என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - Page 23
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6986
ஆனால், நிஸார் அஹமது வந்த உடன், குஞ்ஞுபாத்தும்மாவின் தந்தை அவன் தலையை வெட்டுவதற்கு பெரிய அரிவாளைக் கையில் எடுத்தார். அதற்குக் காரணம் அவளின் தாய்தான்.
நிஸார் அஹமது வரும்போதே ஒரு பெரிய காடு சகிதமாகத்தான் வந்தான். எங்கேயிருந்து அவ்வளவு விஷயங்களையும் கொண்டு வந்தான் என்பதைத்தான் குஞ்ஞுபாத்தும்மாவால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவன் கொண்டு வந்ததில் பெரும்பாலானவை பழங்கள் தருகிற சிறு மரங்கள்... பிறகு... ஏராளமான தென்னங்கன்றுகள். வெறுமனே கிடந்த அந்த வெட்ட வெளி கண நேரத்தில் ஒரு வனமாக மாறியது. மரங்களை வரிசையாக அவன் நட்டான்.
அன்று முழுவதும் அங்கு ஒரே ஆர்ப்பாட்டமாக இருந்தது. நிஸார் அஹம்மது, அவன் தந்தை, பிறகு- ஆயிஷா. இவ்வளவு பேரும் ஒன்று சேர்ந்து வெயிலில் வேலை செய்வதைப் பார்த்தபோது குஞ்ஞுபாத்தும்மாவிற்கே ஆச்சரியமாக இருந்தது.
“உம்மா... அங்கே பார்த்தீங்களா?” தன் தாயை குஞ்ஞுபாத்தும்மா அழைத்தாள். அவள் தன் மிதியடிகளைப் போட்டுக்கொண்டு “க்டோ” “ப்டோ” என்று சத்தம் உண்டாக, வாசலில் வந்து நின்றாள். அவள் சொன்னாள்:
“இவங்களுக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சா?” என்று கூறியவாறு அவள் உள்ளே சென்றாள். அவர்களுக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாக குஞ்ஞுபாத்தும்மாவுக்குத் தோன்றவில்லை. அவர்களைப் பார்த்து அவளுக்கு வியப்புத்தான் உண்டானது. நிலத்தில் வேலை செய்கிற முஸ்லிம்களை அவள் பார்த்ததில்லை. முஸ்லிம்களுக்குக் கூறப்பட்டிருப்பது வியாபாரம் என்பதுதான் அவளுக்குத் தெரியும். பிறகு- முக்கிய தேவைக்காக எதையாவது வெட்டுவதாகவோ கிளறுவதாகவோ இருந்தால், அதைப் பொதுவாக வேலைக்காரர்கள்தான் செய்வார்கள். அப்படி இல்லாமல் முஸ்லிமே நேரடியாக நிலத்தில் வேலை செய்வது என்பது... அவள் அதை முதல் முறையாக அப்போதுதான் பார்க்கிறாள்.
அவளுக்கு மனதிற்குள் ஒரு கவலை. அவர்களின் நிலம் எந்தவித பிரயோஜனமும் இல்லாமல் வெறுமனே கிடக்கிறது. பலவற்றையும் அங்கு நட்டு வளர்க்கும் அளவிற்கு அங்கு நிறையவே இடம் இருக்கிறது. அவளுக்கும் ஒரு சகோதரன் இருந்திருந்தால்! ஆனால், அவளால் என்ன செய்ய முடியும்? நிஸார் அஹமது வருவதை யொட்டி அவள் சில காரியங்களைச் செய்திருந்தாள். நிலத்தில் இருந்த குப்பை கூளங்களையெல்லாம் அள்ளிக்கூட்டி நெருப்பு வைத்தாள். சமையலறை வாசலில் இருந்த மீன் செதில்களை ஒன்று கூட்டி வெளியே கொண்டு போய்போட்டாள். வீட்டிற்குள் இருந்த தூசுகளைப் பெருக்கி சுத்தமாக்கினாள். வீட்டின்முன் தொங்கிக் கொண்டிருந்த பழைய துணிகளையெல்லாம் எடுத்து நெருப்பு வைத்து எரித்தாள். இது எல்லாம் முடிந்து, தன்னையும் அவள் அழகுபடுத்தினாள். அவளின் இந்த ஆர்ப்பாட்டங்களையெல்லாம் பார்த்த அவளின் தாய் சொன்னாள்:
“என்னடி... என்னவெல்லாமோ பண்ணிக்கிட்டு இருக்கே?”
“கையில் காயம் ஆறிடுச்சா?” குஞ்ஞுபாத்துமாவைப் பார்த்ததும் நிஸார் அகமது கேட்ட முதல் கேள்வி இதுதான்.
“ஆறிடுச்சு...”
-குஞ்ஞுஞபாத்தும்மா சொன்னாள். இருந்தாலும், இவ்வளவு நாட்களாகியும் அதை அவன் ஞாபகத்தில் வைத்திருக்கிறானே! உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்தான். குஞ்ஞுபாத்தும் மாவிற்கு இனம் புரியாத ஒரு உணர்வு மனதிற்குள் உண்டானது. அது நிஸார் அஹமது இரண்டாவது முறையாக வருவதற்கு முன்பா அல்லது பின்பா என்பது பற்றி அவளுக்கே சரிவர சொல்லத் தெரியவில்லை. அதனால் நிஸார் அஹமது “எப்போது” சொன்னான் என்று அவளால் நினைவுபடுத்திப் பார்க்க முடியவில்லை. என்ன சொன்னான் என்பதை மட்டும் தெளிவாக அவளால் ஞாபகப் படுத்திக் கூற முடிந்தது. என்ன செய்தான் என்பதுகூட ஞாபகத்தில் இருந்தது.
