குஞ்ஞம்மாவும் நண்பர்களும் - Page 12
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6355
கோபாலன் நாயர் கூர்ந்து கவனித்தார். அந்த ஒதுக்கப்பட்ட வாழையின் அடியில் சாம்பல் நிறத்தில் ஒரு பொருளை அவள் போட்டாள்.
"அடடா! இதுதான் வித்தையா? பெண்கள் ஆண்களை ஏமாற்றுகிற வழியைப் பார்த்தீங்களா?" என்று அவர் நினைத்தார். கூறுவதற்கு வேறு என்ன இருக்கிறது?
அந்த வகையில் நாற்பதும், ஒன்றும் என்று இருந்த வாழைகள் பெரிதாகிக் கொண்டிருக்கின்றன. மாதவியம்மாவின் வாழையைப் பார்க்கும்போதெல்லாம் கோபாலன் நாயருக்கு மனதில் கவலை உண்டாகும். பெண்கள் அப்படி ஆண் இனத்தை தோற்கடிப்பதில் இருக்கும் கவலை. ஒரு வெறும் மனைவி நல்ல ஒரு கணவரைத் தோற்கடிப்பதா?
"வேகமாக வாழை குலை தள்ளுவது, ஒரு மோசமான குலையில் போய் முடியும்'' - கோபாலன் நாயர் தன் மனைவியிடம் கூறினார்.
"ம்...'' - ஒரு மெல்லிய சிரிப்புடன் மாதவியம்மா குழந்தையை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு நடந்து சென்றாள்.
அடடா! அவள் சிறிதும் கலங்கவே இல்லையே! எப்படிக் கலங்குவாள்? அந்த அளவிற்கு நல்லதாக ஒரு வாழைகூட கோபாலன் நாயரின் வாழைத் தோப்பில் இல்லையே! பெண்கள் செயலில் மிகவும் கவனமாக இருப்பவர்கள் என்றும், அவள் தனிப்பட்ட முறையில் தன்னுடைய வாழைக்கு உரமிடுகிறாள் என்றும் அவர் பிரச்சாரம் செய்யலாம். அதனால் என்ன விளையப் போகிறது?
இறுதியில் வாழைகள் குலை தள்ளவும் காய்கள் காய்க்கவும் ஆரம்பித்தன. அந்தக் காட்சி ஒரு திருவிழாவைப் போல இருந்தது. தினமும் காலையில் எழுந்து தலையில் ஒரு துணியைக் கட்டிக் கொண்டு கோபாலன் நாயர் வாழைத் தோட்டத்தை ஒருமுறை சுற்றி வருவார். அவை அனைத்தும் தன்னுடைய படைப்புகள் என்றொரு முகவெளிப்பாடு அவரிடமிருந்து உண்டாகும்.
"இந்த குலையில் எவ்வளவு காய்கள் இருக்கின்றன என்று தெரியுமா?''
"இருபது...'' - மனைவியின் பதில்.
"உனக்கு கூட்டுக் கணக்கு தெரியாது. முப்பத்து ஆறு.''
"ம்...''
"இன்னொன்றில் நாற்பத்தொண்ணு. இந்த குலையில் நாற்பத்து மூணு'' - இப்படி வெற்றி பெருமிதத்துடன் அவர் ஒவ்வொன்றாகச் சுட்டிக்காட்டி, தன் மனைவிக்கு விளக்கிக் கூறிக்கொண்டிருந்தார். இறுதியில், "உன்னுடைய செல்ல பூவன் வாழை ஏன் குலை தள்ளவில்லை?'' என்றொரு கேள்வியையும் கேட்டார்.
"குலை தள்ளும்.''
"பதினேழு காய்கள் வரை உண்டாகலாம்'' - ஒரு நிபுணரைப் போல சொன்னார்.
"பார்க்கலாம்.''
பார்த்தார்கள். வாழை குலை தள்ளியது. குலை விரிந்தது. ஐம்பத்தாறு காய்கள்!
"என்ன?'' - கோபாலன் நாயர் வானத்தைப் பார்த்தார். இனி என்ன சொல்வது?
"ம்... என்ன? இது சாதாரண பூவன் வாழையா?'' -மனைவி குலுங்கிக் குலுங்கிச் சிரித்தவாறு, குழந்தையை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு சமையலறையை நோக்கி நடந்தாள்.
"அங்கேயே நில்லு...'' -கோபாலன் நாயர் சொன்னார்.
"வேண்டாம்'' -மனைவி நடந்தாள்.
"நிற்கச் சொன்னேன்.''
"வேண்டாம்.''
"நான் இந்த வாழையை இப்போ வெட்டி துண்டு துண்டாக ஆக்கிடுவேன்.''
"என் கடவுள்களே?'' -அவள் நின்றாள்.
"என்ன?''
"நீ ஒன்றைப் புரிந்து கொண்டாயா? அதிகம் காய்கள் இருக்கும் குலை அல்ல நல்ல குலை. காய் அளவில் பெரியதாக இருக்காது. ஒவ்வொரு காயும் இதோ, உன் விரல் அளவிற்குத்தான் இருக்கும்.''
