என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6987
6
ஒரு குருவியின் அழுகை
குஞ்ஞுபாத்தும்மாவின் வீட்டு முற்றத்தில் ஒரு குருவி கத்தியது. அவள் அருகில் சென்று அதைப் பார்க்கவும் செய்தாள். இரண்டு குருவிகள் ஒன்றையொன்று கொத்திக் கொண்டிருந்தன. அவற்றில் ஒரு குருவி வேதனை தாங்காமல் கத்தியது.
அந்தக் குருவிகள் எதற்காக சண்டை போட வேண்டும்? குஞ்ஞுபாத்தும்மா “ஷ்ஷு”, “பு”, “துர்ர்” என்று பலவித ஓசைகளையும் உண்டாக்கினாள். அப்போது அந்த இரண்டு குருவிகளும் பறந்து தூரத்தில் ஓடின.
தாமரைக் குளத்தைத் தாண்டி இருந்த தென்னை மரத்தாலான பாலத்தில் அவள் ஏறியபோது அந்த இரண்டு குருவிகளும் புளிய மரத்தில் இருந்தவாறு ஒன்றையொன்று மீண்டும் கொத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். கொத்தியதோடு மட்டுமல்ல; இரண்டு குருவிகளில் ஒன்று கத்தவும் செய்தது. பருந்து தூக்கிக் கொண்டு போகும் கோழிக்குஞ்சைப்போல, அந்தக் குருவி உதவிக்காக கெஞ்சியது. அதைப் பார்த்ததும் அவள் மனதில் கவலை உண்டானது. அவள் தன் கையில் இருந்த வாளியையும் கயிறையும் கீழே வைத்துவிட்டு ஓடினாள்.
“நீங்க ஏன் சண்டை போடுறீங்க? சும்மா இருக்க வேண்டியது தானே!” என்று அவள் சொன்னாள். குருவிகள் அதைக் கேட்டது மாதிரி தெரியவில்லை. பயங்கர கோபத்துடன் ஒன்றையொன்று கொத்துவதிலேயே குறியாய் இருந்தன. பார்ப்பதற்கு சிறிய பறவைகளாக அவை இருந்தாலும், அவற்றுக்குள் என்ன போராட்ட குணம்! சுதந்திரமாகப் பறந்து திரிகின்ற பறவைகள் சண்டை போடுவதை இப்போதுதான் அவள் முதல் முறையாகப் பார்க்கிறாள் என்று இல்லை. பருந்துகள், காகங்கள், மைனாக்கள் ஆகியவற்றின் கொத்துதலையும் சண்டைகளையும் அவள் பலமுறை இதற்கு முன்புகூட பார்த்திருக்கிறாள். இது கணவன்- மனைவி சண்டையா? கோழிகளுக்கு இடையே கொத்துதல் நடக்கிறபோது, ஒரு கோழியை யாராவது பிடித்து தூக்கிக்கொண்டு போவார்கள். அப்படிச் செய்யாவிட்டால் கொத்திக் கொத்தி ஒரு கோழியைச் சாகடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்கும். குஞ்ஞுபாத்தும்மா மீண்டும் சொன்னாள்:
“சொன்னா கேட்க மாட்டீங்களா? உங்களால் சும்மா இருக்க முடியாதா? எதற்கு அதைப்போயி கொத்துறே?”
அந்தச் சண்டையில் ஒரு அணிலும் இடையில் தலையிட்டுக் கொண்டிருந்தது. அது புளிய மரத்தின் கிளையைப் பற்றிக்கொண்டு “துஸ்துஸ்” என்று சண்டையை விலக்கிக் கொண்டிருந்தது.
அணிலைப் பார்த்து குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:
“சொன்னா கேக்க மாட்டேங்குதா?”
பறவைகள் விஷயத்தில் பறவைகள் அல்லாதவர்கள் தேவையில்லாமல் தலையிடுவது நல்லதல்ல என்று உபதேசம் செய்வது மாதிரி ஒரு மரங்கொத்தி கத்தியது. தொடர்ந்து தென்னை மரத்தில் சிவப்பு நிறத்தில் உட்கார்ந்துகொண்டு “கடுகடு” என்று கொத்தி ஓசை உண்டாக்கியது. குருவிகள் பறந்துபோய் இன்னொரு மரத்தில் உட்கார்ந்துகொண்டு சண்டையைத் தொடர்ந்தன. கொத்து வாங்கிய குருவி பரிதாபமாகக் கத்தியவாறு கீழே கிடக்கும் சருகுகளின்மேல் போய்விழுந்தது. இரண்டு கைகளையும் விரித்து பூமியைக் கடைசி முறையாக ஆவேசத்துடன் கட்டிப் பிடிக்க முயலும் ஒரு மனிதனைப்போல அந்த அப்பிராணி குருவி அதன் இரண்டு சிறகுகளையும் விரித்தவாறு பூமிமேல் கவிழ்ந்து கிடந்தது.
“இங்க பாரு!” குஞ்ஞுபாத்தும்மா இதயத்தில் வேதனையுடன் சொன்னாள்: “இப்படியா நீ நடக்குறது!”
