என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - Page 16
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6987
ஒற்றையடிப் பாதை வழியே நடக்க வேண்டியது வரும். அப்படியென்றால் எப்படிச் செல்வது? அவள் சிந்தனையில் ஆழ்ந்திருந்தபோது ஒரு சத்தம் கேட்டது. அவள் பயப்படவில்லை. ஆச்சரியப்பட்டு நின்றுவிட்டாள். யாரென்றே தெரியாத ஒரு ஆணின் குரல்:
“குருவிக்கு உயிர் இருக்கா?”
யார் அது? அவள் எதுவும் பேசவில்லை. பேசியது காதில் விழவில்லை என்று நினைத்துக் கொள்ளட்டும். என்ன தர்மசங்கடமான நிலை! அவள் முகத்தைக் குனிந்தவாறு தரையைப் பார்த்து நின்றிருந்தாள். காய்ந்துபோன இலைகளில் விழுந்து கிடந்த அவளின் ரத்தத்தைச் சுற்றிலும் சுமார் ஐநுறு எறும்புகள் இருந்து அதைக் குடித்துக்கொண்டிருந்தன.
“கரையில் ஏற முடியலியா?” மீண்டும் மேலே இருந்து குரல்.
கரையில் ஏறுவதற்கு பிரச்சினைதான். இருந்தாலும் என்ன சொல்வது? அவள் உண்மையைச் சொன்னாள்:
“ஆமா...”
“அப்படியா?”
“ஆமா...” அப்படிச் சொன்னது சரிதானா? உலகத்திற்கு இந்த விஷயம் தெரிந்தால் அது என்ன நினைக்கும்? திருமண வயதைத் தாண்டியிருக்கும் ஒரு முஸ்லிம் பெண். அவள் இதுவரை பார்த்திராத, பேசியிராத ஒரு ஆணுடன் பேசிக்கொண்டிருக்கிறாள். அதை மனதில் நினைத்துப் பார்த்தபோது குஞ்ஞுபாத்தும்மாவிற்கு என்னவோபோல் இருந்தது. இப்படிப் பல விஷயங்களையும் போட்டு அவள் குழம்பிக் கொண்டிருந்தபோது, அவளுக்கு நேர் எதிரில் சில மரக்கட்டைகள் விழுவதை அவள் பார்த்தாள். அந்த ஆள் இறங்கி வருகிறான்... வெள்ளை வேஷ்டியும் வெள்ளை சட்டையும் அணிந்திருக்கும் ஒரு இளைஞன். இடது கை மணிக் கட்டில் தங்க நிறத்தில் ஒரு கைக்கடிகாரம் இருந்தது. முடியை ஸ்டைலாக “க்ராப்” செய்திருந்தான்.
அவளால் அவ்வளவுதான் பார்க்க முடிந்தது. அவன் அங்கு வளர்ந்திருந்த செடிகளைப் பிடித்தவாறு மெதுவாக இறங்கி வந்தான். அவள் விழுந்த மாதிரி அவனும் விழுந்து விடுவானோ? ரப்பே... பத்திரமா பார்த்துக்கணும்... மனதிற்குள் பதைபதைப்புடன் அவள் நின்றிருந்தாள்.
“இதுவரை நான் உன்னைப்போல ஒரு பெண்ணைப் பார்த்ததே இல்லை. எவ்வளவு அழகா இருக்கே ஆமா, குருவியோட பேர் என்ன?” மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியவாறு அந்த இளைஞன் பேசினான். அரும்பு மீசையும் பிரகாசமான கண்களும் கொண்ட இளைஞன் அவன்.
அவள் அளவிற்கு அவன் வெளுத்த நிறத்தைக் கொண்டவன் என்று சொல்வதற்கில்லை. தன்னுடைய பெயரைத்தான் அவன் கேட்கிறான் என்று நினைத்துக்கொண்ட அவள் சொன்னாள்:
“குஞ்ஞுபாத்தும்மா...”
“பேரு குஞ்ஞுபாத்தும்மாவா?”
“ஆமா...”
“பேரு நல்லா இருக்கே...” அந்த இளைஞன் சொன்னான்: “குஞ்ஞு பாத்தும்மாவோட ரத்தம்தானே இந்த இலைகளில் இருக்கிறது?”
“ஆமா...” என்று அவள் சொன்னபோது அவளின் முழங்கைக்குக் கீழே பயங்கரமாக வலித்தது. அவள் தன் கையைத் திருப்பிப் பார்த்தாள். கல்லோ குச்சியோ நன்றாக கீறிவிட்டிருந்தது. ரத்தம் அதில் வழிந்துகொண்டிருந்தது.
“எங்கே... பார்க்கட்டுமா?” அந்த இளைஞன் சொன்னான்: “கையை மேலே தூக்கு. அப்படின்னாத்தான் ரத்தம் கீழே விழாம இருக்கும்.”
பிறகு தன்னுடைய சட்டை பாக்கெட்டில் இருந்த கைக் குட்டையை எடுத்த அந்த இளைஞன் அதை மூன்றாகக் கிழித்து, அவளின் காயம் இருந்த இடத்தைக் கட்டினான். தொடர்ந்து தன் பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட் பாக்கெட்டை எடுத்து அதில் இருந்து ஒரு சிகரெட்டை உருவினான். சிகரெட்டின் மேலிருந்த பேப்பரைக் கிழித்து புகையிலை முழுவதையும் வெளியேற்றி உள்ளங்கையில் கொட்டினான்.