"ம்...'' -மனைவி பதிலெதுவும் கூறாமல் நடந்து சென்றாள். இறுதியில் அந்த எதிர்பார்ப்பும் தவறானதாக ஆனது. பெரிய அளவில் இருந்த ஐம்பத்தாறு நேந்திரங் காய்கள்! கோபாலன் நாயர் தன்னுடைய கவலையை யாரிடம் போய் கூறுவார்?
"ம்... இது பெண்களின் காலம்!'' என்று தனக்குத்தானே அவர் கூறிக்கொண்டார். பிறகு வாழை மரங்களையே பார்க்காமல் அவர் உட்கார்ந்திருந்தார்.
கோபாலன் நாயர் காலையில் எழுந்து செல்வார். சாயங்காலம் வீட்டிற்கு வந்த பிறகு, மாதவியம்மாவிற்குத் தெரியாமல் வாழைத் தோட்டத்திற்குச் சிறிது நேரம் சென்று பார்த்துவிட்டுத் திரும்பி வருவார். தனக்கு அந்த விஷயத்தில் அப்படியொன்றும் ஆர்வம் இல்லை என்பது மாதிரி அவர் காட்டிக் கொள்வார். அப்படியே வாரங்கள் கடந்தன.
நல்ல நிலவொளி நிறைந்த ஒரு இரவு நேரம். சாளரத்தின் வழியாக உள்ளே வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. அறையின் ஒரு மூலையில் போர்த்திப் படுக்க வைத்திருந்த சிறு குழந்தையின் முகத்தில் கொஞ்சம் நிலவு வெளிச்சம் விழுந்து கொண்டிருந்தது. கோபாலன் நாயரும் மாதவியம்மாவும் அந்தக் குழந்தையின் முகத்தையே நீண்ட நேரம் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். இறுதியில் இருவரும் படுக்க ஆரம்பித்தார்கள். அப்போது மனைவி கணவனிடம் கேட்டாள்:
"அப்படின்னா...?''
"என்ன?''
"உங்களுக்கு நேந்திரங் காயைத் துண்டு துண்டாக வெட்டி அவியல் வைத்தால் பிடிக்கும்ல?''
"இல்லை'' - கோபாலன் நாயர் சுவரைப் பார்த்துத் திரும்பிப் படுத்தார்.
"வறுத்தால் பிடிக்குமா?''
"இல்லை.''
"பிறகு... எப்படி வைத்தால் பிடிக்கும்?''
"எப்படி வைத்தாலும் பிடிக்காது.''
"அப்படியென்றால் இவற்றை எதற்கு வளர்க்க வேண்டும்?''
"கொஞ்சம் உறங்க விடுறியா?''
"விடுறேன். ஆனால்...''
"என்ன?''
"ஒரு விஷயம்... நாளைக்கு ஒரு குலை காயை வெட்டிக் கூட்டு வைக்கணும். கொஞ்ச நாட்களாகவே குழந்தைகள் மிகவும் ஆர்வமாக இருக்க ஆரம்பிச்சிட்டாங்க.''
"உன் செல்ல பூவன் வாழை இருக்குது இல்லே... ஐம்பத்தாறு யானைக் கொம்புகள் கொண்டது... அதை வெட்டி முதல்ல கூட்டு வை.''
"அய்யோ! அதை நான் வேறொரு விஷயத்தை மனதில் வைத்து விட்டு வைத்திருக்கிறேன்.''
"என் வாழைக்குலை சம்பந்தமாக நானும் சிலவற்றை மனதில் நினைத்து வைத்திருக்கிறேன்.''
அதற்குப் பிறகு என்ன கூற வேண்டும் என்று மாதவியம்மாவிற்குத் தெரியவில்லை. அவள் தலையணையில் முகத்தை வைத்துக்கொண்டு படுத்தாள். சிறிது நேரம் சென்றதும் கோபாலன் நாயரின் காதில் "ஆஹ், ஆஹ், ஆஹ்!" என்றொரு அழுகைச் சத்தம் ஒலித்தது.
"என்ன அழுறியா?''
சத்தமில்லை.
"அழுறியா என்ன?''
மீண்டும் ஆஹ்... ஆஹ்... ஆஹ்...!
அவர் பார்த்தார். சதைப் பிடிப்பான அந்தக் கன்னத்தில் பட்டு நிலவு நன்கு பிரகாசித்துக் கொண்டிருந்தது. ஆறு குழந்தைகளின் தாய் படுத்து அழுது கொண்டிருந்தாள். ஏழாவது குழந்தை வயிற்றில் இருந்தது. கோபாலன் நாயரின் இதயம் வேதனைப்பட்டது. அவர் மென்மையான குரலில் சொன்னார்:
"என்ன வேணும் மாதவி?''
"நான்... நான் சொல்ல வேண்டியது அவ்வளவுதான்.''
அத்துடன் காட்சி மாறியது. அப்போது அழும் நிலையில் இருந்தவர் கோபாலன் நாயர்தான்.
"எல்லா நேந்திரங் காய்களையும் வெட்டிக்கோ. நமக்கிடையே என்னுடைய, உன்னுடையன்னு ஏதாவது இருக்கா?''
மாதவி நீண்ட பெருமூச்சை விட்டவாறு முகத்தைத் துடைத்துக் கொண்டாள். அவள் அமைதியாக உறங்கினாள்.