நிஸார் அஹமது குஞ்ஞுபாத்தும்மாவின் வீட்டில் ஒரு கழிவறை உண்டாக்கினான். பன்னிரண்டு அடி நீளத்தில், நாலடி அகலத்தில், அரை ஆள் உயரத்தில் ஒரு குழி. அதை வெட்டியது நிஸார் அஹமதுதான். என்ன என்பது தெரியாததால், குஞ்ஞுபாத்தும்மா வின் தந்தைக்கு இந்த விஷயத்தில் ஒரு உதவியும் செய்ய முடிய வில்லை. அந்தக் கழிவறை வீட்டில் இருந்து சற்று தூரத்தில் நிலத்தின் ஒரு மூலையில் இருந்ததால், அங்கிருந்து அவளின் தந்தையும் நிஸார் அஹமதுவும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை இங்கிருந்த அவளால் தெரிந்துகொள்ள முடியவில்லை. நிஸார் அஹமது வெயிலில் நின்று வியர்வை வழிய வேலை செய்துகொண்டிருந்தான். அப்போது அவளின் தந்தை வந்து சொன்னார்:
“மகளே... கொஞ்சம் தண்ணி கொடு. அவன் குடிக்கத்தான்!”
குஞ்ஞுபாத்தும்மா உள்ளே போனாள். சோப் துண்டை எடுத்து இரண்டு பாத்திரங்களைக் கழுவினாள். பிறகு அதை முகர்ந்து பார்த்தாள். ஏதாவது நாற்றம் வருகிறதா என்று பார்த்தாள். அப்படி எதுவும் வரவில்லை. அவள் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தாள். அவளின் தந்தை அதை வாங்கிக்கொண்டு போனார். தண்ணீரைக் குடிப்பதற்கு முன்பு நிஸார் அஹமது அந்தப் பாத்திரத்தை மூக்கிற்கு அருகில் வைத்துப் பார்த்த பிறகுதான், நீரையே குடித்தான். அப்படி அவன் செய்தான் என்பதை குஞ்ஞு பாத்தும்மாவால் சந்தோஷத்துடன் சத்தியம் பண்ணி சொல்ல முடியும்.
கழிவறை வேலைகள் முற்றிலும் முடிவடைந்த உடன், குஞ்ஞுபாத்தும்மா போய் அதைப் பார்த்தாள். ஒரு சிறு வேலிக்குள் ஒரு குழி. அதன் இரண்டு பக்கங்களிலும் இரண்டு பலகைகள்- பாலம் மாதிரி போடப்பட்டிருந்தன. ஒரு மூலையில் நிறைய மண் குவிக்கப்பட்டிருந்தது. அதனருகில் ஒரு சிரட்டை வைக்கப்பட்டி ருந்தது. “மலம் இருந்து முடிச்சவுடனே, மண்ணைப் போட்டு மூடணும். அதற்குத்தான் இந்தச் சிரட்டை.” ஆயிஷா சொன்னாள். “காலப்போக்குல இந்தக் குழி மூடப்பட்டுடும். அதற்குப்பிறகு புதுசா இன்னொரு குழி உண்டாக்கணும்!”
“இந்த விஷயம் நமக்கு ஆரம்பத்துல தெரியலியே!” அவளின் தந்தை சொன்னார்: “இப்படி எல்லா வீட்டுலயும் இருந்துச்சுன்னா, ஒரு நாற்றமும் இருக்காது!”
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவளின் தந்தைக்கு நிஸார் அஹமதுவை ரொம்பவும் பிடித்துப் போனது. அத்துடன் சந்தேகங் களும் அதிகமாயின. நூறு கேள்விகளாவது அவனைப் பார்த்து கேட்க வேண்டும் என்று அவர் நினைத்தார். க்யாமம் மிகவும் நெருங்கிவிட்டது அல்லவா? மக்கள் இந்த அளவிற்கு ஆணவம் கொண்டவர்களாகவும், கெட்டவர்களாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன?
நிஸார் அஹமது சொன்னான்:
“எனக்குத் தெரியாது. பிறந்தால் ஒருநாள் நாம இறக்கப் போறவங்க என்பது மட்டும் நமக்குத் தெரியும். நானும் சாகப் போறவன்தான். நீங்களும் ஒருநாள் மரணமடையப் போறவர்தான். எல்லாருமே சாகப் போறவங்கதான். எல்லா ஆத்மாக்களுக்கும் மரணத்தின் ருசி என்னன்னு தெரியும். இதுதான் குர்ஆன்ல இருக்கு. இதைப்போல இந்த உலகமும் ஒருநாள் அழியும். அதனால் என்ன? அழியிறப்போ அழியட்டும். அதுவரையில் மகிழ்ச்சியோட வாழணும். மக்களுக்கு இதைப் பற்றி ஒரு தெளிவான சிந்தனை இல்லாததுனாலதான் ஆணவக்காரர்களும் அக்கிரமக்காரர்களுமா அவர்கள் மாறிக்கிட்டு இருக்காங்க.