என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - Page 18
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6987
எல்லாரையும் கண்டபடி பேசுவதற்கு அவளுக்கு லைசன்ஸ் இருக்கவே செய்கிறது. பள்ளிவாசல் நிர்வாக விஷயத்தில் தனக்கும் முக்கியத்துவம் வேண்டும் என்கிறாள் அவளின் தாய். பள்ளிவாசலில் “கத்திபி”னையோ “முக்ரி”யையோ மாற்ற வேண்டுமென்றால் அதற்கு அவளின் தாயின் அனுமதியைப் பெற்றாக வேண்டுமாம். ஆனால், யாருமே அவளைக் கேட்பதில்லை என்பதுதான் உண்மை. தான் இழந்துவிட்ட பழமையான பெருமைகளை மனதிற்குள் நினைத்துக்கொண்டு எல்லாரையும் அவள் வாய்க்கு வந்தபடி திட்டுவாள்.
அவளின் தந்தை கூறுவார்:
“நீ கொஞ்சம் சும்மா இருக்கக்கூடாதா?”
“சும்மா இருக்கலைன்னா... செம்மீன் அடிமை மூக்கை அறுத்தெறிஞ்சிடுவாரா?”
“அடியே!” அவளின் தந்தை உரத்த குரலில் சத்தமிட்டவாறு தன் மனைவியை முறைப்பார்.
குஞ்ஞுபாத்தும்மா அதைப் பார்த்து நடுங்கிப்போய் உட்கார்ந்திருப்பாள். என்ன நடக்கப் போகிறதோ? அவள் மெதுவான குரலில் அழைப்பாள்:
“வாப்பா...!”
அவளின் தந்தை அவளை கவலையுடன் பார்ப்பார். அடுத்த நிமிடம் எதுவுமே பேசாமல் வெளியே இறங்கி நடப்பார். வீடு அமைதியாக இருக்க வேண்டும் அல்லவா?
தாயும் தந்தையும் மீண்டும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். ஏன் இப்படி அடிக்கடி நடக்கிறது? அவள் மனதில் வருத்தம் மேலோங்க உட்கார்ந்து விடுவாள். அந்த இளைஞனைப் பற்றி அவள் நினைத்துப் பார்ப்பாள். அவனைக் காணவே காணோமே? எங்கே போயிருப்பான்? அவன் எங்கிருந்து வந்தான்? அவனுடைய பெயர் என்ன? அவன் என்ன ஜாதி? எதுவுமே அவளுக்குத் தெரியாது. வாழ்க்கையில் அவள் சந்தித்த முதல் நல்ல மனிதன் அவன். அந்த முகம், அந்தச் சிரிப்பு, கையில் இல்லாத அந்த விரல்... என்ன காரணத்தாலோ கையில் இல்லாத அந்த விரலைப் பற்றி அவள் அடிக்கொரு தரம் எண்ணுவாள். யாருமே இல்லாத அந்த வீடு, கிணற்றங்கரையில் பூத்து நிறைந்திருக்கும் முல்லை மலர்கள்... அதைத் தவிர விரிந்து கிடக்கும் அந்த நிலத்தில் சொல்லுகிற மாதிரி ஒன்றுமே இல்லை. காய்ந்து போயிருக்கும் புற்கள் மட்டுமே... யாரென்றே தெரியாத அந்த இளைஞன் கட்டிவிட்ட துணியை அவள் அவிழ்த்தாள். காயம் நன்றாக உலர்ந்துவிட்டிருந்தது.
எல்லாமே பழைய சம்பவங்களின் வெறும் நினைவுபோல் ஆனது.
நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க, அந்த நிலத்தையும் வீட்டையும் யாரோ விலைக்கு வாங்கி இருப்பதாக அவளுக்குத் தகவல் வந்தது. யாராக இருக்கும்? இரண்டு மூன்று நாட்களில் அவனுக்கு அது யார் என்று தெரிந்துவிட்டது. எங்கோ தூரத்தில் இருந்து இங்கு வந்தவர்கள் அவர்கள். அங்கேயே நிரந்தரமாக வசிப்பது என்ற முடிவுடன் அவர்கள் வந்திருந்தார்கள். மொத்தம் மூன்று பேர் காஃப்ரிகள்தாம். ஒரு வயதான ஆண், ஒரு வயதான பெண், பிறகு... படித்த ஒரு காஃப்ரிச்சி!
குஞ்ஞுபாத்தும்மாவிற்கு கவலையாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் சிலை என அவள் நின்றிருந்தாள். உண்மையிலேயே அவள் ஒரு அதிர்ஷ்டக்கட்டைதான். மனதில் கோபம் உண்டாக அவள் கடவுளிடம் கூறுவாள்:
“ரப்புல் ஆலமீன்! பிரபஞ்சங்களான எல்லா பிரபஞ்சங்களையும் படைத்தவனே!” இதயம் அடைக்க அவள் அப்படியே நின்றிருப்பாள்.
அவளின் நிலை என்ன?
எதிர்காலம் எப்படி இருக்கும்?
7
கள்ள புத்தூஸ்
ஒரு நாள் மதிய நேரத்தில் பக்கத்துவீட்டு காஃப்ரிச்சி தாமரைக் குளத்திற்கு பக்கத்தில் நின்று புடவையையும் ப்ளவுஸையும் அவிழ்த்து வைப்பதை குஞ்ஞுபாத்தும்மா பார்த்தாள்.