அவள் கரையோரமாக நடந்து சென்றாள். கீழே இறங்கிப்போய் பார்க்க ஒரு வசதியுமில்லை. குருவியின் உயிர் போயிருக்குமா? அதன் வாயில் ஒரு துளி தண்ணீரைவிட்டால், ஒருவேளை அது பிழைத்தாலும் பிழைத்துக்கொள்ளலாம். ஆனால், அதன் பெயர் எழுதப்பட்டிருக்கும் ஹஜ்ரத்துல் முன்தஹாவின் சிறிய இலை இதற்கு முன்பே கீழே விழுந்திந்திருக்குமோ? அந்த மரம் எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும்? அதில் எவ்வளவு இலைகள் இருக்கும்! எல்லா இலைகளும் ஒரே மாதிரி இருக்காது. எறும்பின் பெயர் எழுதப்பட்டிருக்கும் இலை மிகவும் சிறியதாக இருக்கும். அதைவிட பெரியதாக இருக்கும் குருவியின் பெயர் எழுதப்பட்டிருக் கும் இலை. யானையின் பெயர் எழுதப்பட்டிருக்கும் இலைதான் உலகத்திலேயே மிகப் பெரிதாக இருக்கும். குஞ்ஞுபாத்தும்மா கடலைப் பார்த்தது இல்லை. அதனால்தான் யானையைவிட பெரிதாக இருக்கும் திமிங்கிலத்தைப் பற்றி அவள் நினைக்காதது. அவளின் தாத்தாவுக்குச் சொந்தமான யானையின் பெயர் எழுதப்பட்ட இலை காய்ந்துபோய் ஹஜ்ரத்துல் முன்தஹாவின் அடியில் விழுந்து கிடக்கும். ஒரு வேளை அது பொடிப் பொடியாகி சொர்க்கத்தின் மண்ணோடு சேர்ந்து போயிருக்குமோ? சொர்க்கத்தில் மண் இருக்குமா என்று குஞ்ஞுபாத்தும்மாவிற்குத் தெரியாது. அவள் அங்கு வளர்ந்திருந்த ஒரு சிறு செடியைப் பிடித்தவாறு மெதுவாக கீழே இறங்க முயற்சித்தாள். அப்போது அவள் மிதித்திருந்த கட்டை லேசாக நகர, பிடித்திருந்த செடியை விட்டு அவள் பிடி விலக, அடுத்த நிமிடம் அவள் கீழ் நோக்கி தடுமாறி விழுந்தாள்.
“என் ரப்பே!” என்று அழைத்தவாறுதான் அவள் கீழே விழுந்தாள். எங்கேயெல்லாமோ அவளுக்கு காயம் உண்டானது. கீறல் ஏற்பட்டது. இடது கையில் முட்டிக்குக் கீழே காயம் ஏற்பட்டது. ரத்தம் அங்கு வழிந்து கொண்டிருந்தது. அப்போது அது அவளுக்குத் தெரியாது. அவளுக்கு எரிச்சலும், தாகமும், மனக் கவலையும் ஒரே நேரத்தில் உண்டாயின. கீழே விழுந்த அவள் அந்தக் குருவியைக் கையில் எடுத்தாள்; எழுந்தாள். அதற்கு உயிர் போய்விட்டது என்பது மாதிரி அவளுக்குப் பட்டது. அதற்கு கொஞ்சம் தண்ணீர் கொடுத்துப் பார்த்தால் என்ன என்று நினைத்தாள். அப்போதுதான் தன் கை முட்டியில் குருதி வழிந்து கொண்டிருப்பதை அவள் பார்த்தாள்.
“உன்னால் என் கையில் காயம் பாரு” என்று சொல்லியவாறு தன் இடது கை விரலால் குருவியின் வாயைப் பிளந்து பார்த்தாள். வலது கை சுட்டு விரலில் ஒரு துளி ரத்தத்தை எடுத்து குருவியின் வாய்க்குள் வைத்தாள். பிறகு அதன் சிறகுகளைச் சரிப்படுத்தினாள். அதைத் திருப்பிப் பார்த்த அவள் அதன் வயிறைப் பார்த்தாள். “கடவுளே... பெண் குருவி” என்று அவள் தன்னை மறந்து கூறினாள். குருவியின் வயிற்றுப் பகுதி லேசான தோலாலாகி இருந்தது. அதன் வழியாகப் பார்த்தபோது இரண்டு சிறு முட்டைகள் உள்ளே இருப்பது தெளிவாகத் தெரிந்தது. தன் தந்தை, தாயைக் கழுத்தைப் பிடித்து நெறித்துக்கொல்ல முயன்றதைப்போல... அவள் கேட்டாள்.
“கணவன் குருவி மனைவி குருவியை எதற்கு கொத்திக் கொல்லப் பார்க்கணும்?”
அப்போது அந்தக் குருவியின் உயிர் போகவில்லை என்பது அவளுக்குத் தெரியவந்தது. அதன் கண்கள் இரண்டும் திறந்திருந்தன. கண்களின் வழியாக அவள் அதன் உயிரைப் பார்த்தாள். மெதுவாக அவள் எழுந்தாள். குளத்திற்கு வெளியே ஒரு இளைஞன் நின்று கொண்டிருப்பதை அவள் பார்க்கவில்லை. கரையில் ஏறுவது எப்படி என்று தெரியாமல் அவள் தவித்துக்கொண்டிருந்தாள். அப்படியே சிறிது தூரம் நடந்து சென்றால், வயலை அடையலாம். ஆனால், அப்படிப் போவது அவளுக்குச் சரியாகப் படவில்லை.