால் அப்படியே உருண்டுகொண்டோ திரும்பிக் கொண்டோ இருக்கத்தான் தோன்றும். ஓரங்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு வாய்க்கால் வழியாகக் கீழ்நோக்கி ஓடிச் செல்லும் நீரைப்போல... "ரிலாக்ஸ்! ரிலாக்ஸ்!" - முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுப் படுத்திருந்த என்னுடைய தந்தையிடம் டாக்டர் இப்படிக் கூறுவார். ஒரு விஷயத்தையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எளிதாக எடுத்துக் கொள்வதுதான் எளிதாக இருக்கும். எளிய வழியையே பின்பற்ற வேண்டும். எளிமையான வாழ்க்கைதான் செழிப்பான வாழ்க்கை. அப்படிப்பட்ட ஒரு தத்துவத்தை அவர் உண்டாக்கிவிட்டிருந்தார்- நோயாளிகளுக்காக. அவர் சிகிச்சை செய்த நோயாளிகள் அனைவரும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளாக இருந்தார்கள். அதில் அவர் ஸ்பெஷலிஸ்ட் என்று கூறுவதற்கில்லை. முன்பு அவர் மற்ற நோயாளிகளுக்கும் ஏராளமாக சிகிச்சை செய்தார். பிறகு அவர்கள் அவரைத் தேடி வரவில்லை. அதாவது- அவர்கள் அவரை விட்டுப் போய்விட்டார்கள். குணப்படுத்த முடியாத நோய்களைத் தாங்கிக் கொண்டிருந்தவர்கள் மட்டுமே அவரைப் பிடித்துக் கொண்டு நின்றார்கள். அவர் அவர்களுக்குக் கதைகள் கூறினார். ஒரு காலத்தில் மோட்டார் வாகனங்களோ வானொலி ஒலிபரப்போ எதுவும் பொதுவாக இல்லாமலிருந்த தூர காலகட்டத்தில், தான் வேலை பார்த்த நகரத்தில் அம்மை நோய் பரவிவிட்டிருந்தபோது, மனிதர்கள் யாரும் வெளியே வராமல் இருந்த பின்னிரவு வேளையில் தான் வேலை செய்து முடித்துத் திரும்பி வரும்போது, வெள்ளைநிற ஆடை அணிந்து பேரழகு படைத்த ஒரு பெண் தனியாக நடந்து செல்வதைப் பார்த்து, தான் அவளைப் பின்தொடர்ந்து போனதையும், நகரத்தின் எல்லையைத் தாண்டியதும் அவள் மறைந்து காணாமல் போனதையும், மறுநாளிலிருந்து அம்மை நோய் தன் நகரத்தில் இல்லாமல் போனதையும் பக்கத்து நகரத்தில் அது ஆரம்பமான கதையையும் அவர் கூறினார். தன்னுடைய மருத்துவமனையில் தினமும் நள்ளிரவு நேரத்தில் கறுப்புநிற ஆடை அணிந்த ஒரு கன்னிப் பெண் திடீரென்று தோன்றி அலுவலகத்தில் இருந்த ஒரு அலமாரியைச் சுட்டிக் காட்டியதையும், அதைச் சோதித்துப் பார்த்தபோது முன்பு எப்போதோ மரணத்தைத் தழுவிய ஒரு கன்னிப் பெண்ணின் தங்கப் பற்கள்- அவற்றைச் சொந்தம் கொண்டாடக் கூடியவர்கள் இல்லாததால் அவற்றை அங்கு வைத்திருக்கும் விஷயத்தையும், அதை ஏலத்தில் விற்ற பிறகு கன்னிப் பெண் வராமலே நின்றுவிட்டதையும் அவர் சொன்னார். அவருடைய கதைகளைக் கேட்ட நோயாளிகள் உறங்கினார்கள். என் தந்தையும் உறங்கினார். இப்படியே நிறைய வருடங்கள் உறங்கிய பிறகு இறுதியாக- நிரந்தரமாக உறங்கிவிட்டார்.
பேருந்து நிற்பதற்கு முன்பே, நான் கண் விழித்து விட்டேன். யாரோ எழுப்பினார்கள். முன்னால் இருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்களையும், அதற்குப் பிறகு பின்னால் இருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்களையும் இறங்கச் சம்மதித்து விட்டு, இறுதியாக ஆட்கள் எல்லாரும் இறங்கின பிறகு நான் மெதுவாக இறங்கினேன்.