“கையைக் கொஞ்சம் கீழே இறக்கு...” அவன் சொன்னான். அவள் தன் கையைக் கீழே இறக்கினாள். அவன் காயத்தில் புகையிலையை வைத்து மெதுவாக அழுத்தினான். தன்னுடைய மார்பகங்கள் எங்கே அவன் உடலைத் தொட்டுவிடப் போகிறதோ என்று பயந்த அவள் அது படாத மாதிரி இலேசாகத் தன்னை வளைத்து நின்றாள். அப்போதுதான் வருத்தம் தரக்கூடிய அந்த விஷயத்தை அவள் பார்த்தாள். அதைப் பார்த்தபோது அவள் மனதிற்கு என்னவோ போல் இருந்தது. அந்த இளைஞனின் இடது கையில் பெருவிரலைக் காணோம்! அது தனியாக வெட்டப்பட்டது மாதிரி.... அது எங்கே போனது? அவள் கேட்கவில்லை.
அவன் கேட்டான்:
“வலிக்குதா?”
“இல்ல...”
“கொஞ்சம்கூட வலிக்கலியா?”
“இலேசா...”
“அப்படியா? பரவாயில்ல... கையை தண்ணியில நனைக்கக் கூடாது. ரெண்டு மூணு நாட்கள் ஆயிடுச்சுன்னா, காயம் ஆறிப் போய்விடும்...” என்று கூறியவாறு அந்த இளைஞன் காயத்தை கைக்குட்டையால் இறுகக் கட்டினான். பிறகு ஒரு சிகரெட்டைக் கொளுத்தி ஊதியவாறு அவன் கேட்டான்- புன்னகை தவழ...
“குஞ்ஞுபாத்தும்மா, நீ மேல எப்படி ஏறி வருவே?”
குஞ்ஞுபாத்தும்மாவிற்கு எப்படி மேலே ஏறுவதென்றே தெரியவில்லை. அதற்காக அவளிடம் பதைபதைப்போ பயமோ எதுவும் இருக்கவில்லை. பயங்கரமான குளிர் இருக்கிறபோது நெருப்புக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருப்பதைப்போல... அப்படித்தான் அவளுக்குத் தோன்றியது.
“குருவியைப் பார்க்கலாமா?”
அவள் கையைத் திறந்தாள். குருவி நன்றியோ, அன்போ- எதையோ ஒன்றை வெளிப்படுத்துவது மாதிரி ஒரு சிறு ஓசையை எழுப்பியவாறு மேல் நோக்கி பறந்து சென்றது.
“குஞ்ஞுஞபாத்தும்மா, உன்னால பறக்க முடியுமா?”
“முடியாது...”
“அப்படின்னா... நாம சிறகு உண்டாக்கலாம்” என்று சொல்லியவாறு அந்த இளைஞன் குஞ்ஞுபாத்தும்மாவின் வலது கையைப் பிடித்தவாறு மேலே ஏறினான். “பயப்படாதே. ஒழுங்காக நடந்து வா” என்று அவ்வப்போது சொன்னான். எந்தவித சிரமமும் இல்லாமல் எப்படி தன்னால் மேலே ஏற முடிந்தது என்று அவள் ஆச்சரியப்பட்டாள். ஒரு விதத்தில் பார்த்தால் அவளுக்கு அது வியப்பான ஒன்றாகவே பட்டது. அவர்கள் மேலே அடைந்தவுடன் அவன், “குஞ்ஞுபாத்தும்மா... நீ இனி போகலாம்” என்று சொல்லியவாறு சிரித்துக்கொண்டே ஓடி மறைந்தான்.
குஞ்ஞுபாத்தும்மா கனவில் நடப்பது மாதிரி நடந்தாள். அவளின் ஒவ்வொரு அணுவும் இனிமையான ஒரு அனுபவத்துடன் இயங்குவது மாதிரி அவளுக்குத் தோன்றியது. அவளின் மனம் முழுக்க மகிழ்ச்சி நிரம்பி இருந்தது.
அவள் வாளியையும் கயிறையும் துணிகளையும் எடுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த இடத்தின் மேல் ஏறி கிணற்றங்கரையை நோக்கி நடந்தாள். குளிப்பதற்கு முன்பு அவள் கொஞ்சம் அதிகமாகவே முல்லை மலர்களை எடுத்து ஒரு இலையில் கட்டினாள். பிறகு தன் ஆடைகளை அவிழ்த்தாள். துண்டை எடுத்துக் கட்டினாள். கட்டியிருந்த முண்டை அவிழ்த்து வைத்தாள். கூந்தலை அவிழ்த்தாள். பிறகு வாளியை கிணற்றுக்குள் இறக்கினாள். அது நீரைத் தொட்டபோது சற்று நேரத்திற்கு முன்பு பார்த்த அந்த இளைஞனை அவள் நினைத்துப் பார்த்தாள். “கையை தண்ணியில நனைக்கக்கூடாது” என்று அவன் சொன்ன வார்த்தைகள் ஞாபகத்தில் வந்தன. அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும்.