அந்த இளம்பெண் பாடீஸுடனும் பாவாடையுடனும் நின்றிருந்தாள்.
“ஓ... சட்டைக்குள் இன்னொரு சட்டை... முண்டுக்குள்... ஓ...” குஞ்ஞுபாத்தும்மா மனதிற்குள் நினைத்தாள். அப்போது அவள் மனதிற்குள் ஒரு கவலை உண்டானது.
கடவுளே! அந்தப் பெண் குளிக்கப் போகிறாள்! அட்டை கடித்து கொல்லப் போகிறது!
குஞ்ஞுபாத்தும்மா இறங்கி ஓடினாள். அவளின் கூந்தல் காற்றில் அவிழ்ந்தது. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவள் ஓடினாள். “குளிக்காததே குளிக்காதே” என்று கூறியவாறு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, அந்த இளம் பெண் இருக்குமிடத்தை நோக்கி அவள் ஓடினாள்.
அந்த இளம் பெண் எந்தவித பதட்டமும் இல்லாமல் கேட்டாள்:
“ஏன் குளிக்கக்கூடாது குளிக்கக்கூடாதுன்ற?”
குஞ்ஞுபாத்தும்மா ஒன்றுமே பேசாமல் அமைதியாக இருந்தாள். அட்டை அவளைக் கடித்து நன்றாகக் கொல்லட்டும்! அவள் பதைபதைப்பு கொஞ்சமும் இன்றி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தாள். என்ன துணிச்சல் அவளுக்கு! குஞ்ஞுபாத்தும்மா மனதிற்குள் எண்ணினாள். காஃப்ரிச்சிகள் எல்லாம் இப்படித்தான்!
அப்போது பழைய நினைவுகள் அவள் மனதில் வலம் வந்தன. பல வருடங்களுக்கு முன்பு அவள் சிறு குழந்தையாக இருந்தபோது அவளின் தந்தை அவளைக் குளிப்பாட்டுவதற்காக ஆற்றுக்குக் கொண்டு சென்ற நாட்களை அவள் எண்ணிப் பார்த்தாள். அப்போது காஃப்ரிச்சிகள் எல்லாம் அவளிடம் மிகவும் அன்புடனும், பாசத்துடனுமே நடந்திருக்கின்றனர். இவளும் அவர்களைப்போல பேச முடியும். சொல்லப்போனால் அவர்களைவிட இவள் படித்தவள். குஞ்ஞுபாத்தும்மா விரால் மீனைப் பார்ப்பதற்காக தாமரைக் குளத்தை நோக்கி நடந்தாள்.
“ஓ... முடி எவ்வளவு அழகா இருக்கு!” அந்த இளம்பெண் சொன்னாள்: “ஓ... கறுப்பு மரு... உண்மையிலேயே அழகிதான்!” என்று சொல்லியவாறு, அவள் ப்ளவுஸை எடுத்து அணிந்தாள். புடவையைச் சுற்றியவாறு அவள் குஞ்ஞுபாத்தும்மாவின் அருகில் வந்தாள். பந்தாவான குரலில் கேட்டாள்:
“சுந்தரி... இந்த தாமரைக் குளத்துல குளிக்கிறதுக்கு மக்களுக்கு ஏதாவது கட்டுப்பாடுகள் இருக்கா என்ன?”
குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:
“என் பேரு ஒண்ணும் துன்னரி இல்ல...”
“துன்னரியா?” அந்தப் பென் சிரித்தாள்: “முட்டாளே... சுந்தரின்னு சொன்னேன்... சரி... உன் பேர் என்ன?”
“குஞ்ஞுபாத்தும்மா!”
“அடடா... என்ன அழகான பேரு! முஹம்மது நபி ஸெல்லல் லாஹு அலைஹிஸல்லம் அவர்களின் மகள் ஃபாத்திமாவோட... சரி... அது இருக்கட்டும். இந்தத் தாமரைக் குளத்துல குளிக்கக் கூடாதா என்ன?”
“அட்டை கடிக்கும்!”
“ஆண் அட்டையா? பெண் அட்டையா?”
“ஆண் அட்டை- பெண் அட்டை ரெண்டுமே இருந்துச்சு. ஒரு அட்டை என்னைக் கடிச்சு ரத்தத்தை முழுசா குடிச்சிருச்சு.” குஞ்ஞுபாத்தும்மா தொடர்ந்தாள்: “என் ரத்தம் முழுசையும் குடிச்சு வீங்கிப் போயிருந்த அட்டையை விரால் மீன் லபக்னு முழுங்கிடுச்சு... இதுல தண்ணி பாம்பு, ஆமை எல்லாமே இருக்கு..” அதற்குப் பிறகு தன்னை அட்டை எப்படிக் கடித்தது என்பதை விலாவாரியாக விவரிக்க ஆரம்பித்தாள் குஞ்ஞுபாத்தும்மா. வீங்கிப்போன அட்டை எப்படி தொடையில் தொங்கிக் கொண்டிருந்தது என்பதை அவள் சொன்னபோது, அந்தப் பெண் உண்மையிலேயே நடுங்கிப்போய் கண்களால் உற்றுப் பார்த்தாள். “ப்போ...” என்று உண்மையாகவே நடுங்குவது மாதிரி ஒருவித ஓசையை அவள் உண்டாக்கினாள்.