எங்களுடைய பிரிவின் தயாரிப்பு நிர்வாகியைப் பார்ப்பதற்காக நான் நிர்வாக அலுவலகத்தை நோக்கி நடந்தேன். தினமும் ஒரு தடவை அவரைப் பார்க்க வேண்டியது என் கடமை. ஒன்று- காலையில். இல்லாவிட்டால் சாயங்காலம் கிளம்புவதற்கு முன்னால். இன்று சாயங்காலம் கம்பெனியின் டாக்டரைப் பார்க்க வேண்டியதிருக்கிறது. அதனால் காலையிலேயே அவரைப் பார்த்தாக வேண்டும். கூறுவதற்கு எதுவும் இல்லை. காலை வணக்கம் கூற வேண்டும். அவ்வளவுதான். என் தயாரிப்பு நிர்வாகி நல்ல மனிதர். அமெரிக்காவில் இருந்து உயர்கல்வி கற்று வந்திருந்த ஒரு பழைய தயாரிப்பு நிர்வாகியின் மகன். இளைஞர். அந்த இளமைக்குப் பொருத்தமில்லாதது மாதிரி சற்று தொந்தி இருந்தது. இந்த வயதில் அப்படி தொந்தி உண்டாகும்போது எல்லா இளைஞர்களும் உடற்பயிற்சி செய்யப் பயன்படுத்தும் ஒரு கருவி இருக்கிறது. தினமும் மூன்று நிமிடங்கள் மட்டுமே செலவழித்தால் போதும் என்று வாரத்தில் இரண்டு முறை பத்திரிகையில் விளம்பரம் வருகிறது. எங்களுடைய தயாரிப்பு நிர்வாகி அதைப் பயன்படுத்த வேண்டும் என்று அவரைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குத் தோன்றுவதுண்டு.
பார்த்தவுடன் தயாரிப்பு நிர்வாகி என் உடல்நிலையைப் பற்றி விசாரித்தார். "நன்றி... நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?''- நானும் மரியாதை நிமித்தமாகக் கேட்டேன்.
"நீங்க மிகவும் சாதாரணமா இருக்கீங்க''- என்னுடைய விசாரிப்பிற்கு பதில் கூறாமல் என்னைத் தலையிலிருந்து கால்வரை பார்த்து ஆராய்ந்த அவர் சொன்னார். நேற்று காலையில் பார்த்தபோதும் அப்படியேதான் கூறினார். இதற்கிடையில் எதுவும் நடக்கவில்லை- பரிசோதனையோ சிகிச்சையோ எதுவும்- மேலும் ஒருநாள் கடந்துபோய்விட்டிருக்கிறது என்பதைத் தவிர. இதற்கிடையில் நான் மாறுவேன் என்று அவர் எதிர்பார்த்திருந்தாரோ என்னவோ? "இன்று அந்த ஸ்பெஷலிஸ்ட்டின் ரிப்போர்ட் கிடைக்கும் என்று சொன்னீர்களே?''- அவர் கேட்டார்.
இரண்டாவது ஸ்பெஷலிஸ்டின் ரிப்போர்ட் இன்று கிடைக்கும். ஆனால் அந்த விஷயத்தை நான் அந்த ஆளிடம் கூறவில்லை. எனினும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார். கம்பெனியில் விவரங்கள் கசியக்கூடிய பல சேனல்கள் இருக்கின்றன. அந்த வகையில்தான் கம்பெனி தன்னுடைய தொழிலாளர்களின் உடல்நலத்தையும் தேவைகளையும் நம்பிக்கையையும் அக்கறையுடன் கவனிக்கிறது.
"சார்... இது ஒரு நோயே இல்லை''- நான் சொன்னேன்: "தெரியுமா? டாக்டர் இதுவரை எனக்கு ஒரு மாத்திரைகூட தந்தது இல்லை.''
என்னுடைய மென்மையான குணத்தையும் நல்லது நடக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும் அவர் பாராட்டுவார் என்று நான் நினைத்தேன். ஆனால் அவர் அது எதையும் கவனித்ததாகவே தெரியவில்லை. "பாருங்க நண்பரே! உங்களுக்கு என்னைவிட அனுபவம் இருக்கு. உங்களுடைய கடையில் இருக்கும் ஒரு மோட்டாருக்கோ, அச்சுக்கோ, இயந்திரத்திற்கோ கேடு உண்டானால் நீங்கள் அதை எப்படித் தெரிந்து கொள்வீர்கள்? செயல்படுவதை வைத்து.... இல்லாவிட்டால், அதைக் கழற்றிப் பார்த்துத் தெரிந்து கொள்வீர்கள். நீங்கள் அதைக் கண்டுபிடிப்பீர்கள். இந்த உடலை நாம் பயன்படுத்துகிறோம். அவ்வளவுதான். இது எப்படி செயல்படுகிறது என்ற விஷயத்தில்...